
மெட்டீரியா மெடிகாவைப் படிப்பதினால் ஒவ்வொரு ஒளஷதத்துக்கும் இருக்கும் வலிமையை நீங்கள் தெரிந்துகொள்கிறீர்கள்.
மெட்டீரியா மெடிகா படிப்பதினால் பலன்கள்: மெட்டீரியா மெடிகாவைப் படிப்பதினால் ஒவ்வொரு ஒளஷதத்துக்கும் இருக்கும் வலிமையை நீங்கள் தெரிந்துகொள்கிறீர்கள். ஹோமியோபதி மெட்டீரியா மெடிகா எவ்வாறு தொகுக்கப்பட்டிருக்கிறது என்பதும் உங்களுக்குத் தெரிந்த விஷயமே. நம்முடைய மெட்டீரியா மெடிக்காவைத் தொகுப்பதில் நம் பெரியோர்கள் எவ்வளவு சிரமப்பட்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் இப்பொழுது ஒருவாறு ஊகித்துக் கொள்ளலாம். நம்முடைய வைத்திய சாஸ்திரத்துக்கு இது தான் அடிப்படையாகும். இச்சாஸ்திரத்தை அறிந்த பிறகு அதை எவ்வாறு உபயோகப்படுத்த வேண்டுமென்ற கேள்வி பிறக்கின்றது. மருத்துவர்கள் வியாதிகளைக் கவனிக்கும்போது அவைகளின் பெயர்களை கண்டுபிடிக்க பிரயத்தனம் செய்வதில்லை. ஏன் என்றால் அது அவர்களுக்கு அவசியமில்லை. ஒரு கேசை எடுத்துக் கொண்டால் அதனுடைய முழுக்குறிகளையும் எடுத்துக் கொள்கிறார்கள். அதை ஒரு முழு விஷயமாகப் பார்த்து அம்முழு விஷயத்தையும் நிவர்த்திக்கவல்ல ஒளஷதத்தை மெட்டீரியா மெடிக்காவிலிருந்து தேடி எடுக்கிறோம். ஆகவே ஒவ்வொரு வியாதியஸ்தருக்கும் ஏற்படும் எல்லாக் குறிகளுமே நமக்கு உதவுகின்றன. வியாதிகளைப் பொதுவாக இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். முதலாவது அவ்வப்போது தோன்றி மறையும் வியாதிகள் (Acute Diseases). இரண்டாவது நீடித்த வியாதிகள் (Chronic Diseases). தோன்றி மறையும் வியாதிகளில் அவ்வுபாதிகள் தோன்றி உச்ச நிலைமையை அடைந்து அதற்கு வைத்தியம் செய்யப்பட்டாலும் செய்யப்படாவிட்டாலும் தானாகவே சொஸ்தம் ஆகிவிடும். அல்லது வியாதியஸ்தரைக் கொன்றுவிடும். இதற்கு உதாரணம் சுரங்களைச் சொல்லலாம். நீடித்த வியாதிகளில் வியாதி மேன் மேலும் அதிகரித்துக்கொண்டே போகுமே தவிர சிகிச்சை இல்லாமல் வியாதிகள் சொஸ்தம் அடைவதில்லை. ஒரு வியாதியின் பெயரை நாம் கண்டுபிடித்துச் சொல்வதில் தவறு இல்லை. ஆயினும் அவ்வியாதியஸ்தருக்கு ஒளஷதத்தை நிர்ணயம் செய்யும் போது வியாதியின் பெயரை மறந்துவிட்டு அவ்வியாதியஸ்தருக்கு ஏற்பட்டிருக்கும் மொத்தக் குறிகளைக் கொண்ட ஒளஷதத்தை நிர்ணயிக்க வேண்டும். ஆயினும் வியாதியின் பெயரைக் கண்டுபிடித்துச் சொல்வதில் நாம் பிசகு