மூளை (The Brain) மற்றும் கபால நரம்புகள் விளக்கம்

மருத்துவ குறிப்புகள்

[ மருத்துவ குறிப்புகள் ]

Explanation of The Brain and Cranial Nerves - Medicine Tips in Tamil

மூளை (The Brain) மற்றும் கபால நரம்புகள் விளக்கம் | Explanation of The Brain and Cranial Nerves

கிரேனியம் என்னும் கபாலத்தினுள்ளே நமது மூளை இருக்கிறது.

மூளை (The Brain) மற்றும் கபால நரம்புகள் விளக்கம்:


கிரேனியம் என்னும் கபாலத்தினுள்ளே நமது மூளை இருக்கிறது. மூளையின் மேற்புறத்தில் மூன்று தசை மூடிகள் இருக்கின்றன. இம்மூன்றில் எல்லாவற்றிற்கும் வெளியே இருப்பது கெட்டியான நார்களால் பின்னப்பட்டது போன்ற ஒரு தசை மூடி. இதற்கு 'டியூரா மாட்டர்' (Dura Mater) என்று பெயர். அதற்கும் கீழ் இருக்கும் மூடிக்கு 'அரெச்நாய்ட்' (Arachnaid) என்றுபெயர். அதற்கும் கீழே 'பயாமாட்டார்' (Pia- mater) என்னும் தசை இருக்கிறது. இதுதான் மூளைக்கு சமீபத்தில் இருக்கிறது. இதில் அநேக குழாய்கள் இருக்கின்றன.

பெருமுளை (Cerebrum): இது ஒரு அர்த்த கோள வடிவமுள்ளது. இதுதான் மூளையின் பெரும் பகுதி. இதில் அநேக சுருள்கள் இருக்கின்றன. இதுதான் புத்திக்கும் இருப்பிடம். தவிர யோசனைகள், ஞாபகம், இஷ்டம், நடத்தை, அபிப்பிராயம் ஆகிய எல்லாம் இதனால் தான் நடைபெறுகின்றன. இதன் பல பாகங்கள் பல வேலைகளுக்காக ஏற்பட்டவை. சில பாகங்கள் விஷயங்களைக் கிரகிக்கும் இடங்களாகவும், மற்றும் சில உத்திரவிடும் இடங்களாகவும் இருக்கின்றன. 

சிறு மூளை (Cerebellum): சிறுமூளை, பெருமூளையின் பின்பாகத்தில் சற்று கீழாக இருக்கிறது. 

பான்ஸ் வரோலி (Pons Varoli): சிறு மூளையின் வலது பாகத்துக்கும் இடது பாகத்துக்கும் நடுவே ஒரு பாலம்போல் இது இருக்கிறது.

மஞ்சா முகம் (Medulla oblongata): பான்ஸ்வரோலிக்கும் கீழே அதை முள்ளந்தண்டுடன் சேர்த்துக் கொண்டிருக்கும் பாலம், இது ஒரு ஸ்தம்ப வடிவுள்ள நரம்பு ஸ்தானம். இது சிறு மூளைக்கு நடுவே அதை வலது இடது என்று பிரித்துக்கொண்டு இருக்கிறது. முள்ளந்தண்டிலிருந்து எல்லா நரம்புகளும் இதன் மூலமாய் மூளைக்குப் போவதால் இது ஒரு முக்கியமான பாகமாகும். உடலில் முக்கிய விஷயங்களாகிய சுவாசம், இரத்த ஓட்டமும் முதலியவை இதனால் ஆளப்படுகின்றன. ஆகவே, இதற்கு ஆபத்து ஏதாவது ஏற்பட்டால் உடனே மரணம் தான்.

உடலில் பல பாகங்களிலுமுள்ள தசைகளின் வேலைகளை இப்பாகம் ஆளுகிறது. இப்பாகத்தில் தான் பல பாகங்களிலிருந்து மூளைக்குவரும் செய்திகள் கிரகிக்கப்படுகின்றன. எல்லா உத்திரவுகளும் இங்கிருந்துதான் கொடுக்கப்படுகின்றன. நடப்பது, ஓடுவது முதலிய பல தசைகள் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை இப்பாகம் ஆளுகிறது. 


