
மேலான எண்ணங்களை வளர்த்துக்கொள்வது தியானத்திற்கு உதவி என்று பெரியவர்கள் பலர் கூறியுள்ளனர்.
தியானத்திற்கு உதவுபவை எவை? மேலான எண்ணங்களை வளர்த்துக்கொள்வது தியானத்திற்கு உதவி என்று பெரியவர்கள் பலர் கூறியுள்ளனர். மனதில் உள்ள உணர்வுகள் சிலவும் உதவியாக இருக்கின்றன. பதஞ்சலி முனிவர் சில உணர்வுகளைப் பார்ப்போம். 1. நட்புணர்வு, 2. கருணை, 3. ஆனந்தம், 4. அலட்சியம். சுகம், துக்கம், நற்குணம், சிநேகிதம், கருணை, ஆனந்தம், அலட்சியம் முதலிய உணர்வுகளை தக்கவாறு பின்பற்றுவதன் மூலம் மனம் தூய்மை அடைகின்றது. நட்புணர்வு: விரோதிகளிடமும் நேச மனப்பான்மையைக் கொள்ள வேண்டும். கொடுக்கல், வாங்கலில் மட்டும் நட்புரிமையின்றி இன்ப துன்பங்களிலும் காட்டவேண்டும். எல்லா உயிருக்கும் நண்பனாக இருக்கவேண்டும். இதனால் சமத்துவ தரிசனம் கிட்டுகின்றது. மனம் மௌனிக்கும் தியானம் வேளையில் எந்த உணர்வுறுத்தலும் ஏற்படுவதே இல்லை. இது நம்மைச் சுற்றி ஓர் ஆனந்தமயமான சூழ்நிலையை உண்டாக்குகின்றது. அப்போது நிதானத்தை இழக்க வேண்டி வராது. தெய்வீக ஆனந்தமடைய ஏதுவானது. மனித நிலைகளில் மூன்று விதங்கள் உள்ளன. 1. தியானத்தில் வெற்றியடைய விரும்பும் ஒருவன் குற்றமில்லாதவனாக இருக்கவேண்டும். அஹிம்சையை அனுசரிக்கவேண்டும். 2. ஜாதி, மதம், தேசம், ஆண், பெண் வேறுபாட்டால் வெறுப்பை வளர விடாதிருக்கவேண்டும். 3. எல்லாரிடமும் அன்புள்ளவனாக, செடி, கொடி உயிர்களனைத்திடமும் அன்பு பாராட்டுபவனாக பகையே இல்லாதவனாக இருக்கவேண்டும். இவை மூன்றும் நட்பு வளர உதவுகின்றன. சாதாரண மனிதர், உலகில் தன்னை வெறுப்பவனை வெறுப்பார்; நேசிப்பவனை நேசிப்பார். இதில் எது அதிக நன்மையளிக்கும் என்று கணக்குப் போட்டுப்பார்த்து அனுசரிப்பார். எது நல்லது, எது கெட்டது? என்ற விவேகமேயின்றி கடமை, மரியாதை என்பதெல்லாம் அறியாமல் பலருள்ளனர். அவர்களுக்கு அவர்கள் மட்டும் தான் முக்கியம்; சுயநலக்காரர்கள், தங்களுக்கு நல்லது செய்தவருக்கும் நன்றி காட்டமாட்டார்கள். இவர்களுக்குச் சிறிது துன்பம் வந்தாலும் பெருங்கோபம் கொண்டு குதிப்பர். இப்படிப்பட்டவர் எல்லாம் தியான செய்யமுடியாது. அனைவரையும் நேசிப்பவர், தம்மைப் பெரிதாகக் கருதிப் பேச மாட்டார். உணவு கூட அதிகம் எடுக்கமாட்டார். தன்னலம் பாராட்டாமல் அனைவரையும் சமமாக நடத்தி நேசிப்பர். இவர்கள் உள்ள இடமே குதூகலத்தில் துள்ளும். கடவுளை மட்டுமே கருணைக் கடல் என்பர். பிரபஞ்சத்தோடு