
மனதைச் சுத்திகரித்தல் என்றும் பிரத்தியாகார முறையை கூறலாம்.
பிரத்தியாகாரம் மனதைச் சுத்திகரித்தல் என்றும் பிரத்தியாகார முறையை கூறலாம். இதைப் பழகிய பின்பு மன ஒருமைக்குச் செல்லவேண்டும். தியானத்தில் அமருமுன் பயிற்சிக்காரர் மனதிலிருந்து ஆபாச விஷயங்களை அகற்றிவிடவேண்டும். அப்புறம் மன ஒருமையைப் பழகவேண்டும். நம்முடைய ஐம்புலன்கள் மூலமாகத்தான் உலகத்திலுள்ள பல்வேறு பொருள்கள் தம்மைப் பாதிக்கின்றன. நாசி மூலம் பலவிதமான வாசனைகளை மனம் அனுபவிக்கிறது. செவிகள் மூலமாக வெவ்வேறு ஒலிகளை மனம் ரசிக்கிறது. நமது தோல் மூலமாக பலவிதமான தொடு உணர்ச்சிகளை மனம் அடைந்து களிக்கின்றது. நம்முடைய கண்கள் மூலம் நமது மனது காட்சியழகைக் கண்டு களிப்புறுகிறது. வெவ்வேறு பொருள்களை உண்டு நாக்கால் ருசிகளைச் சுவைக்கின்றது. இதனால் மனதின் சுமை அதிகமாகிறது. இது அப்போதைக்கு மகிழ்வாக இருந்தாலும் பிறகு துன்பத்தைத் தருவதாகையால் இந்தச் சிரமத்திலிருந்து மனதைக் காப்பாற்ற, அநாவசியங்களில் மனம் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இது அத்தனை கடினமில்லை. இதை நன்கு விளக்க அன்னப்பறவை உதாரணத்தைக் கூறியுள்ளனர். பாலும் நீரும் கலந்திருந்தால் அன்னப்பறவை பாலை மட்டும் பிரித்து உறிஞ்சி விடுமாம். வெண்மையான அன்னப்பறவையை தூய மனிதனுக்கு அடையாளமாகச் சொல்லுவார்கள். நாம் வீட்டில் இருக்கும்போது பற்பல இரைச்சல்களைக் கேட்கிறோம். ஆனால் நாம் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும்போது நமக்கு வெளி இரைச்சல்கள் அவ்வளவாக வேதனை தருவதில்லை. ஏனெனில் நமது கவனம் முழுக்க முழுக்கப் புத்தகத்தில் பதிந்து விடுகிறது. ஆகவே பிரத்தியாகாரத்தைப் பயிற்சி செய்பவர் வேண்டாததிலிருந்து மனத்தைப் பிரிக்க கவனத்தை ஏதாவதொரு நல்ல விஷயத்தில் திருப்பினால் போதும், இதற்குத்தான் தியானத்தில் மந்திரம் தரப்படுகிறது. இது ராஜயோகத்தில் ஐந்தாவது படி என்று சொல்லுவார்கள், நமது மனதிலிருந்து அநாவசியமான விஷயங்களை விலக்குவதன் மூலம் நமது புலன்களைக் கட்டுப்படுத்த முடிகிறது, மனத்தின் சக்திகள் பாதுகாக்கப்பட்டு மனது நல்ல நிலையை அடைகிறது. மனதிலிருந்து அநாவசியமான விஷயங்களை விரட்டுவதற்கு ஓர் ஆமையை உதாரணமாகச் சொல்லியுள்ளனர். ஆபத்து வரும்போதெல்லாம் ஆமை தன் அவயங்கள் அனைத்தையும் உள்ளே இழுத்துக்கொள்கிறது. அம்மாதிரி மனத்திற்குச் சஞ்சலங்கள் வரும்பொழுதெல்லாம்.. ஐம்புலன்களையும் சஞ்சலத்திலிருந்து பிரித்து மனதில் அடக்கிக்கொள்ள