சுயக் கட்டுப்பாடு பற்றி தெரியுமா?

ஆரோக்கிய குறிப்புகள்

[ ஆரோக்கிய குறிப்புகள் ]

Do you know about self control? - Health Tips in Tamil

சுயக் கட்டுப்பாடு பற்றி தெரியுமா? | Do you know about self control?

மனிதன் தனக்குத்தானே சில கட்டுப்பாடுகளை வைத்துக் கொள்ள வேண்டியவனாகிறான்.

சுயக் கட்டுப்பாடு பற்றி தெரியுமா?


மனிதன் தனக்குத்தானே சில கட்டுப்பாடுகளை வைத்துக் கொள்ள வேண்டியவனாகிறான். அதுவும் தியான வாழ்க்கைக்கு அவசியமாகிறது. தியானத்திற்கு முன் தயாரிப்பான ஆறு படிகளை பதஞ்சலி முனிவர் பழையகாலத்திலேயே வரிசைப்படுத்தி உள்ளார்.

அவை:

1. இயமம் - மன ஒழுக்கங்கள்

2. நியமம் - உடல் ஒழுக்கங்கள்

3. ஆசனம் - உடற் பயிற்சி

4. பிராணாயாமம் - மூச்சை அடக்கல்

5. பிரத்தியாகாரம் - புலனடக்கம்

6. தாரனை - மன ஒருமை

இந்த ஆறும் தியானத்தை அடைவதற்கு தயாரிப்புகளாகும். அதனால் அவசியமான அவை மிக விளக்கமாக இங்கே கூறப்படுகின்றன.

தியானத்தின் பயிற்சிக்காக மனமும் உடலும் நன்கு முன் தயாரிக்கப்பட்டவையாக இருக்கவேண்டும். ஆன்ம முன்னேற்றத்தை அடைவதற்கு முதலாவதும் மிக முக்கியமானதுமான மனதை மேம்படச் செய்யவேண்டும். எப்படி படிகம் போன்ற நீரில் வெல்லம் கரைகிறதா அப்படி நம் மனத்தைக் கரைக்க வழிகாணவேண்டும். அதற்கு மனதைத் தயார்படுத்தவேண்டும். கரும்பை தோட்டத்திலிருந்து முதலில் பிடுங்குகின்றோம்.

பிறகு அதை ஆலையில் வைத்து நன்கு பிழிகின்றோம். அதுவும் சாற்றைத் தருகின்றது. பிறகு, அந்த ரசம் கொதிக்க வைத்து அழுக்கு நீக்கப்படுகிறது. சில ரசாயனப் பொருள்களைச் சேர்த்து வெண்மையாக்கப்படுகின்றது. பிறகே வெல்லமும் சர்க்கரையும் தயாரிக்கின்றனர். கரும்புத் துண்டு நீரில் போட்டால் கரையாது. ஆனால் வெல்லமும், சர்க்கரையும் நீரில் கரைந்துவிடும். அதேபோல இந்த ஆறு படிகளால் மனத்தை தயார் செய்து விட்டால் அது தியானத்தில் கரையும்.

ஆசையை ஒதுக்கி மனத்தைத் தக்கபடி தயார்படுத்தாவிட்டால் தியானத்தைப் பயில்வது மணலில் வீடு கட்டுவது போலாகும். ஒரு குருவின் வழிகாட்டுதலும் சாதகருக்கு மிக அவசியமாகின்றது. யோகம் என்பது அந்நியமானதோ, அதிசயமானதோ, நம்ப முடியாத சமாச்சாரமோ இல்லை. அது ஒரு கலை; விஞ்ஞானம் என்றும் கூறலாம். ஒரு கலை, ஒரு துறைப்பாடத்தைப் போல யோகத்தையும் முறைப்படிப் பயிலலாம்.

