
சரியான, நல்ல குருவிடம் போதுமான காலத்திற்குப் பயிற்சியை ஒழுங்காகச் செய்தால் அநேக நன்மைகளை அடையலாம்.
தியானத்தின் நன்மைகள் என்ன? சரியான, நல்ல குருவிடம் போதுமான காலத்திற்குப் பயிற்சியை ஒழுங்காகச் செய்தால் அநேக நன்மைகளை அடையலாம். மனிதரிடம் அமைந்துள்ள தெய்வீகத் தன்மையை வெளிக்கொண்டு வந்து முழுமை அடையச்செய்வதே தியானத்தின் குறிக்கோளாக உள்ளது. தற்காலத்தில் மனித இனம் அழிவை நோக்கிச் செல்வதாகவே உள்ளது. உடல் தொடர்பான நோய்கள், மனக்கோளாறுகள் நிறைந்து காணப்படுகின்றன. சமூகத்தில் பித்துப் பிடித்தவர், மனிதரை வெறுப்பவர்கள், சதா துக்கத்தில் தோய்ந்து இருப்பவர்கள், எல்லாம் அதிகமாகி விட்டனர். எந்திரங்களுடன் தொழிற்சாலைகளிலும், காகிதங்களுடன் அலுவலகங்களிலும் வேலை செய்வோர் அனைவருமே சிரமம் உள்ளவராகவே தெரிகின்றனர். மனித சமூகம் தவறான வழியில் நடப்பதுவே தற்காலப் பிரச்சினைகளுக்கான காரணமாகும். விஞ்ஞான வசதிகள் பெருகிவிட்ட போதிலும் மனிதரின் துக்கம் குறைந்துவிடவில்லை. ஏனெனில், மக்களில் பெரும்பாலோர் தவறான வாழ்க்கை உள்ளவராக இருக்கின்றனர். சாதாரண நிலைக்கு மேலும், கீழுமாகப் பலதரப்பட்டவரும் பிரச்சினைளுடனேயே உள்ளனர். இதிலிருந்து மீள, நல்வாழ்க்கை முறைக்குத் திருப்ப அவர்களுக்குத் தியானப் பயிற்சி தரவேண்டும். தியானத்தினால் ஒவ்வொரு மனிதனும் தனது மனத்தை சகஜமான நிலையில் வைத்திருக்க இயலும். உலகைச் சரியாகப் புரிந்துகொண்டு, வாழ்விலும் நன்கு முன்னேற முடியும். மனப் போராட்டங்களிலிருந்தும், விரும்பத்தகாத சூழ்நிலைகளிலிருந்தும் தியானம் மனிதனைக் காப்பாற்றுகின்றது. தியானத்தினால் மனம் சரியான நிலையை அடைந்து விடுவதால் உடலும் நல்ல நிலையில் அமைந்து விடுகிறது. மனிதனை அனாவசியமான கவலைகளிலிருந்து தியானம் காப்பாற்றுகிறது. சில மாதங்கள் செய்யும் தியானப்பயிற்சி கூட உடலுக்குப் பல நன்மையைக் கொடுத்து முகத்திலும் நல்ல ஒளியைப் பாய்ச்சுகின்றது. தியானப் பயிற்சி செய்யும் ஒருவனின் முகத்தோற்றத்திலிருந்து அவன் ஆனந்தத்துடன் இருக்கிறான் என்று நம்மால் அறிய முடியும். தியானத்தின் மூலம் ஒருவனின் பகுத்தறிவு சரியான பாதையில் இயங்குகின்றது. தியானிப்பவனின் கண்கள் கருணையைப் பொழியக் கூடியன. அவனுடைய பேச்சு அன்பு நிறைந்ததாகவும் பிறருக்கு இதமளிப்பதாகவும் இருக்கிறது. இப்பேர்ப்பட்ட மனிதனை சமூகம் வரவேற்று அவனுடைய சகவாசத்தை ஏற்கத் தயாராக இருக்கிறது. மனிதனின் ஞாபகச் சக்தியையும், சிந்தனைத் திறனையும், அறியும் சக்தியையும் தியானம் அதிகப்படுத்துகின்றது. இன்றும் பெரிய