
ஒருவன் தனக்குத்தானே கேடு புரிந்துகொண்டு விடாமல் காத்துக் கொள்ளவேண்டும் என்றால் அதற்கு உடல் கட்டுப்பாடும் அவசியம்.
தியானத்தில் உடல் கட்டுப்பாடு அவசியமா? ஒருவன் தனக்குத்தானே கேடு புரிந்துகொண்டு விடாமல் காத்துக் கொள்ளவேண்டும் என்றால் அதற்கு உடல் கட்டுப்பாடும் அவசியம். இவ்வகையில் மனதில் உள்ள விரும்பத்தகாத விஷயங்களை அகற்றுவதற்காகப் முற் பகுதியில் சில வழிகளைப் பார்த்தோம். இப்போது உடலால் செய்யவேண்டிய கட்டுப்பாட்டு முயற்சிகளைப் பார்ப்போம். இதற்கு நியமங்கள் என்று பெயர். இதுவும் தியானத்திற்கு மனம் தயாராக உதவுகின்றது. வாழ்க்கையில் விரக்தி கொள்ள தியானம் ஒரு வழியாவதில்லை. ஆனால் வாழ்வின் இலட்சியம் எதுவானாலும் அதை எய்த தியானம் ஒரு கருவியாகிறது. இப்போது அந்த முறையில் அதற்கு உதவும் ஓர் ஐந்து விஷயங்களைப் பார்ப்போம். 1. தூய்மை 2. திருப்தி 3. தவம் 4. ஆன்மீக நூல் படிப்பு 5. இறைவனைப் பணிதல் இவற்றைச் சற்று விரிவாகப் பார்க்கலாம். தூய்மை என்பது கடவுள் தன்மைக்கு அடுத்தபடியாக வைக்கப்பட்டிருக்கிறது. உள்ளும் புறமும் உடலைத் தூய்மையாக வைத்துக்கொள்ளுதல் யோகத்திற்குத் தேவையானது. ஏனெனில் மனத்துடன் உடலும் ஒத்துழைக்க வேண்டியுள்ளது. மின்சக்தி ஒரு கம்பி மூலம் எளிதாகச் செல்லும். அப்படி ஒரு கம்பி மூலம் மிக எளிதாக அது செல்ல தூய உலோகம் தேவையாகிறது. அதை மென்மையான கம்பியாகச் செய்ய வேண்டியிருக்கிறது. மேலும் மின்சக்தி செல்லும் கம்பியுடன் வெளிப்பக்க கம்பி சேரக்கூடாது. இதேபோல தியானத்தின் மூலம் தெய்வீக சக்தி நம்முள் வரவேண்டுமானால் மனமும் உடலும் தூய்மையாக இருக்கவேண்டும். உணர்ச்சிகளுக்கான உடல் கருவிகள் கூடிய வரையில் அழுக்கின்றி இருப்பது அவசியம். அதாவது முளை, ஐம்பொறிகள், கைகால்கள் உள்ளுறுப்புக்களான வயிறு, நுரையீரல், குடல்கள் முதலியன தூய்மையாக இருந்தாக வேண்டும். உடலின் புறத் தூய்மைக்காகக் குளிக்கிறோமோ, அதே போன்று உள்ளுறுப்புகளின் தூய்மைக்காகவும் சில யோக நுணுக்கங்கள் உள்ளன. அவை: 1. கபாலபாதி - தலையைத் தூய்மை செய்வது. 2. த்ராடக் - கண்களை நேர்படுத்துவது. 3. நேதி - முகத்தின் உட்புறமும், மூக்கின் பின்புறமும் தூய்மை செய்தல். 4. தோதி - உணவுப் பாதையை, இரைப்பையை தூய்மைப்படுத்துதல். 5. நௌலி - வயிற்றை, குடலை தூய்மை செய்தல். 6. பஸ்தி - சிறுகுடலை தூய்மை செய்தல். நேதி என்பது ஜலத்தினாலும் துணியினாலும் இரண்டு விதமாகச் செய்தல் உண்டு. தோதி ஜலமும் துணியும் சேர்ந்து பயன்படும் கிரியை. பஸ்தி என்பது எனிமா தருவது போல ஆசன வாய் மூலம் நீரை உள்ளிழுத்துக் குடல்களைக் கழுவிச்சுத்தம் செய்வது. இம்முறைகளால் உள்ளுடலின் உறுப்புகள் அழுக்குகளும் அமிலங்களும் நீங்கி தூய்மை அடைகின்றன. பிராணயாமங்களால் நுரையீரல்கள் தூய்மைப்படுத்தப்படுகின்றன. இதனால் இதயமும் கூட சுத்த ரத்தம் பாயும் தூய்மை உறுப்பாகிறது. 'போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்பது பழமொழி. அளவற்ற ஆசை இல்லாமல் இருப்பதே திருப்தி என்பது மனநிறைவாகும். வாழ்க்கையில் எது வந்த போதிலும் சமாதான மனத்துடன் இருப்பதுவே எதையும் ஏற்றுக் சமாளிக்கும் வலிமையைத் தரும், நிதானமும் அதனால் உண்டாகும். சிறு சிறு ஆசைகள் கூட மனத்தைச் சிதறடித்து விடும். எல்லாம் முன்வினைப் பயன் என்று பொறுமையுடன் சகித்துக் கொள்வதனால் திருப்தியை எய்தலாம். திருப்தியில்லாத நிலைக்குந்தான் பேராசை பெருநஷ்டம் என்கிறார்கள். வாழ்க்கையில் எச்சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக இருப்பதுவே திருப்தி என்பது. குறையாக எதையுமே கருதாமல் 'உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப்பார்த்து நிம்மதி தேடு' என்பதை நினைவில் வைத்து, நம்மை இறைவன் நன்றாகவே கவனித்துக் கொள்கிறான் என்று, ஏக்கத்தைத் தவிர்த்துச் சமாதானமடைய வேண்டும். எத்தனைக் கோடி இருந்தாலும் இன்னும் வேண்டும் என்று நினைத்தால் அது திருப்தியில்லா நிலைதான். இருக்கும் கூழை மகிழ்ச்சியுடன் குடித்து நிம்மதியாக இருப்பதே மனநிறைவு. இது இல்லாமல் தியானத்தில் மனம் அமைதியடையாது. முதலில் வாயிற்றுக்குக் கேட்கிறது. பிறகு சொந்த வீடு, சொத்து வேண்டுகிறது. அதன் பிறகு கார், ஆள், அம்புகளுடன் செல்வ வாழ்க்கை கேட்கிறது. அப்போதும் திருப்தியுறாத மனம் தனது பிள்ளைகளுக்குச் சொத்துச் சேர்க்க எண்ணுகிறது. மேலும் பேரனுக்கும், அடுத்து தலைமுறைக்கும் அதற்கடுத்த தலைமுறைக்கும் என்று போதும் என்பதே தோன்றாமல் மனம் சொத்தைப் பெருக்குவதில் கரைபுரளுகிறது. இந்நிலை தியானத்திற்கு ஒத்துவராது. திருப்தியற்ற நிலை எதிலுமே வரம்பை மீறிவிடும்; குற்றம் புரியத் துணியும். வசதி - செல்வம் குறைவாக இருந்தால்தான், திமிர் அகங்காரம் குறையும், மிருக உணர்ச்சிக்குத் தீனி போடப் பணமில்லை என்ற நிலையில் ஒழுங்காக வாழமுடியும். இதனாலும், எளிய வாழ்க்கையில் இன்னல்களைச் சமாளித்துப் பழகுவதாலும் மனோவலிமை அதிகமாகிறது. அடிப்படைத் தேவைகளை மட்டும் கொண்டு வாழ்வதே எளிய வாழ்க்கையாகும். தன் கைகளால் உழைத்து அல்லது, உடலில் உயிர் நிலைக்கும் வரை மட்டும் உணவை இரந்தாவது பெற்றும் வாழும் நிலையில் 'இதுபோதுமே' என்று மன அரிப்பு எதுவுமற்றிருத்தலும் திருப்தி பெற்ற வாழ்வாகும். இந்த திருப்தி இருந்தால் ஒருவரை