சரீர சாஸ்திரத்தில் சுவாசத்தின் பங்கு

மருத்துவ குறிப்புகள்

[ மருத்துவ குறிப்புகள் ]

Role of Breath in Sarira Shastra - Medicine Tips in Tamil

சரீர சாஸ்திரத்தில் சுவாசத்தின் பங்கு | Role of Breath in Sarira Shastra

சுவாச சம்பந்தமான உறுப்புக்கள்: நாம் உள்ளே இழுக்கும் மூச்சுக் காற்று மூக்கு அல்லது வாயின் வழியாக சப்தபதம், (Pharynx) என்ற பாகத்தை அடைகிறது.

சரீர சாஸ்திரத்தில் சுவாசத்தின் பங்கு


சுவாசம்

சுவாச சம்பந்தமான உறுப்புக்கள்: நாம் உள்ளே இழுக்கும் மூச்சுக் காற்று மூக்கு அல்லது வாயின் வழியாக சப்தபதம், (Pharynx) என்ற பாகத்தை அடைகிறது. சப்தபதத்துக்குத்தான் உட்கொள்ளும் ஆகாரமும் வந்து சேருகிறது காற்று சப்தபதத்திலிருந்து குரல்வளைக்குச் சென்று அதன் பிறகு சுவாசக் குழாய் வழியாக சுவாசகோசங்களை அடைகிறது.

சுவாசக் குழாய் அன்னக்குழாய்க்கு முன்னால் இருக்கிறது. மூக்கு வழியாகக் காற்று உட்புகும்போது மூக்கின் உட்புறத்தில் அடர்த்தியாய் இருக்கும் மயிர்களின் வழியாகச் செல்லும்போது சூடேற்றப்படுகிறது. தவிர அவ்விடம் காற்று வடிக்கட்டப்பட்டு அதில் கலந்திருக்கும் தூசிகள் உள்ளே செல்லவிடாமல் தடுக்கப்படுகின்றன. காற்றுக் குழாய் எப்பொழுதும் திறந்தே இருக்கும். ஆனால் எப்பொழுதும் மூடப்பட்டபடியே இருக்கும். ஆகாரம் அன்னக் குழாய்க்குள் காற்றுக் குழாய்க்குள் சென்றுவிடா வண்ணம் தொண்டைக்குழி மூடி (Epiglottis) என்னும் ஒரு உறுப்பு காற்றுக் குழாயை மூடிவிடும்.

காற்றுக் குழாய் சுமார் 5 அங்குல நீளமுள்ளதாகவும் கெட்டியான குறுத்தெலும்பு வளையங்களைக் கொண்டதாகவும் இருக்கிறது. மார்புப் பக்கத்தில் என்று இது இரு கிளைகளாகப் பிரிகிறது. இப்பிரிவுகளுக்கு பிராங்கைல் டியூபுகள் (Bronchial Tubes) பெயர். ஒவ்வொரு பிராங்கைல் டியூபும் பல சிறிய சிறிய கிளைகளாகப் பிரிந்து கடைசியில் ஒவ்வொரு சிறிய கிளையும் மெல்லிய தோலாலான சிறிய காற்றுப் பையில் முடிகிறது. இப்பைகள் பல மடிப்புகளைக் கொண்டனவாய் இருப்பதால் சுவாசகோசம் அனேக மடிப்புகளைக் கொண்ட பல்லாயிரக்கணக்கான சிறிய தோற்பைகளால் ஆக்கப்பட்ட பஞ்சு போன்ற அவயவம் என்பது தெரியலாகும். நாம் சுவாசிக்கும் காற்று முடிவாக இப்பைகளையே வந்து சேருகிறது.

