
வியாதியற்ற நாடி ஒரே சீராகவும், சுறுசுறுப்பாகவும், சாதாரண பலத்துடனும், மிருதுவாக உப்புவதாகவும் இருக்கும்.
வியாதிகளும் அவற்றிற்கு வைத்தியமும் இருதயத்திலிருந்து பெரிய ஆர்டரியாகிய ஏஓர்ட்டாவின் வழியாக முறையே இரத்தம் வேகத்துடன் தள்ளப்படுகின்றதென்று நீங்கள் சரீர சாஸ்திரப் படங்களில் படித்தீர்கள். அந்தப் பெரிய ஆர்டரியிலிருந்து பிரியும் பல சிறிய ஆர்டரிகளின் வழியாக முறையே இரத்தம் தள்ளப்படுகிறதென்பதும் உங்களுக்குத் தெரிந்த விஷயம். இவ்விதமாக இடது வெண்ட்ரிகிளிலிருந்து தள்ளப்படும் இரத்தம் சரீரம் முழுவதும் அலைகள் போல் வியாபிக்கின்றது. இவ்வலைகளையே நாம் நாடி என்று அழைக்கிறோம். சாதாரணமாக நாடியை எந்த ஆர்டரியிலும் பார்க்கலாம். மிகவும் செளகரியமாகப் பார்க்கக்கூடிய இடம் மணிக்கட்டுகள். நாடி பார்ப்பதில் ஆயுர்வேத வைத்திய சாஸ்திரத்தில் தேர்ச்சியடைந்தவர்கள் பார்ப்பதற்கும் நாம் பார்ப்பதற்கும் பல வித்தியாசங்களுண்டு. ஆயுர்வேதத்தில் நாடியைக் கொண்டே முத்தோஷங்கள் எனப்படும். வாத, பித்த, சிலேத்தும குணங்களை அறிகிறார்கள். ஆனால் அவைகளை முதன் முதலில் சாஸ்திரீயமாய் ஏற்படுத்தியபடி பார்க்கக்கூடியவர்கள் இக்காலத்தில் இருக்கின்றார்களா என்பது வேறு விஷயம்! நம்மைப் பற்றிய வரையில் நமக்கு அம்மாதிரியாக நாடி பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை, நாடி பார்க்கும்போது நாம் எந்த ஆர்டரில் பார்க்கிறோமோ அந்த ஆர்டரியில் அனாவசியமான வேறு தடங்கல்கள் ஒன்றும் இருக்கக்கூடாது ஆகவே மிகவும் கெட்டியாகவுள்ள கயிறுகள், பட்டை வேறு துணிமணிகள் தளர்த்தி விடப்பட்டிருக்கவேண்டும். விரல்களை நாடி பார்ப்பவர் தனது மூன்று கட்டின் மேல் கட்டை விரலின் அடிப்புறத்திற்க்குச் சற்று மேலே வைக்கவேண்டும். பார்ப்பவர் கட்டை விரலை வியாதியஸ்தரின் கையின் பின்புறத்தில் வைத்துக்கொண்டால் வேண்டிய அளவு அமுக்கிப் பார்ப்பதற்குச் சௌகரியமாக இருக்கும். நிமிஷம் ஒன்றுக்கு எவ்வளவு நாடிகள் போகின்றன என்று ஒரு கைக்கெடிகாரத்தின் செகண்டு முள்ளின் உதவியால் கணக்கிடலாம். தவிர, நாடி ஓடும் பலமும் ஒழுங்கும் கவனிக்கப்பட வேண்டும். நாடி கெட்டியாகவும் பாய்ச்சலுடனும் இருக்கிறதாவென்றும், அல்லது கம்பி போலவும் பலமில்லாமலும் இருக்கிறதா என்றும் தந்திக் கம்பிபோல் துடிக்கின்றதா என்றும் கவனிக்க வேண்டும். சில சந்தர்ப்பங்களில் அது விட்டு போகக்கூடும். அதாவது நான்கு அல்லது ஐந்து தடவை அடித்துவிட்டு ஒன்றிரண்டு தடவை ஓடாமலே நிற்கக்கூடும். சில ஒன்றின்மேல் மற்றது