மனிதனின் அமைப்பு எப்படி அமையப் பெற்று உள்ளது?

ஆரோக்கிய குறிப்புகள்

[ ஆரோக்கிய குறிப்புகள் ]

How is the human body formed? - Health Tips in Tamil

மனிதனின் அமைப்பு எப்படி அமையப் பெற்று உள்ளது? | How is the human body formed?

மனிதனின் அமைப்பு மிகவும் நுணுக்கமாகவும் எளிதில் புரிந்து கொள்ள முடியாததாகவும் இருக்கின்றது.

மனிதனின் அமைப்பு எப்படி அமையப் பெற்று உள்ளது?


மனிதனின் அமைப்பு மிகவும் நுணுக்கமாகவும் எளிதில் புரிந்து கொள்ள முடியாததாகவும் இருக்கின்றது. மனம் உள்ளவன் மனிதன்; மனித மனம் உணர்ச்சி வசப்படக்கூடியது; அடிக்கடி மாறுகின்ற உணர்வு நிலையிலுள்ளது. இதனாலேயே மனித வாழ்க்கை துன்பச்சுழலாக உள்ளது. வாழ்க்கையைச் சரியான முறையில் நடத்துவது எப்படி என்பதை அறியத் துடிக்கின்றோம். காரணம் சுகபோக நாட்டம்தான்.

ஒரு ஜெட் விமானம் அல்லது ஒரு கப்பல் எப்படி அவற்றின் வழியைப் போக வேண்டிய திசையை அறிகின்றன? அவற்றில் திசைகளைக் கண்டறியக்கூடிய ஒரு கருவி பொருத்தப்பட்டிருக்கிறது. அக்கருவியின் மூலம் காற்றடிக்கும் பொழுதும் மழை பொழியும் போதும் செல்ல வேண்டிய திசை காணப்படுகிறது. இம் மாதிரி வழிகாட்டக்கூடிய கருவியாய் வாழ்க்கையில் தியான பயிற்சி பயன்படக்கூடியது. ஆனால் துன்பவசமாக வாழ்க்கையில் நாமே செய்யும் தவறுகள் நம்மைச் சரியான திசையில் போகவிடாமல் திருப்பிவிட்டு விடுகின்றன. இந்நிலை மாறி நாம் ஆனந்த வாழ்க்கை வாழவேண்டுமென்றால் அதற்கு தியானப் பயிற்சி வழி வகுக்கிறது.

தியானம் வாழ்க்கையில் சரியான முறையை எப்படிக் கண்டுபிடித்துத் தருகிறது என்பதை அறிஞன் பெட்ஃபோர்டு ஸ்மித் கீழ்க்கண்டபடி விவரிக்கிறார்.

''தியானம் வாழ்க்கையில் ஒரு முக்கியமான அம்சம். அது உன்னை என்றும் நிலைத்திருப்பவனாகச் செய்கின்றது. அதை நீ எப்படி பயன்படுத்திக் கொள்கிறாயோ அதற்கு ஏற்றபடி உனக்கு அது உதவியாக இருக்கிறது. அதை அறிவாயாக!"

நமது வாழ்க்கையை நடத்தும்போது திடீரென்று தோன்றும் உணர்ச்சிகள், தீர்மானங்கள் ஆகியவற்றின் போக்கைத் தியானம் சரிப்படுத்தும். வாழ்க்கையின் முழுமையை அடைவதற்குத் தியானம் எந்த அளவிற்கு உதவி செய்யும் என்பதைக் காண்போம்:

நமது நடவடிக்கைகள் முழுவதும் மூளையின் பல்வேறு பாகங்களால் நடத்தப்படுகின்றன. சராசரி நிலையில் இருக்கும் ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடல் உறுப்புகள் சரியானபடி செய்ல்படவேண்டும். ஆனால் வேண்டத்தகாத நடவடிக்கைகளினாலும் தப்பும் தவறுமான வாழ்க்கை முறைகளாலும் இந்த பாகங்கள் செயல்படாமல் தடைப்படுகின்றன. மனிதனின் வாழ்க்கை அப்போது சுக்கான் இல்லாத கப்பல் போலாகின்றது. தவறான வாழ்க்கை முறையினால் மனம் பாழ்பட்டு மூளைப் பாகங்களையும் கெடுத்துக் கொள்கிறார்கள். இதனால் அந்தப் பாகங்களில் உன்னதமான தன்மை இழக்கப்படுகின்றது.