வேண்டும். அப்போதுதாள் சஞ்சலங்களிலிருந்து மீள முடியும். மூன்று சீனக் குரங்குகள் பொம்மை வடிவில் இதை நன்றாக விளக்குகின்றன. அவை சொல்வது கெட்டதைப் பேசாதே, கெட்டதைப் பார்க்காதே, கெட்டதைக் கேட்காதே என்பதே. இம்மாதிரி விரும்பத்தகாதவற்றிலிருந்து புலன்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மன நலனைக் காப்பாற்றி விடலாம். இதுபோன்று மனத்தை அடக்கும் பயிற்சிகளில் ஈடுபடும்போது மனத்தைக் கலைக்கும் சக்திகள் நிறைய இருக்கின்றன, இதற்காக பயில்பர் கவலைப்படக் கூடாது. மனதை, புலன்களை உள்ளில் அடக்கிக் கொள்வதன் மூலம் கட்டுப்படுத்தும் பிரத்தியாகாரத்தை அடைந்தவர்க்கு அதிசய சக்திகள் உண்டாகின்றன. உதாரணமாக டிசம்பர் மாதக் குளிரில் காலையில் லண்டன் மாநகரத்திலுள்ள ஹைடுபார்க் என்னுமிடத்தில் பனிக்கட்டியின் மேல் ஒரு யோகி இடுப்பில் மட்டும் தரித்த ஓர் ஆடையுடன் வழக்கமாக உட்கார்ந்து கொள்வாராம். இது தோல் மூலம் அறியும் தொடு புலனை மனத்தில் அடக்கி உடல் குளிரை உணராத வண்ணம் செய்து கொண்ட ஆற்றலே. சுற்றுப்புறத்தில் நிகழ்ந்த பரபரப்பான சம்பவங்களும் அவரைப் பாதிக்கவில்லை. இடிகளும் பேரிரைச்சல்களும் கூட அவரை இம்சை செய்யவில்லை. மத்திய சர்க்கார் மந்திரி ஒருவர் சிறுநீர்ப் பையில் கல் இருந்ததற்காக அறுவைச்சிகிச்சை செய்துக் கொண்டார். அப்போது அவர் தனக்காக மயக்க மருந்து வேண்டாமென மறுத்துவிட்டார். அதோடு அறுவைச் சிகிச்சையின் போதும் நிதானமாகவும், அமைதியாகவும் பொறுத்துக்கொண்டு இருந்தார். அதைக்கண்டு மருத்துவர்களே கூட ஆச்சரியப்பட்டனர். வலியை மனம் உணராமல் இருக்க அவள் கையாண்ட பயிற்சியே இதற்கும் காரணம். இன்னும் ஒன்று, ஒரு சந்நியாசியின் காலைத் துண்டிக்க வேண்டியிருந்தது. அந்த சந்நியாசி தியான நிலையிலிருக்கும் போது அதைச் செய்தார்கள். வலியைத் துறவி உணரவே இல்லையாம். காரணம் பிரத்தியாகாரம். புறச்சூழ்நிலையில் புலன்களைப் போகவிடாமல் மனத்தின் உள்ளேயே வைத்திருந்து சூழ்நிலைத் தொடர்பை அறுத்துக் கொள்வதே பிரத்தியாகாரம். இவ்வாறு மனத்தைக் கட்டுப்படுத்தியும் கூட சென்ற கால நினைவுகளிலும் எதிர்கால நினைவுகளிலும் மனது ஓடுகிறது. இதையும் அடக்கியாக வேண்டும். இல்லையேல் காலம் நம் கவனத்தைக் கண்டபடி அலைக்கழிக்கும். நமது வாழ்க்கை நிகழ்காலத்தை மட்டுமே சார்ந்தது. அதைச் சரியாக வாழ்ந்தால் சென்ற காலமும் வருங்காலமும் சரிப்பட்டு விடும் என்ற ஞானத்தைக் கைக்கொள்ள வேண்டும். இதனால் மனம் அலைபாயாமல் கட்டுப்படுத்தப்படும். ஒட்டு