ஒருவர் மோசம் செய்ய வேண்டாம். காக்காய் பிடிக்க வேண்டாம். இலஞ்சம் வாங்க அவசியம் இல்லை. எங்கும் நேர்மை மிளிரும். ஆனந்தமும் உண்டு. இதனால் மிருக உணர்வு குறைந்து மகிழ்ச்சி கூடுகிறது. உடலையும், மனத்தையும் சக்தி குறையாமல் வைத்துக் கொள்ளலாம். உடலில், மனத்தில் காம, கோப உணர்வின்றிச் செய்துவிட இயலும். உடலை பட்டினி போன்று துன்புறுத்தலின்றி கட்டுப்படுத்த வேண்டும். உடலைத் துன்புறுத்துதல் பஞ்ச பூதங்களை வதைப்பதாகும். அது இம்சையாகிவிடும். நுட்பமான உறுப்புகளைக் காத்து நல்ல வேலைத் திறத்துடன் வைத்திருக்க வேண்டும். ஆகவே, உடலுக்கும் வேலை கொடுத்து எளிய வாழ்க்கை நடத்தவேண்டும். அதாவது, நடை, ஓரளவு பளு தூக்குதல், உடல் வளைந்து நெளிவது முதலிய இயக்கம் இருக்கும்படி வாழவேண்டும். உடலுக்கு இயக்கமே இல்லாதவாறு, நடையே இல்லாமல் வாகனங்களிலேயே போவதோ; குனிந்து நிமிராமல் நாற்காலியிலே உட்கார்ந்தபடி நாள் முழுவதும் இருப்பது மாதிரியான வாழ்க்கை மனித உடலை சில இயக்கங்களுக்கு ஏற்றபடி இல்லாமலும், சக்தியில்லாமலும் செய்து விடுகின்றது. ஹதயோக பிரதீபிகா என்று ஒரு நூல் உள்ளது. அது யோகி உடலையும், மனதையும் நன்கு வைத்துக்கொள்வதை வலியுறுத்துகின்றது. யோகியின் இலக்கணம் பற்றியும் விளக்கம் தருகிறது. யோகி எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பான். அவனது உடல் அழுக்கு நீங்கி இருக்கும். அவனது கண்கள் ஒளி பொருந்தியவையாக விளங்கும். ஆகவே, தூய்மையைப் போல உடலை ஓரளவு வருத்தி, சுகங்களைக் குறைத்துச் செய்வதே தவம் ஆகிறது. குளிரைத் தாங்கிப் பழகுவது, சூட்டை ஏற்றுச் சகித்துப் பழகுவது, சாதாரண வசதிகளை கூடத் துறந்து இருக்க பயில்வது தவமாகும். ஒரு நாள் தூங்கமாலிருப்பது, ஒரு நாள் உண்ணாமல் இருப்பது, சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி விரதங்களும், பெண்கள் செய்யும் நோன்புகளும் கூட தவமேயாகும். இதனால் மனம் எதையும் தாங்கும் சக்தியை உறுதியாகப் பெறுகின்றது. ஓரளவிற்கு மெய்வருத்தம் ஏற்றுப் பழகுவதே தவமாக இருந்து தியானத்திற்கு உதவுகின்றது. ஒருவன் எதையும் தானே தெரிந்து கொண்டு விடமுடியாது. ஆகவே பெரியவர்கள் இயற்றிய நூல்களை எல்லாத் துறையிலும் அறிவுபெற விரும்புவோர் படிக்கின்றனர். தியானம் நன்கு அமைய ஆன்மிக நூல்களைப் படிக்க வேண்டும். ஆன்மீக நூல் படிப்பு என்பது ஒருவன் தன்னைப்பற்றி அறிவதுதான். இது உலகப்பற்றைக் குறைத்து அல்லது உயர்ந்த நோக்கத்தை அளித்துத் தியானம் செய்ய வைக்கும். உலகம் என்பது என்ன? உடல் என்பது என்ன? மனம், புத்தி, ஆன்மா என்று அதை வகைப்படுத்தி அறிவது எல்லாம் ஆன்மீக நூற்படிப்பினாலேயே