கபால நரம்புகள் (Cranial Nerves)

இவை 12 ஜோடிகளாகும். மூளையின் முன் பக்கத் திலிருந்து ஆறு ஜோடிகளும் பக்கங்களிலிருந்து ஆறு ஜோடிகளும் கிளம்புகின்றன. இவைகளில் சில உணர்ச்சி நரம்புகளாகவும், சில மோட்டார் நரம்புகளாகவும், மற்றும் சில உணர்ச்சியும் மோட்டாரும். கலந்த கலப்பு நரம்புகளாகவும் இருக்கின்றன.


முள்ளந்தண்டு (Spinal Cord) 

முள்ளந்தண்டு எனப்படும் ஸ்பைனல் கார்டு நரம்புத் தசைகளால் ஆக்கப்பட்டு முதுகெலும்புக் குழாயில் நீண்ட கயிறு போல் இருக்கிறது. அது தலையில் மூளையின் அடிப்பாகத்திலிருந்து தோன்றி கீழே இரண்டாவது இடுப்புப் பக்கத்து முள்ளெலும்பு வரையில் ஒரு நரம்பாக இருக்கிறது. பிறகு பல நரம்புகளாகப் பிரிந்து போகிறது. ஸ்பைனல் கார்டின் முன்பக்கத்திலும் பின்பக்கத்திலும் பள்ளங்கள் இருக்கின்றன. அதன் உட்புறத்தில் ஒரு சிறிய துவாரம் உண்டு. பல ஸ்பைனல் நரம்புகள் ஸ்பைனல் கார்டின் இரு பக்கங்களிலிருந்தும் பிரிகின்றன. இவைகள் மட்டும் 32 ஜோடிகளாகும். மூளையைப் போலவே ஸ்பைனல் கார்டும் வெண்மைத் தசைகளாலும் பழுப்புத் தசைகளாலும் ஆக்கப்பட்டிருக்கின்றன. 

ஸ்பைனல் கார்டின் பழுப்புத் தசைகள் மூளையில் உள்ளவை போல நியூரான்களாலும் அவைகளிலிருந்து கிளம்பும் தசை நார்களாலும் ஆக்கப்பட்டிருக்கின்றன. வெண்மைத் தசைகள் கொழுப்பும் நரம்பு நார்களும் சேர்ந்து உண்டாகி இருக்கின்றன. இந்நார்கள் மூளையின் பல பாகங்களுடன் இணைக்கப் பட்டிருப்பதால் சரீரத்தின் பல பாகங்களிலிருந்து மூளைக்கும், மூளையிலிருந்து பல பாகங்களுக்கும் சமாச்சாரங்களை கொண்டு செல்ல உபயோகப்படுகின்றன.

சரீரத்தின் வலது பாகத்தை மூளையின் இடது பாகமும், இடது பாகத்தை வலது பாகமும் முறையே ஆளுகின்றன. ஏனெனில் சரீரத்திலிருந்து வரும் நரம்புகள் ஸ்பைனல் கார்டில் சந்தித்து அதன் வழியாக மேலே சென்று நாம் ஏற்கனவே சொல்லிய படி, பான்ஸ்வரோலி என்னும் உறுப்பு வழியாகச் செல்லும்போது மூளையின் இடதுபாகத்தை வந்தடைகிறது. சரீரத்தின் எல்லாப் பாகத்து நரம்புகளும் ஸ்பைனல் கார்டு வழியாகத் தான் மூளைக்குச் செல்லுவதால் ஸ்பைனல் கார்டுக்கு ஆபத்து ஏற்படின் எந்த இடத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கிறதோ, அதற்கு கீழேயுள்ள அவயவங்களை அதாவது தசைகளை நம் இஷ்டப்படி அசைக்க முடியாது. ஆனால் அவ்விடங்களில் முள்ளினால் திடீரென்று குத்தினால் அல்லது எறும்பு முதலியவை கடித்தால் அசைவு ஏற்படும். ஏனெனில் அவ்விஷயம் ஸ்பைனல் கார்டு வரையிலும் சென்று அதிலிருந்து மோட்டார் நரம்புகள் வழியாக பிரதிகரண ஊக்கம் (Reflex Impulse) என்னும் ஓர் சக்தி அவ்விடத்திற்குச் செல்கிறது. ஆகையினால் நமக்குத் தெரியாமலேயே அசைவு ஏற்படுகிறது.

