ஆசனம்

ஆரோக்கிய குறிப்புகள்

[ ஆரோக்கிய குறிப்புகள் ]

asana - Health Tips in Tamil

ஆசனம் | asana

உடலுக்கு ஒரு பயிற்சியாக ஆசனங்கள் யோகத்தில் உள்ளன.

ஆசனம்


உடலுக்கு ஒரு பயிற்சியாக ஆசனங்கள் யோகத்தில் உள்ளன. இவற்றைத் தியான நிலைக்குத் தயாராகும் சாதகன் கட்டாயம் பயிற்சி செய்து கொள்ளவேண்டும். உடலை நலமாக வைத்துக்கொள்ள ஆசனம் உதவுகிறது. நமது உடலின் உறுப்புகளில் உள்ள குறைகளை, செயல்படும் விதங்களில் உள்ள குற்றங்களை நிவர்த்தி செய்து கொள்ள ஆசனம் உதவும் ஆசனங்கள் கணக்கற்று உள்ளன.

உறுதியாக ஒரு நிலையில் இருக்கவும் நெடுநேரம் ஓர் இருக்கையில் அமரவும் உடல் ஆட்டத்தை, அசைவைத் தவிர்க்கவும் ஆசனங்கள் அத்தியாவசியமாகின்றன. உடல் உறுப்புகளில் விறைப்பற்று தசைகள் தளர்ந்து இருக்க ஆசனங்கள் முக்கியம். தசைகள், மூட்டுகள் ஆகியவை சரியானபடி இயங்க ஆசனம் உதவும்.

தற்காலச் சூழ்நிலைகள் ஒருவன் சரியானபடி செயல்பட முடியாமல் செய்கின்றன. இதைச் சமாளித்து உடலை ஒழுங்காக ஈடுபடுத்த வேண்டுமானால் உடலுக்கு ஒரு கட்டுப்பாடு வேண்டும். அதை ஆசனம் வழங்குகிறது. உலக வேலைகளில் மனிதனுக்கு மூட்டுக்களும் தசைகளும் இடைவிடாமல் இயங்க வேண்டி இருக்கிறது. இதனால் அவை விறைத்துக் கொள்ளும் வாய்ப்பு உண்டு. ஓர் அரைமணி நேரமாவது வலியைப் பொருட்படுத்தாமல் உட்கார்ந்திருந்து பழகினால் பிற தியானம் செய்யும் காலத்தில் உடல் ஒத்துழைக்கும். இல்லாவிடில் உடலுடன் சேர்ந்து மனமும் கலையும்; கண்டபடி அலையும்.

உடல், மனத்திற்குத் தெரியாமல் இருக்கவேண்டும். மனக்கவனத்தை உடல் இழுக்காமல் இருக்கவேண்டும். அப்போதுதான் தியானம் எளிது. இத்திறமையை அடைய ஓர் ஆசனத்திலிருந்து தொடங்கியாக வேண்டும். ஆசனம் என்பது உடல் சக்தியைச் செலவு செய்யும் பயிற்சி இல்லை. உள்ளே சக்தியைச் சேமிப்பதாகும். முதுகு வளையாமல் கோணாமல் நேராக நிமிர்ந்து நிற்க முதுகெலும்பிள் பக்கவாட்டுத் தசைகளை உறுதியாக்கி நிற்கச்செய்வது ஆசனம்.

உட்கார்ந்த நிலையில் ஆடாமல் அசையாமல் மனத்துள் ஆழ்ந்திருக்கத் தேவையான ஒரு இருக்கையில் இருந்து பழகினால் போதும். ஆனாலும் பல்வேறு ஆசனப் பயிற்சிகளை மேற்கொள்வது அத்தியாவசியம்.

