தியானத்தடைகளும் தீர்க்கும் வழிகளும்

ஆரோக்கிய குறிப்புகள்

[ ஆரோக்கிய குறிப்புகள் ]

Meditation Obstacles and Remedies - Health Tips in Tamil

தியானத்தடைகளும் தீர்க்கும் வழிகளும் | Meditation Obstacles and Remedies

ஒருவன் பிணியினால் துள்புற்றால் கவனம் உடல் மீது இழுக்கப்பட்டு விடும். அப்போது தியானம் இல்லை.

தியானத்தடைகளும் தீர்க்கும் வழிகளும்


வாழ்க்கையில் உள்னதமான குறிக்கோள்களை எல்லாம் செயல்படுத்தும்போது உண்டாவது போலவே தியானம் பழகும் போதும் தடைகள் ஏற்படுகின்றன. இந்த இடையூறுகளை நீக்கிக்கொண்டாலொழிய தியானம் சரியாக அமையாது. பொறுமையுடனும் ஆத்மார்த்த முயற்சியுடனும் இடையூறுகளைக் களைந்துவிட வேண்டும். உடல் கோளாறு, மனக்கோளாறுகள் மூலம் பல இடையூறுகளுண்டாகின்றன. பதஞ்சலி யோகதரிசனத்தில் (யோக முறைக்கு பழைய ஆதாரம்) கீழ்வரும் இடையூறுகள் சொல்லப்படுகின்றன. பிணி, மந்தகரை, சந்தேகம், அஜாக்ரதை, பேராசை, பிரமை, தடுமாற்றம், நழுவுதல் ஆகியவை ஆகும்.


பிணி

ஒருவன் பிணியினால் துள்புற்றால் கவனம் உடல் மீது இழுக்கப்பட்டு விடும். அப்போது தியானம் இல்லை. உடலின் வலி இருக்குமானால் முதலில் அதைக் குணப்படுத்த வேண்டும். நோயால், உடல், மனோசக்தி குறைகிறது. இதனால் மனத்தின் ஒருமை சாத்தியமில்லாததாகிறது. எனவே உடலை நன்கு வைத்துக் கொள்ள வேண்டும். இது தியான ஆரம்ப நிலையிலேயே அவசியம் கவனிக்க வேண்டும். தியானம் அமைந்தபின் அது மன, உடல், பிணிகளை வராமலும், வந்தால் நீக்கவும் செய்யும். எனவே உடல் நலம் முக்கியம். பிணி உள்ளபோது, மன சஞ்சலங்களால் நோயாளி அவதிப்படுவதைக் காண்கிறோம். அவருக்கு அடிக்கடி நிதானம் போய்விடுகின்றது. அவரது மனதில் பயமும் கவலையும் உண்டாகிறது. இந்த நிலையில் ஒருவர் ஆன்ம ஞானப் பயிற்சியை எப்படிச் செய்யமுடியும்? நமது சரீரத்தின் உள், வெளி உறுப்புக்கள் சரிவர இயங்காமையினாலேயே நோய்கள் பலவும் உண்டாகின்றன. இதை ஆசனங்களைப் பயிலுவதால் நீக்கலாம். குறைக்கவோ, வராமலோ பார்த்துக் கொள்ளலாம். கிருமிகளால் உண்டாகும் நோய்களை ஆசனம் அகற்றுகிறது. உறுப்புகளை வலிமையாக்கி நோய் வராமலும் பார்த்துக் கொள்கின்றது. வெட்பதட்ப நிலைகளின் மாறுதலாலும் மிகைப்படும் போக்கினாலும் பாதிக்கப்படமாட்டார்.

ஒருவரின் ஆசனப் பயிற்சி அனுபவம் கீழே தரப்படுகின்றது. 

''குணமாகாத ஜலதோஷத்தினால் நான் மிகவும் திணறிக் கொண்டிருந்தேன். யோகாசன நிபுணர் ஒருவரிடமும் ஆசனங்களைப் பயின்றேன். ஆறு மாதங்கள் செய்தேன். 14 நாட்களில் எனது ஜலதோஷம் வராமலிருக்க தடுப்புச் சக்தி உடலில் உண்டா? என்று சோதிக்கத் துணிந்தேன்.

