வியாதிகள் எப்படி உருவாகிறது?

மருத்துவ குறிப்புகள்

[ மருத்துவ குறிப்புகள் ]

How do diseases develop? - Medicine Tips in Tamil

வியாதிகள் எப்படி உருவாகிறது? | How do diseases develop?

ஒரு வியாதியை சொஸ்தம் செய்ய ஆரம்பிக்கு முன் வெளிக்காரணங்கள் ஏதாவது இருக்கின்றனவா என்று ஆராய வேண்டும்.

வியாதிகள் எப்படி உருவாகிறது?


சென்ற கட்டுரைகளில் மிகவும் நுண்ணிய பதார்த்தங்களாலேயே வியாதிகள் உற்பத்தி செய்யப்படுகின்றனவென்று படித்தோம். இம்மாதிரி அரூபமான வஸ்துக்களால்தான் ஆருபமான அந்தராத்மாவில், அதாவது மனிதனின் மூலகாரணத்தில் தாக்க முடியும். மத்திய பாகத்திலிருந்து படிப்படியாக அவ் வியாதி வெளியேறி அதன் விளைவுகள் மனிதனின் வெளிப்பாகங்களாகிய தசைகளிலும் அவயவங்களிலும் தென்படுகின்றன அந்தராத்மா நல்ல நிலைமையில் இருந்தால் சரீரமும். அதன் அவயவங்களும் உறுப்புக்களும் நல்ல நிலைமையில் இருக்கும். அந்தராத்மாவில் கோளாறுகள் ஏற்பட்டால் படிப் படியாக அதன் விளைவுகள் வெளிவருகின்றன.

நுண்ணிய பதார்த்தங்களாலும் அருப வஸ்துக்களாலுமே வியாதி உண்டாவதால் அம்மாதிரி ஏற்பட்ட வியாதிகளை நிவர்த்திப்பது நுண்ணிய பதார்த்தங்களால்தான் முடியும் நமது ஹோமியோபதி ஒளஷதங்கள் வீரியப்படுத்தப்படுவதில் நாம் செய்வது அதை நுண்ணிய பதார்த்தங்களாகவும் அரூபமாகவும் ஆக்குவதே.

அரூப வஸ்துக்களால்தான் வியாதி உண்டாக்கப்படுகிறது என்பதற்கு ஒரு உபமானம் சொல்லுகிறோம். காலரா, ஒட்டுவாரொட்டி என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். தற்கால அபிப்பிராயப்படியே ஒரு காலரா கண்ட மனிதன் சுவாசித்த காற்றை ஒரு வியாதியில்லாதவர் சுவாசித்தால் அவருக்குக் காலரா வந்து விடலாம். வியாதியற்ற மனிதனின் சரீரத்தில் காலராவை உண்டுபண்ணும் வஸ்துவோ அல்லது பூச்சியோ நுழைவதை எவ்வகையிலும் நாம் தெரிந்துகொள்ள முடிவதில்லை. வியாதி கண்ட பிறகே அது நுழைந்து விட்டதாக நாம் அனுமானிக்க முடிகிறது. ஆகையினால், வியாதியின் விளைவைக் காண முடிகிறதே ஒழிய வியாதியை உற்பத்தி செய்யும் வஸ்துவைக் காண முடியாது என்பது தெரிகிறதல்லவா? ஏனென்றால், அது அருபமாயுள்ளது.

பயந்த கோளாறினால் ஏற்பட்ட ஒரு சுரத்தையோ அல்லது வியாதியையோ மந்திரத்தினால் சொஸ்தம் செய்வதை நாம் பார்க்கிறோம். இவ்விடத்திலும் அரூபமான வியாதியின் காரணத்தை அரூபமான ஒளஷதத்தால் வெல்வதே தத்துவம்.