ஒரு துணிக்குச் சாயம் தோய்க்க நினைப்பவர் முதலில் அத்துணியிலுள்ள அழுக்கைப் போக்க ஆவன செய்கிறார். நீரில் நனைத்து வெளுக்கிறார். அதில் ஏற்கனவே ஏதாவது சாயம் இருந்தால் அதையும் எடுத்து விடுகிறார். பிறகே கொடுக்க நினைக்கும் குறிப்பிட்ட சாயத்தைத் துணியில் செலுத்துகிறார். அதேபோல, தியானத்தைத் துவங்குகிற ஒவ்வொருவரும் மனதில் உள்ள அனாவசிய எண்ணங்களை நீக்கவேண்டும். மீண்டும் அப்படிப்பட்டவை மனதுள் வந்துவிடாதபடிப் பார்த்துக்கொள்ள வேண்டும். முதலில் இதிலும் சில தவறுகள் உண்டாகலாம். அதை நீக்க சக்தியைச் செலவிடவேண்டும். சாதாரணமாக எல்லாரும் நினைப்பது போல, மனதைச்சரியான வழியில் செல்ல வைப்பது எளிதில்லை. தொடக்க காலத்தில் ஒருவன் மனத்தைக் கட்டுப்படுத்தக் கட்டுப்படுத்த அது அவனுக்குக் கட்டு மீறுகின்றது. ஆனால் இது நிரந்தர நிலையில்லை. கடந்த கால சந்தேகங்களைப் பற்றியும், நீங்கள் அடைந்த தோல்விகளைப் பற்றியும் ஒருபோதும் நினைத்து சோர்வு அடையாதீர்கள். இதனால் நேரமும், உங்கள் மனச்சக்தியும் வீணாகும். இச்சக்தி கூட தியானத்தில் பயன்படக்கூடியது.

தியானப்பாதையில் ஆர்வமிக்க ஒருவர், பூரண வெற்றியினை அடைவதற்குள் அநேக இடர்களைச் சந்தித்தாகவேண்டும். இடர்கள் நேரும்போது, மிக எச்சரிக்கையுடனும் உறுதியாகவும் இருக்கவேண்டும்.

தியானம் ஒரே இரவில் நிறைவேறக்கூடியது அல்ல. ஒவ்வொரு செங்கலாக எடுத்து வைத்துத்தான் ஒரு வீடு கட்டப்படும். இம்மாதிரி ஒரு கட்டடம் கட்டப்பட்டு முடியப் பல நாட்களாகின்றன. அதே போன்று, தியானமும் படிப்படியாக நெடுங்காலம் பயிற்சி செய்வதனாலேயே அடையப்படுகின்றது.

ஒருவன் தன்னைக் கட்டுப்படுத்தும் முறைகளைப் பார்ப்போம்.

1. அஹிம்சை

2. உண்மை

3. திருடாமை

4. பிரம்மச்சரியம்

5. மகிழ்ச்சியாக இருத்தல்.

இவைதான் தன்னைக் கட்டுப்படுத்தும் அடிப்படை அம்சங்கள். மற்ற செய்திகளைவிட யோகத்தில் போலிகள் மிகுந்து விட்டனர். யோகத்தின் இறுதி இலக்கை எட்டி விட்டோம் என்று வேடம் போடுவதும் அதிகமாகிவிட்டது. துர்பாக்கியவசமாக, ஆன்ம வித்தையில் முன்னேறியவர்களாகக் கூறிக்கொள்பவர்கள் அதிகமாகிவிட்டனர். தாங்களே நேரிடையாகவோ, தமது சீடர் மூலமாகவோ கூறிக்கொள்பவர்கள் உள்ளனர். பல பெரியவர்களும், ஸ்வாமிகளும் இப்படிப்பட்டவர்களாக இருக்கிறார்கள். வெறும் ஆசனத்தை மட்டும் கழைக்கூத்தாடிகள் போலத் தெரிந்து வைத்துக்கொண்டு தியான சமாதியைக் கோமணத்தில் முடிந்து வைத்திருக்கும் கோமாளிகள் போல வேடமிடும், வெளிச்சம் போடும் வேடதாரிகள் இன்றைக்குத் தமிழ்நாட்டில் மலிந்துவிட்டனர். அப்படிப்பட்டவர்களை நெருங்கிப்பார்த்தால், அவர்களிடம் ஒன்றுமில்லை என்பதும் அவர்கள் வெறும் தகர டப்பா என்பதும் புரியும். அவர்கள் கூறுவதையும் செய்வதையும் எடை போட்டால், அவர்கள் சாதாரண மக்களைக் காட்டிலும் கேடுகெட்ட சுயநலமிகளாக இருப்பது விளங்கும்.

திடீர் சாம்பார், திடீர் இட்லி போல ஒரே இரவில் அவர்களை அப்படி ஆண்டவன் செய்திருக்கமுடியாது. ஆண்டவன் ஏமாளியில்லை என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். தியானப் பயிற்சியை முறைப்படிப் பழகாமல் எவரும் இப்படி ஜீவன் முக்தர்களாக ஆக முடியாது.