''நன்றாக மழையடித்துக் கொண்டிருந்த ஒருநாள், ஒரு குன்றின் மேலிருந்த சாப்பாட்டு விடுதிக்குச் சென்றேன். அந்த விடுதியின் வராந்தாவில் அமர்ந்து ஐஸ்கிரீம் வாங்கிக்கொண்டேன். மூன்று தரம் அதையேகொண்டு வரச்சொல்லி மூன்று தட்டுக்களை காலி செய்தேன். அதன் பின் வீடு திரும்பினேன். மழையினால் என் உடைகள் நனைந்தன. ஆனால் நான் ஜலதோஷத்தினால் பாதிக்கப்படவே இல்லை.

"எனக்கு நீண்டநாளாக இருந்த ஜலதோஷமும் குணமாகியது. மேலும் குளிர் பாதித்துக் குரலும் கம்மவில்லை; ஜலதோஷமும் வரவே இல்லை. இது நம்ப முடியாததாக நமக்குப் படலாம்.


மந்தம்

சில சமயங்களில் மந்த புத்தி உடல் நலமுடன் உள்ள போதும், உண்டாகிறது. அதாவது எந்தவித செயலுக்கும் ஆர்வம் உண்டாகாத நிலை ஏற்பட்டு விடுகின்றது. களைப்புற்றவன் போல ஈடுபாடின்மை தோன்றுகின்றது. இதில் தியானம் எங்கே செய்யமுடியும்? இப்படிப்பட்ட மந்த நிலை அஜீரணத்தாலும், அதிகம் உண்டதாலும் கூட உண்டாகலாம். மனம் எதிலும் ஒட்டாது. மதமதப்படைந்திருப்பதால் தியானம் நடைபெற வழி இல்லை.


சந்தேகம்

"இதயத்தில் சந்தேகம் இருப்பதை விட ஒரு துப்பாக்கிக் குண்டு இருக்கலாம்" என்பது சுவாமி ராமதீர்த்தரின் வாக்கு. பகவத் கீதையில், கிருஷ்ணபகவானும் 'சந்தேகம் உள்ளவன் நாசமடைகிறான்' என்று கூறிவிட்டார். தன்னை மட்டமாக நினைத்துக் கொள்வதாலும், 'முடியுமோ, முடியாதோ?' என்பதாலும், 'உண்மையோ, பொய்யோ' என்பதாலும் சந்தேகங்கள் உண்டாகின்றன. இது நம்பிக்கையின்மையால் ஏற்படுகிறது. சுயநம்பிக்கையற்ற தன்மையைக் காட்டும் சந்தேகம் எப்படி நாசத்தை உண்டாக்குகின்றது என்பதைக் காட்ட ஓர் உதாரணம் கீழே தரப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் தவறான வழிகளில் பணம் சம்பாதிக்கும் ஒருவன் இருந்தான். ஓர் இரவு வீட்டிற்கு ஒரு கட்டு கரன்ஸி நோட்டுகள் கொண்டு வந்தான். ஒரு நல்ல கம்பெனியின் தயாரிப்பான இரும்புப் பெட்டியில் அந்த பணத்தை வைத்தான்; பிறகு படுக்கைக்குச் சென்றான். ஆனால் உடனேயே எழுந்தான், மனைவியையும் எழுப்பிக் கூறினான்: "தற்காலத் திருடர்கள் பலே ஆசாமிகள். அவர்களிடம் எதையும் உடைத்து விடும், திறந்து விடும் நவீன ஆயுதங்களுள்ளன. ஆகவே அப்படிப்பட்ட திருடரிடம் இருந்து பணத்தைக் காப்பாற்றக்கூடிய இரும்புப் பெட்டி ஒன்றுமில்லையே" என்றான்.

அவன் மனைவியும் இதை ஒப்புக் கொண்டாள்.

உடனே அந்த வியாபாரி எழுந்து, இரும்புப் பெட்டியிலிருந்த பணத்தை எடுத்துத் தலையணைக்கு வைத்துக் கொண்டாள். அவன் தூங்க முயன்றான். ஆனால் அடியில் முடியவில்லை. அவனது பண ஆசை, திருடர் பயம் அவனைப் பெரிதும் வாட்டியது. மீண்டும் எழுந்து பணத்தைப் படுக்கை வைத்துக்கொண்டான். அப்போதும் தூக்கம் வரவில்லை. திருடர்கள் மயக்க மருந்தைத் தூங்கும் தன் மூக்கில் காட்டி அடியில் மயங்க வைத்துப் பணத்தை எடுத்து விடுவார்களோ என்று கற்பனையில் திண்டாடினான். படுக்கையிலிருந்து எழுந்து மிகப் பத்திரமான இடத்தைத் தேடினான். மாடியில் ஓர் அறை பத்திரமாக இருப்பதறிந்து அங்கே பணத்தை வைக்கத் தீர்மானித்தான்.