சூடு, குளிர்ச்சியினைத் தாங்கி உடல் நோயுறாமல் சமாளிக்கவும், நடுக்கம், சமநிலையின்மை, ஒரே நிலையில் இருக்க முடியாமை முதலியவற்றை மாற்றிக்கொள்ளவும் யோகாசனம் உதவுகிறது. நோயுள்ளவனுக்கு யோகமில்லை என்பதால் நோய்வராமல் பார்த்துக்கொள்ள, வந்துவிட்ட நோயைத் தீர்த்துக்கொள்ள, தீர்க்கமுடியாத நோயை ஒரு கட்டுப்பாட்டில் வைக்க ஆசனங்கள் உதவுகின்றன.

இதற்காக நாளமிலாச் சுரப்பிகளைத் தூண்டி, ஹார்மோன்களை ஒழுங்காகச் சுரக்க வைத்து, உடலில் என்றும் இளமை நிலைக்க, நலமுண்டாக ஆசனங்கள் தேவைப்படுகின்றன. ஆன்ம பயிற்சிகளைப் பழகும் ஒருவருக்கு உடல் நலம் மிகவும் தேவை. இதற்கென யோக சாத்திரம் 84 ஆசனங்களைச் சொல்கின்றது. அவற்றுள் முக்கியமான 12 ஆசனங்களைப் பழகினால் போதும்.

தியானத்திற்கு வேண்டிய ஆசனம் எது என்றால், உடலையும், மனத்தையும் ஒழுங்கான நிலையில் அதிக காலத்திற்கு வைத்திருக்கக்கூடிய ஆசனமே. பதஞ்சலி முனிவரின் கூற்றுப்படி உறுதியாகவும், சுகமாகவும் இருப்பதே ஆசனம். அதாவது சிலரால் கால்களை மடித்து உட்கார இயலாது. அவர்களுக்குப் படிப்படியாக அப்படி உட்காருவதில் சிரமமின்றி செய்யக்கூடியது ஆசனப் பழக்கம்.

இவ்வாறு தியானத்திற்காக மூன்று ஆசனங்களைக் கொடுக்கிறேன். அவை: 

1. சுகாசனம், 

2. பத்மாசனம், 

3. வச்சிராசனம். 

ஒவ்வொருவரின் தராதரப்படி யாருக்கு எது கலபமாகவும் இயல்பாகவும் இருக்கிறதோ அதிலிருந்து தியானத்தைச் செய்யலாம்.


யோகாசனப் பயிற்சிக்கு முன் கவனிக்க வேண்டியவைகள்: 

1. காற்றோட்டமுள்ள இடம்.

2. 6'3' நீள அகலமுள்ள விரிப்பு, உடலை அழுத்தா வண்ணம் இருக்கவேண்டும். பெண்கள் குளிக்கும் அங்கிகளையும், ஆண்கள் லங்கோடு அல்லது ஜட்டியையும் அணிந்து யோகாசனம் செய்யலாம்.

3. காலையில் மலம் வெளியேற்றப்பட்ட பின் வெறும் வயற்றுடன் செய்தல் வேண்டும். 

4. யோகாசனங்கள் செய்யும் போது மிக நிதானமாகவும், மெதுவாகவும் பழகவேண்டும். ஆவலின் பேரில் அவசரத்தைத் தவிர்க்கவும்.

5. ஆசனங்கள் செய்த பின்பு கண்டிப்பாக சாந்தி ஆசனம் செய்து முடிக்கவேண்டும்.


சுகாசனம்

செய்முறை:

பயிற்சி செய்பவர் எப்போதும் தனக்குச் சுலபமாக இருக்கும் நிலையில் உட்கார வேண்டும். இப்படி இருக்கையில் இரண்டு முழங்கால்களும் நேராகவும், தரைக்கு இணையாகவும் முதுகு நிமிர்ந்தும் இருக்கவேண்டும். தன் தலையையும் முதுகையும் நேராகச் சிறிதளவு கூட வளையாமல் வைத்து கொள்ளவேண்டும். உள்ளங்கைகளைக் கண்டபடி வைத்துக் கொள்ளாமல் முழங்கால்களின் மேலோ பகவான் இராமகிருஷ்ணர் போல மடியின் மீது கோர்த்துக் கொண்டோ, உள்ளங்கைகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிக் கொண்டோ இருக்கலாம். இவையெல்லாமே சரி. எந்த நிலைமையிலும் உடலுக்குத் துன்பம் உண்டாகக் கூடாது. கைகள் தளர்ச்சியாக இருக்கவேண்டும்.