செய்யக்கூடாது. ஒன்றுக்குப் பதில் வேறு எதையாவது சொல்லிவிட்டு முட்டாள் பட்டம் வாங்கிக் கொள்வது எவ்வளவு மதியீனம்? சில நீடித்த வியாதிகள் அவ்வப்போது தோன்றி மறையும் வியாதிகளைப் போன்ற தோற்றம் அளிக்கக் கூடும். உதாரணமாக அவ்வப்போது வரும் மண்டைக் குத்தலை எடுத்துக் கொள்ளுங்கள். இது ஒரு நீடித்த வியாதியே. ஆனால் அது ஒவ்வொரு முறை வரும் போது தோன்றி மறையும் வியாதி போலவே பொய்த் தோற்றம் அளிக்கும். நீடித்த வியாதிகளை நமது தந்தை டாக்டர் ஹானிமன் மூன்று வகைகளாகப் பிரித்தார். அவை முறையே ஸோரா, ஸிபிலிஸ், ஸைக்கோஸிஸ் என்பவையாம். இதை மூன்றுவிதமான சரீரவாகு' என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். கணக்கெடுக்கப் புகுவோமாயின் இன்றைய தினம் உலகில் ஒருவர் கூட வியாதியில்லாதவராக இருக்க மாட்டார் என்பது தெளிவு. வித்தியாசம் வியாதியின் கடுமையில் தான் இருக்கக்கூடும். ஆகவே தான் இம் மூன்று விதமான வியாதிகளின் ஆதிகாரணத்தைச் சரீரவாகு என்று சொல்லத் துணிந்தோம். ஹானிமன் அவர்களின் கொள்கையின்படி ஒரு வியாதி வேண்டுமாயின் அது ஸோராவினாலோ அல்லது ஸிபிலிஸினாலோ அல்லது ஸைக்கோஸிஸினாலோ ஏற்பட்டிருக்க வேண்டும். ஸோரா, ஸிபிலிஸ், ஸைக்கோஸிஸ் இம்மூன்றில் ஒன்றுகூட சரீரத்தில் இல்லாத நபருக்கு யாதொரு வியாதியும் எக்காரணங் கொண்டும் வர முடியாது. ஆகவே தான் முன்னொரு பாடத்தில் தொத்து வியாதி ஏற்பட கிருமிகளைத் தவிர வேறு காரணங்களும் அவசியம் தேவையெனத் தெரிவித்தார்கள். இனி ஸோரா, ஸிபிலிஸ், ஸைக்கோஸிஸ் என்பவைகளை ஆராய்வோம். மானிட வர்க்கத்தில் வியாதி ஏற்படுவதற்கு முதல் வித்து கடவுளின் ஆணையை மீறுவதாகும். கடவுளின் ஆணையை மீறுவது 'பாபம்' என்பது நமது கொள்கை அல்லவா? ஆகவே, உலகில் தோன்றும் சகல வியாதிகளுக்கும் சகல கஷ்டங்களுக்கும் மூல காரணம் பாபமே ஆகும். பாபத்துக்கு கூலி மரணமே. உலகத்தில் முதலில் ஆரம்பித்த வியாதிக்கூறு ஸோராவே. இது மானிடவர்க்கம் தோன்றிய முதலே இருந்து வருகிறது. முதல் மனிதன் எப்பொழுது பாப எண்ணங்களை நினைக்க ஆரம்பித்தானோ அப்பொழுதே ஸோரா ஆரம்பமாகிவிட்டது. ஸோராவின் முதல் குறிகள் நாம் சாதாரணமாகக் காணும் சொறி, சிரங்கு என்று சில காலம் கருதப்பட்டது. ஆனால் இந்த ஸோராவினால் ஏற்பட்ட நிலைமை அமுக்கப்பட்டும், திரிக்கப்பட்டும் அது இதர