ஒரு பிரதிகரண ஊக்கத்திற்குத் தேவையானவை மூன்றுதான். 

1. ஒரு இடத்திலிருந்து கிளம்பும் உணர்ச்சி 

2. ஸ்பைனல்கார்டிலோ மூளையின் அடிப்பாகத்திலோ ஒரு இடம். 

3. அவ்விடமிருந்து கிளம்பும் ஒரு மோட்டார் நரம்பு நமக்குத் தெரியாமலேயே சரீரத்தில் நடக்கும் விஷயங்கள் இம்மாதிரியான பிரதிகரண ஊக்கத்திலேயே ஏற்படுகின்றன. 

உதாரணமாக நம் கண்களின் சமீபம் தூசி வந்தால் இமைகள் தாமாகவே மூடிக்கொள்கின்றன. தூங்கும் பொழுது உள்ளங்காலில் கூச்சப்படுத்தினால் விழித்துக் கொள்ளாமலேயே காலை இழுத்துக் கொள்வோம். இவை பிரதிகரண ஊக்கத்தின் விளைவுகளாகும்.


உப உணர்ச்சி நரம்புத் திட்டம் (Sympathetic Nervous System)

முள்ளந்தண்டு முன்புறத்தில் சங்கிலி போன்று இரு நரம்புகள் இருக்கின்றனவென்றும் முன் பக்கங்களில் படித்தோம். இவைகளில், 'காங்கிலியா' என்னும் பல முடிச்சுகளும் அம்முடிச்சுகளிலிருந்து பல நரம்புகளும் பிரிந்து சரீரத்தின் எல்லா பாகங்களுக்கும் செல்லுகின்றனவென்றும் தெரிந்து கொண்டோம். இப்படிச் செல்லும் நரம்புகள் சரீரத்தின் உட்புற மிருக்கும் பல அவயவங்களுக்கும் உறுப்புகளுக்கும் இரத்தக் குழாய்களுக்கும் சென்று, இருதயம், சுவாச கோசங்கள், அன்னப்பை, குடல், சிறுநீர்ப்பை, முதலிய எல்லா அவயவங்களும் அவை செய்யும் வேலைகளைச் சரிவரச் செய்யும்படி உதவுகின்றன. ஆகவே சரீரத்தில் நடக்கவேண்டிய முக்கிய வேலைகளாகிய சுவாசம், இரத்தஓட்டம், ஜீரணம், ஆகியவை நடைபெறுவதற்கு இன்வாலண்டரி தசைகளை இயக்கும் வேலை இந்த உப உணர்ச்சி நரம்புகளால் தான் நடைபெறுகின்றது.

ஜீரணம் என்பது நாம் அவ்வப்போது உட்கொள்ளும் ஆகாரங்களை சிறிய அணுக்களாக மசிய வைத்து அதிலிருக்கும் சத்தை இரத்த ஓட்டத்தில் கலக்க வைப்பதாகும். ஜீரண உறுப்புகள் அலி மெண்டரிகனால் எனப்படும் ஒரு நீண்ட குழாய். அக்குழாய் எங்கும் ஒரே அளவாக இல்லாமல் சில இடங்களில் சிறியதாகவும் சில இடங்களில் பெரியதாயும் இருக்கிறது. இந்த அலிமெண்டரிகனாலுக்கு வாய் தான் ஆரம்பம். ஆகாரத்தை வாயில் போட்டவுடன் நமது பற்கள் அதை அறைக்கும்போது வாயினுள் இருக்கும் சில கோளங்கள் (Glands) அவைகளில் உற்பத்தியாகும் உமிழ்நீரைக் கொட்டுகின்றன. வாய்க்கு அடுத்தபடி தொண்டை என்று சொல்லப்படும் புனல் போன்ற அவயம் காணப்படும். இத்தொண்டையில் மூக்குத் துவாரங்களும் காது துவாரங்களும் கூடுகின்றன. இதற்குக் கீழே இக்குழாய் சிறியதாகவும் அதிக சதைப்பற்று உள்ளதாகவும் ஆகின்றது. இப்பொழுது இக்குழாய் அன்னக்குழாய் (Gullet) எனப்படும். இது சுமார் 10 அங்குல நீளமிருக்கும். இது கழுத்தின் வழியாக சுவாசக்குழாய்க்குச் சற்று பின் புறத்தில் கீழ்நோக்கிச் செல்லுகிறது. டயாப்ரம் என்னும் தசைப்படுதாவை கிழித்துக் கொண்டு அதற்கும் கீழே சென்று அவ்விடம் ஒரு பைபோல் பருத்து விடுகிறது. இது தான் அன்னகோசம் அல்லது அன்னப்பை (Stomach) எனப்படும். அதன் பிறகு மறுபடியும் குழாய் சிறியதாகி சுமார் 20 முதல் 22 அடி வரையில் சுற்றிக்கொண்டு இருக்கிறது.