இயலும். நூல்களைப் படிப்பதால் ஒருவன் தானே அறிவுபெற்று வருகின்றான் என்பதில்லை. வடமொழியில் இதை சுவாத்யாயம் என்று கூறுவர். இது உண்மையில் ஒருவன் தன்னைப் பற்றியறிவதே என்று பொருள்படும். இப்படித் தன்னைப் படிப்பதில் ஓர் அங்கமாக ஆன்மீக நூல் படிப்பது உதவுகிறது. இதைவிட தியானம் உயர்ந்ததானாலும் இது தியானத்திற்கு உதவியாக உள்ளது. உண்மையான 'தான்' உடலிலில்லை; ஜீவனே என்று ஆத்ம அனாத்ம அறிவை நூல் மூலம் முதலில் அறிந்து அனுபவப்பூர்வமாக தியானத்தின் மூலம் காணவேண்டும் என்பதற்கே ஆன்மீக நூல் படிப்பு உதவும். ஆன்மீக நூல் படிப்பு, இறைவன் மீதே எண்ணத்தை வைத்திருக்க உதவி புரியும். 1. தோத்திரங்களை இறைவன் மீது படிப்பது, பாடுவது. 2. இராமாயணம், மகாபாரதம் கேட்பது, படிப்பது. 3. புராணங்களைக் கேட்பது, படிப்பது. 4. ஸஹஸ்ரநாமம், ஸ்ரீஸ்துதி, சிவதோத்திரம், கந்தசஷ்டிக் கவசம் போன்றவற்றைப் படித்தல். 5. யோக, வேதாந்த நூல்களைப் படித்தல், கற்றல். பதஞ்சலி, திருமூலர், கீதை, உபநிடதம் ஆகியவற்றைப் படிப்பதும். அவற்றைச் சார்ந்த வேறு நிபுணர்கள் எழுதும் புத்தகங்களைப் பார்த்தலும் ஆகும். இதனால் ஒருவன் தன்னைப்பற்றித் தெரிந்து கொள்வதால், இது சுவாத்யாயம் எனப்படுகின்றது. சரணாகதி: இது சமஸ்கிருதத்தில் ஈஸ்வரப் பிரணிதானா எனப்படுகிறது. இறைவனைப் பணிதல் என்று சுருக்கமாகச் சொல்லிவிடலாம். தன்னை ஒருவன் பரம் பொருளுக்கு அர்ப்பணம் செய்து விடுவதும், உடலின் சில உறுப்புகளை விரும்பத்தகாத வேலைகளிலிருந்து இறைவன் பெயரால் விலக்கி வைத்தலும் இறைவனுக்களித்தலாகும். இது நம்மில் நம்பிக்கை தருவதாக இருக்கவேண்டும். இதில் உற்சாகம் வளர வளர இறைவனின் நினைவே மனதில் இருக்கும் தியானம் கைகூட இது சுலபமான வழியாகும். அடக்க முடியாத இயற்கை வேகங்களான ஆசை, கோபம், காமம் எல்லாம் கட்டுப்பட இதுவே சிறந்த வழி, ஒருவன் தானே இறைவனுக்குத் தன்னை அளித்து விடுவதால் தவறான பாதையில் செல்ல அஞ்சுவான். தன்னிடம் ஒரு புனிதம் இருப்பதாக உணர இயலும். அது மனம் கீழான விஷயத்தில் செல்லாமல் காக்கும். ஒரு காலத்தில் புயல் காற்று மழையினால் துரதிருஷ்டவசமாகக் குடியானவர்களுடைய குடிசை வீடுகள், பயிர் பச்சை மரம் எல்லாம் பெருஞ்சேதமடைந்தன. அதைத் தொடர்ந்து வெள்ளம் புகுந்து எல்லாருடைய மாடு, கன்றுகளும், வீட்டுச் சாமான்களும் அடித்துக்கொண்டு போகப்பட்டன. பருவ காலத்தின் செயலால் அவர்கள் நடுங்கிக் கொண்டிருந்தனர். வாழ மாற்று வழியின்மையினால், ஆண்டவனைத் திட்டினார்கள். உடனே இறைவன் மனிதரைப் போல் வடிவெடுத்து அவர்கள் முன்னால் வந்தான். ''ஓ... மனிதர்களே ஏன் இப்படி. என்னைக்குறை கூறுகிறீர்கள்?" என்று அவர்களிடம் கேட்டான். அதற்குக் குடியானவர்களுள் ஒருவன்: "ஓ...