தியானம் என்றால் என்ன?

ஆரோக்கிய குறிப்புகள்

[ ஆரோக்கிய குறிப்புகள் ]

What is meditation? - Health Tips in Tamil

தியானம் என்றால் என்ன? | What is meditation?

மந்திரம் என்பது மகா புனிதமானது. இதைச் சாதாரணமாக நினைத்து விடக்கூடாது.

தியானம் என்றால் என்ன?


மந்திரம் என்பது மகா புனிதமானது. இதைச் சாதாரணமாக நினைத்து விடக்கூடாது. பரம்பொருளிடமிருந்து குருகுலம் மூலம் நமக்குக் கிடைத்த ஆசியாக அதை மதிக்கவேண்டும். அறிந்த இரகசியமாக இது இருக்கவேண்டும். இந்த மந்திரமே மற்றவரால் சந்தேகம் உண்டாகும்போதும் மனம் கலைக்கப்படும் போதும் ஒருமைக்கு வழிகாட்டியாக இருக்கும். தொடக்கத்தில் பல எழுத்துக்களால் உண்டாக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கும் மந்திரம், காலப்போக்கில் ஓரெழுத்தால் ஆனது போல ஒரே பயனைத் தரும் மந்திரமாகப் பலித்துவிடும்.

ஒரு குருவிடம், ஒரு முறை அவருடைய வெற்றிக்குக் காரணம் என்ன? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் ''வாழ்நாள் முழுவதும் தியானத்திற்கு வேண்டிய பொருள் எனது கடவுளே'' என்றாராம். மந்திரங்களை எந்த மதத்திலும் எந்த குருவிடமிருந்தும் பெறலாம்.

ஒரு பாத்திரத்திலிருந்து எண்ணெயை இன்னொரு பாத்திரத்தில் விடும்போது எப்படி ஒரே தொடர்ச்சியான ஒழுக்கு உண்டாகிறதோ அப்படி தொடர்ந்து மனநிலை ஒன்றின் மேலேயே செல்ல வேண்டும். மந்திரங்களைத் தொடர்ந்து சொல்வது அம்மாதிரி மனநிலையைத் தரும். இதேபோன்ற வழிகளில் மன ஒருமையைச் செய்துகொண்டு தியானம் புரிந்தாக வேண்டும். இந்நிலையை அடைய வேறு நுணுக்கமானப் பயிற்சிகளுண்டு. அவை ஆத்ம ஞானப் பயிற்சிக்கு அவசியமில்லை.

'மன ஒருமை’ பயிற்சியை முதலில் கண்களைத் திறந்து கொண்டு செய்யவேண்டும். ஒரு உறுப்பைத் தேர்ந்தெடுத்துக் கொண்டும் அதில் ஒருமை செய்தும் பழகலாம். முக்கியமாக இருதயம், மூளை, கண், புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதயத்தில் உள்ளதாக நினைத்துக் கொள்ளப்பட்ட ஒரு தாமரை மேல் மன ஒருமை செய்தால் தியானத்தில் வெற்றி பெறலாம்.

தியானத்திற்கு மன ஒருமை அவசியமானாலும் அதைப்பெறுவது மிகச் சிரமம் என்பர் பலரும். இப்படிப்பட்ட கருத்து இயற்கை தான். ஏனெனில் மனது எப்போதும் காலியாகவே இருப்பதில்லை. ஏதாவது ஒன்றைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும். ஆகவே தியானத்தில் பயிற்சி செய்யும் ஒருவர் தவறுகள் நேர்ந்தாலும் அவற்றைக் கவனிக்காமல் மேலே முயற்சிக்க வேண்டும்.

ஆறு மாதம், ஒரு வருடத்திற்குப் பின், முதலில் முடியாது என்று எண்ணியதை முடியும் என்ற நிலையை அடைவர். சிலபோது தியானம் சிரமமாக இருக்கும். சிலபோது அது எளிதாகவும் இருக்கும். மனம் தளரும் நிலையடையும் மனிதர், ஜெப மந்திரத்தை உரத்துச் சொல்லி ஓதலாம். குறிப்பிட்ட வேளையை அதற்கு ஒதுக்கலாம். மன ஒருமையுடன் இது ஞாபக சக்தியையும் தருகின்றது.

''ஆரம்பத்தில் ஜெபத்தில் நான்கு வரிகளை மட்டும் வைத்துக்கொள், அதையே அரை மணி நேரத்திற்குத் திருப்பித் திருப்பிச் சொல். ஒரு நாளில் உனது ஞாபகத்தில் அதை வைக்க முடியவில்லையானால் அதை மறுநாளும் சொல். அது மனத்தில் பதிகிற வரைக்கும் ஒவ்வொரு நாளும் திருப்பித் திருப்பிச் சொல். இதன் பின் மேலும் நான்கு வரிகளை சேர்த்துக்கொண்டு அதேபோலச் சொல்." இம்முறை மனதில் புரிந்து கொள்கிற சக்தியை அதிகமாக்குகின்றது. இம்முறை முக்கியமாக ஞாபக சக்தி இல்லாதவருக்கு சிபாரிசு செய்யப்படுகின்றது.