ஆனால் அந்த வீட்டில் அன்று பகலிலேயே ஒரு திருடன் வந்து தங்கி இரவில் திருடலாம் என்ற நோக்கத்துடன் மேல் மாடியில் அந்த அறையில் ஒளிந்து கொண்டிருந்தான். அந்த வியாபாரி அதே அறையைப் பத்திரமானது என எண்ணி அங்கே கொண்டு வந்து கரன்ஸி கட்டுகளை வைத்து விட்டுச் சென்றான். அவன் தூங்க ஆரம்பித்தவுடன் அதை அப்படியே சுருட்டிக்கொண்ட திருடன் ஜன்னல் வழியே தப்பி ஓடிவிட்டான். இதேபோலத்தான் சந்தேகம் நம் வாழ்வில் நாம் செய்யும் காரியங்களைப் பாதிக்கின்றது. ஆகவே தியானத்தில் முன்னேற விரும்புகிறவர் சந்தேகத்தை விடவேண்டும். தன் சந்தேகங்களைத் தானே தீர்த்துக்கொள்ள வேண்டும். பிறரிடம் யோசனை கேட்டுக்கொண்டிராமல், ஒருவர் தமக்குத் தாமாகவே சந்தேகம், பயம், தயக்கம் ஆகியவற்றை விட்டு விட முயலவேண்டும்.

இதை மன ஒருமையால், தீர்மானத்தால் போக்கிக் கொள்ளலாம்.

''உன் முன்னால் ஒரு கடவுள் அல்லது குரு, முனிவர் படம் ஒன்றை எடுத்து வைத்துக்கொள். அதன் பின் உன் மனம் அதன் பயன்களைப் பற்றி எண்ணும். இதன் பின் கீழுள்ள வாக்கியங்களை அல்லது அவற்றில் தேவைப்படும் ஒன்றை உள்ளுக்குள் திருப்பி. பத்து நிமிடங்களுக்குச் சொல்.

1. என்னால் முடியும், நான் கட்டாயம் செய்வேன். 

2. நான் பார்க்கிற பொருள்களுக்கெல்லாம் நான் அதிகாரி.

3. நான் எதைப் பற்றியும் எப்போதும் கவலைப்படுவதில்லை. 

4. புயல் காற்றையும், கடல் அலையையும் கூட சமாளிப்பது எளிது.

5. நான் தெய்வீக உணர்வுள்ளவன்.

6. எல்லா நல்ல குணங்களின் இருப்பிடமும் நான். 

7. எனது துணிவு நாளுக்கு நாள் பெருகும்.

8. எனது குறிக்கோளை எட்டும் வரை நான் மேலே மேலே முன்னேறிக் கொண்டேயிருப்பேன்.

இப்படிச் சொல்லிப் பழகுவதால் சந்தேகங்கள் ஒழிந்து விடுகின்றன


அஜாக்ரதை

வேலையில் அஜாக்ரதை ஏற்படுவது மனது உறுதியாயில்லை என்பதையே காட்டுகிறது. பேச்சில் அஜாக்ரதையும், மனநிலை கவனமாக இல்லை என்று காட்டும். பேச்சு, செயலில் ஒருவன் அஜாக்ரதையாயிருந்தால் தியானத்தில் முன்னேற முடியாது. தியானப் பயிற்சியின்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிகளில் அலட்சியம் கூடாது. தவறு இன்றி பயிற்சியை ஒழுங்காகச் செய்யும் அக்கறை வேண்டும். எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். பகவான் இராமகிருஷ்ணர் தமது சீடர்களை ஒவ்வொரு விஷயத்திலும் ஐராக்கிரதையாக இருக்கும்படி எச்சரிப்பார்.