இனி கட்டுப்பாடான ஒழுக்கங்களைப் பார்ப்போம்:


அஹிம்சை

எவரையும் இம்சிக்காத நிலையே அஹிம்சையாகும். நான் எவ்வித இம்சையிலும் ஈடுபடமாட்டேன் என்று உறுதிமொழியை எடுத்துக்கொள்வதே ஆன்ம சாதனையில் முதல் படி ஏறும் முயற்சி. உலக வாழ்க்கையில் உண்டாகும் துன்பத்திற்கு, அதில் மனம் ஈடுபடாமல் இருப்பதே மேற்படிப் பிரதிக்ஞைகளால்தான். அஹிம்சையில் மனம் நில்லாமல் தியானம் செய்ய வராது. ஏனெனில் மனம் அமைதியுடன் இருக்க அஹிம்சையை நாம் முழுக்க முழுக்கப் பின்பற்றியாக வேண்டும். வெப்பமுள்ள இரத்தம் ஓடும் பிராணிகள் கொடூரமானவை. இம்சையில் ஈடுபடுபவை. இவற்றின் மனம் அலைபாயும், அமைதியடையாது. இப்படி ஓய்வற்று உள்ள மனம் தியானத்தில் ஒன்றாது. ஆகவேதான் இம்சிக்காமை என்ற அஹிம்சை தியானிப்பவனுக்கு ஒரு முக்கிய தேவையாகின்றது.

இம்சை மூன்று வகையில் உண்டாகிறது. மனத்தில் எண்ணங்களாலும், பேச்சில் கடும் வார்த்தைகளாலும், செயலில் கொடிய நடத்தைகளாலும் உண்டாகின்றது. இவையனைத்திலும் மிகக் கேடானது, மனத்தால் இம்சை புரிவதுதான். ஏனென்றால் எண்ணங்களில் தோன்றும் இம்சை தீமை உண்டாகிறதால் தான் மனிதன் தீமை செய்கின்றவனாகிறான்.

நாம் நினைப்பது, பேசுவது, செய்வது எல்லாமே வினைகள் தான். நாம் செய்யும் எல்லாம் வினைகளுக்கும் பதில் வினை உண்டு. அது நமக்கே உண்டாவது. ஆகவே, இம்சை எனும் தீமையை மனத்தாலோ, பேச்சாலோ, செயலாலோ ஒருவன் செய்தால் அதன் பலனும் இம்சையாக செய்தவனுக்கே வந்து சேருகின்றது. அதனால்தான் நலம் அடைய விரும்பும் ஒருவன் நல்லதையே செய்யவேண்டும். அதுவும் நல்ல நினைவு, பேச்சு, செயல் புரியவேண்டும். ஒருவன் தனக்கு இம்சையைத் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்றால் பிறருக்கு இம்சை புரியாமல் இருக்கவேண்டும்.

பேச்சில் தீயவை பழகிவிட்டால் மனத்தில் திமிர் உண்டாகி விடுகிறது. அதனால் கொதிப்பு ஏற்படுகின்றது. செய்யும் நல்ல வேலைகள் தடைப்பட்டு விடுகின்றன. இதனால் இரத்த ஓட்டம் தடுமாறி நடக்கின்றது. ஜீரண உறுப்புக்களுக்கு இரத்தம் பாய்வதில்லை. அதனால் அவற்றில் வேலைகள் தடைப்படுகின்றன. சிந்திக்க முடிவதில்லை. இவ்விதம் பாதிக்கப்பட்டவனின் உணர்வு அரைகுறையாய் இருக்கிறது. அப்போது அவனால் அவனுக்கு என்ன நேர்ந்தது என்று கவனிக்க முடியவில்லை. ஆகவேதான் மனக் கொதிப்புடைய ஒருவன் தனது நடவடிக்கைகளைச் சரி செய்து கொள்ள முடிவதில்லை. குழப்பமே அவனது கோளாறாகி விடுகிறது.

செயலில் உள்ள பெரும் ஈடுபாடு அவனது உள்ளுணர்வுக் கவனத்தைக் கலைத்து விடுகிறது. வாழ்க்கையில் கொடூரமானவனாகி விடுகிறான். ஒருவன் தனக்குள்ளே இம்சைக் குணத்தைக் கொண்டிருப்பதும், பிறரை இம்சிக்கும் செயல் புரிவதும் அவனுக்கு அவனே இழைத்துக் கொள்ளும் இம்சையாகும்.