நிலைமைகளுடன் சம்பந்தப்பட்டும் பல்வேறு ரூபங்களை அடைந்து பல்வேறு கோர சொரூபங்களைக் காட்டிக் கொண்டு பல்வேறு நீடித்த வியாதிகளாக வியாபிக்கத் தொடங்கிவிட்டன. அசுத்தமான, நியாயமற்ற, கெட்ட, 'எண்ணங்களின்' விளைவு ஸோராவாகும். இதேபோல் அசுத்தமான, நியாயமற்ற, கெட்ட 'நடவடிக்கைகளால்' ஏற்படும் விளைவுகள் ஸிபிலிசும் ஸைக்கோஸிசுமாகும். கெட்ட நடவடிக்கைகளுக்கு கெட்ட எண்ணங்களே காரணங்களாகையால் ஸிபிலிசும், ஸைக்கோஸிசும், ஸோராவையே மூலகாரணமாகக் கொண்டவை ஆகும். ஆகவே, ஸோராவானது மனிதன் மூலக் காரணத்தையே பாதித்த ஒருவித விஷ சத்து ஆகும். ஆகவே மூலகாரணம் தாக்கப்பட்டு விபரீதப்படுத்தப் பட்ட பிறகு எல்லா இடங்களும் பாதிக்கப்படுவது இயல்பே. ஆகவே, வியாதி பல இடங்களைத் தாக்குவதில் என்ன அதிசயம்! இவைகளெல்லாம் போதாமல் வியாதிக்கு வைத்தியம் செய்வதில் பல புதிய ஆராய்ச்சிகள் (பிரயோசனமற்ற ஆராய்ச்சிகள்) ஏற்பட்டு இதை இன்னும் சிக்கலாகச் செய்து விடுகின்றன. ஸோரா என்னும் விஷமுள்ளவர்களுக்குச் சாதாரணமாக ஏற்படக்கூடிய சில குறிகளைக் கவனிப்போம். 1. சருமத்தில் அடிக்கடி படைகளும், சொறி சிரங்குகளும் ஏற்படுதல். 2. அமைதியற்ற தூக்கம் அல்லது தூக்க மில்லாமை, அமைதியற்று இருத்தல், அதிக கனவுகள், ஸ்கலிதம். 3. கோபகுணம்; சாந்தம் கிடையாது. 4. தலையில் கேசங்கள் குறைவாக இருத்தல், வழுக்கை, தலையில் பொடுகுகள், சினப்புகள், தன் வயதுக்கு மேல் கிழமான தோற்றம், கேசங்கள் நரைத்தல். 5. மூட்டுக்களில் படக் படக் என்ற சப்தம். 6. காம சம்பந்தமான நினைவுகள் அதிகமாகுதல். 7. அடிக்கடியும், காரணத்துடனும், காரணமில்லாமலும் சளி பிடித்தல். 8. பலவிதமான தலைவலிகள், தலைக்கோளாறுகள், ஒரு பக்கத்து மண்டைக் குத்தல். 9. மலபந்தம் அல்லது வயிற்றுப்போக்கு அடிக்கடி ஏற்பட்டுக்கொண்டே இருத்தல். 10. அடிக்கடியும் சடுதியிலும் சரீரம் களைத்துப் போதல். 11. அடிக்கடி பலவிதமான மாதவிடாய்க் கோளாறுகள். 12. மூக்கிலிருந்து இரத்தம் வெளிப்படுதல். 13. குழந்தைகளுக்கு வயிற்றில் நாக்குப் பூச்சி தோன்றுதல். 