ஜீவனை இணைப்பதே கருணையின் விளைவு தான். கருணையிருந்தால்தான் பிறர் துன்பத்தை உணரமுடியும். வண்டியிழுக்கும் மாடுகளின் மீது உண்டான காயத்தை தம் மீது உண்டானவை என்றே உணர்ந்த ஒரு முனிவர் இங்கே இருந்தார். இயேசுவைத் தொழுபவருள் அவர் சிலுவையில் அறையப்பட்டபோது அடைந்த வலியை அப்படியே உணரும் கிறித்துவர் இருக்கின்றனர். கருணை என்பது எல்லாக் குணங்களையும் விட உயர்ந்தது. கருணை உள்ளவன் தனக்கு என்ன இலாபம் வரும் என்று கணக்குப் பார்க்காமல் பிறர் மீது அன்பு செய்கிறவன் இப்பேர்ப்பட்டவனுக்குத் தியானம் எளிது, கருணையின் அடிப்படையிலேயே அனைத்து மதமும் உள்ளது. எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவனுடைய மனது தாமரை மலர் போல மலருகின்றது. ஆனந்தம் மனத்திற்குத் தெம்பளித்து அதை தியான நிலைக்குத் தயாராக்குகின்றது. எந்தச் சந்தர்ப்பங்களிலும் ஆனந்தமாக இருக்க முடிந்தவனின் மனத்தில் போராட்டங்களோ, கீழ்த்தரமான எண்ணங்களோ இடம் பெற முடியாது. ஒரு காலத்தில், உண்மையான பக்தனைக் கண்டுபிடிக்க இறைவன் பூமிக்கு ஒரு மனிதரைப் போல வந்தாராம். ஒரு பக்தனைக் கண்டார். உலகத் துக்கங்களனைத்தையும் அவன் முகத்தில் கண்டார். அவனிடம், "நீ ஏன் இவ்வளவு வருத்தமுற்றவனாக இருக்கிறாய்?'' என்று கேட்டார். அவர் உண்மையில் யார் என்று அறியாத அந்த பக்தன், "நான் அநேக பாவங்களை என் வாழ்வில் செய்து இருக்கிறேன். அவற்றை ஆண்டவன் மன்னிப்பாரா என்று தெரியாமல் கவலைப்படுகிறேன்'' என்றான். ஆண்டவன் இதைக் கேட்டுவிட்டு, மேலும் தேடிப்போனார். மற்றொருவனை கண்டார். அவனுடைய முகத்திலும் சோகம் கப்பியிருக்கக் கண்டார். "ஏன் துக்கமுள்ளவனாக நீ இருக்கிறாய்?" என்று கேட்டார். அப்போது அவன், "நான் சாதாரண மனிதன் தான். எதிர்காலத்தில் பாவம் செய்ய நேரலாம். ஆனால் இறைவன் அதை மன்னிக்க மாட்டாரே என்றே சோகமாக இருக்கிறேன்'' என்றான். இறைவன் மேலும் போனார். இன்னொரு பக்தனையும் கண்டார். ஆனால் அவன் கவலையே இல்லாமல் சிரித்துக்கொண்டே இருந்ததைக் கண்டார். "சிநேகிதனே, உன் கவலையற்ற களிப்பின் காரணமென்ன?" என்று கேட்டார். "நான் என்னை, எனது வாழ்வை என்னுடையது என்று எண்ணாமல் இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டேன். என்னிடம் இனிமேல் வருத்தப்பட ஒன்றுமில்லை. அதனால் ஆனந்தமாக இருக்கிறேன்'' என்றான். இறைவன் அவனே உண்மையான பக்தன் என்று கண்டு திருப்தியுற்று, அவனை ஆசீர்வதித்துச் சென்றாராம். இதுவே ஆனந்தத்தின் இரகசியம். 