மேலே கூறியபடி இப்பைகளின் தோல் மிகவும் மெல்லியதாக இருக்கிறது. பல்மனரி ஆர்ட்டரியின் கிளைகள் சிறியவையாகி அவைகளிலிருந்து ஏற்பட்ட காபில்லரிகள் இப்பைகளிலேயே இப்பைகளில் வந்து முடிகின்றன. காற்றிலிருக்கும் பிராண வாயு இரத்தத்தில் கலப்பதும், இரத்தத்திலுள்ள கரியமில வாயு காற்றுடன் கலப்பதும், நடைபெறுகின்றன. இந்தக் காபில்லரிகளிலுள்ள அசுத்த இரத்தம் இவ்வாறாகச் சுத்தம் செய்யப்பட்ட பிறகு பல வெயின்கள் வழியாக ஓடி முடிவில் பெரிய பல்மனரி வெயின்கள் மூலம் இருதயத்தில் இடது ஆரிக்கிளை வந்தடைகிறது. 

நமது மார்பு வாயிற்புறத்தைத் தவிர மற்ற இடங்களில் காற்றுப் புகாவண்ணம் அமைந்த ஓர் பெட்டி போல் இருக்கிறது. காற்று அதனுடைய வேகத்தால் மேற்புறத்து துவாரத்தின் வழியாக உள்ளிருக்கும் இடங்களை இடமுள்ள வரை நிரப்பியே வைத்திருக்கிறது.

ஒவ்வொரு சுவாசகோசத்துக்கும் வெளியே ஒரு ஈரப்பசையுள்ள இரட்டைத் தசையால் ஆக்கப்பட்ட பைபோன்ற மூடி இருக்கிறது. இப்பைக்கு ப்ளூரா (Pleura) என்று பெயர். இது இருதயத்துக்கு பெரிகார்டியம் எப்படி உதவுகிறதோ அதேபோல் சுவாச கோசம் அசைந்து கொடுக்க உதவுகிறது. 

சுவாசகோசத்திலிருக்கும் காற்று அடிக்கடி மாற்றப்படவேண்டியது அவசியமல்லவா? அது டயாப்ரம் என்னும் தசைப்படுத்தாவின் அசைவினாலும், மார்புக் கூட்டின் அசைவினாலும் நடைபெறுகிறது. இத்தசைப் படுதா மேற்புறம் நோக்கியுள்ள ஒரு அர்த்த சந்திர வடிவமுள்ளது. அது சுருங்கினால் அதனுடைய அர்த்த சந்திர வடிவம் மாறி தட்டையாகிவிடும் அப்படி அது தட்டையாகும்போது சுவாசகோசங்கள் இருக்கும் மார்புக் கூடு பெரிதாகிறது. சுவாசகோசங்கள் பெரிதானால் அங்கிருக்கும் வெளியை நிரப்ப வெளிக் காற்று மூக்கின் வழியாக உள்ளே நுழைகின்றது. தசைப்படுதா கீழே அமுங்குவதால் வயிற்று உறுப்புக்களை அமுக்கி வயிற்றை உப்பவைக்கிறது. தசைப்படுதா உடனே அதன் சுருக்கத்தைத் தளர்த்திவிட்டுத் தன்னுடைய அர்த்த சந்திர வடிவத்தை அடைகிறது. அப்படி அடையும் போது சுவாசகோசங்கள் அமுக்கப்பட்டு அவைகளிலிருக்கும் காற்றில் ஒரு பகுதி வெளியேற்றப்படுகிறது.

தசைப்படுதா சுருங்கும் அதே சமயத்தில் விலா எலும்புகளுக்கு நடுவிலிருக்கும் தசைகளும் சுருங்குகின்றன. இந்தச் சுருக்கத்தால் விலா எலும்புகள் மேற்பக்கமாக இழுக்கப்படுவதுடன் மார்பெலும்பு முன் புறமாக தள்ளப்படுகின்றது. இதனால் மார்பிள் உள்ளே அதிக இடம் உண்டாக்கப்படுகிறது. இந்த இருவகைச் சுருக்கத்தினால் மார்பின் உள்ளே அதிக இடம் ஏற்படுவதால், அதை நிரப்ப காற்று வேகமாக உள்ளே செல்லுகிறது. இதையே சுவாசம் இழுப்பது என்று சொல்லுகிறோம்.