மேலே சொன்ன குழாயின் முதல் சுமார் 1௦ அங்குலங்களுக்கு டியூடனம் (Duodenum) என்று பெயர். அதற்குபின் இருப்பதுதான் சிறுகுடல். சிறு குடலின் முடிவில் பெருங்குடல் இருக்கிறது. பெருங்குடலின் ஆரம்பத்தில் அப்பெண்டிக்ஸ் (Appendix) அல்லது உபாங்கம் இருக்கிறது. பெருங்குடலை கோலன் (Colon) என்று சொல்வதுண்டு. அது முதலில் மேலே சென்று அங்கே திரும்பி வயிற்றின் இடம் பாகத்திற்குக் குறுக்கே சென்று மறுபடியும் கீழாகத் திரும்பி ரெக்டம் (Rectum) என்னும் குழாயில் முடிகிறது. ரெக்டத்தின் நுனி அபானம் (Anus) ஆகும்.

வாயின் உட்துவாரம் தொண்டை. தொண்டையின் இரு பக்கங்களிலும் டான்சில்ஸ் (Tonsils) என்னும் கோளங்கள் இருக்கின்றன.

பற்கள்: நாம் உட்கொள்ளும் உணவை நன்கு அறைப்பதற்குப் பற்கள் உதவுகின்றன. குழந்தைகளுக்கு முதலில் முளைக்கும் பற்கள் பால் பற்கள் என்று சொல்லப்படும். இவை மேல் வாயில் பத்தும் கீழ்வாயில் பத்தும் ஆக இருபதுதான். இவை 6 மாதத்தில் தோன்றி 5 வயது முதல்7வயதுக்குள்ளாக விழ ஆரம்பித்து 10 அல்லது 12 வயதில் எல்லாம் விழுந்து அவைகளுக்குப் பதிலாக ஸ்திரப் பற்கள் முளைத்துக் கொண்டு இருக்கும்.

ஸ்திரப் பற்கள்: இவை மேல் வாயில் 16-ம் கீழ் வாயில் 16-ம் ஆக 32 ஆகும். கடைப்பற்கள் நான்கைத் தவிர மற்றப் பற்கள் 14 வயதிற்குள் முளைத்துவிடும். கடைசி கடைவாய்ப் பற்கள் மாத்திரம் 20 அல்லது 22 வயதில் முளைக்கும். ஆகவே இப்பற்களுக்கு விவேகப் பற்கள் (Wisdom teeth) என்று பெயர்.

பற்களின் அமைப்பு: பற்கள் தாடையில் பொருத்தப்பட்டிருக்கின்றன. ஈறுகளினுள்ளே புதைக்கப்பட்டிருக்கும் பாகத்திற்கு வேர் (Root) என்றும் ஈறுகளுக்கு வெளியே தென்படும் பாகத்திற்கு மூடி (Crown) என்றும் பெயர். முன் வாய் பற்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வேரும் கடைவாய்ப் பற்களுக்கு இரு பிரிவான வேரும் கடைசி இரண்டு கடைவாய்ப் பற்களுக்கு தலா மூன்று வேர்களும் இருக்கும்.