கடவுளே, இது நியாயந்தானா? எங்கள் மீது இப்படிக் கடும் புயல், மழை, காற்றை ஏவலாமா? இதுதான் உமது தயாள குணத்தின் தன்மையா?" என்றான். ஆண்டவன் பதிலிறுத்தான்: "கண்ணால் காண்பது பொய், அதன் உண்மையை உணர்ந்தறிய வேண்டும். இந்தச் சுழல் காற்று அதிக வெப்பமுள்ள இடத்திலிருந்து அதிக வெப்பத்தை அகற்றி அங்கே உள்ள மக்களை, உயிரைப் காப்பாற்ற உண்டாக்கப்பட்டது. இந்த அதிக வெப்பம் இப்படியே சென்று ஆர்டிக், அண்டார்டிக் பிரதேசங்களுக்குப் போய் அங்குள்ள பனிக்கட்டிகளை உருக வைக்கிறது. இல்லையென்றால் அங்குள்ள உயிர்கள் உறைந்து அதிகக் குளிரால் இறந்து விடுவர். இப்படி அநேகமாயிரம் உயிர்களைக் காப்பாற்ற சில நூறு பேர்களான உங்களுக்குச் சிரமம் தரவேண்டி வந்தது. இப்படி இயங்குவதே எனது கருணை, புரிந்து கொண்டீர்களா?" அதைக்கேட்டு குடியானவர்கள் மகிழ்ந்தனர். சிரம நிலையிலும் அறிவைப் பெற்றனர். எல்லாச் சிக்கல்களிலிருந்தும் மனதை விடுவித்து இறைவனிடம் சமர்ப்பித்தனர். தான் ஆண்டவனை விட்டு வேறாக இருப்பதாக எண்ணியிருப்பவர் துக்கம் நீங்க வழியில்லை. தனது ஆத்மா, பரமாத்மாவின் அம்சம் அவரை விட்டுத் தனியாக வாழ முடியாது என்று அவருடையதை அவரிடமே அர்ப்பணித்து விடுவதாக தன்னலப் பொறுப்பைத் தான் வைத்துக் கொள்ளாமல் இறைவனின் இச்சைப்படி விட்டுவிடுவதே அர்ப்பணம் செய்வது ஆகும். இதையே பெரியவர்களும் ஸ்வாமிகளும் சரணாகதி என்கிறார்கள். இதுவே இறைவனிடம் வேண்டியிருத்தலாகும். இதனால் கவலைகள் விலகும். சரணாகதி செய்தபின் ஒருவன் எப்படி நடந்து கொள்ள வேணடுமென்றால் தன்னை இறைவனின் பிரதிநிதியாகவோ அல்லது அவனுடைய தாசனாகவோ நினைத்து இறைவனின் கட்டளையாக எண்ணி வேலைகளைச் செய்து வரவேண்டும். தான் புரியும் காரியங்களின் பலன்களை இறைவனுக்கு அர்ப்பணித்து விடவேண்டும். அதாவது இறைவனின் கருவியாக இறைவனுக்காகவே தொண்டாற்றுவதற்காக உலகத்தில் தனக்குள்ள கடமைகளைச் செய்து வரவேண்டும். இதனால் ஒருவனுடைய மனம் தியான நிலையை விட்டு வழுவாமல் இருக்கும். கீதையில் பகவான், அருச்சுனனிடம், ''ஓ...அருச்சுனா! நீ செய்கிற காரியங்கள், நீ உண்கிற உணவு, செய்கிற சாதனைகள் உன்னுடைய இன்ப துன்பங்கள் அனைத்தையும் எனக்கு அர்ப்பணித்து விடு" என்று சொல்கிறார்.தூய்மை:
திருப்தி:
தவம்:
ஆன்மீக நூல் படிப்பு :
ஆரோக்கிய குறிப்புகள் : தியானத்தில் உடல் கட்டுப்பாடு அவசியமா? - ஆரோக்கிய குறிப்புகள் [ ஆரோக்கியம் ] | Health Tips : Is physical control necessary in meditation? - Health Tips in Tamil [ Health ]