சுவாசம் உள்ளே இழுக்கப்பட்டவுடன் சதைப் படுதாவும் மார்புத் தசைகளும் தளர்ந்து அவைகளின் பழைய நிலைமைகளை அடைகின்றன. அதனால் சுவாசகோசங்கள் அமுக்கப்பட்டு காற்று வெளியேற்றப்படுகிறது. இதுதான் சுவாசம் விடுவது. ஒரு முறை உள்ளே இழுப்பதும் வெளியே விடுவதும் சேர்ந்து ஒரு சுவாசம் ஆகும். இம்மாதிரியே ஒரு வியாதியற்ற மனிதன் நிமிஷமொன்றுக்கு 16 முதல் 18 வரையில் சுவாசிக்கிறான். குழந்தைகள் நிமிஷமொன்றுக்கு 25 தடவைகள் வரையிலும், சிசுக்கள் 40 வரையிலும் சுவாசிக்கிறார்கள்.

சுவாச அசைவுகள் நம்முடைய முயற்சி இல்லாலேயே நடைபெறுகின்றன. மூளையில் 'மெடுல்லா ஆப்லாங்கேட்டா'விலுள்ள ஒரு இடத்திலிருந்து நரம்பு உணர்ச்சிகள் அவ்வப்போது தசைப்படுதாவுக்கும் மார்புத் தசைகளுக்கும் அனுப்பப்படுகின்றன.

ஒரு வயது ஆண்பிள்ளை ஒவ்வொரு சுவாசம்  இழுக்கும்போதும் சுமார் 30 கன அங்குலங்கள் காற்றை உட்கொள்கிறான். அதே அளவை மூச்சு விடும்போது வெளிவிடுகிறான். ஒரு சுவாசம் விட்ட பிறகு சுவாசகோசங்களில் சுமார் 200 கன அங்குலங்கள் காற்று இருக்கும். அவ்வளவு காற்று சுவாசகோசங்களில் நிரந்தரமாக இருந்துகொண்டே இருக்கிறது.


நாம் உள்ளே இழுக்கும் காற்றில் இருக்கும் வாயுக்களாவன:

10,000 பாகத்தில் - 

7900 பாகங்கள் உப்பு வாயு (Nitrogen)

2096 பாகங்கள் பிராண வாயு (Oxygen) 

4 பாகங்கள் கரியமில வாயு (Carbonic Acid Gas)


நாம்வெளியிடும் காற்றிலிருக்கும் வாயுக்களாவன:

10,000 பாகத்தில் -

7900 பாகங்கள் உப்பு வாயு 

1603 பாகங்கள் பிராண வாயு 

438 பாகங்கள் கரியமில வாயு 

பாக்கி பாகங்கள் நீராவி


அசுத்த நிவாரணம்

நம்முடைய சரீரத்திலுள்ள அங்கங்கள் வேலை செய்கின்றனவாதலால் பல அசுத்தமான, சரீரத்துக்குப் பிரயோசனப்படாத பதார்த்தங்கள் உற்பத்தியாகின்றன. இவைகள் கெபி மாற்றத்தினால் ஏற்படும். இவைகள் நீர், மூத்திரம், சில உறுப்புகள் கரியமிலவாயு முதலியவைகளாகும். சரீரத்தின் பல பாகங்களிலும் பழைய கெபிகள் அழிந்து புதிய கெபிகள் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கின்றன என்று முன்னொரு பாடத்தில் படித்தீர்கள். அப்படி அழிந்துபோன கெபிகளும் இன்னும் இதர வஸ்துக்களும் நிண நீர்க்குழாய்கள் மூலமாய் அசுத்த இரத்தத்துடன் கலந்து விடுகின்றன. இவைகளைச் சரீரத்திலிருந்து பிரிக்க வேண்டும். அப்படி பிரிக்காவிட்டால் அவைகளே விஷமாக மாறி பல்வேறு கோளாறுகளையும், முடிவில் மரணத்தையும் உண்டாக்கும். இந்த அசுத்த நிவாரணம் சாதாரணமாக சுவாச கோசங்களாலும், குண்டிக்காய்களாலும், சருமத்தினாலும் நடைபெறுகின்றது.