அரிய நிகழ்வுகளை ஞாபகத்தில் வைத்துச் சொல்லும் பெரியவர்களே உள்ளனர். ஆகவே தியானம் மாணவர் சமூகத்திற்கும், அலுவலக அதிகாரிகளுக்கும் கூட தேவையானதே. நுட்பமான எந்திரங்களுடன் தொழிற்சாலைகளில் பணி புரிபவருக்கும் அதிக கவனத்தையும், துணிவையும் ஊக்கத்தையும் தியானம் தரவல்லதாகும். மனத்தின் நுட்பமான சக்திகளைப் முன் தள்ளுவது தியானம். பெரிய விஞ்ஞானிகளாகவோ, கலை நுணுக்க நிபுணர்களாகவோ வர விரும்புபவருக்குத் தியானம் நன்கு உதவி புரியும். இயற்கையிலேயே சிறந்த கலைஞர்கள், சிறு வயது முதலே சாமர்த்தியங்களுடனிருப்பவர் உண்டு. இவர்களுக்குப் பிறவியிலேயே தியான மனநிலை வாய்த்திருப்பதே இதற்கே காரணம். எவராக இருப்பினும் மனத்தின் நுண் ஆற்றலை உணர்ந்து பயன்படுத்த உதவுவது தியானம். தியானம் என்பது மனிதன் பெற்றிருக்கும் வரப்பிரசாதமான வழிமுறை. பெரிய குறிக்கோளை சாதிக்க முயலாதவரும் ஆன்மாவை உணரவேண்டும் என்று எண்ணாதவரும் கூட, தியானத்தால் நலமிக்க மனம், உடல் அமையப் பெறலாம். தியானம் உறுப்புக்களை பலம் பெற்றியங்கச் செய்கின்றது. தோற்றத்தில் கவர்ச்சியைத் தந்து புத்துயிர் அளிக்கின்றது. நல்ல தியானப் பயிற்சி, ஒரு மனிதனுக்கு வியப்பான திறமைகளைத் தருகின்றது. தனது எண்ணங்களைத் தொலைவில் இருப்பவருக்கும் மானசீகமாக அனுப்ப வல்லமையளிக்கிறது. மஹான் புத்தர் தானிருந்த இடத்திலிருந்தே 11 மைல் சுற்றளவிலுள்ளதைத் தம்மை உணரும்படிச் செய்தார் என்று சொல்லப்படுகின்றது. மூளைக்கு அதிக இரத்தமளித்து அதை நல்ல நிலைமையில் வைப்பது தியானம், ஆச்சரியமான விதத்தில் உடல் நோய்களும் நரம்புக் கோளாறுகள் பலவும் தியானத்தால் நீங்கிவிடுகின்றன என அறிந்துள்ளனர். மனத்தை அழிப்பது இல்லை தியானம். ஒரு சிங்கம் போல துணிவோடு வாழ்வில் வரும் பிரச்சினைகளைச் சமாளிக்கத் திறனளிப்பது தியானமே. இதற்காக மனதைத் தயார் செய்கிறது. மனதிலிருந்தே நோய்கள் உடலுக்கும் வருகின்றன. இது தற்கால நவீன மருத்துவ முறையினால் ஓரளவே நீக்கப்படுகின்றன. இம்முறை வியாதியின் வெளிப்பாட்டை அடக்குகின்றதே தவிர முற்றும் நோயை விரட்டுவதில்லை. மீண்டும் நோய் வரக்காரணம் உடலினுள்ளேயே அதன் வேர் இருப்பதால்தான். உடல் நோயே இந்த அளவில்தான் சிகிச்சை செய்யப்படுகின்றது எனில், மன நோய்களைப் பற்றிக் கேட்க வேண்டுமா? மன நோய்களுக்கு மருந்து என்பது ஒரு மாயமே. மேல்நாட்டு மருத்துவர் ஒருவர், 'மருத்துவ சாத்திரத்தைக் கடலின் அடியில் மூழ்கடிக்க முடிந்தால்தான் மனித இனத்திற்கு நலம் உண்டாகும்" என்று