வெளிக் காரணங்கள்

ஒரு வியாதியை சொஸ்தம் செய்ய ஆரம்பிக்கு முன் வெளிக்காரணங்கள் ஏதாவது இருக்கின்றனவா என்று ஆராய வேண்டும். வெளிக் காரணங்கள் என்றால் அதைச் சிலர் தப்பு அர்த்தம் செய்து கொள்வார்கள். தொண்டையில் கட்டிபோல் சதை வளர்ந்தால் அதை வெளிக் காரணம் என்று சொல்ல முடியாது. ஒரு சிரங்கோ அல்லது கட்டியோ கிளம்பினாலும் அதை வெளிக் காரணம் சொல்வதில்லை. இவைகளெல்லாம் சரீரத்தினுள்ளே ஏதோ கோளாறு ஏற்பட்டு அக்கோளாரின் விளைவினாலேயே ஏற்பட்டிருக்கவேண்டும். ஆகவே அவைகள் வியாதியின் விளைவே இதை வெளிக் காரணம் என்று கருதி அதை அறுத்து விடுவது நாம் சாதாரணமாய்க் காணும் விஷயம். ஆனால் ஒரு டான்சிலை அறுத்து விடுவதனால் நாம் காண்பது என்ன? டான்சில் ஆபரேஷன் செய்யப்பட்டவர்களின் சரீரம் மிகவும் மெலிந்து விடுகிறது. அதனால் அம்மாதிரியான ஒரு ஆபரேஷனுக்குப் பிறகு பல மாதங்களுக்கு டானிக்குகள் சாப்பிட்டு சரீரத்தைப் பழைய நிலைமைக்குக் கொண்டுவர வேண்டி இருக்கிறது. ஒரு சிலருக்கு டான்சில் ஆபரேஷனுக்குப் பிறகு க்ஷயம் முதலிய  கொடிய நோய்கள் தோன்றுவதுண்டு. 

டான்சில் என்னும் வியாதிக்கும் மற்ற வியாதிகளைப் போலவே ஒரு மூலகாரணம் உண்டு. இந்த மூலகாரணத்தின் விளைவாகவே தொண்டையில் சதை வளருகிறது. அச்சதையை அதாவது விளைவை நீக்கி விட்டால் மூல காரணம் நீக்கப்படவில்லை அல்லவா? மூல காரணம் நீக்கப்படாத வரையில், விளைவு தொண்டையில் இல்லா விட்டால் சுவாசகோசம் போன்ற உறுப்புகளில் ஏற்படுகின்றது ஆகவே நாம் தெரிந்துகொள்வது டான்சில் வியாதியை நீக்க உள்ளுக்கு ஒளஷதம் கொடுத்து மூலகாரணத்தையே நீக்கவேண்டும். அம்மாதிரி செய்வதில் அவ்வியாதி அறவேயும், சாசுவதமாகவும் சௌகரியமாகும். ஹோமியோபதி வைத்தியமுறையில் இவ்வியாதியை ஒழிக்க நல்ல ஒளஷதங்கள் இருக்கின்றன. 

ஒரு மனிதனுக்கு எப்பொழுதும் சளி பிடித்திருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் அவன் அயலூர் சென்றாலும் அல்லது சில தினங்கள் அதே ஊரில் வேறு தெருவிலுள்ள நண்பர்கள் வீட்டிற்குச் சென்றாலும் அவன் வியாதி சற்று குணப்படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அம்மனிதன் மருத்துவரிடம் சிகிச்சைக்கு வரும்போது இவ் விஷயங்களையும் மருத்துவர் தெரிந்துகொள்ள வேண்டும். அவன் குடியிருக்கும் வீடு சதுசதுப்பாகவும் அல்லது எப்பொழுதும் ஈரம் உள்ளதாகவும் இருப்பதினால் அம்மாதிரியாக அவனுக்கு எப்பொழுதும் சளி பிடித்துக்கொண்டே இருக்கலாம். அம்மாதிரியான ஒரு நபருக்கு உள்ளுக்கு ஔஷதம் கொடுப்பது மாத்திரம் போதாது. அவனை அந்த வீட்டை விட்டு வேறு வீட்டில் வசிக்கவும் சொல்ல வேண்டும். இம்மாதிரி ஏற்படும் காரணங்களையே ‘வெளிக் காரணங்கள்' என்று சொல்லுகிறோம்.