மூத்திர அவயவங்கள்: குண்டிக்காய்களை (Kidneys) மூத்திர கோசங்களென்றும் சொல்லலாம். முள்ளந்தண்டில் இருபக்கங்களிலும், கடைசி விலாவெலும்பின் முன்பக்கம் பக்கத்திற்கு ஒன்றாக இவைகள் இரண்டு இருக்கின்றன. ஆகவே அவைகள் வயிற்றின் மேல் பாகத்திலேயே இருக்கின்றன என்பது தெரியவரும். அவைகள் கறுப்புக் கலந்த பழுப்பு நிறமுள்ளவையாயும், அதிகக் கொழுப்புடன் கூடிய தசைகள் உள்ளதாகவும் இருக்கின்றன. குண்டிக்காயின் உருவம் அவரை விதையைப் போன்றது. ஒவ்வொரு காய்க்கும் ஒரு ஆர்ட்டரியும், ஒரு வெயினும் உண்டு. இத்துடன் ஒவ்வொரு குண்டிக்காயிலிருந்தும் ஒவ்வொரு மூத்திரக்குழல் கிளம்புகிறது. இதன் வழியாக மூத்திரம் மூத்திரப் பைக்கு வந்து சேருகிறது. குண்டிக்காய்களிலிருந்து மூத்திரம் சதாகாலமும் சொட்டுச் சொட்டாக மூத்திர குழல்கள் மூலம் மூத்திரப் பைக்கு வந்துகொண்டே இருக்கிறது. பை நிரம்பியவுடன் அதன் சுருக்கத்தினால் யூரித்திரா (Urethra) அல்லது மூத்திர மார்க்கத்தின் வழியாக வெளியே விடப்படுகின்றது. தசை நார்களால் ஆக்கப்பட்ட வளையமான தசைகளின் இறுக்கத்தினால் மூத்திர மார்க்கம் மூடப்பட்டு இருக்கிறது. சிறுநீர் வெளிப்படும் போது இந்த வட்டமான தசைகள் தளர்ந்து கொடுத்தும் மற்ற சமயங்களில் இறுக்கியும் இருக்கின்றன.

சிறுநீரில் யூரியா (Urea) யூரிக் ஆஸிட் (Uric Acid) என்னும் இருவகை உப்புக்களும் நைட்ரஜன் (Nitrogen) என்னும் ஒருவகை வாயுவும் இன்னும் சில உப்புக்கள் கொஞ்சமாகவும் கரைந்திருக்கின்றன.

குண்டிக்காய்களுக்கு வெளிப்புறம் ஒரு கரும் பழுப்பு நிறமுள்ள தோலும், உள்ளே குண்டிக் காய்களின் மெடுல்லா (Medulla of Kidneys) என்னும் தசைகளும் இருக்கின்றன. இந்த மெடுல்லா அனேக சிறிய குழாய்களால் ஆக்கப்பட்டிருக்கிறது.

குண்டிக்காய்களுக்குச் செல்லும் ஆர்டரி அதனுள் இரத்தத்தை கொண்டு போகிறது. குண்டிக்காய்களிலிருந்து வரும் வெயின் குண்டிக்காய்களில் சுத்தம் செய்யப்பட்ட இரத்தத்தை வெளியே கொண்டு வந்து சரீர இரத்த ஓட்டத்துடன் கலக்கிறது. குண்டிக்காய் களின் மெடுல்லாவில் ஆர்டரியின் மெல்லிய குழாய்களும் வெயினின் மெல்லிய குழாய்களும் காபில்லரிகள் மூலம் ஒன்று சேருகின்றன. இக் காபில்லரிகள் குண்டிக்காய்களில் மெல்லிய குழாய்களைச் சுற்றிலும் இருக்கின்றன.