ஒரு நாள் ஒரு சீடரிடம் இரும்புச் சட்டி ஒன்று வாங்கி வரச் சொன்னார். அவள் சட்டி வாங்கி வந்ததும், அதில் தண்ணீரை விட்டு, அது ஓட்டையாக இருக்கிறதா? என்று சோதிக்கச் சொன்னார். அப்படிப் பார்த்தபோது, அது ஓட்டையாக அவர் எதிர்பார்த்தபடியே இருந்தது.

"ஏன் இப்படி?" என்று குருதேவர் கேட்க,

''குருதேவருக்கு என்று நல்லதாகத் தரும்படி கேட்டேன்” என்றார் சீடர்.

உடனே குருதேவர் இராமகிருஷ்ணர், "இப்படி சாதாரணமானதிலேயே எச்சரிக்கையாக இருக்காமல் ஏமாந்தால் எப்படி ஆண்டவனைத் தெரிந்து கொள்வதில் சரியாக ஈடுபடமுடியும்?" என்றாராம்.


சோம்பல்

சரீரம் அல்லது மனதின் சோம்பேறித்தனம் தியானத்திற்குத் தடையைத் தரும். சரீரம் வேலையில் ஈடுபடாமல் சோம்பேறித் தனம் காட்டுவதால்தான், மனம் குரங்கு போல் அமைதியின்றி அலைகிறது.

ஓய்வு, தூக்கம், ஆழ்ந்த படிப்பு என்பதைத் தவிர மீதி சமயங்களில் உடலை இடைவிடாமல் வேலையில் வைக்க வேண்டும். தியான சமயத்தையும் விட்டுவிடலாம். ஆக்க வேலையில் ஈடுபட்டிருப்பது மிகவும் நல்லது. குறிக்கோள் என்று எதுவும் இல்லாத மனிதன் சோம்பேறியாகவே இருப்பான்.

வாழ்க்கையின் குறிக்கோள்களில் ஆர்வம் காட்டினால் சோம்பேறித்தனமே வராது.


பேராசை

தியானத்திற்கு மனோபலத்தைச் சேர்த்து வைக்கவேண்டும். அனாவசிய ஆவல்களை எல்லாம் விட்டு விடவேண்டும். உயிர் வாழ மட்டும் மிகச் சிறிதளவு சக்தியைப் பயன்படுத்திக் கொண்டு அதிக சக்தியைச் சேமித்தால் மாபெரும் சாதனைகளைச் செய்யலாம்.

வாழ்க்கையில் கண்ட கண்ட ஆசைகளில் பொருள்களைத் தேடியலைந்து இன்பம் காண முயல்வது, முட்டாள்தனமானது கானல் நீரைத் தேடிப் போவது போன்றது. பணம், பெண்- இவற்றினால் உண்டாகும் துன்பங்களுக்கு எல்லையே இல்லை. இலாபத்தை - இன்பத்தை நாடி மனம் விரியுமாயின் அதன் எல்லை மிகப் பெரிதாகிக் கொண்டே போகும். அதன் பரப்பு முழுவதும் பிறகு துன்பமே நிறையும்.

பேரின்பத்தை அடைய விரும்பும் ஆன்ம சாதகர்கள் சிற்றின்பங்களை அடையப் பேராசைப்படக்கூடாது. இதோ சுவாமி விவேகானந்தர் கூறும் ஓர் உதாரணம்:

ஒரு முனிவரிடம் ஒரு சீடன் இருந்தாள். அவனது சேவையில் மனமகிழ்ந்த முனிவர் அவனிடம்: ''உனக்கு ஒரு வரம் தருகிறேன்; கேள்'' என்றார். அவன் கேட்டான்: "என் மீது உமக்குப் பிரியம் உண்டானால் எனது ஆசைகள் யாவும் நிறைவேறும்படி ஒரு வரம் அருளுங்கள்" என்றான். உடனே முனிவர் ஒரு பூதத்தை வரவழைத்தார். "இதோ இந்த பூதம் உள்ளது. உள் ஆசைகளை இது பூர்த்தி செய்து தரும். ஆனால் இதற்கு வேலைகளைத் தொடர்ந்து தரவேண்டும். அதை சோம்பேறியாக இருக்கவிட்டால் அது உன்னையே விழுங்கி ஏப்பமிட்டு விடும்" என்று கூறினார்.

மகானுக்கு நன்றி சொன்ன சீடன் பூதத்தை அழைத்துச் சென்றான்.