மனித சமூகத்திலிருந்து மாறுபட்ட வாழ்க்கை அமைப்பையுடைய மிருகங்களிடத்தில் கூட உன்னதமான தன்மைகள் இருக்கிறதென்று சொல்லுகின்றார்கள்.

அடர்த்தியான - பசுமையான இடங்களிலும் மலைகளின் ஊடேயும் இருக்கின்ற ஆபத்தான காடுகளில் கூட மிகவும் எச்சரிக்கையாக பசுக்கள், குதிரைகள், ஏனைய நாற்கால் பிராணிகள் எல்லாம் வாழ்கின்றன. சூழ்நிலையால் ஏற்படப் போகும் மாறுதல்களையெல்லாம் கூட சில சமயம் முன்கூட்டியே அறிந்து பாதுகாப்பான இடங்களுக்கு ஓடிவிடுகின்றன. பூகம்பம் வருவதாக இருந்தாலும் புயல் மழை வருவதாக இருந்தாலும் முன்னெச்சரிக்கையாக ஆபத்தான இடங்களிலிருந்து ஓடித் தப்பித்து விடுகின்றன. இதே போல நீர் நிலைகளை இருக்குமிடந் தேடிச் செல்லுதலும், தட்பவெப்ப நிலைகளுக்கேற்ப வாழுமிடங்களை மாற்றிக் கொள்ளுதலையும் கூடச் செய்கின்றன. ஆகவே மிருகங்களே அத்தகைய உள்ளுணர்வுகளை பயன்படுத்திக் கொள்ளும் ஆற்றல் இருக்கையில் மனிதன் தன் மனத்தின் உன்னதத் தன்மையை இழக்கலாமா?

இப்பொழுதும் கூட மிகவும் ஆபத்தான நிலையில் தன்னை சமாளித்துக் கொள்ளத்தக்க விதத்தில் மூளையிலுள்ள பல்வேறு பாகங்களை மிக நல்ல நிலையில் யோகிகள் வைத்திருக்கிறார்கள். உணர்வது, கேட்பது போன்ற புலன் உணர்வுகளில் தங்களுடைய சக்திகளை அபூர்வமானதாக வைத்திருப்பவருண்டு. இதை அதீத புலனாற்றல் என்றும் கூறுவர். இது தியானத்தின் மூலமாக அடையப்படுவதாகும். இதே போல தியானத்தினால் மனமும் மிக நல்ல நிலைமையில் வைக்கப்படுகிறது.

தியானம் ஒழுங்காக பயிற்சிக்கப்பட்டால் மனதில் மிகப் பெரிய சக்திகள் உருவாகின்றன. இதற்கு தியான நிலையை படிப்படியாக ஒருவன் சம்பாதித்துக் கொள்ள வேண்டும். தியானத்திற்கு உயர்ந்த குறிக்கோளைக் கொள்ள வேண்டும். தியானத்தில் ஒருவன் முன்னேற முன்னேற அவன் தன்னுடைய வாழ்க்கையின் முழுமையை நோக்கி உயருகிறான். மிக உயரமான ஒரு மலையின் உச்சியை அடையவேண்டுமானால் எவரேயாயினும் எச்சரிக்கையோடு முதலில் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும். பிறகு மெள்ள மெள்ள படிப்படியாக மேலே ஏறவேண்டும். இதுவே தான் தியானப் பயிற்சியிலும் மானசீகமாகச் செய்ய வேண்டுவதாகும். இவ்வாறு தியானத்தில் முன்னேற்றமுண்டாவதற்கு வழிமுறைகளைப் பெரியவர்கள் விளக்கியுள்ளனர். யோகிகளும், ஞானிகளும், சிறந்த சரியான உதாரணங்களைக் கொடுத்திருக்கிறார்கள். படிப்படியாகத் தியானத்தை எட்டும் பல வகையான வழிகளைச் சுருக்கமாகக் கீழே காணலாம்.