சரீரத்தின் கெபி மாற்றத்தினால் ஏற்படும் அசுத்தப் பதார்த்தங்களை இரத்த ஓட்டத்திலிருந்து வெளியேற்றுவது இந்தக் குண்டிக்காய்களின் வேலை ஆகும். இரத்தம் குண்டிக்காய்களுக்கு வரும்போது அதிலிருக்கும் யூரியா, யூரிக் ஆஸிட், முதலிய அனாவசிய பதார்த்தங்களை அப்புறப்படுத்தி தண்ணீரில் கரைத்து மூத்திரப்பைக்கு அனுப்புவது இந்தக் குண்டிக்காய்களின் உபயோகம் ஆகும்.

சிறுநீர் அல்லது மூத்திரத்தின் விசிஷ்ட குருத்துவம் (Specific Gravity) 1920 ஆகும். அது தண்ணீரின் விசிஷ்ட குருத்துவத்தை விட சற்று அதிகம். தண்ணீரின் விசிஷ்ட குருத்துவம் 1000. ஒரு மனிதன் சாதாரணமாக 24 மணி நேரத்தில் 50 அவுன்ஸ் வரையில் சிறுநீர் விடுவான். இது உட்கொள்ளும் தண்ணீரின் அளவையும் வெளியேறிய வியர்வையையும் அனுசரித்துச் சற்று ஏற்றத்தாழ்வாக இருக்கும். சாதாரணமாக சிறுநீரில் அல்புமென் (Albumin) சர்க்கரைச் சத்து (Glucose) முதலியவை இருக்காது. இவைகள் சிறுநீரில் தென்படுமாயின் அது வியாதிகளின் அறிகுறிகளாகும். 

ஆகவே யூரியா, யூரிக் ஆஸிட் முதலியவைகளை இரத்தத்திலிருந்து பிரிக்கும் அவயவங்களே இந்தக் சல்லடை போன்ற குண்டிக்காய்களாகும். குண்டிக்காய்கள் இவைகளைத் தாங்களே உற்பத்தி செய்வதில்லை என்பது கவனிக்கத்தக்கது. இவைகளைப் பிரித்துச் சொட்டு சொட்டாக மேலே கூறியபடி மூத்திரப்பைக்கு அனுப்புகிறது. குண்டிக்காய்களின் கோளாறுகளினால் இவ்வேலை தடைப்பட்டு இரத்தத்திலிருந்து மூத்திரம் பிரிக்கப்படாமல் இருந்தால் இரத்தம் கெட்டு வியாதியும், மரணமும் சம்பவிக்கும்.

குண்டிக்காய்கள் மூத்திரத்தைப் பிரிக்காமல், அதனால் சிறுநீர் வெளியேறாமல் இருப்பதற்கு மூத்திர அடக்கம் (Suppression of Urine) என்று பெயர். இரத்தத்திலிருந்து மூத்திரம் பிரிக்கப்பட்டு, மூத்திரப்பையில் தங்கி, அதன் கோளாறினால் மூத்திரம் வெளிவராமல் இருந்தால் அதற்கு மூத்திரப் பிடிப்பு (Retention of Urine) என்று பெயர்.

மருத்துவ குறிப்புகள் : சரீர சாஸ்திரத்தில் சுவாசத்தின் பங்கு - மருத்துவ குறிப்புகள் [ மருத்துவம் ] | Medicine Tips : Role of Breath in Sarira Shastra - Medicine Tips in Tamil [ Medicine ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்