14. பயங்காளித்தனம். சாதாரணமாக சரீரத்தின்மேல் தோன்றும் குறிகளை அமுக்குவதால் ஸோராவின் முழுத் தன்மையையும் கண்டுபிடிக்க முடிவதில்லை ஸோராவிற்குச் சரியான ஒளஷதத்தைக் கொடுத்துவிட்டால் ஸோராவின் உண்மையான சொரூபம் சரீரத்தின் வெளிப்புறத்திற்கு விரட்டப்படும். இது பார்ப்பதற்கு மிகவும் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் உள்ளே விரட்டப்பட்டால் அங்கு ஏற்படும் நிலைமை இதைவிட மோசமானதல்லவா? பொதுவாக சொறி, சிரங்கு முதலியவை ஹோமியோபதி வைத்தியத்தில் சீக்கிரமாகச் சொஸ்தம் ஆகாது. ஏனெனில் உள்ளே இருக்கும் ஸோராவின் விஷயங்கள் நிவர்த்தியாகும் வரையில் வெளியே சிரங்கு இருந்தே தீரும். இவ்விஷயம் தெரியாதவர் நாம் ஒளஷதத்தை கொடுத்து சிரங்கு உடனே மறையவில்லையே என்று ஏங்குவது அறிவீனமேயாகும். ஸிபிலிஸ் என்னும் வார்த்தையைப் பொதுவாக மேகக் கிரந்திக்கே உபயோகிக்கிறார்கள். ஆனால் ஹோமியோபதி சம்பந்தமாக இவ்வார்த்தைக்கு இன்னும் அதிகமான பொருள் உண்டு. இது சம்பந்தமாக ஆங்கிலத்தில் டாக்டர் கெண்ட் என்பவர் ஒருவாறு விரிவாய் எழுதியுள்ளார். ஸிபிலிஸ் என்னும் வியாதி ஸ்திரீ புருஷ சம்பந்தத்தினால் ஏற்படுகிறதென்பது வைத்திய நூல்களில் காணப்படும் விஷயம். ஸ்திரீ புருஷ சம்பந்தம் ஏற்பட்டவுடன் ஒருவரிடமிருந்து மற்றொருவரைப் பற்றிய விஷம் சில தினங்களுக்கு உள்ளார வேலை செய்து அதன் பிறகே வெளித்தோன்ற ஆரம்பிக்கிறது. இக்காலத்தை ஆங்கிலத்தில் ப்ரோட்ராமல் பீரியட் (Prodromal period) என்பார்கள். இது சுமார் 12 தினங்களிலிருந்து 60 நாட்கள் வரை இருக்கலாம். இவ்வியாதியில் முதன் முதலில் வெளியில் தோன்றும் குறி ஆண் அல்லது பெண் குறியில் இரணமேயாகும். சாதாரணமாக இரணத்தை ஆற்றிவிட்டால் வியாதி போய்விட்டதாக மதிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் இவ்வியாதி நிவர்த்திக்கப்படவே யில்லை. ஏனெனில் இவ்வியாதி அவ்வளவு சுலபமாகப் போக்கடிக்கக் கூடியதல்ல. இரணம் காய்ந்து போனாலும் வியாதியின் கோர சொரூபம் சரீரத்தின் பல இடங்களிலும் தாண்டவம் ஆட ஆரம்பித்துவிடும். இரணத்தை ஆற்றிக்கொண்டு வியாதி போய்விட்டதாக மதித்து ஒரு நபர் ஒரு கலியாணமும் செய்துகொண்டு வாழ்க்கை நடத்த ஆரம்பிப்பாராயின் அந்நபர் தன்னிடம் எந்நிலையில் அவ்வியாதியை வைத்திருந்தாரோ அந்நிலையில் தன் மனைவிக்கு அவ்வியாதியைக் கொடுப்பார். மேற் கூறியது ஸிபிலிஸுக்கு மாத்திரமில்லாமல் ஸைக்கோஸிஸ், 'ஸோரா' இவைகளுக்கும் பொருத்த முடையதே. உதாரணமாக ஸோராவை உன்னத நிலையில் கொண்டுள்ள ஒரு நபர் தன் மனைவிக்கு அதைக் கொடுப்பாராயின் அதை அந்த ஸ்திரீ அதே நிலைமையில் பெற்று