உறவுகளை ஒதுக்கி, சூழ்நிலைப் பந்தங்களைத் தளர்த்தி ஊருக்கு ஒதுக்குப் புறமாகச் சென்று சிதறிய சித்தத்தின் சக்திகளைச் சேமித்து நமக்குள்ளேயே நாம் இருக்கிற தன்னந்தனியான தனிப்பட்ட நிலைதான் இது. ஆழ்ந்த உறக்கம் போன்ற அமைதியான நிலை ஆகும். ஆன்ம ஞானப் பயிற்சி என்பது வேண்டாதவற்றிலிருந்து மனத்தை விலக்கி வைக்கும் பயிற்சியாகும். இது மன ஒருமைக்கு முந்தைய நிலை. ஒருமையினால் மனோபலம் மிகவும் அதிகமாகிறது. எட்டுச் சதுர அடிக்குள் இருக்கிற ஒரு கண்ணாடித் துண்டின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சூரியனுடைய ஒளிக் கதிர்களை விழச் செய்தால் அங்கு உண்டாகிற வெப்பம் ஒரு சிறு கல்லை இளகச் செய்வதற்குப் போதும் என்று கூறப்பட்டிருக்கிறது. இது ஒருமுகப்படுத்துவதால் உண்டாகும் ஆற்றலே. சுவாமி விவேகானந்தருக்கு எந்த அளவு மன ஒருமை இருந்ததென்றால், ஒரு புத்தகத்தை ஒரே ஒருமுறை படித்தபோதிலும் மறக்கவே மாட்டாராம். மன ஒருமையும் தியானமும் வெவ்வேறு விதமான ஆத்ம பயிற்சிகள். நமது மனத்தை ஒரு பொருளின் மீது மட்டும் செலுத்தும்போது அது மன ஒருமையாகிறது. மனத்துள்ளேயோ உடலுக்கு புறத்தேயோ ஏதாவது ஒன்றின் மேல் மனத்தைச் செலுத்தினால் மனது எதன் மீது செலுத்தப்படுகிறதோ அந்தப் பொருளைத் தவிர மற்ற எதன் மீதும் நினைவு இல்லாமல் இருத்தலே மன ஒருமை என்பது. இதை அடையாமல் அடுத்த நிலையான தியானத்திற்குப் போக முடியாது. “மனதை இறைவனான தன்னுடனேயே ஐக்கியமாக்கி மனதின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்'' என்று பகவத்கீதை கூறுகிறது. அதாவது தியானத்திற்கு இறைவனைப் பொருளாகக் கொள்ளவேண்டும். இறைவனிலேயே மனதைக் கரைத்துவிட வேண்டும். இதனால் மனமெனும் குரங்கு, சேட்டைகள் ஏதுமின்றி புனிதமடைந்து விடுகிறது. தனக்கென்று தனியாக நடவடிக்கைகள் ஏதுமற்ற நிலையை அடைகிறது. அப்படிப்பட்ட மனத்தின் மூலம்தான் ஆண்டவனே இயங்குகிறான். இதுவே தியானத்தின் பெருமை. மன ஒருமைப் பயிற்சியில் அதிகத் திறமை அடைவதற்கு ஒரு சாதாரண வழி இருக்கிறது. காலையிலாவது மாலையிலாவது தனியாக நடந்து இயற்கைச் சூழல் நிறைந்த ஒரு இடத்தில் உட்கார்ந்து கொள்ளுங்கள். உலக விஷயங்களிலிருந்து மனதை விலக்கி இயற்கைச் சூழலில் எழும் இரைச்சல்களில் ஏதாவது ஓர் ஓசையைக் கவனித்து மனத்தை அதில் ஒன்றச் செய்யலாம். மன ஒருமைக்கு மற்றொரு வழி உங்களுக்கு விருப்பமான ஒரு புத்தகத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் ஒரு பக்கத்திலுள்ள ஒரு