ஒரு தியான சாதகன் தனக்குத்தானே இம்சையை உண்டு பண்ணிக் கொள்ளக்கூடாது. இனி ஒரு தியானம் புரிபவன் எப்படி இருக்கவேண்டும் என்று பார்க்கலாம்.

தனது உடலை அதிக உழைப்பில் ஈடுபடுத்தக் கூடாது. அளவிற்கு மிஞ்சிய உடலுழைப்பு மனத்தை அலைபாயச் செய்யும். அதற்காக உழைக்காமலேயே சோம்பேறித்தனமாகவும் இருந்து விடக்கூடாது. ஆகவே மிதமான உழைப்பு தியான சாதகனுக்கு வேண்டும். இதைப்போன்றே உணவும் மிக அதிகமாக உண்ணுதல் கூடாது. மிதமிஞ்சி உண்ணுவது இரத்த ஓட்டம் வயிற்றை நோக்கியே ஜீரண காரியத்திற்காக நடக்கும்படி செய்துவிடும். மூளைக்குச் செல்லும் ரத்தம் குறையும். எனவே அதிகம் உண்ணும் சாதகனுக்கு உறக்கம் வருமேயொழிய தியானம் வராது. உண்ணுதலை அதிகமாகவோ குறைவாகவோ இல்லாமல் மிதமாக உண்ணவேண்டும். அதைப்போன்றே உறக்கமும் சரியான அளவில் இருக்கவேண்டும். மிக அதிகமாக உறங்குபவனுக்கு தியானமில்லை. உறக்கமே இல்லாதவனுக்கும் தியானமில்லை. ஏனெனில், மனதிற்கு ஓய்வு வேண்டும். ஓய்விலேயே உட்கார்த்தி விடுவதும் கூடாது. எனவே உணவு, உறக்கம், உழைப்பு என்ற மூன்று செயல்களும் முறைப்படி அமையவேண்டும். அத்துடன் மனக்களிப்பும் ஓரளவு மனிதனுக்கு அவசியம். இதனால் மனிதன் நோயின்றி, ஏக்கமின்றி நிம்மதியாக தியானத்தில் ஈடுபடமுடியும்.

அஹிம்சையைப் பின்பற்றுகிறவனுடைய மனது, பிறருடைய இம்சையான மொழிகளாலோ நடவடிக்கைகளாலோ பாதிக்கப்படாது. தனக்கு ஒருவன் தீங்கு இழைக்கும்போது கூட பதிலுக்கு அவனுக்குத் தீங்கு இழைக்க அஹிம்சையில் நிலைத்தவனால் முடியாது. அதாவது பழிவாங்கும் எண்ணம் இருக்காது. ஆயினும் தியானம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அஹிம்சையை மிகவும் அதிகமாகவும் பின்பற்றக்கூடாது. தற்கால உலகச் சூழ்நிலையில் பூரணமாக அஹிம்சையை யாராலும் பின்பற்ற முடியாது. எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கே பின்பற்ற வேண்டும். தியான பயிற்சி செய்கிறவர் பயிற்சி செய்யும் அளவிற்குத் தமது மனதிலிருந்து இம்சையைக் களைந்து விடுகிறார். ஆகவே மற்றவர்களைத் துன்புறுத்தவேண்டும் என்ற எண்ணத்தை அறவே ஒழித்த ஒருவன் மிருகங்களுக்கு அஞ்சமாட்டான். தியானப் பயிற்சியின் பலன் இது. ஆகையால்தான் தியானத்தில் சித்தியடைந்த மகான்கள் இருக்குமிடத்தில் ஒன்றிற்கொன்று விரோதமுள்ள விலங்குகள்கூட எல்லாம் தத்தம் பகை மறந்து அமைதியுடன் ஒருங்கே கூடிவாழும் என்பார்கள்.