சீடன் கேட்டதையெல்லாம் பூதம் தந்தது. சொன்னதையெல்லாம் செய்தது. அவன் கேட்பதை உடனுக்குடன் பூதம் கொடுத்து விடவே, 'மேலும் என்ன வேலை கொடுப்பது?' என்று அவனுக்குப் புரியவில்லை. பூதத்துக்கு வேலையும் கொடுக்க வில்லை. உடனே தனக்கு வேலை தராத தலைவனை அது விழுங்கிவிட முயன்றது.

அவன் குருவிடம் ஓடிவந்தான். "என் உயிரைக் காப்பாற்றுங்கள்'' என்று வேண்டிநின்றான். அவனை விழுங்க பூதம் காத்திருப்பதைக் கண்ட குரு, ஒரு நாயின் வாலை வெட்டச் சொல்லி அதைப் பூதத்திடம் தந்து நிமிர்த்தித் தரச்சொல்லும்படிக் கேட்கச்சொன்னார். சீடனும் அவ்வாறே கேட்டான். பூதத்தால் நாய் வாலை நிமிர்த்தவே முடியவில்லை. உடனே அது ஓடிவிட்டது. சீடனை இவ்விதம் குரு காத்தார். இதிலிருந்து 'பேராசை பெருநஷ்டம்' என்பது புரிகிறதன்றோ! நம் பகுத்தறிவைக் கொண்டு மகிழ்வோடு வாழ்வது அனைவரின் உரிமையாகும். ஆனால் எல்லாரும் ஒப்புக்கொள்ளும் விதத்தில் நடந்து கொள்வதே சிறந்தது.


பிரமை

மனம் கோளாறு ஆனபோது பிரமை ஏற்படுகிறது. ஒரு பொருள் உண்மையில் முன்னால் இல்லாமலேயே அப்படி இருப்பது போன்று நமக்கு ஒரு தோற்றமுண்டானால் அதுதான் பிரமை எனப்படுவது ஒரு மாயத் தோற்றம் எனலாம்.

சிப்பி, வெள்ளி போல் தெரிவது, கட்டை ஓர் ஆள் போலத் தோன்றுவதை உதாரணம் கூறுவர். சிப்பி, கட்டை முதலியவை இன்றியேவெறும் வெளியில் ஒரு தோற்றம் உண்டாவதே பிரமை. சித்தத்தில் இருக்கும் பதிவு வெளியில் அது இருப்பது பேலத் தோன்றச் செய்கிறது.

இப்படி எல்லாம் தோற்றம் உண்டாகாமல் உள்ளதை உள்ளபடி பார்த்தாலேயே தியானம் வரும்.


நழுவுதல்

முதலில் தியானத்தில் மிகுந்த சிரமத்தின் பேரில் ஏதாவது முன்னேற்றம் காண்கின்றது. பிறகு அதுவும் விட்டுப் போய் விடுவது ஒரு தடை. நிதானமற்ற மனதைக் கஷ்டப்பட்டு ஒருமுகப்படுத்தும் சாதகன், அந்நிலையை நழுவ விட்டு விடுதல் நிகழும். இதனால் தியான முன்னேற்றம் உண்டாகாது.

நிதானம், ஒழுங்கான பயிற்சியின் மூலம் இதை நிவர்த்தித்துக் கொள்ளலாம். மனதை தியானத்தில் அடைந்த நிலையிலிருந்து இறக்கிவிடாமல் வைத்துக்கொள்வது கடினம். இடைவிடாத பயிற்சியும் முன்னேறும் ஆவலுமே இதற்கு நிவாரணமாகும்.

மனம் நிலையற்ற நிலையடையும் காரணமென்று சில உண்டு. அவை வலி, நம்பிக்கையிழத்தல், அதிர்ச்சி, அச்சம், மூச்சுத் தடுமாற்றம் முதலியவை.


வலி

சாதாரணமாக எவருக்குமே வலி என்றால் உடல் தொடர்பானது என்றே தோன்றும். வலிக்குக்காரணம் மனோதத்துவ சாத்திரத்தில் மூளை என்கின்றனர். மூளையின் சில பாகங்கள் சேதமடைந்தால் பசி முதலிய உபத்திரவங்கள் கூட உணரப்படுவதில்லை என்பர். அதேபோல் தொடு உணர்வை அறியும் மூளை பழுதானால், அல்லது மூளைத்தொடர்பு துண்டிக்கப்பட்டால் வலியை உணரமுடியாது. சரியான அளவு வலியை சராசரி மனித மனமே அறிகின்றது.