பகுதியைப் படிக்கவும். அதற்குப் பிறகு அதிலுள்ள ஒவ்வொரு வாக்கியத்தையும் அதிக கவனத்துடன் படிக்கவும். பிறகு அதன் பொருளை மனதில் நினைக்கவும். கொஞ்சம் நேரம் சென்று அதில் கூறியுள்ளபடி நடந்து கொள்ளவும். இதுவும் மனவொருமைக்கு உதவும். தியான நிலைக்கு முன் மன ஒருமை வருகிறது என்று பார்த்துள்ளோம். ஆன்மீகம் பற்றி எழுதும் மேல்நாட்டினர் மன ஒருமை, தியானம் இரண்டையும் ஒன்றாகவே கூறியுள்ளனர். மேல்நாட்டினர் தியானத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. மன ஒருமைப் பயிற்சியில் ஒரு பொருளின் ஓர் அடையாளத்தைப் பற்றி மட்டுமே நினைத்து, வேறு ஒன்றையும் நினைக்காமல் இருக்கவேண்டும். மனம் ஒருமையை அடைந்த பிறகு தியானத்திற்கு வேறு ஒரு பொருளும் தேவையில்லாமல், மன நன்மையை இழக்காமல் இருக்கிறது. இந்த நிலையைத்தான் தியானம் என்கிறோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான மனம் உடையவராக இருப்பதால் பலரும் பல்வேறு வகையில் மனத்தை ஒருமை செய்ய முயல்கிறார்கள். மன ஒருமைக்காக, ஒருவர் முயலும்போது ஒரு கடவுள் படத்தையோ, அல்லது ஏதாவது ஓர் அடையாளத்தையோ முன்னால் வைத்துக்கொள்ள வேண்டும். கடவுளை நம்பாதவர், ஒரு பூவையோ, ஓர் எரியும் மெழுகுவர்த்தியையோ அல்லது ஏதாவது தமக்குப் பிடித்த ஒரு பொருளையோ தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். கண்களுக்கு அதிகத் தொல்லையின்றி பார்வையை அந்தப் பொருள் மேல் வைக்க வேண்டும். அதில் நிலைக்குத்திப் பார்ப்பதில் சிரமம் உண்டானால் மூடிக்கொண்டு மனதால் அப்பொருளைப் பார்க்கலாம். சிறிது நேரத்திற்குப் பின் மீண்டும் விழிகளைத் திறந்து பார்த்துப் பயிற்சி செய்யலாம். ஆரம்ப காலத்தில் இந்தப் பயிற்சியை ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்குச் செய்யலாம். காலையிலும் மாலையிலும் இருமுறை செய்யவேண்டும். இப்படிப் பயிற்சி செய்யுங் காலத்தைச் சிறிது சிறிதாக அதிகரித்துக் கொள்ளலாம். ஆனால் வலுக்கட்டாயமாக மிகக் கடுமையாக அதிகரிக்கத் தேவையில்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் மன ஒருமைக்கான பொருளாகப் பரம்பொருளைக் கொள்வதே நலம் பயக்கும். ஒரு செயலின் வெற்றி அச்செயலின் பின்னுள்ள மன உணர்வைப் பொறுத்தது. தெய்வீக சக்தி மனப் பின்னணியாக இருக்கவேண்டும் என்றால் அதன் அடையாளமான பரம்பொருளின் வடிவத்தையே மனத்தைக் குவிக்கத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும். உதாரணமாக ஏசுநாதரின் திரு உருவத்தின் பின்னணியாக, மனித