'நான்', 'என்' என்பவற்றை சுமந்தால் துக்கம் தான் மிஞ்சும். சுகமோ, துக்கமோ உண்டாக்கக்கூடிய நிகழ்ச்சிகள் ஏற்பட்டால் அவற்றால் பாதிக்கப்படாமல் அலட்சியமாக இருந்து விடவேண்டும். தன்னைப் பாதிக்க விடாமல் அப்படி இருந்தாலேயே அமைதியான தியானம் உண்டாகிவிடும். சுகம் வேண்டும் என்கிற எண்ணம் ஆவலை மேலும் மேலும் அதிகரிக்கின்றது. அதன்படி மனம் காரியத்திலிறங்கவே மனோசக்தி நஷ்டமாகிறது. தியானம் கைகூடுவதில்லை. "அறியாமையினால் குருடனாயிருந்த என்னை தமது அறிவின் மகிமையினால் எனது அறிவுக் கண்களைத் திறந்துவிட்ட ஆசிரியரை மரியாதையுடன் வணங்குகின்றேன்." என்பது குரு பக்தி. தியானத்தைப் பற்றியும், ஆத்ம ஞான பயிற்சிகளைப் பற்றியும் நாம் புத்தகங்கள் மூலம் அடைகிற அறிவு போதாது. அதை வழிகாட்டியாகக் கொள்ளவும் முடியாது. ஆகையால் ஒரு திறமை வாய்ந்த குரு வேண்டும். அனுபவமும் சக்தியும் உள்ள குரு, ஆன்மப் பயிற்சியளிக்கக் கூடிய குரு கட்டாயம் வேண்டும். யோகாசனம், பிராணாயாமத்தில் வல்லமை பெற்ற ஆசிரியர் மனித வடிவில் தேவனாக கருதப்படுகிறார். பொதுவாக குரு பரம்பொருளின் இடத்தில் வைத்தெண்ணப்படுகிறார். அன்னை, தந்தை, குரு என்று மூவரும் கடவுளுக்கிணையாகக் கூறப்படுகின்றார்கள். சிலர் குரு இல்லாமல் தியானம் தொடங்குகின்றனர். இடைஞ்சல் ஏதாவது வரும்போது மட்டும் குருவின் அவசியம் உணரப்படும். அதனால் ஓர் ஆசிரியர் வழிகாட்டியாக அவசியம் இருப்பது நலம். ஆசிரியரின் பயிற்சி ஊக்கத்தைத் தரும். ஆத்ம ஞானம் தரும் ஒரு குரு சொல்கிறார்: "ஒவ்வொரு மனிதனுடனும் நான் இருக்கிறேன். உன்னுடைய நெருக்கடி சமயத்தில் உனக்கு வழிகாட்டுகிறேன்" என்று. உண்மையாக அனுபவப் பூர்வமாக வழிகாட்டக்கூடிய ஓர் ஆசிரியரை யோகாப்பியாசத் துறையில் தேர்ந்தெடுப்பது மிகப் பெரிய செயல். ஏனெனில் உலகெங்கும் போலி யோகாசிரியர்களும், ஆத்ம ஞானிகளும் திருடர்களாய் நிரம்பியுள்ளனர். பயிற்சியில் ஆர்வமுள்ளவர்களை இவர்கள் ஏமாற்றிப் பயனடைந்து வாழ்கிறார்கள். உடலை மட்டும் வளைத்து வெறும் ஆசனத்தைப் போடத் தெரிந்து கொண்டவர் கூட தியானத்தில் நிபுணர் போல புத்தகமெல்லாம் எழுதி விடுகிறார்கள். வேடதாரிகளான இவர்கள் பயிற்சியில் நாட்டமுள்ளவரின் நம்பிக்கையை அழித்து விடுகிறார்கள். உண்மையான ஆசிரியர் கீழ்க்கண்டபடி இருக்கிறாரா என்று சோதித்து அறியலாம். அவர் நம்மிடத்திலிருந்து