தியானத்தின் மீது ஆவலுற்ற ஒருவன் அதை ஒழுங்குடன் பயிற்சி செய்யத் தொடங்கும் பொழுது முதற்படியை அடைகிறாள். அந்த நிலை புல்லைக் கொளுத்துவதற்கு ஒப்பாகும். புல் எரியும் பொழுது நீயிருந்த போதிலும் அதனால் வெளிச்சம் உண்டாகாதவாறு புகை மூடிக் கொள்கிறது. மேலும் அதில் உண்டாகும் வெப்பமும் குறைவு. இதுதான் முதற்படி.

ஒழுங்காகச் சில காலம் பயிற்சி செய்த பிறகு இரண்டாவது படி அடையப்படுகிறது. இந்த நிலை ஒளிவிட்டு எரியும் விளக்குடன் ஒப்பிடப்படுகிறது. இந்நிலையில் தெய்வீகத் தன்மை வெளிப்படுகிறது. ஆனால் அத்தெய்வீகத் தன்மையின் வெளிச்சம் அவனுக்குக் கிடைப்பதில்லை. ஏனெனில் அறியாமையாகிய புகை அவனிடமிருக்கிறது. ஆனால் முதல் படியிலிருந்தது போல புகை அந்த அளவிற்கு இல்லை. ஆனால் தொடர்ந்து ஒருவர் தியானப் பயிற்சி செய்தால்தான் மூன்றாம் படியை எட்ட முடியும். ஒரு விளக்குடன் ஒப்பிடப்படுகிறது. ஆனால் இந்த விளக்கு கொஞ்சம் வெளிச்சத்தையும் கொஞ்சம் வெப்பத்தையும் தருகிறது. இதே மாதிரி தொடர்ந்து பயிற்சி செய்கிறவர்தான் தெய்வீகத் தன்மையை உணர்கிறார். ஆனால் சிறிதளவுக்கே உணர்கிறார். ஒரு விளக்கின் வெளிச்சம் சரியானபடி பாதுகாப்பு இல்லாவிட்டால் காற்றினால் அணையக்கூடியது. அதேபோல் பயிற்சி செய்கின்றவர்க்கும் பாதுகாப்பு அவசியம். இல்லாவிடில் மெள்ள எரியும் தீபம் லேசான காற்றில் அணைந்து விடுவது போல, மிகத் துளியான அளவுடைய தியான நிலையை விட்டும் மனம் நழுவிவிடும்.

நான்காம் படியை அடையும் தியானப் பயிற்சிக்கும் எரிகிற விளக்கே உவமையானாலும் இது சாதாரண விளக்காக இல்லாமல் எண்ணெயும் திரியுமின்றி எரியும் விளக்காக உவமிக்கிறோம். பிற பொருளின் உதவியின்றி ஒளியைத் தரும் ரத்தினம் போன்ற பொருளாகத் தியானத்திலீடுபட்ட ஜீவனைச் சொல்கிறோம். இந்த நிலையில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையே இல்லை. ஏனெனில், வெளி நிகழ்ச்சிகள் அவனைப் பாதிப்பதில்லை. இருட்டிற்கோ இடர்களுக்கோ அவள் அஞ்சுவதில்லை. இந்நிலையில் கூட அவனுக்கு இன்ப துன்பங்கள் ஏற்படலாம். அது அவனது முன் வினையின் பயனாகும். அமானுஷ்ய ஆற்றல்களைப் பெற்று எளிய மக்களை ஏமாற்றுவதற்காக தியானம் செய்பவன் முன்கூறியபடி முன்னேற முடியாது. இப்படி மயக்குச் சக்திகளைத் தேடுகிற ஆர்வம் சாதகனை கீழ்நிலைக்குத் தள்ளிவிடும்.

அடுத்தபடியாக வருவது ஆன்ம திருப்தி அடையும் நிலை. இதை வெள்ளி (விண்மீன்) உடன் ஒப்பிடலாம். சந்தேகமில்லாமல் இது எல்லாருக்கும் திருப்தியை அளிக்கிறது. வெள்ளி உதயமாவதற்கும் அஸ்தமனம் அடைவதற்கும் இந்நிலை உவமையாகிறது. அதாவது ஒரு சமயம் ஆன்ம விளக்கமும் மறு சமயம் ஆன்ம விளக்கமற்ற நிலையும் மாறி மாறி உண்டாகும் நிலை இது. இந்த நிலையில் முற்றிலும் ஆவல் நீங்கப் பெறாத அனுபவத்தை அடைகின்றான். தன்னைச் சாதாரண மனிதனுக்கும் அப்பாற்பட்டவன் என்று உணர்கிறான். மற்றவர்க்கு இல்லாத குணம் தனக்கு இருப்பதைக் கண்டுணர்கிறான். அப்போதும் கூட அவனுடைய உலக காரியங்களில் வெற்றி தோல்வி உண்டாகலாம். ஆவலுள்ளவரே தன் பயிற்சியைத் தொடர்ந்து செய்து அடுத்தபடியை அடைகிறார்.