ஏறி ஒன்றும் பிடிபடாமல், நாடியே தெரியாமலும் இருக்கக்கூடும். வியாதியற்ற நாடி : வியாதியற்ற நாடி ஒரே சீராகவும், சுறுசுறுப்பாகவும், சாதாரண பலத்துடனும், மிருதுவாக உப்புவதாகவும் இருக்கும். ஸ்திரீகளுக்கும் குழந்தைகளுக்கும் நாடி சற்று வேகமாக இருக்கும். கிழ வயதில் சற்று கெட்டியாகவும் இருக்கும். இது ஏனென்றால் வயது ஆக ஆக இரத்தக் குழாய்களின் மேல் தோல் சற்று மாறுதலடைவதனால்தான். சுக சரீரத்தில் சராசரி நாடித்துடிப்பு வருமாறு; சிசு பிறத்தவுடன் நிமிஷம் ஒன்றுக்கு 140, சிசுவாயிருக்கும் போது 120 முதல் 130 வரை, குழந்தைப் பருவத்தில் 10௦, வாலிபப் பருவத்தில் 90, அதற்குமேல் 75, கிழவர்களுக்கு 65 முதல் 70 வரையில். ஆண்களைவிட ஸ்திரீகளுக்கு நிமிஷம் ஒன்றுக்கு 6 முதல் 14 வரையில் நாடித்துடிப்பு அதிகமாயிருக்கும். ஆனால், இந்த வித்தியாசம் சுமார் 8 வயதுக்கு மேல்தான் தெரிய வரும், நாடித்துடிப்பு மன எழுச்சியினாலும், உழைப்பினாலும், காலையிலும், ஆகாரம் உட்கொண்ட பிறகும் சற்று வேகமாக இருக்கும். தவிர படுத்திருக்கும்போது இருப்பதைவிட, உட்கார்ந்திருக்கும் போது வேகமாகவும். உட்கார்ந்திருப்பதைவிட நிற்கும்போது இன்னும் வேகமாகவும் இருக்கும். அதிக குளிரிலும், தூக்கத்திலும், களைத்து இருக்கும் போதும், பட்டினியிலும், டிஜிடாலிஸ் போன்ற மருந்துகளை உட்கொள்ளுவதனாலும் நாடியின் வேகம் அதிகமாகக் குறைவுபடும். வியாதியில் நாடி: வியாதியுற்ற நாடிக்கும், ஒரு வியாதியற்றவரின் நாடிக்கும் வித்தியாசம் கவனிக்கும் போது திடீரென்று ஏற்படக்கூடிய எழிர்ச்சி அல்லது குறைவு முதலியவைகளையும் கவனித்துக்கொள்ள வேண்டும். அதாவது நரம்பு பலவீனமுள்ளவர்களுக்கு மனவெழுச்சியினாலேயே நாடி தற்காலிகமாக சற்று வேகமாகச் செல்லக்கூடும். நாடி அதிக துரிதமாகவும், விம்மியும், கெட்டியாகவும் இருக்குமானால் அது சுரத்தின் அறிகுறியாகும். ஆனால் துரிதமான நாடி மிகவும் சிறியதாகவும் பலவீனமாயும் இருந்தால் அது சரீர பலவீனத்தைக் குறிக்கும். இது டைபாய்டு சுரத்தில் கடைசியில் காணப்படும். குதிக்கும் நாடி அதாவது ஒரு நாடி துள்ளியும் மற்றையது திடீரென்று நிற்பதாகவும் இருக்குமாயின் அது கோளாறினால் ஏற்படுவது என்பது தெளிவு. விட்டு விட்டு ஓடும் நாடி இரத்த ஓட்டத்தில் எங்கேயாவது தடைப்பட்டிருப்பதைக் காட்டும். தவிர இரணம் இருப்பதையும் குறிக்கும். சில இருதய மூடிகளின் வியாதியில் கூட அம்மாதிரியாக இருக்கக் கூடும். நீடித்த அதிக உழைப்பு, அசீரணம், வயிற்றில் வாயு முதலியவைகள் கூட நின்று