சமுதாயத்திற்காகத் தியாகம் செய்தார் என்பது இருக்கிறது. கன்னி மேரியின் படத்தை எடுத்துக்கொண்டால் மனித இனத்தின் மேல் அவளுக்கிருந்த அன்பு பின்னணியாக்கப்படுகிறது. கிருஷ்ண பரமாத்மாவின் படத்தைப்பார்த்தால் பலனை எதிர்பாராமல் பற்று இன்றிச் செய்யும் காரியத்தின் அடையாளம் புரியும். வெவ்வேறு தன்மைகளை, சக்திகளை உடைய பற்பல தெய்வங்களை இந்து மதம் உடையதாக இருக்கிறது. உண்மையான சேவையின் வடிவம் அனுமான்; அறத்தின் வடிவம் ஸ்ரீராமன்; காக்கும் கடவுள் மகாவிஷ்ணு; கல்விக்கு சரஸ்வதி, செல்வத்திற்கு இலட்சுமி என்று வகைப்படுத்தி உள்ளனர். இணையற்ற நன்மையின் வடிவம் சிவபெருமான், பிள்ளையார், முருகன் என்றெல்லாம் வகைப்படுத்தி உள்ளனர். குருவிற்கு பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணரும், சீடருக்கு எடுத்துக்காட்டாக சுவாமி விவேகானந்தரும் உள்ளனர். ஆகவே, அவரவர் விருப்பப்படி மனம் குவிக்க ஒருவரது படத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இது வாழ்வின் குறிக்கோளுக்கு ஏற்ப இருப்பது நலம். கடவுளையே பார்க்க வேண்டும் என்ற இலட்சியம் இருந்தாலும், மனம் ஒரு முகப்படப் பயிற்சி அவசியம். ஆண்டவனுடைய சிலைகளும், படங்களும் இதற்காகவே உள்ளன. இம்மாதிரி அடையாளங்கள் இல்லாமல், மனம் ஒரு முகப்படாது. சிலருக்கு இப்படிப்பட்ட படங்களை விட நேரில் பார்த்த உலகில் வாழ்ந்த மனிதரின் படங்கள், வடிவங்கள் முதலியவை பிடித்தவையாக இருக்கும். இம்மாதிரி உருவ அடையாளங்களிலிருந்து மெல்ல, சிலுவை, சந்திரன், நட்சத்திரம் போன்ற அடையாளங்களுக்குப் போகவேண்டும். சாதாரண எண்ணெய் விளக்கோ, மெழுகுவர்த்தித் தீபமோ அல்லது நெய்விளக்கோ கூட மன ஒருமைக்குப் பயன்படுத்தப்படும். எதானாலும் தீபம் ஆடாமல் இருக்க காற்றில்லாத இடத்தில் வைத்துப் பயிற்சி செய்யவேண்டும். பிரியமான பொருளில் மனத்தைக் குவிக்கும் பயிற்சி எளிதில் செய்யமுடியும். ஒரு பெண் ஆண்டவன் மீது மனத்தை வைக்க முடியாதவளாக இருந்தாள். அவளை அவள் பெற்ற குழந்தை மீது மனத்தைச் செலுத்த இராமகிருஷ்ண பரமஹம்சர் பணித்தார். அதைப் பின்பற்றி அவள் ஆத்ம ஞானத்தை அடைந்தாள். பழக்கமானதும், பிரியமுள்ளதுமான பொருளின் மீது மன ஒருமையை நிலைநாட்டிய பிறகு நுணுக்கமான பொருள் மீது மன ஒருமையை நாட்ட முயற்சிக்கவேண்டும். இம்மாதிரிப் பயிற்சி தியானத்திற்கு வேண்டிய நிதானத்தையும் தகுதியையும் தருகிறது. தியானத்தில் வெற்றி பெறவேண்டுமாகில் மன ஒருமையில் முக்கியமாக கவனத்தைச் செலுத்தவேண்டும். மன ஒருமைக்கு