வெறுப்பைத் தெரிவித்திருக்கிறார். மனத்தை நிதானப்படுத்துவதும், திறமை பெறச் செய்வதுமே தியானம். ஒரு திட்டமான நோக்கத்துடன் முதலில் எடுத்துக் கொள்ளக்கூடிய பயிற்சிகளை ஏற்கனவே விரிவாகச் சொல்லியிருக்கிறோம். முன் தயாரிப்பு இல்லாமல் தியானத்தில் நுழைவது அஸ்திவாரம் இன்றி கட்டடத்தை எழுப்ப முயலுவது போலாகும். ஒரு பணக்காரரின் மகள் 'சிதார்' வாசிக்கக் கற்றுக்கொள்ள நிளைத்தாள், தனது தந்தையிடம் கூறினாள். ஏழு ஆண்டுகள் பழைய பாட்டுக்களை மட்டும் அவளுக்கு அவர் கற்பித்தார். சிதார் கற்றுக் கொடுக்கவில்லை. பிறகு ஒரே மாதத்தில் சிதாரை வாசிக்க அவள் கற்றுக்கொண்டு விட்டாள். சிதார் இசைப்பதிலும் புகழ் பெற்றாள். சிதார் வாசிப்பதற்கான முன் பயிற்சியே பழைய பாட்டுக்களைக் கற்றது. இதேபோலவே முன் தயாரிப்பு இன்றி தியானம் வராது. பல மரங்களைப் பார்க்கும் தச்சன் ஒரு மரத்தையும் வெட்ட மாட்டான். உருண்டு கொண்டிருக்கும் கல் தன்னோடு எதையும் சேர்க்காது என்பதெல்லாம் பழமொழிகள். அதேபோல பல குருவைப் பார்க்கும் சீடன் எதையும் பயில முடியாது. சிறப்புறவும் இயலாது. பழத்தைச் சாப்பிடுவதன் மூலமே சுவையை அனுபவித்து ஆனந்தப்படுகிறோம். அதேபோல, ஒரு குருவைத் தியானப் பயிற்சியில் ஈடுபட்டு தெய்விக ஆனந்தத்தை அனுபவிக்க வேண்டும். பண்டைக் காலத்திலிருந்தே மக்கள் பலருக்கு நன்மை பல செய்திருக்கும் இந்தப் பழம்பெருங்கலையான தியானம் இன்றைய நிபுணர்களால் அதிக அக்கறையுடன் கவனிக்கப்பட வேண்டும். நாம் என்பது உடலில்லை; ஆத்மாவே என உணர வைப்பது தியானமே. தியானத்தில் மேலும் மேலும் முன்னேறும் போதே நம்மைச் சுற்றி இருப்பதெல்லாம் சர்வ வல்லமை பொருந்திய கடவுளின் அம்சம் என்றும் புரியும். நம்முடைய பயம், படபடப்பு அனைத்தையும் போக்கி நம்மை அமைதியடையச் செய்வது தியானமே. சில நாட்களிலோ சில மாதங்களிலோ சராசரி முழுப் பலன்களையும் அடைய முடியாது. பொறுமை, விடாமுயற்சி, பயிற்சியில் உறுதி ஆகியவை ஒருநாள் எல்லா வெற்றியையும் கொண்டு வந்து விடும். ஆத்ம ஞானத்தைப் பற்றி கோல்டுஸ்மித் கூறுகிறார்: 'ஐந்து முதல் எட்டு மாதங்கள் வரை தினம் ஒன்றிற்கு ஐந்து முதல் பத்து தியானங்கள் செய்த பின்பே கடவுளுடைய தோற்றத்தின் ஓர் அடையாளத்தைத் தெரிந்து கொண்டேன். அதுவும், ஒரு நொடி அல்லது அதைவிடக் குறைந்த நேரமே அப்படி உணர முடிந்தது' என்கிறார். எப்போது தன்னுள் தெய்வத் தோற்றத்தை ஒருவன் உணர்கிறானோ, அந்த நேரத்திலேயே ஆண்டவனிடம் பூரணமாக ஐக்கியம் அடைகிறான். ஆன்மாவே இறைவனிடம் அப்படி