வியாதிகளைப் பாகுபாடு செய்தல் 

ஒரு ஹோமியோபதி வைத்தியர் வியாதிகளைப் பாகுபாடு செய்யவும் தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது எப்பொழுது ஒளஷதம் கொடுக்கவேண்டும். எப்பொழுது ஒளஷதம் கொடுக்க வேண்டியதில்லை என்பதும் அவருக்குத் தெரிய வேண்டும். சில சமயங்களில் உண்மையான வியாதி இல்லாததும் ஆனால் வியாதிபோல் தோன்றுவதுமான சில கேசுகள் மருத்துவரிடம் வரலாம். இம்மாதிரியாக வருபவைகளில் பல வெளிக்காரணங்களாலேயே ஏற்பட்டவைகளாக இருக்கலாம். இன்னும் சில அசாதாரணப் பழக்கங்களாலேயே ஏற்பட்டவைகள் ஆகவும் இருக்கலாம் இம்மாதிரியான இனங்களில் எவ்வளவு வீரியமுள்ள ஒளஷதங்கள் உட்செலுத்தினாலும் நீடித்த பிரயோஜனம் ஏற்படாது. அப் பழக்கங்களை, அதாவது சரீரத்துக்கு ஒவ்வாத பழக்கங்களை, நீக்கினாலொழிய அவ்வியாதி நீங்குவதற்கு வழியில்லை. 'ஒரு வைத்தியனின் தொழில், வியாதியை நீக்குவதுடன் வியாதி வராமலும் தடுப்பது" என்பது கவனிக்கத்தக்கது.


சஸ்திர சிகிச்சை

ஒரு உடைந்த எலும்பைச் சரிப்படுத்த அல்லது ஒரு அடிபட்ட காயத்துக்கு உள்ளுக்கு மாத்திரம் ஒளஷதம் கொடுத்துச் சரிப்படுத்த நினைப்பதும் தவறாகும். உடைந்த எலும்பைச் சரிப்படுத்திக் கட்டிய பிறகு அவ்வெலும்பு சீக்கிரம் ஒட்டிக்கொள்ள ஒளஷதம் கொடுப்பது சரியான காரியமாகும். ஆனால் ஒளஷதத்தினால் மாத்திரம் உடைந்த எலும்பைச் சரிப்படுத்துவது இயலாத காரியம். இரண சிகிச்சை என்னும் சஸ்திர சாஸ்திரம் (Surgery) இவ்விடம் உதவ வேண்டியது. இரண சிகிச்சையைப் பற்றி பலர் பல விசித்திரமான அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கின்றனர். பலர் ஹோமியோபதியில் இரண சிகிச்சை இருக்கிறதா" என்று கேட்கின்றனர். ஹோமியோபதி என்பது 'வைத்திய' சாஸ்திரமாகும். அந்த சாஸ்திரத்தில் வியாதிக்கு ஒளஷதம் கொடுப்பதுதான் ஏற்பட்டது. இரண சிகிச்சை என்பது சஸ்திரப் பிரயோகத்தினால் வியாதியை சொஸ்தம் செய்யும் ஒரு 'கை வேலை' ஆகும்.

ஒரு ஹோமியோபதி வைத்தியரே பயிற்சியும் அனுபவமும் உள்ளவரானால் சிகிச்சையும் செய்யலாம். ஆனால் ஒருவருக்கு சஸ்திர சிகிச்சை தெரியாததனால் அவர் வைத்தியராக இருப்பதற்கு யாதொரு தடங்கலுமில்லை. எப்பொழுது ஒளஷதம் கொடுக்கவேண்டும். எப்பொழுது ஒரு வியாதியஸ்தருக்குச் சஸ்திர சிகிச்சை செய்யப்பட சஸ்திர வேண்டுமென்றும் அவர் தெரிந்து வைத்திருந்தால் போதுமானது. ஆகவே 'அல்லோபதி சிகிச்சை' என்றும் 'ஹோமியேபதி சஸ்திர சிகிச்சை' என்றும் தனித்தனி சஸ்திர சிகிச்சைகள் கிடையாது. யார் வேண்டுமாயினும் சரியான தேர்ச்சியும் பழக்கமும் இருந்தால் சஸ்திர சிகிச்சையைச் செய்யலாம். சாதாரணமாக அல்லோபதி வைத்தியக் கல்லூரிகளில் சஸ்திர சிகிச்சை விரிவாகப் போதிக்கப்பட்டு வருவதால் டாக்டர் என்றால் சஸ்திர சிகிச்சை செய்வோர் என்னும் தப்பான அபிப்பிராயம் இருந்து வருகிறது.