பத்மாசனம்

செய்முறை:

இந்த ஆசனத்தில் முந்தையதில் சொல்லப்பட்ட விதியினைத் தவிர வலது பாதத்தின் முன்பாதியை இடது தொடையின் மேலும் இடது பாதத்தின் முன்பாதியை வலது தொடையின் மேலும் பெருக்கல் குறிபோலப் போட்டுக்கொண்டு உட்கார வேண்டும்.

இதுவே தியானத்திற்கு மிகவும் பொருத்தமான ஆசனமாகச் சொல்லப்படுகிறது. இவ்வாசனத்தில் முதுகு கோணாமல் நேராக நிற்கும். இரண்டு முழங்கால்களும் தரையை ஒட்டி இருக்கும். வயதில் முதிர்ந்தவர்களுக்கும், தடித்த சரீரம் உள்ளவர்களுக்கும் தசைகள் மிகவும் தளர்ச்சியடைந்தவர்களுக்கும் இவ்வாசனத்தைப் போட்டுக்கொள்வது சிரமமாகும்.

தொடர்ந்து மேஜை முன் நாற்காலியில் அமர்ந்து உண்பவர்களுக்கும் தரையில் கால்களை மடித்து உட்கார்ந்து பழகாதவர்களுக்கும் இவ்வாசனம் வராது. இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இதைப்போட்டுப் பழகவேண்டும். ஒருமுறையில் குறைந்தபட்சம் மூன்று நிமிடமாவது இவ்வாசனத்தில் இருந்து பழகவேண்டும். ஆறு மாதத்தில் அரைமணி நேரம் இருக்கும்படி காலத்தை அதிகரிக்கலாம். ஆசனப்பயிற்சியால் உடல் நலமுறுங்கால் நாட்கள் செல்லச் செல்ல ஆசனம் போடுவதிலுள்ள அசௌகரியம் குறைந்துவிடும். பருமனான உடலை உடையவர் ஆசனப் பயிற்சியினால் உடலிலுள்ள அநாவசியக் கொழுப்புக் குறைய, வயிற்றில் சேர்ந்த ஊளைச்சதை மறைய, உடற்பயிற்சியோ மருந்துகளோ இன்றி உடல் மெலிய ஆச்சரியப்படுவார்கள்.

மேலே சொல்லிய ஆசனங்களில் தியானத்திற்காக ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும்.


வஜ்ஜிராசனம்

செய்முறை:

முழங்கால்களை மடித்து மண்டிபோட்டு, உள்ளங்கால்களின் மீது பின்பாகம் இருக்க அமர்ந்து கொள்ளவேண்டும். இரண்டு உள்ளங்கைகளும் இரண்டு முழங்கால்களைப் பிடித்துக் கொள்ளவேண்டும்.

இடுப்பிலிருந்து தலைவரை ஒரே நேர்க்கோட்டில் இருக்கும் மாதிரி ஏதாவதொரு ஆசனத்தில் உட்காரும் போது கால்கள் மடக்கப்படுகின்றன. இதனால் உடலின் கீழ்பாகங்களில் இரத்த ஓட்டம் குறைக்கப்படுகின்றது. இதனால் மேலே மூளையை நோக்கி இரத்தம் பாய்வது அதிகமாகிறது. மூளை நல்ல நிலைமை அடைந்து சுறுசுறுப்பை அடைகிறது. மனம் ஒருமுகப்படுவதில் திறமையாகச் செயல்படுகிறது.