நின்று ஓடும் நாடிக்குக் காரணமாகலாம். மிகவும் விரிந்த நாடி, அவ்வப்போது தோன்றும் எல்லா வியாதிகளின் ஆரம்பத்திலும் காணப்படும். மிகவும் பலக் குறைவான நாடி சரீர பலக் குறைவையும், சக்தியற்ற இரத்தம் அல்லது இரத்த ஓட்டத்தையும் குறிக்கும். சரீர உஷ்ணம்: மூடியிருக்கும் இடங்களில் மனித சரீரத்தின் உஷ்ணம் சற்றேறக்குறைய 98.4 பாரன் ஹீட் ஆகும். நீடித்து 99.5 டிகிரிக்கு மேலும் அல்லது நீடித்து 97.3-க்கு குறைவாகவும் இருக்குமானால் அது வியாதிக்கு அறிகுறியாகும். சாதாரணமாக சரீரத்தின் உஷ்ணம் மேலே கூறப்பட்ட எல்லைக்கு உட்பட்டிருந்தால்தான் சுக சரீரமாயிருக்கிறதென்பதற்கு அது ஒரு அறிகுறியெனக் கொள்ளலாம். தர்மாமீட்டரின் உதவியால் நாம் சரீர உஷ்ணத்தை அளக்க முடிகிறது. சரீரத்தில் எந்த இடத்தில் அழற்சிகள் ஏற்பட்டாலும் அது சரீர உஷ்ணத்தை அதிகப்படுத்தும். சரீர உஷ்ணத்தைக்கொண்டே எவ்வளவு கடுமையான அழற்சி என்று அறியக் கூடும். ஒரு மனிதன் சரீர உஷ்ணத்தை அளப்பதற்குத் தர்மாமீட்டரின் பல்ப் என்னும் பாதத்தை நாக்கின் அடியிலோ அல்லது அக்குளிலோ வைத்துப் பார்க்கவேண்டும். சாதாரணமாக சுமார் ஒரு நிமிஷம் அம்மாதிரியாக இருந்தால் போதுமானது. நாக்கின் அடிபாகத்தில் இருக்கும் உஷ்ணமே சரியானது. அக்குளில் எடுக்கப்படும் உஷ்ணம் சுமார் அரை டிகிரி குறைவாக இருக்கும். சுவாசம்: வியாதியற்றவரின் உள்சுவாசம் சிரமமின்றியும், விலாவெலும்புகள் ஒரே மாதிரியாகத் தூக்கியும், டையாப்ரம் என்னும் தசைப்படுதா கீழே இறங்கியும் ஏற்படுகின்றது. வெளிமூச்சு மார்பு தன் முந்திய நிலைமையை அடைவதாகும். ஒரு மனிதன் நிமிஷம் ஒன்றுக்கு சுமார் 20 தடவைகள் மூச்சு இழுத்து வெளிவிடுகிறான். வியாதியும், உழைப்பும் சுவாசத்தை அதிகப்படுத்துகின்றன. சுவாசகோசங்களின் தசைகள் வியாதியுற்றிருந்தால் கஷ்டத்துடன் சுவாசம் நடைபெறும். சுவாசகோசங்களில் இதர வஸ்துக்கள் தங்குவது டான்சில் போன்ற சுவாச வழிகளில் சதை முதலியவை வளருவதினாலும் சுவாசம் தடைப்படும். ஆஸ்துமா என்னும் வியாதிலும் சுவாசம் தடைப்படும். அது ஏற்படுவது சுவாச சம்பந்தப்பட்ட தசைகள் தடித்து அவைகட்கு ஏற்பட்ட வேலையைச் செய்ய முடியாமல் போவதேயாகும். புளூரா என்னும் சுவாச கோசங்களைச் சுற்றிலும் இருக்கும் தசைப் பையிலும், பெரிகார்டியம் என்னும் இருதயத்தைச் சுற்றியிருக்கும் பையிலும் நீர் சுரப்பதினால் சுவாச கோசங்கள் அமுக்கப்பட்டும் சுவாசம் தடைப்படலாம். விலா எலும்புகளில் ஏதாவதொன்றில் அடிபட்டு அதனால் அல்லது விலா