அத்துடன் தன் வசம் உள்ளதையும் கூட்டி தன் சரீரவாகுக்குத் தக்கபடி அதை விருத்தி செய்துகொண்டு அதை அனுபவித்து வருவார். இதில் மற்றும் ஒருவிதமான விசேஷமுண்டு. ஒரு ஸ்திரீயின் உடம்பில் ஏற்கனேவேயே ஸோராவோ, ஸிபிலிஸோ, ஸைக்கோஸிஸோ ஒரு நிலைமையில் இருந்து, அதுவே தன் இஷ்டப்படி ராஜ்யபாரம் செய்து கொண்டிருக்குமாயின் இதன் வேகம் வேறு ஒரு புதிய விஷ சத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து புருஷனிடம் உள்ளது ஸ்திரீக்கும், ஸ்திரீயிடமுள்ளது புருஷனுக்கும் பற்றாமலும் இருக்கலாம். உதாரணமாக வெட்டை ஊற்றிக்கொண்டிருக்கும் ஒரு புருஷனுடன் சம்சாரம் நடத்திக்கொண்டிருக்கும் ஒரு ஸ்திரீக்கு அந்நோய் வராமலே இருக்கலாம். ஆனால் அந்த சம்சாரத்தினால் ஏற்பட்ட குழந்தைகள் அவ்வியாதியுடனே பிறக்கும். நீங்கள் தொழில் நடத்தும் காலத்தில் இவ்விதமான பல விஷயங்களைக் கவனிக்க முடியும். கொனோரியா என்னும் வெட்டை நோயில் இரண்டு வகைகள் இருக்கின்றன வென்பது அநேகருக்குத் தெரியாது. ஒருவகை சரியான நீடித்த வியாதியாகும். இது தானாகவே சொஸ்தம் ஆகக் கூடிய தன்மையற்றது. மற்றது அவ்வப்போது தோன்றி மறையும் வியாதிகளைப் போல தானே சௌக்கியம் ஆகக்கூடியது. இவ்விரண்டு வகைகளும் ஒட்டுவாரொட்டியே. இவைகளைத் தவிர, நீர்த்தாரையில் சாதாரண அழற்சியினால், வெட்டைப் போக்கைப் போன்ற ஒரு போக்கும் ஏற்படலாம். மேலே ஆகவே. காட்டிய மூன்று வகை உபாதிகளிலும் முதன் முதலில் ஏற்படக்கூடியது நீர்த்தாரையின் அழற்சியும் அதிலிருந்து வெளியேறுவதுமேயாகும். எல்லா வைத்திய முறைகளிலும் மேல் கூறப்பட்ட எல்லா உபாதிகளுக்கும் ஆரம்பத்தில் ஒரே வைத்தியம் தான் ஏற்பட்டுள்ளது. வெட்டை நோயில் அநேக கேசுகள் சிகிச்சையிலேயே சொஸ்தம் ஆகிவிடக்கூடும். இவ்வாறு சொஸ்தம் ஆகிவிட்டவை தோன்றி மறையும் சுபாவம் உள்ளவைகளே. ஆகவே தோன்றி மறையும் வியாதியில் வியாதியை அமுக்கும் சிகிச்சை செய்தாலும் அது தானாகவே சொஸ்தம் ஆகி விடுகின்றது. ஆகவே தோன்றி மறையும் வெட்டை நோய் அமுக்கப்பட்டால் அது ஸைக்கோஸிஸ் ஆவதில்லை. ஆனால் சரியான நீடித்த வியாதிக் குணமுள்ள வெட்டை நோய் அமுக்கப்படுமானால் அதுவே ஸைக்கோஸிஸ் என்னும் நிலைமையை ஏற்படுத்தும். வியாதியின் ஆரம்பம் மேலே நாம் கூறியபடி இவ்விரண்டு வகையிலும் ஒன்றாக இருப்பதல்லாமல் இவ்விரண்டிற்கும் வியாதி தயார் ஆகும் காலம் ஒன்று