பணத்தையோ வேறு பொருளையோ எதிர்பார்ப்பதில்லை. அவருடைய பேச்சில் அதிசயமான மனசக்திக்கு அப்பாற்பட்ட இனிமையை அறிகின்றோம். அவருடைய அடக்கம், சுறுசுறுப்பு, முகத்திலும், கண்களிலும் அமைந்த ஒளி நம்மைக் கவரும். இப்பேர்ப்பட்டவரே தன்னைத் தெரிந்து கொண்டும், ஆண்டவனை அறிந்து கொண்டும் இருப்பார். இதுபோன்ற ஓர் ஆசிரியரையே நாம் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். இவ்விதமான ஆத்ம ஞான போதகர் அதிக அளவு ஆன்ம அறிவுடனிருப்பர். அவர்கள் முன்னிருக்கும்போது தெய்வீக உணர்வை உணர்வோம். அவர்கள் தமது வலது உள்ளங்கையை நமது தலை மீது அல்லது தோளில் வைத்தாலே உடனே நமக்குத் தெய்வீக உணர்வை அனுபவித்த முடியும். உள்ளங்கை ஆசிவழங்கும் உணர்வு புனிதமானது. குருவின் காலில் விழுந்து ஆசிபெறுவது உன்னதம். அவரது கால் பெருவிரல் நமது உச்சியில் படுவதும் தெய்வீக உணர்வைத் தரவல்லது. இம்மாதிரி உயர்ந்த குருவின் வழிகாட்டுதலில் தியானம் மிக எளிதாகமையும். இப்படிப்பட்ட குருவிடம் தீட்சை பெற்றுக் கொள்ளுதல் மிகுந்த பயனைத் தரும். குருவிடம் தூய எண்ணத்துடன் பயிற்சி பெறுபவர் எதிர்பாராத அளவுக்கு விரைந்து திறமை பெறுகிறார். ஆத்ம போதகர் இரகசிய போதனையாக மந்திரத்தைத் தருகிறார். எப்படித் தியானம் செய்யவேண்டும் என்று விளக்குகின்றார். ஆத்ம போதகரின் சிறப்பு அவரது கண்களின் ஒளியினாலேயே அறியக்கூடியது. அவருடைய அருட்பார்வை யினால் நம்முடைய சந்தேகங்கள் மறையும். ஆத்ம போதகர் உடலில் நோயால் துயருறக்கூடாது. திறந்த மனமுள்ளவராக இருக்கவேண்டும். ஆன்ம பயிற்சியில் உண்டாகும் துன்பங்களை வரும் முன்பே வெல்லுபவராக இருக்கவேண்டும். ஆன்ம வித்தையைப் போதிக்கும் குரு எத்தனை வல்லவராயினும் சீடர் தம் பயிற்சித் திறமையினாலேயே முன்னேற வேண்டும். பயிற்சி எடுப்பவர் தம் உழைப்பை ஈடுபடுத்தி முயன்றால் தான் குருவின் ஆசியும், உதவியும் கைகொடுக்கும். சீடருக்காக பயிற்சியைச் செய்துவிட இயலாது. குரு, ஆண்டவனின் அம்சமாக ஹிந்து தருமத்தில் கூறப்பட்டுள்ளார். ஆனாலும் சீடரின் உரிமைப்படி குரு, ஆத்ம சக்தி அறிவு பெற்றிருக்கிறாரா? என்று சோதித்துப் பார்த்தே குருவாகக் கொள்ளலாம். இதற்கு குருவின் உணவு முறை, வாழ்க்கை முறை, கையாளும் வழிகள் ஆகியவற்றைக் கவனித்துப் பார்க்கவேண்டும். ஆனால், நன்கு ஆராய்ந்து ஒரு குருவைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட பின்பு அவரை