சில சமயங்களில் இந்த சஸ்திர சிகிச்சை மிகவும் மிதமிஞ்சிக் கையாளப்படுகிறது. ஒளஷதங்களாலேயே சிகிச்சை செய்யப்படவேண்டிய பல வியாதிகளுக்கு சஸ்திர சிகிச்சை செய்யப்படுகிறது. டான்சில்ஸ், மூலம், அபென்டிஸிடிஸ் (Apendicitis) இவைகளுக்கு ஔஷத சிகிச்சையே தேவை. இம்மாதிரியான வியாதிகளுக்கு சஸ்திர சிகிச்சை செய்வதினால் கெடுதல்களே அதிகமாக ஏற்படுகின்றன. ஆகவே ஒரு வியாதி அல்லது உபாதிக்கு எவ்விதமான சிகிச்சை செய்யப்படவேண்டுமென்று பாகுபாடு செய்வது மிக அவசியம். உங்கள் நாற்காலி உடைந்துவிட்டால் அதற்கு ஒரு தச்சு ஆசாரிதான் தேவையே ஒழிய பொற்கொல்லனால் என்ன செய்ய முடியும்?

ஒரு வெட்டுக் காயத்துக்கு நமது வீரியப்படுத்தப்பட்ட ஒளஷதங்கள் ஒன்றும் செய்ய முடியாது. எந்த வியாதி 'நான்' என்னும் வஸ்து குடியிருக்கும் வீட்டில் ஆரம்பிக்கிறதோ அதற்கு வைத்திய சிகிச்சை தான் செய்யப்படவேண்டும். 'நான்' என்னும் வஸ்துவில் ஆரம்பித்துப் படிப்படியே வெளியே குடியிருக்கும் வீடு வரை வந்திருக்கும் வியாதிகளுக்கு வைத்திய சிகிச்சையே செய்யப்பட வேண்டும். இம்மாதிரி ஏற்படும் வியாதிகளுக்குக் குறிகள் நிதரிசனமாகத் தென்படும்.


நவீன நாகரீகம்

உலகத்தில் நாகரீகம் அதிவேகத்தில் விருத்தி அடைந்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரிந்த விஷயம். நாகரீகம் முதிர முதிர மக்கள் இடையே வியாதியும் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆண்டவன் நம்மை எப்படி இருக்க வேண்டுமென்று படைத்தானே அம்மாதிரி நாம் வாழவில்லை என்பதை நீங்கள் எல்லோரும் ஒப்புக் கொள்வீர்கள். நாகரீக வாழ்க்கையில் நாம் சுழல ஆரம்பித்தால் வியாதிகள் தோன்ற சுலபமாகி விடுகிறது. கிரமம் தப்பிய வாழ்க்கையினாலும், நடவடிக்கைகளினாலும், அப்பியாசங்களினாலும் வியாதி எளிதில் நம்மைப் பீடிக்கிறது. கிரமம் தப்பிய அப்பியாசங்களும், நடவடிக்கைகளும் கிரமம் தப்பிய எண்ணங்களாலேயே உண்டாகின்றன. நாகரீகம் என்று நினைத்துக்கொண்டு நாம் பல கெட்ட வழக்கங்களை இயற்கைக்கு விரோதமாக அனுஷ்டித்து வருகிறோம் உதாரணமாக காபி குடிப்பதை எடுத்துக் கொள்வோம். நமது பாட்டன்மார்கள் காலையில் நீர் ஆகாரம் சாப்பிட்டு வந்தார்கள். நமது உஷ்ணம் மிகுந்த தேசத்தில் அது சரீரத்தை குளிர்ச்சியாக வைத்து வந்ததுடன் வியாதியும் அதிகமில்லாமல் இருக்க ஏதுவாயிருந்தது. ஆனால் நாம் செய்கிறோம்? நாகரீகக் காப்பியை ஒட்டிய வயிற்றில் ஊற்றுகிறோம். பல வயிற்றுப் புண்களுக்கும் நீரழிவிற்கும், சீரணக் கோளாறுகளுக்கும் இந்த காபி எமனே காரணம். காப்பியில் இருக்கும் 'கபீன்' என்னும் பாஷாணம் நமது சரீரத்தைப் படாதபாடு படுத்துகிறது. இம்மாதிரியான இயற்கைக்கு விரோதமான பழக்கங்களுக்குக் காரணம் நவீன நாகரீகம் என்னும் நம் எண்ணமே. ஆகவே, எம் மாதிரியாகப் பார்த்தாலும் அந்த எண்ணமாகிய மனமே' மூலகாரணம் ஆகிறது.