ஒவ்வொரு பல்லின் மத்திய பாகத்திற்குள்ளேயும் பல்லின் தசை இருக்கிறது. இதில் நரம்புகளும் இரத்தக் குழாய்களும் இருக்கின்றன. இதன் மேல் டெண்டின் என்னும் ஓர் கெட்டியான வஸ்துவால் பற்கள் ஆக்கப்பட்டிருக்கின்றன. பற்களின் முடிவில் அதாவது வெளியே தெரியும் பாகத்தின் நுனியில் இந்த டெண்டினுக்கு மேலாக எனாமல் என்னும் ஒரு வஸ்து பூசப்பட்டுள்ளது. ஆனால் உள்ளே புதைக்கப்பட்டிருக்கும் வேர் பாகங்களில் எனாமல் பூசப்படவில்லை. அதற்குப் பதிலாக சிமெண்டு என்னும் ஒர் கெட்டியான வஸ்துவால் பூசப்பட்டிருக்கிறது. இதுவே பற்களை ஈறுகளுடன் இறுக இணைக்கும் வஸ்துவாகும்.

பற்களின் வேலை நாம் உட்கொள்ளும் ஆகாரங்களை நறுக்கி நன்றாய் அறைப்பதாகும். கீழ்த்தாடை அசைவினால் ஏற்படுகிறது.


உமிழ் நீர்க் கோளங்கள் (Salivary Glands)

வாயில் ஆகாரங்கள் அறைக்கப்படும் போது அவை அறைக்கப்படுவது மாத்திரமல்லாமல் வாயில் உற்பத்தியாகும் உமிழ் நீருடன் நன்கு கலக்கப்படுகின்றன. உமிழ்நீர் உற்பத்தி செய்யும் கோளங்கள் ஆறு. முறையே ஒவ்வொரு பக்கங்களிலும் மூன்று இருக்கின்றன. இவைகளில் பரோடிட் (Parotid) என்பது காதுக்கு முன்புறத்திலும் சப்மாக்ஸிலரி (Sub Maxillory) என்பது கீழ்த்தாடையின் அடியிலும் சப் லிங்குவல் (Sub Lingual) என்பது நாக்கின் அடிப்பாகத்திலும் இருக்கின்றன. இவைகளில் உற்பத்தியாகும் உமிழ் நீர் டக்ட்ஸ் (Ducts) எனப்படும் சிறிய குழாய்களின் வழியே வந்து வாயில் கொட்டப்படுகிறது.

வாயினுள் ஆகாரத்தைப் போட்டவுடன், சில சமயங்களில் ஆகாரத்தை நினைத்தவுடன் அல்லது அதன் வாசனையை முகர்ந்தவுடன் மேற்சொன்ன கோளங்கள் அவை உற்பத்தி செய்யும் உமிழ் நீரை வாயில் கொட்டும். பற்கள் ஆகாரத்தை சிறிய அணுக்ககளாகச் செய்கின்றன. நாக்கு அறைக்கப்பட்ட அணுக்களை உமிழ் நீருடன் நன்கு கலக்குகிறது.

உமிழ் நீரில் டயலின் (Ptyalin) என்னும் ஓர் பதார்த்தம் இருக்கிறது. அதனுடன் ஆகாரம் நன்றாய் கரைக்கப்படுவதால் ஆகாரத்திலுள்ள மாவு அல்லது கஞ்சிப் பதார்த்தங்களில் சில பாகம் சர்க்கரையாய் மாறுகின்றது. இம்மாதிரி நன்றாக கரைக்கப்பட்டும் கலக்கப்பட்டுமுள்ள ஆகாரம் தொண்டையின் வழியே தள்ளப்பட்டு அன்னக்குழாய் மூலம் உட்செல்லுகிறது.