இந்தப்படி சூரியனுடன் ஒப்பிடப்பட்டிருக்கிறது. உதயமாகிற சூரியனை எல்லோரும் வரவேற்கிற மாதிரி சாதகருடைய தோற்றத்தை அனைவரும் விரும்புகிறார்கள். அவருடன் தொடர்பு கொள்பவர் அனைவருக்கும் அவர் மீதும் அவர் சக்தி மீதும் நம்பிக்கை உண்டாகிறது. சக்தி, நம்பிக்கை ஆகியவற்றின் சின்னமாகவே அவர் விளங்குகிறார். சூரியனைப் போன்று ஆக்கக் காரியங்களுக்கு அவர் பயன்படுகின்றார். சூரியனைப் போலவே தன்னுடைய சக்தி முழுவதையும் மக்களின் நன்மைக்கே பயன்படுத்துகிறார். இனி இறுதி நிலையைப் பார்ப்போம்.

இது சந்திரனோடு ஒப்பிடப்படுகிறது. ஒருவனை முழுமைப்படுத்துகிற நிலை இது என்று சொல்லப்படுகிறது. இந்நிலையே ஆன்ம திருப்தி நிலை; உள்னதமான முடிவான நிலை. இந்த நிலையை ஒவ்வொருவரும் கண்டிப்பாக விடாமுயற்சியுடன் அடையவேண்டும். அது நம்மால் முடியும். தியானம் என்று முனிவர்களால் சொல்லப்படுகிற ஏழாவது படியை அடைந்தவர்க்கு இறுதிப்படியை அடைவது சிரமமில்லை. இது நிச்சயமாக அடையக்கூடியதே.

நல்ல பயிற்சியுடனும் நம்பிக்கையுடனும் குற்றங்குறை இல்லாத ஒரு ஆசிரியருடைய வழிகாட்டுதலுடனும் சாதனையில் ஆவல் உள்ள ஒருவன் தியானத்தை வெற்றிகரமாகச் செய்கிறான். முறைப்படி முடிவான அதாவது ஏழாவது படியை அவன் அடைகிறான். உலகப் பொருள்களுடன் உறவாடும் சுகநடவடிக்கைகளில் எதன் மூலமும் அடைய முடியாத பேரின்பம் அவனுக்குத் தியானத்தில் கிடைக்கிறது. தியானம் என்பது பயிற்சியைத் தவிர வேறு எதனாலும் அடைய முடியாதது. சிலருக்கு இது தெய்வ அருளால் கிடைக்கிறது. வேறு சிலருக்கு மகான்களின் மூலம் அருளப்படுகிறது.

பெரிய தத்துவ ஞானியாக உலகப் புகழ் பெற்ற திரு.ஜெ.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தமது நூலில் தியானத்திற்குப் பொருந்தும்படி சில நுணுக்கங்களை விவரித்திருக்கிறார். இங்கு அவர் நிதரிசனமான ஒரு உதாரணத்தை விளக்குகிறார். அதாவது ஒருவன் படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கும் பொழுது ஜன்னல் வழியாக ஓர் இலையைப் பார்க்கிறான். படுக்கை நிலையிலிருந்து மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக அவன் எழுந்திருக்கும்போது இலைக்குக் கீழே கிளைகள், அடிமரம், மரத்தைச் சுற்றிய செடிகள் என்று படிப்படியாக அவன் காணும் காட்சி அதிகப்படுகிறது. தற்போதைய மனித சமூகத்திற்குக் குற்றம் குறை இல்லாத மனிதர்கள் மிகவும் அவசியம். மனித வர்க்கத்தின் ஆனந்தத்திற்கு வசதிகளைப் பெருக்கி விஞ்ஞானம் பல வழிகளைத் தந்திருந்த போதும் உலக மக்கள் அதிருப்தியில்தான் வாழ்கிறார்கள். குற்றம் செய்தலால் மனிதனின் மகிழ்ச்சி கெட்டுப்போகிறது.

