
முழுமையான ஆரோக்கியந்தரும் உணவில் மூன்று விதமான முக்கிய சத்துக்கள் அடங்கியிருக்க வேண்டும்.
மருத்துவ குணம் கொண்ட பொருள்கள் முழுமையான ஆரோக்கியந்தரும் உணவில் மூன்று விதமான முக்கிய சத்துக்கள்
அடங்கியிருக்க வேண்டும். அந்த மூன்று சத்துக்களை மாவுச் சத்து, புரதச் சத்து, கொழுப்புச்
சத்து என்று கூறுவார்கள். இந்த மூன்று சத்துக்களும் தேவையான அளவு கலந்த உணவுதான் சீரான சத்துணவு ஆகும். இந்த சத்துக்களை ஒரே மாதிரியான
உணவிலிருந்து நம்மால் பெற்று விட முடியாது. உதாரணமாக வெறும் அரிசி உணவை மட்டுமே ஒருவன் உண்ணுகிறான்
என்றால் வெறும் மாவுச் சத்து மட்டுந்தான் அவனுக்குக் கிடைக்கும். புரதம், கொழுப்பு சத்துக்கள் அவனுக்குப் போதிய அளவு கிடைக்காது. பருப்பு வகைகளில் புரதச் சத்து அதிக அளவில் கிடைக்கும். ஆனால்
உடல் வளர்ச்சிக்குத் தேவையான முழுப் புரத சத்தினை விலங்குகளிடமிருந்து பெறவேண்டியிருக்கிறது. ஆகவே நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவில் பலவிதமான உணவுப் பண்டங்கள்
இடம் பெற்றால் தான் முழுமையான சத்தினைப் பெற முடியும். சத்துக்கள் அடங்கிய உணவு பற்றி இப்போது சிறிது விளக்கமாகக் காண்போம்.
மாச்சத்து என்று குறிப்பிட்டோமே அது உடலுக்குத் தேவையான
சக்தியைப் பெற உதவுகிறது. இந்த மாச்சத்து அரிசி, கோதுமை, கேழ்வரகு சோளம், கடலை, கம்பு, பருப்புவகை, பட்டாணி மரவள்ளிக்
கிழங்கு, உருளைக்கிழங்கு, வேர்க்கடலை போன்றவற்றில் மிகவும்
அதிகமாக அடங்கியுள்ளன. மாச்சத்தை நமது உணவில் அதிகமாகச் சேர்த்துக்
கொள்ள வேண்டுமானால் அந்தந்த பருவத்தில் மிகவும் மலிவாகக் கிடைக்கக் கூடிய தானியம், கிழங்கு, பருப்பு வகைகளை
உபயோகித்தால் போதும். உழைக்கும் ஆற்றலை, செயல் திறனை
மேம்படுத்த கொழுப்பு சத்து உதவுகிறது. உணவிலிருந்து நாம் பெறும் கொழுப்புச் சத்து அன்றாட உபயோகத்திற்கு
போக மிச்சமிருப்பது எதிர்கால உபயோகத்திற்காக உடலில் சேமித்து வைக்கப்படுகிறது. நாம் போதிய அளவு உணவு பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டாலோ, அல்லது இரண்டொரு
நாட்கள் பட்டினி கிடக்க நேர்ந்தாலோ சேமிப்பாக இருக்கும் கொழுப்பு உடலின் செயற்பாட்டுக்கு
உதவும். ஆனால் கொழுப்பு உடலுக்குச் சற்றும் பயன்
படாத நிலையில் தொடர்ந்து சேமிப்பாகச் சேர்ந்து கொண்டேயிருந்தால் உடல் அளவுக்கு அதிகமாகப்
பருமன் அடைந்து விடும். அதன் காரணமாக உடலின் ஆரோக்கியம் பெருமளவுக்குப் பாதிக்கப்படும். உடல் பருமன், இருதய நோய், நீரிழிவு, நரம்புத் தளர்ச்சி போன்ற கடுமையான பிணிகளுக்கு வழி வகுத்து விடும்.