முறிந்திருந்தாலும் சுவாசம் வேகமாகச் செல்லும் இருதயம் சம்பந்தமான வியாதிகள் எதுவாயிருந்தாலும் அதனால் துரிதமாகச் செல்லும். தவிர சுவாசத்தை நடத்தும் நரம்பு ஸ்தானங்களில் கோளாறுகள் இருந்தாலும் அதனால் சுவாசம் தடைப்பட்டு துரிதமாகச் சென்று அதுவே மரணத்திற்கும் காரணமாக இருக்கக்கூடும். நாக்கு: நாக்கு சில முக்கியமான வியாதிக் குறிகளைக் காட்டுகிறது. சாதாரணமாக சுரம் உள்ள வியாதிகளில் காய்ந்துபோன நாக்காக இருக்கும். சுரத்தில் நாக்கில் ஈரப்பசை ஏற்படுவது ஒரு நல்ல அறிகுறியாகும் பெரிய அம்மை போன்ற சரீரத்தில் சினப்புகளுடன் ஏற்படும் சுரங்களில் நாக்கு சிவப்பு நிறமாக இருக்கும். அசீரண பித்த சுரங்களிலும் எல்லா சீரணக்கோளாறிலும் நாக்கின் ஓரங்கள் சிவந்திருக்கும். டைபாய்டு சுரத்தில் நாக்கில் வெடிப்புகள் தென்படும். நாக்கு நல்ல ஊதா நிறமாக இருக்குமானால் இது சரீரத்தில் சரியானபடி இரத்தம் சுத்தி செய்யப்படவில்லை என்பதற்கு அறிகுறியாகும். எல்லா சுரங்களிலும் மற்ற எல்லாக் கொடிய வியாதிகளிலும் நாக்கில் வெண்மையான மாசு கனமாக படிந்திருக்கும். சிலருக்கு பிரதி தினமும் காலையில் எழுந்திருக்கும்போது நாக்கில் மாசு படிந்திருக்கும். ஆனால் வேறு யாதொரு கோளாறுகளும் இல்லாமல் இருக்கக்கூடும். ஒரே சீராக வெண்மையான மாசு படிந்திருக்கும் சீரணக் கோளாறைக் குறிக்கும். ஆனால், அது அவ்வளவு அபாயகரமானதல்ல. நாக்கில் மஞ்சள் நிறமுள்ள மாசு படிந்து இருந்தால் அது கல்லீரல் கோளாறினால் ஏற்பட்டதே என்ற உறுதியாகச் சொல்லலாம். பழுப்பு அல்லது கறுப்பு நிறமுள்ள நாக்காக இருந்தால் அது சரீர பலம் குன்றிவிட்டது அல்லது இரத்தத்தில் அதிக விஷம் ஏறுகிறது என்பதற்கு அறிகுறி நாக்கு முதலில் ஓரங்களிலிருத்து சுத்தம் ஆகிக்கொண்டே வந்தால் சரீரம் நல்ல நிலைமையை அடைந்தே வருகிறதென்று கொள்ளலாம். கெடுதலாகப் போய்க்கொண்டிருக்கும் வியாதிகளில் நாக்கு படிப்படியாக கறுப்பாகவும் உலர்ந்தும் போய்க்கொண்டே இருக்கும். நாக்கில் கனமாகப் படிந்திருக்கும் மாசு பட்டை பட்டையாக உறிந்து பள பளப்பாகவும் ஆகிக்கொண்டே வந்தால் அந்த வியாதியஸ்தரின் உயிரில் அதிக நம்பிக்கை வேண்டாம். அது போலவே மாசு நீங்கி இரணமாகவும் அல்லது கருப்பு நிறமாகவும் மாறினாலும் அதிக நம்பிக்கைக்கு இடமில்லை. சிறுநீர்: சிறுநீர் உற்பத்தி செய்யும் அவயவங்கள் குண்டிக்காய்களும் அவைகளுடன் சம்பந்தப்பட்ட பாகங்களும் ஆகும். இரத்தத்திலிருக்கும் சிறு அசுத்தப் பதார்த்தங்களைக் குண்டிக்காய் பிரிக்கின்றது. இது சரியாக நடைபெறாவிட்டால் பலவிதமான வியாதிகளுக்கு