ஆனால், அதீத உணர்வு வசப்படும் மனமும், நிலையற்ற மனமும் அதிகம் வலியை உணர்கின்றன. வலியை உணரமாலிருக்க ஒவ்வொரு உறுப்புடனும் தொடர்பு கொண்டுள்ள மூளை வசப்படுத்திக் கொள்ளவேண்டும்.

ஆசனம், மசாஜ், ஒத்தடம், மருந்திடல் மூலம் வலியைத் தீர்த்துக்கொள்ளலாம். காற்றில்லாத டயரும் நம்பிக்கையில்லாத மனிதனும் ஒன்றே; என்று கூறுவர்.


அதிர்ச்சியடைதல்

தியானத்தில் அமைதியாக இருக்கும்போது, எதனாலாவது அதிர்ச்சி உடலிலோ மனத்திலோ உண்டாகலாம். இது தியான நிலையைக் கலைத்துவிடும். சப்தம், ஏதாவது குறுக்கீடு, திடீர் என்று எழுப்புதல் முதலியவற்றால் அதிர்ச்சி உண்டாகலாம்.

மனித மனமும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்போது நரம்பு மண்டலம் நன்கு இயங்குகின்றது. இல்லையேல், திடீரென்று நரம்பு மாற்றத்தால் அதிர்ச்சி உண்டாகலாம். இதைப்போக்க ஆசனங்கள் பல உள்ளன.

நரம்பு மண்டலம் நன்கு உள்ளதா என்று சோதனை செய்ய ஓர் எளிதான வழி உள்ளது. இதன்படி குதிங்கால்களை உயர்த்திக் கொண்டு முன் பாகங்களை மட்டும் ஊன்றி எம்பினாற்போல 3 நிமிடங்கள் நிற்கவேண்டும். இது முடிந்தாலே நரம்பு மண்டலம் சரியான நிலையில் இருக்கிறது என்று பொருள்.


மூச்சுத் தடுமாற்றம்

உடல்நலம், மனநலம் இரண்டும் மூச்சு முறை ஒழுங்காக இருப்பதைப் பொறுத்துள்ளது. நலங்கெட்ட உடலின் மனமும் நலங்கெட்டு விடும். மூச்சுத் தடுமாற்றம் அதனாலேயே உண்டாகும். மூச்சு எடுக்கும் விடுக்கும் நேரம் ஒழுங்கின்றி அமைவதே மூச்சுத் தடுமாற்றமாகும். உணர்ச்சிகளின் மாறாட்டம், மனக் கொந்தளிப்பு போன்ற மூச்சை தடுமாறச் செய்கின்றன. குறுகிய மூச்சு பதட்டம், கோபம், கெட்ட எண்ணம் உண்டாகும்போது ஏற்படும். இப்படி நேரும்போது சுவாச உறுப்புக்களில் காற்று மோதி சப்தமும் உண்டாகும். இதனால் சுவாச உறுப்புக்கள் கூடக் கோளாறாகி விடும். காற்றுக்கும், சுவாச உறுப்புக்களுக்கும் ஒற்றுமை இல்லாமல் போவது ஆஸ்துமா, இழுப்பு போன்றவற்றால் குறையுண்டாவதாலேயே.

மூச்சுக் குறைபாடு தியான நிலையை அடையவிடாது. ஆகவே பிராணாயாம முறையின்படி சுவாசக் கோளாறை முதலில் சரிசெய்ய வேண்டும். சாதாரணமாக நாம் சுவாசப் பையில் மூன்றில் ஒரு பங்கையே காற்று இழுத்துப் பயன்படுத்திக் கொள்கின்றோம். இந்த நிலையிலும் கெட்ட புகை, போதை, தவறான உணவுப் பழக்கங்கள் இரத்தத்தை மேலும் அசுத்தம் செய்கின்றது. இதனால் மூளைக்குத் தூய ரத்தம் கிடைக்காமல் மூளைப்பகுதிகள் நன்கு வேலை செய்வதில்லை.