ஆகவே கொழுப்பு உடலில் அதிகம் சேர்ந்துவிடாமல் கவனமாகச் செயற்பட வேண்டும். அன்றாட உணவின் அளவைக் குறைத்தும், கடுமையாக உழைக்கும்
வழக்கத்தை மேற்கொள்வதன் மூலமும் உடலில் கொழுப்பை சரியான அளவில் இருக்குமாறு பார்த்துக்
கொள்ள முடியும். கொழுப்புச் சத்தானது நாம் சமையலில் பயன்படுத்தும்
எண்ணெய் வகைகள், எண்ணெய் விதைகள், (உதாரணமாக வேர்க்கடலை) கொட்டைகள், பால், வெண்ணெய், நெய், இறைச்சி வகைகள், இறைச்சிக்
கொழுப்பு ஆகியவற்றின் மூலம் நமது உடலுக்குக் கிடைக்கிறது. உடல் வளர்ச்சிக்கு அடிப்படை ஆதரமாகத் திகழ்வது புரதச் சத்து
தான். புரதச் சத்து இல்லையென்றால் நமது உடலே இல்லை என்ற அளவுக்கு அது
சிறப்புத் தன்மை வகிக்கிறது. குழந்தைப் பருவத்தில் சீரான
வளர்ச்சிக்கும், சரியானபடி உடல் முதிர்ச்சியும் வளர்ச்சியும் பெறுவதற்கும், உடல் தசையின்
செயற்பாட்டுக்கும் உடலின் கெட்டழியும் பகுதிகள் புதுப்பிக்கப்படுவதற்கும் புரத சத்துதான்
ஆதாரமாக விளங்குகிறது. புரதச் சத்து வேர்க்கடலை, பருப்பு வகைகள், முந்திரிப்
பருப்பு, கடலை, கோதுமை, அரிசி, கேழ்வரகு, கொத்துமல்லி, கத்திரிக்காய், பீட்ரூட் தக்காளி, கீரை வகைகள், ஆப்பிள் போன்றவற்றில் கணிசமான
அளவு உள்ளது. விலங்கினங்களிடமிருந்தும் புரத சத்தினைப் பெற முடியும். இறைச்சியில் புரதம் 21.5 சதவிதம் அடங்கியிருக்கிறது. மிருகங்களின் கல்லீரலில் 19.3 சத விகிதம் புரதம் அடங்கியிருக்கிறது. மீனில் உள்ள புரதத்தின்
அளவு 21.5 சதவிகிதமாகும். முட்டையில்
13.3 சதவிகிதம் புரதம் உள்ளது. மேற் குறித்த சத்துக்களை நம் உணவில் திட்டமிட்டு அமைத்துக் கொண்டால்
நமக்கு எந்த விதமான பிணியும் ஏற்படாது. முக்கியமாக நரம்புத் தளர்ச்சி போன்ற குறைபாடுகள்
ஏற்படவே செய்யாது. உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்களைக் குறித்து முன்னர் கண்டோம். இனி பிணியகற்றும் ஆற்றல்
வாய்ந்த உயிர்ச் சத்துக்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம். நமது உடலில் நோய் தோன்றாமல் தடுக்கவும் நோய் ஏற்பட்டாலும் துரிதமாக