கண்டுபிடிப்பது என்ன?

நாம் ஏற்கனவே சொல்லியபடி ஒரு வியாதியஸ்தரைப் பீடிக்கப்பட்டிருக்கும் வியாதி இன்னதென்று அதன் பெயரைக் கண்டுபிடிப்பது ஹோமியோபதியர்களாகிய நமக்கு அவசியமில்லை. ஒரு வியாதியின் பெயர் அது முடிவாக எந்த அவயவத்தில் முடிகிறதோ அதைப் பொருத்ததாக இருக்கிறது. அது கல்லீரலில் கோளாறுகளை ஏற்படுத்தினால் கல்லீரல் வியாதி என்றும், இருதயத்தில் முடிவடைந்தால் இருதய வியாதி என்றும் சொல்லப்படுகிறது. இத்துடன், இம்மாதிரியான வியாதிகளை, அவைகள் அவயவங்களில் உண்டாக்கும் கோளாறுகளைக் கொண்டு கண்டுபிடிப்பது மிகவும் சாஸ்திரீயம் என்றும் பறையடிக்கின்றனர். அதுவே வியாதியின் மூலகாரணம் என்றும் சொல்லுகின்றனர். அவர்கள் கண்டுபிடிப்பது என்ன?

ஒருவருக்கு க்ஷயரோகம் என்றால் அன்னாரின் கோழையைப் பரிசோதித்து அதில் க்ஷயரோகக் கிருமிகள் இருப்பதால் அதை க்ஷயரோகம் என்று கண்டுபிடிக்கின்றனர். அதுவரையில் சரிதான். ஆனால் அத்துடன் அவர்கள் நிற்பதில்லை. அக்கிருமிகள் தான் அந்த க்ஷயரோகத்தை ஏற்படுத்தின என்று சொல்லுகிறார்கள். இவ்விஷயத்தில் நாம் அவர்கள் சொல்லுவதை ஒப்புக்கொள்ள முடியவில்லை. க்ஷய ரோகக் கிருமிகள் இருப்பதால் அது க்ஷயரோகம் எனப்படும் வியாதியென்று சொல்வதில் ஆக்ஷேபணை இல்லை. ஆனால், அவ்வியாதிக்குக் காரணம் அக்கிருமிகள் இல்லை. எந்த இடத்தில் க்ஷயரோகம் ஏற்படுகிறதோ அந்த இடத்தில் இருக்கும் தசைகள் அழுகிவிடுகின்றன. இப்படி அழுகிய தசைகளை அப்புறப்படுத்த வேண்டுமல்லவா? அதற்காகவே இக்கிருமிகளை அவ்வழுகிய பாகங்களுக்கு ஆண்டவன் அனுப்பிவைக்கிறான். ஆகவே எந்த இடங்களிலெல்லாம் க்ஷயம் இருக்குமோ அந்த இடங்களிலெல்லாம் கிருமிகள் இருந்தே தீரும். க்ஷயம் வந்த பிறகு கிருமிகள் வரும். கிருமிகள் முதலில் வந்த பிறகு க்ஷயம் வருவதில்லை. கிருமிகள் தம்முடன் க்ஷயத்தைக் கொண்டு வருவதில்லை.