ஐக்கியப்படுகிறது. உடல் அப்படி ஒன்றுவதில்லை. பரம்பொருளை உணர்வது ஆத்ம ரீதியான காரியமாகும். மனம் தூய்மையாக இருந்தால்தான் தியானம் நன்கு வரும் என்பது முன்னரே கூறப்பட்டுள்ளது. ஒருவனது மனது எப்படி இருக்கிறதோ அப்படியே அவன் இருக்கிறான். டேப்பில் ஏற்கனவே பதிவு செய்த பாடல்களைத் தான் நாம் 'ப்ளேயரில் போட்டு மறுபடியும் கேட்கிறோம். அதைப்போலவே, ஒருவனுடைய மனதில் முன்பே பதிவாகியிருக்கிற அனுபவங்கள், உணர்வுகள் தான் அவனுடைய எண்ணங்கள், பேச்சு, செயலாக அமைகின்றன. இவ்வாறு உள்ளே பதிந்துள்ள உணர்வுகளை நாம் களைந்தால்தானே புதிய நல்ல உணர்வுகளைத் தியானத்தின் மூலம் உண்டாக்கிக் கொள்ள இயலும். வெறுப்பு, ஆசை, கோபம், பாசம், அகங்காரம் முதலியவற்றை ஏற்படுத்திக் கொள்ளுவதன் மூலம் நமது துன்பங்களுக்கு நாமே காரணமாகி விடுகிறோம். நேர்மையான குணங்ளைப் பெற்று, ஆத்ம குருவின் ஆசியைப் பெறவேண்டும். குரு - சீட பாவத்தில் சீடருடைய பங்கே அதிகம். குருவிடமிருந்து பெற்றுக்கொள்கிற சக்தி அவனுக்கு அதிகமாக இருக்கவேண்டும். அதனால்தான் திறமையுள்ள குருக்கள் கிடைத்தாலும் நல்ல சீடர்கள் அமைவது இல்லை. மஹாபுத்தர், தன்னையறிந்தவர்களாக இரண்டு சீடர்களைக் கூடப் பெறவில்லை. கிருஷ்ணபகவானின் போதனையை அருச்சுனன் ஒருவன்தான் கேட்டான். ஆனாலும் அவனும் அவரைப் புரிந்து கொள்ளவில்லை. நாரதருடைய போதனைகளை மூன்று அல்லது நான்கு பேரே நன்கு அறிந்து கொள்ள முடிந்தவராக இருந்தனர். அதிசய ஆற்றல்களைப் பெற்றிருந்த முனிவர்களும் ஏற்ற சீடர் கிட்டவில்லையென்றே அந்த ஆற்றல்களையும் காட்டாமல் மறைந்து விட்டனர். சரியான மனிதராக இல்லாதவரிடம் அற்புத ஆற்றல்களைத் தந்தால் பிறருக்கு தீமை விளைவித்துத் தாமும் அழிவர் என்றே அப்படி இருந்து விட்டனர். தியானம் என்பது இராஜ யோகத்தைச் சேர்ந்தது. ஒரு பொருளைப் பார்ப்பதில் இரண்டு விதம் உள்ளது. ஒன்று வெளிப்படையாகப் பார்ப்பது. இன்னொன்று, உள்ளடங்கிய விஷயத்தை ஊன்றிப் பார்ப்பது. சாதாரணமாகப் பார்ப்பவருக்கு சுவர், சுவராக மட்டுமே தோன்றும்: ஊன்றிப் பார்ப்பவருக்கு நீளம், அகலம், கனம், செங்கோண, முக்கோண, செவ்வக வடிவம், செங்கல், சுண்ணாம்பு, கம்பி, வண்ணம் எல்லாமே தெரியும். இதேபோல தியானத்தால் ஊன்றிக் கவனிக்கத் தெரிந்தவனுக்கும் எல்லாமே தெரியும். துன்பத்திலும், இன்பத்திலும் சமமாக இருப்பவனை இராஜயோகி என்போம். நரகமான பூமியை சொர்க்க பூமியாக மாற்றுவோர் யோகியரே. இப்படிப்பட்டவரே பூமியில் கடவுளாட்சியைக் கொண்டுவர முடியும். மனோவிஞ்ஞானம் முழுவதும் விளங்க ஓர் இணைப்பைத் தருவது தியானம். உடல், மனோ நிலையின் உன்னதம் தியானத்தினால் கிடைக்கும். நாகரிகத்திற்கும் தனிமனித ஒழுக்கத்திற்கும் சம்பந்தமில்லாத அறிவு நிலையை தியானத்தால் சீர் செய்ய முடியும். 