தெய்வாம்சம் பொருந்தியவராகவே கருதி அவருக்குச் சேவை செய்ய வேண்டும். அவருடைய வாழ்க்கையை அறிவதில் தவறு இல்லை. குரு பெரிய படிப்பாளியாகவோ, பேச்சாளராகவோ இருக்க வேண்டியதில்லை. ஆனாலும் அருடைய வார்த்தைக்கு மதிப்பு வைக்க வேண்டும். ஆத்மஞானி குருவாக அமையும்போது சாதகருக்கு எந்தக் கவலையும் இல்லை. அவரைக் கடவுளாகவே எண்ணலாம். பயிற்சி பெறுபவர், தனது ஆத்ம போதகருடைய உதவியுடன் தியானத்தைத் தொடங்கி நெடுங்காலம் ஆகியும். தியானானந்தம் அமையவில்லையெனில் அவர் சரியான குருவை அடையவில்லை என்றே பொதுவாக உணர்ந்து கொள்ளலாம். ஆனாலும், பயிற்சி பெறுபவர் உண்மையான தியான விதிகளை அனுசரித்து தியானத்திற்காக முயன்றிருக்க வேண்டும். ஆத்ம போதகரான குருவிடம் உதவியை நாடுபவர் தமது தகுதிக்கு மீறியதைப்பெறவும் எதிர்ப்பார்க்கக்கூடாது. முழுத்தகுதியுடன் முழு முயற்சி செய்பவராக இருக்கவேண்டும். ஒரு விவசாயி நிலத்தைப் பண்படுத்தி உரமிட்டுத் தயார் படுத்துவது போல, ஒரு சீடர் மனத்தை தூயதாக்கி தியானப் பயிற்சிக்கேற்றவராக குருவிடம் செல்ல வேண்டும். ஆத்ம ஞானப் பயிற்சி என்பது மயக்கம் செய்வதிலிருந்து வேறுபடுகிறது. மயக்கம் செய்வதில் மயக்கம் செய்வதற்கு முன்னதாகவே சில யோசனைகள் கூறப்படும். இவை உணர்வுகளை எழுப்பக்கூடியனவாக இருக்கும். குருவின் ஸ்பரிசம் பட்டவுடனேயே அதிகமாகத் தூண்டப்படுகின்றன. சீடன் எளிதில் உணர்வு வயப்படுகிறான். இம்மாதிரி மயக்கம் செய்யும் மனிதர்களால் மற்றவரின் நலம் பாழாக்கப்படுகிறது. பயிற்சி பெறச் செல்வோர் மயக்கம் செய்வோரிடம் தெய்வத்தன்மை இருப்பதாக ஏமாறுகின்றனர். இவ்வாறு மயக்கம் செய்வது ஆத்ம ஞான தீட்சையில்லை என்றறிய வேண்டும். ஆன்ம ஞானப் பயிற்சிக்குள் நுழைந்தவரின் வாழ்க்கை புதுமை பெறுகின்றது. அவனுடைய தோற்றமும் குணமும் மேம்பாடடைகின்றன. உடலும், மனமும் அதற்கேற்ப மாறுதல் பெறுகின்றன. இது மயக்கஞ் செய்வதில் இல்லை. சுவாமி விவேகானந்தர் ஓர் அதிசயமான சம்பவத்தைப் பற்றிக் கூறியுள்ளார். உணர்ச்சி கொள்ளவைக்கும் அவருடைய பிரசங்கங்கள் அமெரிக்கர்களைச் சிந்திக்க வைத்தன. ஆனால் சொற்பொழிவு முடிந்ததுமே அனைவரும் பழைய நிலையை அடைந்து விடுவதாயிருந்தனர். தன்னலம், குறுகிய மனப்பான்மை, எதையும் ஏற்காத தன்மை ஆகிய குணங்களை உடையவர்கள் பயிற்சி ஆன்ம ஞான வழியில் முன்னேறுவதில்லை. சீடரின் குணம், உடல் தோற்றம் சிறப்பாக மாற்றிமைக்கப்படுவதே ஆன்ம ஞான ஆசிரியரால் உண்டாகக்கூடிய