பேரின்பத்தை அடைவதற்கு முயற்சி செய்யாவிட்டாலும் குறைந்தபட்சம், நம்முடைய ஆனந்தத்திற்காவது தியானம் அவசியப்படுகிறது. தியானத்தைப் பொறுத்தவரையிலும் துளி அனுபவம் கிட்டுவதுகூட வரவேற்கத்தக்கதே. தியானத்தை ஓரளவு அடைவது என்பதும் ஆபத்தான நிலை இல்லை. அரைகுறை தியானம் கேடு தருவதில்லை. எவ்வளவு தியானம் கூடுகிறதோ அவ்வளவு தூரம் பண்பு வளர்கிறது. குறைந்த காலப் பயிற்சியும் நன்மை பயக்கத்தக்கதே.

"தியானம் செய்ய முடியவில்லை; தியானம் செய்வதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிகள் யாவும் தோல்வி அடைந்து விட்டன" என்று புகார் செய்யக்கூடியவர்களும் இருக்கின்றனர். அவர்களில் அநேகர் சில நாட்கள் தியானம் செய்ய முயற்சி செய்து விட்டுப் பிறகு பாதியில் விட்டு விடுகிறார்கள். தியானம் ஓர் அடைய முடியாத ஒரு நிலை என்றும், தியானத்தினால் உண்மையில் நற்பலனை அடைய முடியாது என்றும் நம்புகின்றனர்."

இதற்குக் காரணம் சரியான வழிகாட்டியை அவர்களால் அடைய முடியாததே. தியானத்திற்கான முன் தயாரிப்பை உள்ளபடியே அறிந்து, செய்ய வேண்டியபடி செய்து கொள்ளாததுதான் இந்த நிலைக்குக் காரணம், வெற்றிகரமான தியானத்திற்கு வேண்டியவை அதற்கான முன்னேற்பாடுகள். இந்த முன்னேற்பாடுகள் இல்லையென்றால் தியானத்தின் பலனை அடைய முடியாது தான். நுணுக்கமான ஆராய்ச்சி முறையில் நமக்குத் தெரிவது என்னவென்றால் தியானத்திற்குத் தடைகளாக உள்ளவற்றில் பெரிய காரணமாக அமைவது மனமும் உடலும் வியாதியில் சிக்கி இயங்காமையேயாகும்.

ஸ்தூல உடல் என்பது, மனிதன் உலகுடன் தொடர்பு கொள்ள உதவுவதாகும். உடலை இயக்கும் மனம் என்ற சூக்கும உடல் இரண்டாம் உடல் எனப்படுகிறது. இவ்விரண்டையும் தவிர்த்து மூன்றாவதாக காரண உடல் என்ற ஒன்று இருக்கிறது. இதை அதிசூக்கும உடல் எனலாம். இம்மூன்றும் ஒன்றுபட்டு இயங்கவில்லையென்றால் தான் மனிதனில் கோளாறும் உண்டாகிறது. வேறொரு விதமாக மனித அமைப்பைப் பார்த்தால் ஐந்து உறைகள் கவனத்தைக் கவருகின்றன. அவை.

1. அன்னமயக்கோசம்: இது உண்ணும் உணவினாலும் பருகும் நீரினாலும் உருவான உறையாகும். இது சுவாசத்தால் சூக்கும உடலுடன் கட்டப்பட்டிருக்கிறது. காய்ச்சல், ரணம், இருமல், இழுப்பு போன்ற உபாதைகளுக்குட்பட்டது. இந்த உபாதைகள் இன்றி இதைக்காத்துக் கொள்வது தியான சாதகனின் முதற்கடனாகும். இவ்வுறையைச் சரி செய்வதற்கே ஆசனப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.

2. பிராணமயக்கோசம்: இது உடலில் உள்ள நாடிகளில் ஓடும் வாயுக்களை வைத்துக் கூறுவது. அதாவது, பிராணனால் அமைந்த உறை. இவ்வுறை கோளாறானால் சரியான இயக்கம் உடலில் அமையாது. உடலில் ஏற்படும் சுறுசுறுப்பும் அழுத்தமும் வேகமும் இவ்வுறையைப் பொருத்ததே. இதுவே உடலையும் மனத்தையும் கட்டி வைப்பது. இது அடங்கினால்தான் மனமும் அடங்கும்! தியானமும் சாத்தியம் ஆகும்.