உண்மை

தியானத்திற்கு மிகவும் அவசியமாக இருப்பது ஆரோக்கியமான மனமே. இதற்காக ஒருவர் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு உண்மையாக இருக்கவேண்டும். ஏனெனில் ஒரு பொய்யைச் சொன்னால் வரிசையாகப் பொய்யே சொல்லவேண்டி வரும். மிகவும் புத்திசாலித்தனமாகச் சொல்லப்படும் பொய்கள் கூட நாளடைவில் உண்மையில்லை என்று கண்டு கொள்ளப்பட்டு விடும். பொய் கூறுவது பிறர் அறிந்துகொண்டு விடுவார்களோ, என்ற மனப் போராட்டத்தையும் உண்டாக்கி விடும். மேலும் சொன்ன பொய்யை மிகவும் கவனமாக நினைவில் வைத்திருக்க வேண்டும். இல்லையேல் நாமே அதற்கு மாறாகப் பேசி மாட்டிக்கொண்டு விடுவோம். சமஸ்கிருதத்தில் கூறப்படும் ஒரு பழமொழி "உண்மை சங்கடத்தை உண்டாக்கும்." இதன்படி உண்மை கூறுவதால் சங்கடம் உண்டாகும் என்று நமக்குப்பட்டால் பொய் கூடச் சொல்ல வேண்டாம். மௌனமாகவே இருந்து விடலாம். இப்படி நடந்து கொண்டால் மனம் அமைதியாக இருக்கும்.

எல்லாரும் நினைக்கிறபடி உண்மை பேசுவது அவ்வளவு சுலபமில்லை. அதற்கு மனோ தைரியம் வேண்டும். இதுவே மனத்தின் பலத்தைக் காட்டும். துணிவின்றி மனோதிடமின்றித் தியானம் என்பது மிகவும் துன்பமாக இருக்கும். உண்மையின் பொருள் என்னவென்றால் ஒரு செய்தியைத் திரிக்காமல் அப்படியே சொல்வது. சமஸ்கிருதத்தில் உண்மைக்குச் சத்தியம் என்பார்கள். இதற்கு பரமாத்மாவின் குணம் என்றும் விளக்கம் கூறுவார்கள். தியானத்தைப் பொறுத்தவரை மனம் பரமாத்மாவைத் தேடுகிறது. இது பரம்பொருளை அடைவதற்கான முயற்சி. இப்படிப்பட்ட மனம் தன் நலத்திற்காகப் பொய்களைச் சொல்லாது. இப்படி வாழ்வதே சத்தியத்தின் வடிவமான இறைவனை வழிபடுவதாகும். மனம், மொழி, உடல் மூன்றாலும் உண்மையாக ஒழுகி கள்ளத்தனத்தைத் தவிர்த்தால் தியானம் கைகூடும்.


திருடாமை

முன்பார்த்தபடி உடல், மொழி, எண்ணம் முதலிய மூன்றாலும் மனிதன் முறைப்படி தனக்கு உரிமையில்லாதவற்றைத் தன்னுரிமைப்படுத்திக் கொள்ளக்கூடாது என்பதே திருடாமை. உரிமையில்லாத பிறர் பொருளைக் கையாடி ஒளித்துத் தன் உபயோகத்துக்காக வைத்துக் கொள்ளுதல் சாதாரணமாகத் 'திருட்டு' எனப்படுவது. மனத்தினால் பிறர் பொருளைத் திருடுவோம் என்று எண்ணுவதும் திருட்டுத்தான். அப்படியே 'கொள்ளையடிப்பேன், திருடுவேன்' என்று பேசுதலும், பிறர் பொருளை என்னுடையது தான் என்று வழக்காடுதலும் திருட்டுத்தான். இதேபோல் பிறருடைய அருமையான கருத்துக்களை, பொருள் பொதிந்த மொழிகளை தன்னுடையவை என்று கூறுபவரும் உண்டு. இது பிறரது பேனாவை, பணத்தை, கடிகாரத்தைத் திருடி வைத்துக்கொண்டு தன்னுடையவை என்று சொல்வது போலத்தான், பிறர் அறியாமல் ஒருவன் களவாடினாலும் அவனது மனம் அதை அறிந்தே இருக்கிறதால் தியானம் போன்று மிக மேலான நடவடிக்கையில் ஈடுபடும்போது அவனது மனமே அவனை உறுத்தும். அதாவது ஒருவனுடைய மனமே குற்றமுள்ள நெஞ்சாகக் குத்திக்காட்டும். அவனால் தியானம் செய்ய முடியாது. ஆகவே தியானிக்க விரும்பும் ஒருவன் மனத்தூய்மை உடையவனாய் இருத்தல் வேண்டும்.

குற்றம் புரியாமல் நேர்மையுள்ள ஒருவன் தன் மனச்சக்தியை வீணாக்காமல் பார்த்துக்கொள்ள முடியும். பொய்யையோ, களவையோ, தனது இம்சிக்கும் மனப்பான்மையையோ அல்லது வேறெந்தக் குற்றத்தையோ மறைத்துக்கொள்ள மனச்சக்தியைச் செலவழிக்க வேண்டியதில்லையல்லவா?