தொண்டையில் மூச்சுக் குழாய்களின் வாயும் இருப்பதால் ஆகாரங்களை விழுங்கும்போது அவை மூச்சுக் குழாயில் செல்லாதிருக்கும்படி எபிகிளாடிஸ் (Epiglottis) என்னும் ஒர் மூடியால் மூச்சுக்குழாய் வாய் மூடப்பட்டு விடுகிறது. அப்படித் தவறி சிறிது ஆகாரம் அதனுட் சென்றுவிட்டால் உடனே இருமலோ, தும்மலோ ஏற்பட்டு அவ்வாகாரம் வெளியே வந்துவிடும். இதையே புரையேறுதல் என்று சொல்லுவார்கள். வாயிலுள்ள ஆகாரத்தை விழுங்கியவுடன் அது திடீரென்று அன்னப்பையில் விழுவதில்லை. அன்னக்குழாய் அதன் பக்கத்திலுள்ள தசைகளின் உதவியால் சிறிது சிறிதாக அகன்று, விழுங்கப்படும் ஆகாரத்தை, மெதுவாக கீழே இறக்குகிறது. இம்மாதிரியாக நாம் சாப்பிடும் ஆகாரம் அன்னப்பையில் போய்ச் சேருகிறது.


அன்னப்பை (The Stomach)

இது ஒரு பைபோன்ற அவயவம். இதனுடைய அகலமான பாகம் இடது பக்கத்திலும் குறுகிய பாகம் வலது பக்கத்திலும் இருக்கிறது. எப்படி நமது சட்டைக்கு உட்துணி (Lining) கொடுத்துத் தைக்கிறோமோ அதே போல இப்பைக்குள் ஒரு உட்கவசம் இருக்கிறது. இதை 'ஆவத்வசம்' அல்லது மியூகஸ் மெம்ரேன் (Mucus Membrane) என்று சொல்வார்கள். இவை கொசுவப்பட்டது போல் மடிப்பு மடிப்பாக இருப்பதால் நாம் ஆகாரம் உட்கொண்டு அது பையில் இருக்கும் வரையில் விரிந்து கொண்டும் பையில் ஆகாரம் இல்லாதபோது சுருங்கியும் இருக்கிறது. அன்னப்பையின் உட்பாகத்தை பூதக்கண்ணாடியால் பார்த்தால் அதில் பல சிறிய துவாரங்கள் இருப்பது தெரியவரும். இவை காஸ்ட்ரிக் ஜூஸ் (Gastric Juice) என்னும் ஒரு வகை நீர் அன்னப்பைக்கு வரும் பாதைகளாகும். தவிர அன்னப்பையின் தசைகளில் அநேக ரத்தக் குழாய்களும் நரம்புகளும் இருக்கின்றன.

‘ஜாடராக்கினி' (Gastric Juice): இது ஒரு தண்ணீர் போன்ற நீர். இது சிறிய குழாய்கள் போன்ற கோளங்களில் உற்பத்தி செய்யப்பட்டு பையில் ஆகாரம் வந்தவுடன் அதில் கொட்டப்படுகிறது. இதில் சில உப்புக்களும் ஆஸிட் எனப்படும் புளிப்புத் திராவகங்களும் இருக்கின்றன. எப்படி உமிழ்நீரினால் கஞ்சிப் பதார்த்தங்கள் கரைக்கப்படுகின்றனவோ, அம்மாதிரியாகவே இந்த ஜாடராக்கினி நீரால் ஊன்செய் பதார்த்தங்கள் கரைக்கப்படுகின்றன. இப்பதார்த்தங்களே நம்முடைய தேகத்தின் சதை மாமிசம் முதலானவைகளுக்கு மூலமாகும். இம்மாதிரி ஜாடராக்கினியால் நன்கு கரைக்கப்பட்ட ஆகாரத்துக்கு சைம் (Chymc) என்று பெயர். 

அன்னகோசத்தின் உட்புறத் தோலில் அனேக சிறிய இரத்தக்குழாய்கள் இருக்கின்றன. ஜீரணிக்கப்பட்ட ஆகாரத்தில் சிறிதளவு இவை எடுத்துக்கொள்கின்றன. பாக்கி உள்ளவை அன்னப்பையிலிருந்து சிறு குடலுக்குச் செல்கின்றன. உமிழ் நீரானது கஞ்சிப் பதார்த்தத்தை மாத்திரம் (Carbo Hydrates) சிறிதளவு கரைத்து இரத்தத்துடன் சேரும்படி மாற்றுகிறது. அவ்விதமே ஜாடராக்கினி ஆகாரத்திலுள்ள ஊன்செய் பதார்த்தத்தை மாத்திரம் ஜீரணம் செய்கிறது. 