இம்மாதிரியாகவே தற்காலத்தில் வியாதிக் கிருமிகள் என்று சொல்லப்படும் நுண்ணிய பூச்சிகளால் ஒரு வியாதியும் உண்டாக்கப்படுவதில்லை. சரீரத்தினுள்ளே வியாதி 'நான்' என்னும் வஸ்துவில் உண்டாகி அதிலிருந்து படிப்படியாய் வெளியேறி அவயவங்களில் முடிகிறது. வியாதியினால் எந்த அவயவம் அழுகிக் கெட்டுவிட்டாலும் அக்கெட்ட பதார்த்தங்களை வெளியேற்றத் தோட்டிகள் போல் இந்தக் கிருமிகள் வருகின்றன.

கிருமிகள் அபாயகரமானவை அல்ல. தவிரவும் அவை வியாதியில் இன்றியமையாதவை என்பதற்கும் சில உதாரணங்களைக் கீழே தருகிறோம். ஒரு மனிதன் இறந்தவுடன் அவன் உடலில் ஒரு வகையான கிருமிகள் மிகவும் கொஞ்சமாக இருக்கின்றன. சில நாட்களான பிறகு இக்கிருமிகள் விருத்தி அடைகின்றன. அன்று இறந்த ஒரு சரீரத்தில் பிரேத பரீக்ஷை நடத்தும்போது ஒரு டாக்டர் கை தவறி தனக்கு ஒரு சிறு காயத்தை உண்டாக்கிக்கொண்டு அதன் வழியாக 'இறந்த சரீர' விஷம், ஏறுமானால் அது மிகவும் அபாயகரமானது. ஆனால் சில நாட்கள் இருந்த அம்மாதிரியான சரீரத்தில் அதிகக் கிருமிகள் உற்பத்தியாகி அப்பொழுது அம்மாதிரியான காயத்தின் வழியாக விஷம் ஏறுமானால் அது அவ்வளவு கொடுமையானதல்ல. ஆகவே எவ்வளவுக் கெவ்வளவு கிருமிகள் அதிகமாகின்றனவோ அவ் வளவுக்கவ்வளவு குறைவு என்பது விஷம் தெரியலாகும். 

அதே மாதிரியாக டைபாய்டு சுரத்தால் பீடிக்கப்பட்ட ஒருவருடைய மலம் வெளிவந்தவுடன் அதில் டைபாய்டு கிருமிகள் கொஞ்சமாகவே இருக்கின்றன. ஆனால் அது அதிக விஷத்தன்மை உடையதாகும். சில மணி நேரத்துக்குப் பிறகு அம்மலத்தில் கிருமிகள் ஏராளமாக ஆகிவிடும். அப்படி ஆகிவிட்டால் அது அவ்வளவு அபாயகரமானதல்ல.

க்ஷயரோகத்தால் பீடிக்கப்பட்டவரின் சுவாச கோசங்களிலுள்ள வியாதியுற்ற தசைகளில் சிறிதளவை ஹோமியோபதி முறைப்படி 30-வது வீரியம் வரையில் வீரியப்படுத்தி பரிசோதித்துப் பார்த்தால் அதில் க்ஷய ரோகக் கிருமிகள் ஒன்றிரண்டுகூட இருக்காது. ஆனால் அந்த வீரியப்படுத்தியதைச் சிறிதளவு ஒரு சுக சரீரமாய் இருப்பவனுக்குக் கொடுத்தால் அது உடனே அவ்வியாதியை உண்டாக்கும். ஹோமியோபதியில் ஒளஷத நிர்ணயம் இம்மாதிரியாகவே செய்கின்றார்கள். ஆகவே கிருமிகள் இல்லாவிட்டாலும் வியாதி ஏற்படக் கூடும் என்பது தெரியவரும்.