தூய்மையாக நடந்து கொள்ளும் ஒருவனுக்குத் துன்பங்கள் தொடர்ந்து வரலாம். ஆனாலும் இறுதியில் அவள் அமைதியை அடைவது உறுதி. பிறர் காண அவன் துன்புற்றாலும், உண்மையில் அவன் குற்றமில்லாதவன் தான் என்கிற நிம்மதியுடன் வாழ்வான். இதனால் தியானம் - யோகம் என்கிற ஆன்மீகப்பாதையிலே நடைபோடவேண்டும் என்றால் ஒருவனுக்கு நேர்மை முக்கியம்.


பிரம்மச்சரியம்

இந்த வார்த்தையைச் சொன்னாலே மணம் புரிந்து கொள்ளாமல் இருக்கிறவன் என்று பொருள் புலப்படும். ஆனால் யோகப்பாதையிலே வெற்றி காண விரும்புகிறவன் இல்லறத்துக்காக இருந்தாலும் பிரம்மச்சரியம் வேண்டும் என்போம்.

பிறப்புறுப்பைக் கட்டுப்படுத்துவது மட்டுமே பிரம்மச்சரியமாகாது. ஐம்புலன்களையும் அடக்கி இருத்தலே உண்மையில் பிரம்மச்சரியமாகும். சுருக்கமாகச் சொன்னால் புலனடக்கமே பிரம்மச்சரியமாகும். ஆனாலும் காமத்தில் மனம் சுழலுமேயானால், பிற புலன்களும் பிய்த்துக்கொண்டு பறக்கும். ஆகவே இச்சைகளை, எழுச்சிகளை நிதானப்படுத்திக் கொள்ளுதலும் அடியோடு அடக்கி விடுதலுமே பிரம்மச்சரியமாகும். உலக சுகங்களையே சார்ந்து வாழும் மனிதரிடையே பரம்பொருளாகிய பிரும்மத்தை மட்டுமே சார்ந்து வாழ்க்கை நடத்துபவன் பிரம்மச்சாரி எனப்படுகிறான்.

இச்சைகளைக் கட்டுப்படுத்துதல் தியானத்திற்கு முதல்படியாக இருக்கிறது. உடல் என்பது புலன்களைச் சார்ந்து இச்சைகளை எழுப்பும் பரமாத்மானது. புலன்களையுடைய உடல் தியானத்திற்குத் தரும் இடையூறுகளைத் தவிர்த்துக் கொள்ளலாம். இதற்காகவே பாலுணர்வு பரிசோதிக்கப்படுகிறது; குறைக்கப்படுகிறது; தெய்வீகப்படுத்தப்படுகிறது. முடியுமானால் அடக்கியும் விடப்படுகிறது. மனித வாழ்க்கை பாலுணர்வைத் தவிர்த்து விடுவது என்பதில்லை. ஆனால் பாலுணர்வே கதியென்று அலைவதுதான் தியானத்திற்குக் கேடு. சாத்திரங்களிலும் அனுமதிக்கப்பட்ட இல்லற ஆசைக்காகவே என்று பிள்ளைகளைப் பெற்றுத் தள்ளாமல் பரம்பரை அறுகாமல் வாரிசு பெறவேண்டி மட்டும் உடல் உறவில் ஈடுபடலாம். அது தியானத்திற்கு இடையூறாக இருக்காது.

கட்டுப்படாத உச்சநிலைப் பாலுணர்வைக் கூட நல்லுணர்வு, ஒழுக்கக் கட்டுப்பாடு, பிராணாயாமம், உடல் பயிற்சி ஆகியன மூலம் ஒரு கட்டுக்குள் கொண்டு வரலாம். மனம் சிதறாத அளவில் இயற்கையான உடலுறவு அனுமதிக்கப்பட்டதே. அதாவது பகலில் விந்து சக்தியை இழக்காமல் இருப்பவனும் பிரம்மச்சாரியே என்கிறது சாத்திரம். மனம் சமநிலையில் இருக்கும்போது இயற்கையாகப் பாலுணர்ச்சி எழாத போதும் செயற்கை முறையில் தூண்டிவிட்டுக் கொண்டு கெட்டுப் போவதைத்தான் விட்டொழிக்க வேண்டும்.