உள்ள பல்வேறு முறைகளில் ஜெபமாலையுடன் அல்லது, ஜெபமாலை இல்லாமல் புனிதமான மந்திரங்களைச் சொல்வது மிகவும் நல்லது. இதை ஜெபம் என்பார்கள். இதைச்செய்வது மன ஒருமையைத் தரும். தொடக்கத்தில் மந்திரங்களை இரைந்து சொல்லவேண்டும். அப்போதுதான் வேறு எண்ணங்களின்றி மனம் இருக்கும். முன்னேற்றத்திற்கு ஏற்றபடி, மௌனமாக மந்திரத்தை ஜெபிக்கவேண்டும். வாய்விட்டு மந்திரங்களை ஜெபிக்கும் போது கால இடைவெளி இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஜெபம் தொடர்ந்து விடாமல் செய்யவேண்டும். ஆரம்ப சமயங்களில் இடை இடையே விட்டுவிட்டு ஜெபித்தல் நேரலாம். ஆனால் நம்பிக்கை இழக்காமல், ஒரே நிலையில் இருந்து நன்கு ஜெபிப்பதில் முன்னேறவேண்டும். ஜெபமாலை இதற்குப் பேருதவி புரியும். பழக்கமான பின்பு சிலர் இம்மாதிரி ஜெபமாலை இல்லாமலேயே ஜெபிக்கலாம். ஜெபமாலைகள் எங்கும் கிடைக்கின்றன. 108 மணிகள் ஒரு மாலையில் உண்டு. 108-ஆவது மணி பெரியதாக இருக்கும். மந்திரம் மாலையை உருட்டியபடி ஜெபிக்கும்போது இந்த பெரிய மணியைத் தொடமாட்டார்கள். மறுபடியும் பின்னோக்கி மணிகளைத் தொட்டு ஜெபிப்பர். இந்தப் பெரிய மணியை மேருபர்வதம் என்று கூறுவர். இப்படி மணிகளைத் தொட்டு ஜெபிப்பது மன ஒருமைக்கு நல்ல வழி. புனிதமான மந்திரங்களை உருப்போடுவதற்கு ஏற்ப பலவகை மாலைகள் நம்நாட்டில் உண்டு. இம்மாதிரி மாலைகளில் பவளம், முத்து, தங்கம், ருத்திராக்ஷம், தாமரை, விதைகள், சங்கு ஆகியவற்றை மணி வடிவில் கொண்ட மாலைகள் உண்டு. 108 மணிகளே ஜெபமாலையில் அதிகபட்சம் இருக்கும். அடுத்து 54, 27 மணிகளைக் குறைந்தபட்சமாகக் கொண்ட மாலைகளையும் வசதிப்படி வைத்துக்கொள்கின்றனர். நகை, உலோகங்களால் ஆன மணி மாலைகள் நல்லபயன் தரும். தர்ப்பையினால் ஆனது, 400 மடங்கு அதிகப்பயன் தரும். தங்கமணி மாலை ஒரு கோடியே எட்டு மடங்கு அதிகப் பலன் தருமாம். சீயகாயினால் ஆன மாலை ஆயிரம் மடங்கு அதிகப்பயன் தருமாம். இலந்தைப் பழக்கொட்டையினால் ஆன மாலை 100 மடங்கு நல்ல பயன் தரும். சிப்பி, சங்கு, மணி, மாலைகள் ஐந்நூறு மடங்கு நல்ல பலன்களைத் தருமாம். ஜெபமாலை ஒரு புனிதப் பொருளாகும். சுத்தமில்லாத கைகளால் அதைத் தொடக்கூடாது. அதை எடுத்ததும் கண்களிலும் நெஞ்சிலும் பயபக்தியுடன் ஒத்திக்கொள்ள வேண்டும். மற்றவரெதிரில் இந்த ஜெபமாலையை உபயோகிக்கக் கூடாது.மன ஒருமை
ஆரோக்கிய குறிப்புகள் : பிரத்தியாகாரம் - ஆரோக்கிய குறிப்புகள் [ ஆரோக்கியம் ] | Health Tips : Exception - Health Tips in Tamil [ Health ]