வியாதிக் கிருமிகள்

ஓரிடத்தில் கொஞ்சம் சாணியோ, அசுத்தமோ கிடக்கிறதென்று வைத்துக் கொள்ளுங்கள். சிறிது நேரத்திற்கெல்லாம் அதில் அநேக ஈக்கள் மொய்க்க ஆரம்பித்துவிடும். பல நாட்களில் ஈக்கள் அந்த அசுத்தத்தை உண்டு அவ்விடத்தில் கடைசியில் ஒன்றும் இல்லாமல் செய்துவிட்டுத்தான் போகும். அம்மாதிரியான சந்தர்ப்பத்தில் அந்த ஈக்களை உபத்திரவமாக இருக்கிறதென்று நினைத்துக் கொன்று விட்டால் மறுபடியும் வேறு ஈக்கள் வரலாமல்லவா? ஆனால் அந்த அசுத்தத்தை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தி விட்டால் ஈக்கள் தன்னால் போய்விடுமல்லவா? இந்த இடத்தில் அசுத்தத்தைக் கொண்டுவந்தவை ஈக்கள் தான் என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆகையால் வியாதிக் கிருமிகள் உலகத்தில் தோட்டி வர்க்கத்தைச் சேர்ந்தவையே தவிர அவைகளால் வியாதி உண்டாக்கப்படுவதில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.


வியாதியின் கடிகார முள்

எல்லா நிவர்த்திக்கக்கூடிய வியாதிகளும் தங்களுடைய இயற்கையைக் குறிகளின் மூலம் வைத்தியருக்குக் காண்பிக்கின்றன. ஒவ்வொரு வியாதியின் குறிகளும் குணங்களும் சரீரத்தினுள்ளே இருக்கும் மாறுபாடுகளை வெளியே காண்பிக்கும் கடிகார முட்களைப் போல் உபயோகிக்கப்பட வேண்டும். கடிகாரத்தின் முட்கள் நகராமல் நின்று போனால் கடிகாரத்தில் சாவியில்லை என்று நாம் சாவி கொடுக்கிறோம். அதைப் போலவே ஓர் வியாதியின் குறிகளைக் கொண்டு உள்ளே இருக்கும் கோளாறுகளை விஷயமறிந்த ஒரு வைத்தியர் தெரிந்து கொண்டு அதற்குத் தகுந்த ஒளஷதங்களை செலுத்துகிறார். ஒரு வியாதியின் உருவம் எத்தன்மையானது என்று அது உண்டாகும் குறிகளிலிருந்தே தெரிந்துகொள்ள வேண்டும்.


நிவர்த்திக்க முடியாத வியாதிகள்

நிவர்த்திக்க முடியாத வியாதிகளில் குறிகள் மிகவும் குறைவாக இருக்கும். ஒரு வியாதியில் குறிகள் எவ்வளவுக்கெவ்வளவு குறைவாக இருக்கின்றனவோ அவ்வளவுக்கெவ்வளவு அவ்வியாதி நிவர்த்திக்க முடியாதது என்று வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வியாதியஸ்தருக்கு அதிகக் குறிகள் இல்லாமல் பலம் குறைந்து கொண்டே போகுமானால் அவ்வியாதி சொஸ்தமாகக் கூடியது இல்லையென்றும் அம்மனிதன் அவ்வியாதியில் இறந்து விடுவானென்றும் நிச்சயித்து விடலாம்.


வியாதி சொஸ்தமாகும் அறிகுறி

ஒரு வியாதியஸ்தருக்கு ஏற்பட்ட ஹோமியோபதி ஒளஷதத்தைக் கொடுத்தவுடன் அவருடைய மனக் குறிகள் முதன் முதலில் நிவர்த்தியாகி அதன் பிறகு சரீரக் குறிகள் நிவர்த்தியாகுமானால் அவ்வியாதி முழுவதும் நிவர்த்தி ஆகிறதென்று வைத்துக் கொள்ளலாம். அப்படியில்லாமல் சரியான ஒளஷதங்களைக் கொடுத்தவுடன் சரீரக்குறிகள் குறைந்தும் மனக்குறிகள் குறையாமலும் இருக்குமானால், ஒன்று, நாம் கொடுத்த ஔஷதத்துக்கும் அந்த வியாதிக்கும் சம்பந்தமில்லையென்றோ அல்லது அவ்வியாதி நிவர்த்திக்கக் கூடாதது என்றே வைத்துக்கொள்ளவும்.