உடலுக்குள் உள்ள குறைகளை, அழுக்கு முதலிய அசிங்கங்களை, நிரந்தரமற்றத் தன்மையை, வானவில் போல் வாடிவிடக் கூடிய இளமையை எண்ணிச் சிந்தித்து உடல் மீதுள்ள கவர்ச்சியை, பற்றை விட்டுவிடுவதே பாலுணர்வை அடக்குவதற்கு வழியாகும். பாலுணர்வு என்பது இருதயத்தை, மூச்சுப் பைகளைப் பலவீனப்படுத்துகிறது. அவ்வுணர்வின் மூலம் இழந்த சக்தியை ஈடுகட்ட வெகுநாள்களாகின்றன. உடலுறவின் போது இரத்த அழுத்தம் மிகைப்படுகின்றது. 200 புள்ளிகள் வரை மேலே போகின்றது. ஆகவே நீண்ட இடைவெளி விட்டு சாத்திரம் கூறும் கால அளவில் முறைப்படி மணந்த மனைவியிடம் மட்டுமே இரவில் சேர்ந்து மகிழ்பவனுக்குத் துன்பமில்லை. அவனுடைய உடல் நோயுறாது. மனம் சிதறாது. பிரும்மத்தில் மட்டும் நினைவைப் பதித்து ஒருவன் எப்படி வாழ்ந்தாலும் அவன் பாதிக்கப்படுவதில்லை. தியானம் மனத்திற்குப் பழகப் பழகப் பாலுணர்வெழுச்சி எழுவது குறையும். ஆகவே மேலும் தியானம் எளிதாகின்றது. பாலுணர்வை எடுத்த எடுப்பில் முழுவதும் ஒழித்து விடுவது எளிதில் இயலாது. ஒன்றை நினைக்க நினைக்க அதில் ஈடுபடாமல் ஒதுங்குவது முடியாது. அதனால் பாலுணர்வு நினைவே வராத வண்ணம் நல்ல சங்கதிகளில் மனத்தை ஈடுபடுத்தி விடவேண்டும். பண்டைய நாட்களில் வானப்பிரஸ்தாசிரமத்தில் கானகம் சென்ற இல்லறத்தார் காய்கனிகளை, கந்த மூலங்களை உண்டு, யோகிகள் துறவிகள் ஆகியோரின் அறிவுரைகளைக் கேட்டு மனத்தை உயர்ந்த நிலையிலேயே இருக்கும்படி பார்த்துக் கொண்டார்கள். புனித இக்கியங்களைப் படித்தலும், பயன் கருதாமல் பொதுநல சேவை புரிதலும் மனத்தைத் தூய்மை அடையச் செய்யும்.

மனத்திற்கு வேலையில்லாத பொழுதே தீய எண்ணங்கள் உண்டாக வாய்ப்பு உள்ளது. மனதை இறைவன் மீது பூட்டி எப்போதும் பிரார்த்தனையும் ஜெபமும் செய்யும்படிச் செய்தால் பிரம்மச்சாரியத்தைக் காத்துக் கொள்ளலாம். ஒருவன் பெண்ணாசை மிகுந்து வேசியர் பலர் வீடுகளுக்குப் போய் வந்து கொண்டிருந்தான். அவள் திருந்தும் வழியே இல்லை. ஒரு நாள் அவனுடைய தாய் அவனை அழைத்தாள். ஒழங்காய் இருக்கும்படி புத்தி சொன்னாள். வேசி வீட்டிற்குப் போகாதே! என்றாள். அவனோ அது என்னால் முடியவில்லையே அம்மா! என்றாள். அதற்கு அவன் அன்னை சொன்னாள்: "அப்படியனால் அடுத்தமுறை வேசி எவளுடைய வீட்டிற்காவது நீ போகும்போது என்னை நினைத்துக் கொள்" என்றாள். அவனும் வழக்கம் போல வேசி ஒருத்தியின் வீட்டிற்குச் சென்றான். அவனுடைய தாயின் நினைவு வந்தது. அப்போது அவனுடைய பாலுணர்வு செயல்படாமலேயே அடங்கி விட்டது. வீட்டிற்குத் திரும்பி வந்துவிட்டான். அது முதல் அவனால் தாயை நினைத்துக் கொண்டு வேசி வீடு புக முடியவில்லை. எப்படி?