தான். வியாதி ஆரம்பித்தவுடன் நீடித்த வியாதிகளிலுங்கூட சரியான ஸைக்கோஸிஸை எதிர்க்கும் ஒளஷதங்களைக் கொடுத்து விட்டால் யாதொரு கெடுதலும் செய்யாமலும் வியாதியை அது பிறகு அமுக்காமலும் சொஸ்தம் செய்யும். ஆனால், முதன் முதலாக வியாதி வேறு வழிகளால் அமுக்கப்பட்டு விட்டால் ஸைக்கோஸிஸின் கோரதாண்டவம் பல உறுப்புக்களிலும் பாய்ந்து விளையாடுவதை நாம் காணலாம். மருத்துவர்கள் தொழில் நடத்த ஆரம்பித்துப் பல கேசுகளைப் பார்த்து அவைகளைக் கவனிக்கும் போது பல விஷயங்கள் அவர்களுக்குத் தெரியவரும். சுக சரீரியாக இருந்த ஒரு பெண் கல்யாணம் ஆகி ஒன்று அல்லது ஒன்றரை வருஷங்களுக்குப் பிறகு ஓவரிகள், கருப்பை முதலியவைகளில் கோளாறுகளுடன் மருத்துவரிடம் வருவார்கள். இவர் புருஷனின் கதையை நீங்கள் தெரிந்துகொள்ள நேர்ந்தால் அவர் ஆதிகாலத்தில் மேகவெட்டையில் அவஸ்தைப்பட்டு அதை அமுக்கி இருப்பார். அதன் பிறகு அவரும் சரியான சுக சரீரியாக இருக்கவில்லை என்பதையும் தெரிந்து கொள்வீர்கள். இம்மாதிரியான விஷயங்களை கவனிக்குங்கால் ஸைக்கோஸிஸ் என்பது எவ்வளவு நூதனமான வழிகளில் நம் மனித சமூகத்தை பாழ்படுத்துகிறது என்பது தெரிய வரும். ஸைக்கோஸிஸின் கோளாறினால் சரீரத்தில் எல்லாவிதக் கோளாறுகளும் வரலாம். எந்த அவயவந்தான் பாதிக்கப்படும் எந்த அவயவந்தான் பாதிக்கப்படாது என்று சொல்வதற்கில்லை. இக்காரணம் பற்றியே நாம்மருத்துவர்கள் ஒரு வியாதிக்கு ஔஷதங்களை நிச்சயம் செய்யு முன் வியாதியஸ்தர் மேலே கூறிய முப்பிரிவில் எப் பிரிவில் சேருகிறார் என்பதை அறிந்துகொள்கிறார்கள். இப்பாடங்கள் சம்பந்தப்பட்டவரையில 'தத்துவ' பாடங்களின் இறுதிக்கு வந்துவிட்டோம். ஹோமியோபதி தத்துவங்களைப் பற்றி எழுதவும் தெரிந்து கொள்ளவும் ஒருவரின் ஆயுட்காலமே போதாது. ஆயினும் இப்பொழுது நீங்கள் தெரிந்துகொண்ட விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு அவ்விஷயத்தில் மேலும் மேலும் விருத்தி செய்து கொள்வீர்கள் என்று நம்புகிறோம்.நீடித்த வியாதிகளும் தோன்றி மறையும் வியாதிகளும்
ஸோரா, ஸிபிலிஸ், ஸைக்கோஸிஸ்
ஸோரா
ஸிபிலிஸ்
ஸைக்கோஸிஸ்
மருத்துவ குறிப்புகள் : மெட்டீரியா மெடிகா படிப்பதினால் பலன்கள் - மருத்துவ குறிப்புகள் [ மருத்துவம் ] | Medicine Tips : Benefits of studying Materia Medica - Medicine Tips in Tamil [ Medicine ]