கஷ்டப்படாமல் மூச்சு விட்டாலேயே மனம் நியானம் அடைந்திருக்கும். இதனால் கோபம், பதட்டம், அச்சம், காமம் உணர்வுகளை எழுப்பாமல் கட்டுப்பாட்டில் வைக்கவேண்டும். விருப்பு வெறுப்பைச் சரிசமமாக இருக்கச் செய்யவேண்டும். தியானத்தின் வெற்றிப்பாதையில் போக வேண்டுமானால், மனத்தைப்பாதிக்கிற நிலைமைகளைத் தவிர்க்க வேண்டும். இயம, நியம, ஆசன, பிராணாயாமப் பயிற்சிகள் என்பன தியானத்தின் இடையூறுகளைத் தவிர்க்கக் கூறப்பட்ட வழிகளே. இவற்றில் சரியாக நிற்பவருக்குத் தியானம் எளிது.

மனத்தைப் பண்படுத்திக் கொள்ளும்போது அதன் தன்மையையும் உணர்ந்தறிய வேண்டும். பதஞ்சலி முனிவர் கூறியவற்றைப் பார்ப்போம்.

நமது துன்பங்களின் காரணம், உலக விஷயங்களிலும், சம்பவங்களிலும் விடாப்பற்று வைத்திருப்பதுதான். எல்லா மனிதர்களும் இறைவனின் அம்சங்களே என்பதை சுவாமி விவேகானந்தர் சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு மனிதனிடத்திலும் அவன் கடவுளின் சக்தியுடன் இருக்கிறான் என்று நினைத்துப் பழகுவோமேயானால் நமக்குத் துன்பங்களே வராது. தற்காலிக சுகந்தரும் நிரந்தரமற்றவற்றில் அறியாமையினால் பற்று வைக்கிறோம். தூய்மையற்ற விஷயங்களைத் தூய்மையானவை என்று நம்பிவிடுகிறோம். இதற்கெல்லாம் மேலாக நமது சங்கடங்களை உண்மையென எண்ணி ஓடிந்து போய் விடுகின்றோம். இது அறியாமை. இதை ஆன்ம ஞானத்தால் போக்கிக் கொள்ளவேண்டும்.

அறிவின் ஆத்மாவும் சக்தியும் வெவ்வேறு வகையான இரு வேறு பொருள்கள். இரண்டையும் ஒன்று என்பவர் அகங்காரமுள்ளவராவார். எல்லாருமே உடலை ஆன்மாவாக எண்ணித் திண்டாடுகிறோம். அதனாலேயே நரக வேதனை என்பது ஏற்படுகிறது.. பகவத் கீதையில் அசுர சம்பத் உடையவர்களைப் பற்றி பரமாத்மா இப்படிக் கூறுகிறார்.

1. நான் இதையடைந்தேன், 

2. நான் இன்னும் அடைவேன். 

3. நினைத்ததைச் சாதிப்பேன், 

4. இவ்வளவு செல்வமும் பெற்றுள்ளேன், 

5. இந்த விரோதியைக் கொன்றேன், 

6. இன்னும் மற்றவரை அடக்கி ஆள்வேன்,

7. எனக்கு அதிகாரம் உண்டு, 

8. நானே எல்லா இன்பங்களையும் அனுபவிக்கிறேன், 

9. எனக்குக் கௌரவம் இருக்கிறது, 

10. நான் பலசாலி. பெரிய குடும்பம் உள்ளவன், 

11. நான் மேல் ஜாதி, எனக்கு ஈடிணை எவரும் இல்லை, 

12. நானே தியாகி, தர்மம் செய்வேன், என்றெல்லாம் பலவாறு கூறுகிறார்கள். 

இவர்களனைவரும் மாயையில் உள்ளவர்கள் என்று இறைவனே கூறுகின்றார்.

ஆத்மா இருப்பதை மறந்து வெறும் பற்றுக்கு அடிமையாகி அகங்காரம் பிடித்தவர்கள் எல்லா இச்சைகளுடனும், பாவங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளனர். நரகத்தையே அனுபவிப்பவர் என்று கிருஷ்ணன் கூறுகிறார். இம்மாதிரி நான் என்கிற அகங்காரம், சுயாபிமானம் நம்மை நிதானமிழக்கச் செய்கின்றது. மேலும் இந்த அகங்காரம் வாழ்க்கையில் உண்மையான இலட்சியக் குறியிலிருந்தும் விலகச் செய்து விடுகின்றது.