உயர்ந்த எண்ணங்கள், மேலான சிந்தனைகள் மட்டமான பாலுணர்வை மறக்கச்செய்யும். மனதை அதிகமாக கவரக்கூடியது பண ஆசையும் பாலுணர்வுமே. இவற்றில் மனம் பதிந்திருக்கும் வரை தியானம் கைகூடாது. ஒரு கிணற்றின் அடியிலிருந்து வெறும் வாளியை இழுப்பது எளிது; வாளி நிரம்பத் தண்ணீர் இருக்குமேயானால் அவ்வளவு சுலபமாக இழுக்க முடியாது. அதுபோல மனம் வெறுமையாக இருந்தால் தியானம் எளிது. கீழான உணர்வுகளுடன் இருந்தால் தியானம் புரிவது சாத்தியமில்லை.

மக்களின் சக்தி பணம் ஈட்டுவதிலேயே செலவிடப்படுகிறது. பணம் கிட்டியவுடன் சுகம் அனுபவிப்பதற்காகவே செலவிடப்படுகிறது. பிறகு புகழ் நாட்டம் வேறு புத்திகெட்டு அலையச் செய்கிறது. இதுவே நம்மையெல்லாம் தியானத்திற்குத் தகுதி இல்லாதவராகச் செய்கின்றது. இப்படி இயங்கும் சக்தியை ஆக்கப்பூர்வமாக திருப்பினால், ஆசையில்லாமல் அடக்கினால் ஒரே வழிப்பாதையில் ஓடி உன்னதமான நியானத்திற்கு உதவும்.

எட்டுக் கால்களையுடைய அக்டோபஸ் போல மனம் பல திசைகளிலும் சிதறி அலைகிறது. அதன் அங்கங்களில் சிக்கிக்கொண்ட சிற்றுயிர்களைச் சிதைத்து விடுவது போல மனம், காணும் பொருள்களையெல்லாம் ஆசைப்பட்டு அலங்கோலம் செய்கிறது. குடும்பத்தைக் காப்பாற்றவே ஒருவனின் சக்தி செலவழிந்து விடுகிற இந்நாளில் தியானத்தையெல்லாம் யாரால் செய்யமுடியும் என்று நினைக்கிறவர்களுமுண்டு. ஆசையை மட்டுப்படுத்தி எளிய வாழ்க்கையை அமைத்துக்கொண்டு முடிந்தவரை ஒழுக்கமாக இருந்து கொண்டு தியான பயிற்சி செய்தால் ஒருவனுக்குச் சக்தியும் திறமையும் அதிகரிப்பது நிச்சயம். அப்பொழுது பொருளீட்டுவதும், புகழ் ஈட்டுவதும் எவ்வளவு பெரிய குடும்பமானாலும் காப்பாற்றுவது எளிதாகி விடுகிறது. ஆகவே தியானத்திற்காகப் புலன்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு வாழவேண்டியது அவசியம்.


மகிழ்ச்சியாக இருத்தல்

அபரிக்கிரகம் என்பதையே மகிழ்ச்சியாய் இருத்தல் என்று திரண்ட பொருளில் கூறியிருக்கிறோம். தியானம் செய்பவன் பிறருக்கு வசப்பட்டு இருக்கக்கூடாது. சுக வாழ்க்கையை நாடக் கூடாது. ஆகவே பிறரிடம் பொருள் வாங்கி வசதிமிக்க வாழ்க்கையை அமைத்துக்கொள்ள எண்ணக்கூடாது.

இந்நிலையில் வறுமையிலும் செம்மையாக வாழவேண்டும் என்று உணர்த்தப்படுகிறது. இருப்பதை வைத்துச் சிறப்புடன் வாழலாம் என்று சொல்லப்படுகிறது. உயிர்பிழைக்கத் தேவையானதை மட்டும் பிறரிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம். அப்போதுதான் எவரையும் சாராமல் நடுநிலையில் மனதை வைத்திருக்க முடியும். சுதந்திரமாக தியானத்திலும் தியானத்திற்கேற்ற வாழ்க்கையிலும் ஈடுபட முடியும்.

இதுவரை மனக்கட்டுப்பாட்டு விதிகளைப் பார்த்தோம். இனி உடல் கட்டுப்பாட்டு விதிகளைப் பார்ப்போம்.

ஆரோக்கிய குறிப்புகள் : சுயக் கட்டுப்பாடு பற்றி தெரியுமா? - ஆரோக்கிய குறிப்புகள் [ ஆரோக்கியம் ] | Health Tips : Do you know about self control? - Health Tips in Tamil [ Health ]