ஆசன நிலையில் இருக்கும்பொழுது ஒருவர் தனது உடலின் எந்தப் பகுதியையும் விறைத்துக் கொள்ளாமல் இருக்கவேண்டும். உடல் முழுவதையும் நெகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவேண்டும். இது, உடற்பகுதியின் விறைப்பு தியானத்தில் மனத்தைக்கூட்டாது. ஆகவே கண்களை முடி ஆசனத்தில் இருந்து சௌகரியமான மனோநிலையுடன் உடல் உறுப்புகள் நெகிழ்ந்த நிலையில் இருப்பதாக நினைத்துக் கொள்ளவேண்டும்.

பாகங்கள், கால்கள், ஜீரண உறுப்புகள், இருதயம், இரைப்பை, சுவாசப் பைகள், மார்புக் கூடு, கைகள், கழுத்து, தலை ஆகியவற்றை இளக்க நிலையில் இருக்க விடவேண்டும். தனக்கு முன் பேரானந்தப் பெருங்கடல் இருப்பதாக எண்ணிக்கொண்டு அதில் தான் குதிப்பதாக உணரவேண்டும்.

தாந்திரிக் பயிற்சிகளும் கவச மந்திரங்களும் சொல்வது என்னவென்றால், பயிற்சி செய்பவர் அங்கங்கள் லாவகமாக பரமாத்மாவிற்குப் பணிந்து இருக்கும் எண்ணத்தில் தன் மனத்தை நிலைநிறுத்த வேண்டும். முடிவில் தாள் இருப்பதையே மறந்து பரமாத்மாவுடன் ஐக்கியமாகி விடவேண்டும் என்பதே.

இவ்வாறு ஆசனப் பயிற்சி நரம்பு அமைதியைத் தந்து பதட்டத்தை அடக்குகின்றது. பொறுமையாகப் பயிலுவதால் நலமடைவது நிச்சயமே. மேல் நாட்டில் ஒருவர் இவ்விதம் ஆசனப் பயிற்சியினால் இரத்த ஓட்டத்தடையும், அதனால் உண்டான கால் முடிச்சுகளின் விறைப்பும், வலியும் கதிரவன் வந்ததும் மறையும் காலைப் பனிபோல நீங்கி சுகப்பட்டார்.

பயிற்சிக்குப் பிறகு எந்த அசௌகரியமும் இல்லாமல் எழுந்து வருவது ஆசனம் போடுவதன் உண்மைத் தன்மையைக்காட்டும்.

பயிற்சி நன்கு செய்பவர் தசை முடிச்சுக்கள் பயிற்சியின் போது ஒன்றோடு ஒன்று அபூர்வ சக்தியால் சேரவும், அதே சக்தியால் பயிற்சி முடிந்ததும் பிரியவும் காண்கிறார்கள். வேறு பல ஆசன நிலைகளில் இருந்தும் தியானம் புரிபவர்கள் உண்டு. அவை அவரவரின் பிரத்தியேக ஆசன நிலையாகும். இப்படி ஆசனத்திலிருந்து தியானம் செய்வது மனம் ஒரே நிலையில் இல்லாதவருக்கும், தினசரி வேலைகளில் மனம் ஈடுபடாதவருக்கும் நல்லதாக அமையும்.

பத்மாசனம் தியானத்திற்குப் பயன்படுவதோடு சில உடல் உபாதைகளையும் நீக்குகிறது. மலச்சிக்கலை ஒழிக்கிறது. குடல்களுக்குச் சக்தியை அளிக்கிறது. பற்பல வியாதிகள் குணமாகின்றன.

இனி மூச்சுப் பயிற்சியைப் பற்றிக் காணலாம்.

ஆரோக்கிய குறிப்புகள் : ஆசனம் - ஆரோக்கிய குறிப்புகள் [ ஆரோக்கியம் ] | Health Tips : asana - Health Tips in Tamil [ Health ]