அவற்றை அகற் றவும் பேருதவி புரிகின்றன, உயிர்ச் சத்துக்கள் இந்த உயிர்ச்
சத்துக்களை வைட்டமின்கள் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். இந்த உயிர்ச் சத்தான வைட்டமின் வகைகள் நம் உடலில் ஒன்றோ பலவோ
குறைவுபட நேர்ந்தாலும் அதனை ஈடுகட்ட முடியாத நிலையில் கடுமையான பிணிகள் தோன்றக் கூடும். முக்கியமாக நரம்புத் தளர்ச்சி போன்ற குறைபாடுகளுக்கு வைட்டமின்
பற்றாக்குறை தான் முக்கிய காரணமாக அமையும். ஆகவே உயிர்ச் சத்துக்களான வைட்டமின் வகைகளைப்
பற்றி சிறிது தெரிந்து கொள்வோம். உயிர்ச்சத்தான வைட்டமினை அவற்றின் சத்துத் தன்மைக்கு ஏற்ப ஏ.பி.சி.டி
என்பன போன்ற ஆங்கிலப் பெயர்களால் மருத்துவ இயல் அறிஞர்கள் குறிப்பிடுவது வழக்கம். உடல் நலத்துக்கு மிகவும் அவசியமான சில வைட்டமின் வகைகளைப் பற்றிச்
சுருக்கமான விவரங்களைத் தெரிந்து கொள்வோம். வைட்டமின் 'ஏ' என்ற உயிர்ச்சத்தானது கண் பார்வைக்கு ஆதாரமான ஒன்று ஆகும். வைட்டமின்
'ஏ' சத்து உடலில் குறையும் போதுதான் கண் பார்வை மங்குகிறது. மாலையில்
கண்கள் சரியாகத் தெரிவதில்லை. நிறங்களின் வித்தியாசத்தை துல்லியமாகப் பகுத்தறியும்
சக்தி கண்களுக்கு இல்லாமல் போய்விடுகிறது. தெளிவான பார்வையுடன் இருக்கும் கண்கள் முழுக்
குருடாக ஆகிவிடுவது இந்த வைட்டமின் 'ஏ' பற்றாக் குறையினால்தான்.
நமது நாட்டில் பார்வை இழந்தவர்கள் தொகை உலகத்திலேயே மிகவும் அதிகமாக இருப்பதற்கு நமது
மக்களின் வைட்டமின் 'ஏ' சத்து அனேகமாக உணவில் இல்லாம லிருப்பதுதான் காரணமாகும். பொதுவாக
வைட்டமின் 'ஏ' சத்து முட்டை, பால், தயிர், விலங்கினங்களின்
ஈரல் போன்ற வற்றிலிருந்து தாராளமாகப் பெற முடியும். அகத்திக் கீரை, முருங்கைக்கீரை
ஆகிய கீரை வகைகளில் அதிக அளவு வைட்டமின் 'ஏ' சத்து அடங்கியிருக்கிறது காரெட் என்ற கிழங்கில் 'கெரோடீன்' என்ற சத்து
உள்ளது. இதில் வைட்டமின் 'ஏ' அதிக அளவில் உள்ளது. வைட்டமின் 'பி' சத்தினை பல உட்பிரிவுகளாகப் பிரித்திருக்கிறார்கள்.