அன்னகோசம் மேலே அன்னக் குழாயுடனும், கீழே சிறுகுடலுடனும் சம்பந்தப்பட்டு இருக்கிறது. சிறுகுடலின் ஆமத்வசமும் அனேக மடிப்புகள் கொண்டதுதான். இம்மடிப்புகளில் சிறிய, ஆனால் தீண்ட, நுட்பமான குழாய்கள் இருக்கின்றன. இக் குழாய்களை நிணநீர்க் குழாய்கள் எனலாம். சிறு குடலின் முதல் பாகத்துக்குப் பிரதமாந்திரம் என்று பெயர். இப்பாகத்தில் இரு முக்கியமான ஜீரணத் திராவகங்கள் ஆகாரத்துடன் சேருகின்றன. இவை கல்லீரல், பாங்கிரியாஸ் என்ற இரு அங்கங்களால் செய்யப்பட்டு சிறிய குழாய்களின் மூலமாய்ப் மாந்திரத்தில் கொட்டப்படுகின்றன. கல்லீரலில் உண்டாக்கும் திராவகத்துக்கு பித்த நீர், (Bile) என்று பெயர் கல்லீரலில் உண்டாகிய நீர், பித்தப்பையில் சேர்க்கப்படுகிறது. வேண்டியபோது இந்த நீர் ஒரு சிறு குழாய் மூலம் சிறுகுடலுக்கு வந்து சேருகிறது.

பாங்கிரியாஸ் என்னும் அங்கம் மதுரசம் (Pancreatic Juice) என்னும் ஒரு சீரண திராவகத்தை உண்டாக்குகிறது. இந்த இரண்டு நீரும் குடலில் வரும் ஆகாரத்தை மேலும் ஜீரணிக்கின்றன. ஆகாரத்திலிருந்து அன்னகோசத்தில் ஜீரணிக்கப்படாத ஊன் செய் பதார்த்தத்தை மதுரசம் ஜீரணிக்கச் செய்கிறது. தவிர, ஆகாரத்திலுள்ள நிண பதார்த்தங்களையும் (fats) வாயில் ஜீரணிக்கப்படாத கஞ்சிப் பதார்த்தங்களையும் ஜீரணிக்கிறது. பித்த நீர் நிண பதார்த்தத்தை மாத் திரம்ஜீரணிக்கிறது.

இந்த மாதிரியாக ஜீரணிக்கப்பட்ட ஊன் செய் பதார்த்தமும் கஞ்சிப் பதார்த்தமும் சிறுகுடலிலுள்ள இரத்தக் குழாய்கள் மூலமாக இரத்தத்துடன் கலந்து விடுகின்றன. ஜீரணிக்கப்பட்ட நிண பதார்த்தம் மாத்திரம் இரத்தக் குழாய்கள் மூலமாகச் சேராமல் சிறுகுடலிலிருக்கும் நிண நீர்க் குழாய்களின் வழியாகச் சேருகிறது.

நாம் உட்கொண்ட ஆகாரம் அன்ன கோசத்திலும் சிறுகுடலிலும் ஜீரணிக்கப்பட்டு அவைகளிலுள்ள சிறு இரத்தக் குழாய்களின் வழியாக இரத்தத்துடன் மேலே சொல்லியபடி சேருகின்றது. இது போலவே ஆகாரம் பெருங்குடல் மூலமாகப் போகும் போது ஜீரணிக்கப்பட்ட பதார்த்தங்களெல்லாம் இரத்தக் குழாய்களை அடைகின்றன. ஜீரணிக்கப்படாத பாதார்த்தங்கள் மலமாக அபானத்தின் வழியாக வெளிச் செல்லுகின்றன.

மருத்துவ குறிப்புகள் : மூளை (The Brain) மற்றும் கபால நரம்புகள் விளக்கம் - மருத்துவ குறிப்புகள் [ மருத்துவம் ] | Medicine Tips : Explanation of The Brain and Cranial Nerves - Medicine Tips in Tamil [ Medicine ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்