3. மனோமயக்கோசம்: இது முழுக்க முழுக்க உணர்வு மயமானது. கவலை, ஐயம், சிந்தனை முதலிய இயக்கமாக பரிணமிக்கக்கூடியது. இவ்வுறை சரியாக இல்லாததே மனக்கோளாறுகளுக்குக் காரணமாகும். சித்தப்பிரமை, சதா கவலை, அலை பாயும் எண்ணங்கள், கொந்தளிக்கும் உணர்வுகள் எல்லாம் உடலில் வியாதிகளை வெளிப்படச் செய்கின்றன. மனத்திலிருந்தே உடலிலும் வியாதிகள் வெளிப்படுகின்றன என்பதை விஞ்ஞான உலகமும் ஒப்புக் கொள்கிறது. ஆகவே மனோமயக்கோசம் சரியில்லையென்றால் தியானம் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது.

4. விஞ்ஞானமயக்கோசம்: இவ்வுறையே புத்தி எனப்படுவது புத்திக்கோளாறு இல்லாமல் இருப்பதற்கு நல்லது - கெட்டது. நிரந்தரம் - நிரந்தரமற்றது, தேவையானது - தேவையற்றது என்பதில் தெளிவு பெறவேண்டும். இல்லையேல் தவறாகப் புரிந்து கொள்ளுதல், வேறுபாதையில் கடத்தப்படுதல் ஆகியவை தியானத்தில் நிகழ்ந்துவிடும்.

5. ஆனந்தமயக்கோசம்: இவ்வுறையே மனிதனின் இறுதி அமைப்பு. இதில் மனிதன் ஆனந்தம் ஒன்றை மட்டுமே அனுபவிக்கின்றாள். ஒவ்வோர் உறையாய்த் தாண்டிய உணர்வு இவ்வுறைக்கு வரும்போது தியானிப்பவன் ஆனந்தத்தை அனுபவிக்கிறான்.

ஒரு தீபத்தைச்சுற்றி ஐந்து உறைகள் அமைந்திருக்கும்போது அதனுடைய வெளிச்சம் புறத்தே மிகச் சிறிதளவே விளங்கும். அதை மங்கிய ஒளி என்போம். பிரகாச ஒளியைப் பார்க்க வேண்டும் என்று விரும்பும் ஒருவன் என்ன செய்யலாம்? ஒவ்வோர் உறையாகக் கழற்றியாக வேண்டுமல்லவா? அப்படி ஐந்து உறைகளையும் நீக்கிப்பார்த்தால், மிகப் பிரகாசமான தீபமும் விளங்குமல்லவா?

இதைத்தான் ஒரு தியான யோகியும் செய்கிறான். வெறும் பருவ உடலிலேயே நின்றுவிடாமல் ஒவ்வோர் உறையாகத் தாண்டி உள்நோக்கிச் செல்லவேண்டும். இப்படி மன ஆழத்திலே மூழ்கும் ஒருவன் தியான முத்தை எடுக்கிறான்; ஜீவான்மத் தன்மை என்ற மகுடத்திலே தம்மைப் பதித்துக் கொள்கிறான். இவ்வாறு ஆன்ம அரியாசனத்திலே சரியாக ஒருவன் அமரவேண்டுமென்றால் முதலில் புரியாத மன அமைப்பைப் புரிந்து கொள்ளவேண்டும்; தெரியாத ஒழுக்க விதிகளைத் தெரிந்து கொள்ளவேண்டும்

அப்படிப்பட்டவை என்னென்னவென்று இனிப்பார்க்க வேண்டும். அவையே தியானத்தின் முதலிரண்டு படிகள். இந்தப் பகுதியிலே மனிதனின் அமைப்பைச் சுருக்கமாகத் தெரிந்து கொண்ட நீங்கள் தியானத்திற்காக உங்களை நீங்களே எப்படிக் கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதை அடுத்த பகுதியிலே காண்போம்.

ஆரோக்கிய குறிப்புகள் : மனிதனின் அமைப்பு எப்படி அமையப் பெற்று உள்ளது? - ஆரோக்கிய குறிப்புகள் [ ஆரோக்கியம் ] | Health Tips : How is the human body formed? - Health Tips in Tamil [ Health ]