தற்காலிக அதிர்ச்சி

ஒரு வியாதியும் இல்லாத ஒரு பரிசுத்தமான சரீரத்தை உடைய ஒருவன் மருத்துவரிடம் வருவதாக வைத்துக் கொள்வோம். அவனை ஒரு அதிர்ச்சிக்கோ அல்லது உபாதிக்கோ உள்ளாக்கலாம். சரீரத்தில் அந்த அதிர்ச்சி ஏற்பட்டு விரைவில் தன் முந்திய நிலைமையை அடைவான். ஏனென்றால் அம்மாதிரியான அதிர்ச்சி அவனுடைய சடப் பொருளிலேதான் தாக்குகிறது. ஆகவே அது சரீரத்தின் மூலப்பொருள்களில் யாதொரு வியாதியையும் உண்டாக்காமல் சென்று விடுகிறது. அசேதனமான பொருள்களால் தான் ஓர் உண்மையான வியாதியை உண்டாக்க அம்மாதிரியான அசேதனப்பொருள் மனிதனின் அசேதனமான மூல காரணத்தில் தாக்கவேண்டும். சடப்பொருளில் தாக்கும் அதிர்ச்சிகள் மனிதனின் மூல காரணத்தைத் தற்காலீகமாகத் தான் தாக்குகின்றது. ஆகவே எது மனிதனின் உடலில் மாத்திரம் தாக்குகின்றதோ அது தற்காலிகமாகத் தான் தாக்குகின்றது. உதாரணமாக பேதி மருந்துகள் உட்கொள்வதால் ஏற்படுவது ஓர் அதிர்ச்சியே. அவ்வதிர்ச்சியில் ஈடுபட்ட மனிதன் காலக்கிரமத்தில் தன் பழைய நிலைமையை அடைந்து விடுகிறான். அதனால் ஒரு உண்மையான வியாதியையும் அது நீக்கவல்லதல்ல.


உண்மையான வியாதி ஏற்படுதல்

சடப்பொருள்கள் உண்மையான வியாதிகளை ஆரம்பிப்பதில்லை என்பதற்கு உதாரணமாக, ஓர் மனிதன் பெரியம்மையின் படையை நல்ல தேகாரோக்கியமாக இருக்கும்போது விழுங்கினாலும் அது சீரணம் ஆகிவிடுமே அல்லது அவனுக்குப் பெரியம்மை வராது. ஆனால் ஒரு மனிதனின் மேல் பெரியம்மையின் காற்றுப் பட்டாலும் அவனுக்கு பெரியம்மை வரக்கூடும். ஆகவே நுண்ணிய அசேதனப் பொருள்கள் சரீரத்தின் அசேதன மூல காரணத்தைத் தாக்குவதால் தான் உண்மையான வியாதிகள் வரக்கூடுமென்று தெளிவாகிறது

சரீரத்தில் சடப்பொருளை இதர சடப்பொருள்களால் தற்காலீகமாகத் தாக்கமுடியும் என்பதை மேலே விளக்கினோம். ஆனால் ஒரு உண்மையான வியாதியில் சரீரத் தசைகளில் ஏற்படும் மாறுதல், வியாதி அசேதனப் பொருளில் தாக்கியதனால் ஏற்பட்ட விளைவு என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஆகவே சரீரத் தசைகளிலும் சடப் பொருள்களிலும் ஏற்பட்ட மாறுதலைத் தடுக்க சிகிச்சைகள் செய்வது எவ்வளவு அறிவீனமானதென்பது வெள்ளிடை மலை.

மருத்துவ குறிப்புகள் : வியாதிகள் எப்படி உருவாகிறது? - மருத்துவ குறிப்புகள் [ மருத்துவம் ] | Medicine Tips : How do diseases develop? - Medicine Tips in Tamil [ Medicine ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்