நான் உயர்ந்தவன் என்று கோபம், அழிக்கும் உணர்வு, பதட்டம், பொறாமை முதலிய எல்லா கூடா உணர்வுகளையும் கொண்டு வந்து விடுவதே இந்த அகங்காரம்தான். இது தியானத்திற்கான தகுதியே இல்லாமல் செய்து விடுகின்றது.

உலகப் பொருள்களில் எதையாவது அல்லது பிறர் மீது தனக்கு சுகம் தரும் என்ற உணர்வையளித்து நாடச் செய்வது விருப்பம் என்பது. இது சுயநல நாட்டமாகும். எல்லாவற்றையும் தனக்கே பயன்படுத்தி சுகம் காண உண்டாகும் உணர்வாகும். அந்த விருப்பின் நேர் எதிர் உணர்வுதான் தனக்கு சாதகமற்ற பாதகமான பொருள், உயிர், சூழ்நிலை மீதெல்லாம் உண்டாகும் வெறுப்பு. பொறாமை, கோபம் முதலியவையே இதன் துணை. இதனால் மனம் சமநிலை இழந்து தியானத் தடையாகி விடுகிறது. தன்னைத்தானே தூய்மைப்படுத்திக்கொள்ள வேண்டுமானால், பெண்களைப் பிசாசுகளாகவும், நரகலோக அடையாளங்களாகவும் எண்ணி அவர்களை எவ்விதத்திலும் தவிர்த்துவிட வேண்டும். இதைச் சில தத்துவ முறைகள் கூறுகின்றன. ஆனால், இம்மாதிரி வெறுப்புறுவது தியானத்திற்கு உகந்ததில்லை.

இறைவனின் படைப்பில் மிகவும் உன்னதமானவற்றில் அன்பு, பாசம், சேவை, தெய்வீகத்தன்மை எல்லாம் நிறைந்ததாகப் பெண் பிறவியைக் கருதவேண்டும். ஆகவே, வெறுப்பை யார் மீதும் எதன் மீதும் காட்டக்கூடாது. அப்போதுதான் தியானம் எளிதாகும்.


மரண பயம்

வாழ்க்கை மேலுள்ள ஆசையைக் காட்டுவதே மரண பயம். ஆனால் இந்தப் பயம் கோழைத்தனத்தையும் தெரிவிக்கின்றது. அனைத்து அச்சங்களின் மொத்தமும் மரண பயத்தில் அடங்கிவிடும். இந்த அச்சங்கள் எல்லாம் பிரபஞ்சம் சம்பந்தமான சமாச்சாரங்களைச் சரியாகப் புரிந்து கெள்ளவில்லை என்பதையே காட்டுகின்றது.

பிறப்பு எப்படியோ அப்படியே இறப்பும் இயற்கை என்று நினைக்கவேண்டும். சாவிற்கும் அஞ்சாத தீரனே தியானத்திற்குப் பொருத்தமானவன். அவனே கடமை எப்படிப்பட்டதாயினும் நிறைவேற்றக் கூடியவன். உற்சாகமும் உத்வேகமும் எதற்கும் அஞ்சாதவனிடமே ஊற்றெடுக்கும்.

மனது உயிர் இல்லாத ஒரு பொருளுக்கு வடிவத்தையும் பெயரையும் கொடுத்து நடக்கச்செய்கிறது. உற்சாகம், உடலில் வேகத்தை வளர்த்து செயல்களில் ஈடுபடுத்துகின்றது. உடல் வீணானவுடன் உயிர் ஓடிவிடுகிறது. ஆகவே, உடலைப் பார்த்துக்கொள்ள தியானம் உதவுகின்றது.

மரணம் இயற்கையானது என்று தெரிந்துகொண்ட மனிதன் அதற்கு அஞ்சமாட்டான். தியானத்தில் முன்னேறிய ஒருவன் தான் ஜீவாத்மா என்பதை உணரவேண்டும்.

ஆரோக்கிய குறிப்புகள் : தியானத்தடைகளும் தீர்க்கும் வழிகளும் - ஆரோக்கிய குறிப்புகள் [ ஆரோக்கியம் ] | Health Tips : Meditation Obstacles and Remedies - Health Tips in Tamil [ Health ]