வைட்டமின் 'பி' என்பது ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமானதாகும். உடலில் வைட்டமின் 'பி' சத்து குறைந்தால்
முதலில் பாதிக்கப்படுவது நரம்புகள்தான். ஆகவே நரம்பு தொடர்புடைய பல பிணிகள் இதனால்
ஏற்பட வழியுண்டு. பெரி பெரி என்ற நோய் தோன்றுவதற்கும் இந்த உயிர்ச்சத்துக் குறைவுதான்
காரணம். பெரி பெரி என்ற நோய் தோன்றினால் கை கால்கள் உணர்ச்சியிழந்து விடும். உடலில் வீக்கம் ஏற்படும். காபி, டீ போன்ற பானங்களை
அதிகமாக அருந்துவதாலும் நீடித்த குடிப்பழக்கத்தினாலும் வைட்டமின் 'பி' சத்து விரையமாக
நேரிடும். வைட்டமின் 'பி-2' சத்தினை முக்கியமாக, பால், தயிர், மோர், முட்டை ஆகியவற்றின்
மூலம் பெற முடியும். நமது உடலில் வைட்டமின் பி-2 சத்து பற்றாக்குறையாக இருக்கும்போது வாயில் புண் ஏற்படும். உடலில்
ஒருவித எரிச்சல் தோன்றும். தொண்டையில் கரகரப்பு உணர்ச்சி உண்டாகும். வைட்டமின் 'பி-'2 சத்துக் குறைவு காரணமாக
முக்கியமாகப் பாதிக்கப்படுவது கண்களில் அமைந்துள்ள பார்வை நரம்புகள்தான். இரத்தம் வளமாக இருக்கவும், இரத்த ஓட்டம்
சிறப்பாக இருக்கவும். வைட்டமின் 'பி' 2 என்ற சத்து பயன்படுகிறது. இந்தச் சத்தினை இறைச்சி, ஈரல், பால் போன்றவற்றிலிருந்து
தேவையான அளவு பெற முடியும். வைட்டமின் 'சி' என்ற சத்து குறைவுபடும் போது பல் ஈறுகள் அதிகமாக பாதிப்புக்கு
உள்ளாகும். குறிப்பாகப் பல் ஈறுகளில் இரத்தம் தொடர்ந்து கசிந்து கொண்டிருக்கும். உடலில்
காயம் ஏற்பட்டால் அதிக அளவுக்கு இரத்தம் வெளியேறும். அதிக அளவுக்கு ஆரஞ்சுப் பழத்தைச் சேர்த்துக் கொள்வதன் மூலம்
வைட்டமின் 'சி' சத்தினை தாராளமாகப் பெற முடியும். எலும்புகளின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் ஆதாரமாக இருப்பது வைட்டமின்
'டி' சத்து ஆகும். இந்தச் சத்து போதிய அளவு பெற முடியாத குழந்தைகள் கால்கள் வளைந்து
முட்டி தட்டுவது வழக்கம். மார்பு எலும்புகள் வெளியே
தெரிய உலவும் குழந்தைகள் வைட்டமின் 'டி' சத்து பற்றாக்
குறையுள்ளவை என விளங்கிக் கொள்ளலாம். பற்களின் ஆரோக்கியத்திற்கு
இந்தச் சத்து பெருமளவுக்கு உதவிகரமாக இருக்கிறது. வைட்டமின் சத்துக்களைப் பெறுவதற்கு இந்தக் காலத்தில் வைட்டமின்
மாத்திரைகளை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள்.
மாத்திரைகள் முழு அளவுக்கு வைட்டமின் சத்தினை அளித்து விடுவதில்லை.
அதே சமயம் இந்த மாத்திரைகளை தொடர்ந்து கட்டுப்பாடு இன்றி பயன்படுத்தும்போது எதிர்மறையான
விளைவுகள் ஏற்பட்டு விடுவதுண்டு. அளவுக்கு அதிகமான வைட்டமின்
மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ள நேர்ந்தால் புற்று நோய் ஏற்படும் அபாயம் உண்டு என்ற
உண்மை யினை அமெரிக்க மருத்துவ இயல் அறிஞர்கள் அண்மையில் கண்டுபிடித்திருக்கின்றனர். பேரிக்காய் ஆப்பிள் வகையைச் சேர்ந்தது பேரிக்காய். இதன் நிறம் பச்சையாக
இருக்கும். நன்றாக பழுத்த பேரிக் காய், பச்சையும், மஞ்சளும் கலந்த
நிறத்துடனிருக்கும். பச்சை நிறத்துடனிருப்பதால் இதைப் பேரிக்காய் என்று சொல்வதாக நினைக்கக்
கூடாது. சாத்துக்குடிப் பழம், பச்சை நாடான் என்ற பச்சை வாழைப்பழம் இவைகள் பச்சை நிறத்துடனிருப்ப
தால் அவற்றைக் காயென்று கூறுவதில்லை, பழ மென்றே கூறுகிறோம். மெல்லிய தோல் சதைப் பற்றுடன் ஒட்டியிருக்கும். உள்பாகம் ஆப்பிள்
பழத்தை ஒத்ததாக இருக்கும். நன்றாகப் பழுத்த பேரிக்காய் இனிப்பு ருசியுடனிருக்கும்.