இடமாகும். குண்டிக்காய்களில் உற்பத்தி செய்யப்படும் சிறுநீர் மூத்திரக் குழாய்களின் வழியாக மூத்திரப்பையை அடைகின்றது. மூத்திரம் சற்று மங்கிய வெண்மை நிறமாகவும் காலைகளில் சற்று சிவப்புக் கலந்தாகவும் இருக்கும். வயோதிகத்தில் சற்று அதிக மங்கலாகவும் சற்று நாற்றமுள்ளதாகவும் இருக்கும். சரீர உழைப்பு அதிகமாக இருப்பவர்களுக்கு சாதாரணத்தை விட மங்கலான நிறமாகவே இருக்கும். மூத்திரம் பிரிதல் 24 மணி நேரத்தில் 4 முதல் 6 தடவைகளும் அதிக சிரமமும் கஷ்டமும் இல்லாமலும் இருக்கவேண்டும். மூத்திரத்தின் கனம் தண்ணீரைவிட சற்று அதிகமாக இருக்கும். அதாவது அதன் விசிஷ்டகுருத்துவம் என்னும் ஸ்பெஸிவிக் கிராவிடி (Specific Gravity) 1015 முதல் 1025-க்குள் இருக்கும். ஒரு வயது வந்தவர் 24 மணி நேரத்தில் சுமார் 40 முதல் 5௦ ஒரு அவுன்ஸ்கள் வரையில் சிறுநீர் விடுவார். வியாதியில் சிறுநீர் பலவிதமான மாறுதல்களை அடைந்து வைத்தியருக்கு நல்ல உளவுகளைக் கொடுக்கின்றது. மஞ்சட்காமாலையில் அல்லது கல்லீரல் சம்பந்தப்பட்ட எல்லா வியாதிகளிலும், சிறுநீர் நல்ல மஞ்சள் நிறமாகவும் இருக்கும். சுரத்தில் சிவப்பு அல்லது கருப்பு நிறமாகவும் அளவு குறைவாகவும் இருக்கும். குண்டிக்காய்கள் அல்லது மூத்திரப்பை வியாதியுற்றிருக்குமானால் சிறுநீர் குழகுழப்பாகவும் சிற்சில சமயங்களில் இரத்தங் கலந்தும் இருக்கும். சரீரத்தில் கெபி மாற்ற வேலை சரிவர நடைபெறாது இருக்குமாயின் அது வெண்மையாக இருக்கக்கூடும். இச்சந்தர்ப்பங்களில் அதிக சிறுநீரும் போகும். சில சமயங்களில் சிறுநீர் மிகவும் குறைவாகவும் மற்றும் சில சமயங்களில் அதிகமாகவும் பிரியும். சில சமயங்களில் சிறுநீர் பிரியும்போது அதிக வலியும் அல்லது சிறுநீர் அடைபட்டதினால் அதிக வலியும் இருக்கலாம். சில வியாதியஸ்தர்களுக்குத் தாங்கமுடியாத எரிச்சலும் அடிக்கடி சிறுநீர் விடவேண்டிய தூண்டுதலும் இருக்கலாம். அல்லது மற்றும் சிலருக்கு கடைசி 2 அல்லது 4 சொட்டுகள் சிறுநீர் விடும்போது அதிக வலி இருக்கலாம். இப்படி இருந்தால் அது நீர்த்துவாரம் முதலிய இடத்திலுள்ள இரணத்தைக் குறிக்கும். டயபெடிஸ் (Diabetes) என்னும் நீர்ரோக, அதிமூத்திர, சிறுநீரில் தித்திப்புள்ள வியாதியில் சிறுநீரின் விசிஷ்ட குருத்துவம் 1025 முதல் 1040 வரை இருக்கும். நாடி (The Pulse)
மருத்துவ குறிப்புகள் : வியாதிகளும் அவற்றிற்கு வைத்தியமும் - மருத்துவ குறிப்புகள் [ மருத்துவம் ] | Medicine Tips : Diseases and their cures - Medicine Tips in Tamil [ Medicine ]