நலனாகும். துரு ஏறின ஒரு தூணுக்கு எண்ணெய் வார்னீஷ் கொடுப்பதில் பயனில்லை. தவறான நோக்கம் கொண்ட சீடர் தியானத்தில் வெற்றி பெறுவதில்லை. சுயநல உணர்ச்சி தன்னைப் பற்றிக் கொண்டவனும், எப்போதும் தூக்கமே உருவெடுத்தவனும் நல்ல சீடர் ஆகமாட்டார். சீடர் குருவிற்குத் தன் மரியாதையைக் காட்டவேண்டும். குரு பயன்படுத்திய குடை, படுக்கை, உடை முதலியவற்றைப் புனிதப்பொருளாக நினைக்கலாமே தவிரப் பயன்படுத்தக் கூடாது. குருமுன் அட்டகாசமாகச் சிரிப்பதோ, இரைந்து பேசுவதோ சரிசமமாக உட்காருவதோ கூடாது. குருவையே கவனித்துக் கொண்டிருப்பவன், குருவிற்கு முதுகைக் காட்டமாட்டான். மறித்துப் பேசமாட்டாள். ஆசிரியர் அறிவை சந்தேகித்து ஏளனம் செய்யமாட்டான். அவரை முழுவதும் நம்பி அமைதியாக, சாந்தமாக, அவரிடமிருந்து அறிவைப் பெறக் காத்திருப்பான். நன்மைகளை அடையும் நோக்கத்துடன் அவருக்குப் பணிவிடை செய்யமாட்டான். குருகூறிய அறிவுரைப்படியே சீடர் நடக்கவேண்டும். அதிக விழிப்புடன் இதில் சீடர் இருக்கவேண்டும். குரு என்பவர் உலக வாழ்க்கையை வெறுத்தவராகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. காவி தரித்த துறவியாகவே இருக்கவேண்டும் என்பதுமில்லை. மனிதர்களிடமிருந்து பிரித்து காட்டில் வாழவேண்டும் என்பதும் இல்லை. பிரும்மச்சாரியாக இருக்கவேண்டும் என்பது இல்லை. உலக வாழ்வில் ஈடுபட்ட இல்லறத்தாராகவும் இருக்கலாம். ஆனால் அவருடைய இதயம், புத்தி, ஆன்மா இறைவனுடைய திருப்பணிக்கு என்றே அர்ப்பணிக்கப்பட்டு இருக்கவேண்டும். தகுதியற்ற ஆளைக் குருவாக ஏற்பதை விட குருவே இல்லாமல் கூட இருக்கலாம். ஒருவனுடைய குணங்கள், நிலை, பேச்சு, செயல்கள் எல்லாமே ஆன்ம நிலையைப் பாதிக்கின்றது. ஆகவே, ஆன்மாவை நல்ல நிலையில் வைத்துக்கொள்ள குரு உதவுகிறார். எவ்வளவு புத்திசாலியானாலும் வழிகாட்டி இன்றி வாழுதல் என்பது வழிமாறச் செய்துவிடும். தன்னிச்சையாக வாழ நினைப்பது தறிகெட்டுப் போகவே உதவும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உள்ள வழிமுறைகள் பற்பல அனுபவங்களின் மீது எழுந்துள்ளன. அதை மீறுதல் அழிவையே உண்டாக்கும். மீறாமல் கடைப்பிடிக்க கட்டாயம் ஒரு குருவின் உதவி தேவை.குரு வேண்டும்
ஆரோக்கிய குறிப்புகள் : தியானத்திற்கு உதவுபவை எவை? - ஆரோக்கிய குறிப்புகள் [ ஆரோக்கியம் ] | Health Tips : What are the benefits of meditation? - Health Tips in Tamil [ Health ]