பேரிக்காயிலுள்ள வைட்டமின் உயிர்ச்சத்துக்களின் விபரம்: வைட்டமின் A உயிர்ச்சத்து – 4 மில்லிகிராம் வைட்டமின் BI - 6 மில்லிகிராம் வைட்டமின் B2 – 9 மில்லிகிராம் வைட்டமின் C - இல்லை சுண்ணாம்புச் சத்து –
3 மி.கி. இரும்புச்சத்து -
௦.2 மி.கி. இதன் உஷ்ண அளவு - 13 காலரி. பேரிக்காயைக் கிடைக்கும் காலத்தில் அடிக்கடி சாப்பிட்டு வந்தால்
எலும்புகளுக்கு உறுதி ஏற்படும். பற்கள் பலப்படும். இருதயத்திற்கு பலத்தைக் கொடுக்கும்.
இரப்பை, குடல் இவைகளுக்குப் பலம் ஏற்படும். ஜீரணக் கருவிகள் பலப்பட்டு, அதன் காரணமாக
நல்ல பசியை உண்டு பண்ணும். உண்ணும் பொருள் நல்ல முறையிலே ஜீரணமாகச் செய்யும். கிராணி என்னும் வயிற்றுப் போக்கை நிறுத்துப் சக்தி பேரிக்காய்க்கு
உண்டு. ஒரு சிலருக்கு இருந்தாற்போலிருந்து இருதயம் படபடவென்று அடிக்கும். மனத்தில்
ஒருவிதமான திகில் உண்டாகும். வியர்வை கொட்டும். சில சமயம் கை கால்களில் உதறல் ஏற்படும்.
இந்த நிலையில் கஷ்டப்படுகிறவர்கள் பேரிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இந்தக் கோளாறுகள்
நீங்கும். மனோ தைரியம் உண்டாகும். மனத்தில் ஒரு புதிய தெம்பு உண்டாகும். சிறுவர்கள் நல்ல பலத்துடன் வளர இந்த பேரிக்காய் பெரிதும் உதவும்.
சிறுவர்களுக்கு பேரிக்காயைக் கொடுத்து வந்தால் அவர்கள் எலும்பு உறுதியாக வளரும். வளரும்
பற்கள் பலத்துடன் கடைசிவரை அசையாதிருக்கும், பல் சம்பந்தமான
நோய்கள் வராது.
குழந்தைகளுக்குப் பால் கொடுக்கும் தாய்மார்கள் பேரிக்காயை அடிக்கடி
சாப்பிட்டு வந்தால், தேவையான பால் சுரக்கும். கர்ப்பஸ்திரீகள் பேரிக்காய் கிடைக்கும்
காலத்தில் அதைத் தாராளமாக சாப்பிடலாம். பயப்படத் தேவையில்லை. கர்ப்பஸ்திரீகள் பேரிக்காயைச்
சாப்பிட்டால் வயிற்றில் வளரும் சிசுவிற்கு நல்ல போஷாக்குக் கிடைக்கும். இந்தக் குழந்தையின்
எலும்புகள் உறுதியாக வளர்ச்சியடையும். இருதயத்திற்கு நல்ல பலத்தைத் தரும். திடமான குழந்தைகளைப்
பெற விரும்பும் கர்ப்பஸ்திரீகள் பேரிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும்.முழுச் சத்துணவு
பிணி நீக்கும் உயிர்ச் சத்துக்கள்
சித்த மருத்துவம் : மருத்துவ குணம் கொண்ட பொருள்கள் - சித்த மருத்துவம் [ ஆரோக்கியம் ] | Siddha medicine : Medicinal substances - Siddha medicine in Tamil [ Health ]