'மனித மனநிலை சாத்வீகமாக இல்லாததால்தான் அணுகுண்டினால் உண்டாகும் நாசத்தைக் காட்டிலும் அதிக நாசத்தை நோக்கி மனித சமூகம் போகிறது." இப்படி நோபல்பரிசு பெற்ற ஒருவர் 'தெரியாத மனிதன்' என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார். மனது சரீரத்தைப் போல அவ்வளவு ஆரோக்கியமாக உள்ளதல்ல. உடல் வியாதிகளின் எண்ணிக்கையை விட மனோ வியாதிகளின் எண்ணிக்கைதான் அதிகம். அமெரிக்காவில் ஒவ்வொரு 22 பேருக்கும் ஒருவர் என்ற விகிதத்தில் பைத்தியக்காரர் உள்ளனராம். அமெரிக்க ஐக்கிய நாடுகளில்; நோயால் துன்பப்படுபவரை விட எட்டு பங்கு அதிகம் மனநலம் கெட்டவருள்ளனராம். மனித குலம் நன்கு முன்னேறி நலம் பெறவேண்டுமானால் பள்ளியில் போதிக்கும் கல்வியிலேயே தியானம் இடம் பெறவேண்டும். வீட்டிலும் தியானம் பயிலப்பட வேண்டும். பால முனிவர், "நான் வாழவில்லை; கடவுள் எனது வாழ்க்கையை நடத்துகிறார்' என்று கூறுவதுண்டு. அதுபோல, தியானம் நம்மை வெகு உன்னத நிலைக்குக் கொண்டு போய் பரம்பொருளை நம் மூலம் இயங்க வைக்கிறது. இயற்கை இயல்பில் ஒரு மிருகத்திடமிருந்து ஒரு மனிதக் குழந்தை மாறுபட்டிருப்பது எப்படி? பிறவிகள் பலவற்றில் அமையும் பரிணாம வளர்ச்சியே இதன் காரணமாகும். தனி மனிதனைச் சந்திப்பதுபோல நாம் தியானத்தில் இறைவனைப் பார்க்க முடியாது. ஆண்டவனே எல்லாம் என்று எங்கும் இறைவனை உணர முடிந்தவராக ஆகிறோம். பொம்மையும் மண்ணும் வெவ்வேறல்ல - தங்கமும் நகையும் வேறு வேறல்ல. இதைப் போலவே நாமும் இறைவனும் வேறுவேறு அல்ல என்பதைத் தியானத்தால் உணர முடியும். ஆகவே, தியானத்தில் வெற்றி பெறவிரும்பும் ஒவ்வொருவரும் நல்ல சூழ்நிலையில் வாழ்ந்து மேன்மையானவர்களுடன் பழகி அதன் மூலம் தன் மனதைக் கூடுமானவரையும் தூயதாக வைத்துக் கொள்ள வேண்டும். எண்ணங்கள், பேச்சு செயல்பாடுகள் ஆகியவற்றில் நேர்மையாக இருப்பதற்கு மனப்பூர்வமாக முயலவேண்டும். பிராணாயாமம், ஆசனம், பிரத்யாஹார பயிற்சிகளைப் பல வருடங்கள் பயில வேண்டும். தியானத்தினால் ஸ்தூல வாழ்க்கை சூட்சும வாழ்க்கையாக உயருகின்றது. ஆகவே, ஆனந்தம் குறையாமல் இருக்கிறது.
ஆரோக்கிய குறிப்புகள் : தியானத்தின் நன்மைகள் என்ன? - ஆரோக்கிய குறிப்புகள் [ ஆரோக்கியம் ] | Health Tips : What are the benefits of meditation? - Health Tips in Tamil [ Health ]