திபெத்தில் ஒரு புதுமையான வழக்கம் உண்டு. மன ஒருமை கொண்ட தியானம் அங்கே கற்றுத் தரப்படுகின்றது. சீடனான ஒருவன் தலையில் ஒரே விளக்கை வைத்துக்கொண்டு இரவு முழுவதும் உட்கார்ந்திருக்க வேண்டும். இப்பயிற்சியை 15 ஆண்டுகளுக்குச் செய்தால் அவர் தியானத்தில் முழுமையடைந்தவர் என்று கருதப்படுகிறார். மனோசக்தியைப் பெற வேறு பயிற்சி அவசியமில்லை. இவ்வாறு மனோசக்தியை அடைந்தவன் ஒரு கதவைக் கோபத்துடன் நோக்கினால் கூட அது எரிந்து பொசுங்கி விடுமாம். இந்த நிலையில், ஒருவன் தன் பஞ்ச பூதங்களின் மூலமாகப் பார்க்கிற பொருளோடு தன் சம்பந்தத்தை இழந்து மனதிலேயே அந்த வடிவத்தை உண்டாக்கி, அவனது மனமும் அந்தப் பொருளும் ஒன்றாகி விடுகிறது. தொடக்கத்தில் இம்மாதிரி நிலையில் மனதை நிலைநாட்டுவது சிரமமாக இருந்தாலும், சில வருடப் பழக்கத்தில் இந்த உன்னதமான நிலை அடைந்து, பல வருடங்களுக்கு நிலையாகத் தங்கிவிடும்.

அலஹாபாத்தில் 'விஸ்வசாந்தி' என்னும் ஓர் ஆஸ்ரமம் உள்ளது. ஒரு நாளைக்கு 12 மணி முதல் 18 மணி வரை தியானம் செய்யும் பெரியவர்கள் அங்கே இருக்கிறார்கள். பயிலுபவர் குறிக்கோள் தியானிப்பது மட்டுமில்லை. தன்னுடைய தன்மையை மாற்றிக் கொள்வது என்றுணர வேண்டும். சுயநலத்திற்காகப் பயிற்சி செய்யப்பட்டால் கெட்ட விளைவுகள் உண்டாகும். பதஞ்சலி முனிவர், தியானத்தைப் பலரும் புரிந்து கொள்ள, பின்வருமாறு விளக்கி உள்ளார்.

"ஒரு பொருளை நோக்கி மாத்திரம் மனதின் மொத்தக் கவனமும் தொடர்ந்து இருப்பதே தியானம்" என்று கூறியுள்ளார். வடமொழியில் 'தியானம்' என்ற சொல்லுக்கு ‘ஒரு பொருளின் நினைவு' என்று பொருள். அதாவது அதில் கவனம் உண்டாவது.

மனது எங்கே போகிறது? மனது எப்போதும் ஏதாவது பொருளை நோக்கிப் பாய்கிறது. ஆனால் அது அறியவேண்டியது தன்னைப்பற்றி. மனது நிதானம் அடைவதற்கு ஏற்பவே அதன் ஒருமை நிலையம் அமைகிறது.

உதாரணமாக ஆகாய விமானத்திலிருந்து பூமியில் ஓடும் நதியைப்பார்த்தால் அந்நதி ஓடாமல் நிற்பது போல புலப்படும். ஆனால் உண்மையில் நதியில் உள்ள நீர் ஓடிக்கொண்டே இருக்கிறது. எண்ணெயை ஒரு பாத்திரத்திலிருந்து இன்னொரு பாத்திரத்தில் ஊற்றும் போது எண்ணை விழுவதுபோல் தெரியாது. தியானத்திலும் இப்படி மன ஓட்டம் புரியாது. ஒரு சொட்டுத் தண்ணீரில் நமக்கு ஒன்றும் புலப்படுவதில்லை. ஆனால் உருப்பெருக்கி கண்ணாடி மூலம் நோக்கினால் நூற்றுக்கணக்கானக் கிருமிகள் காணப்படும். அதேபோல் தியான நிலையில் மன இயக்கம் விளங்குவதில்லை. மனம் அமைதியாக இருப்பதாகப்படுகிறது. ஆனால் ஒருவன் பூரணமாக ஒன்றில் ஈடுபடும்போது மனதின் தனித்தன்மை அழிந்து விடுகின்றது. அப்போதைய நிலையில் மணிகளோ, நிமிடங்களோ, வினாடிகளோ தெரிவது இல்லை. நாட்கள், மாதங்கள் கூட இந்நிலை தொடருவதுண்டு. இப்படிப்பட்ட நிலை பரம்பொருளோடு ஈடுபடுகையில் தான் உண்டாகிறது. இப்படி ஒரு நிலை கிடைக்கும் போது உலக பந்தம் அவனிடமிருந்து ஒழிந்து விடுகின்றது. அவனை முக்தன் என்கிறார்கள்.

தியானத்தில் தியானப் பொருளில் மனம் ஐக்கியமாகி அந்த ஒரே பொருளையே நோக்குகின்றது. ஒருவன் தாமரை மலரையே தியானிக்கலாம். அப்போது வெளியில் உள்ள பூவைப் பாராமல் கண்களை மூடிக்கொண்டாலும் கூட மனதில் அதன் வடிவம் தெரிகிறது. இந்நிலை, தாமரை வடிவை மனம் எடுத்துக் கொண்டதாகும். ஆனாலும் இதை உறுதிப்படுத்த செயலில் ஈடுபட வேண்டியுள்ளது. கடிகாரத்தின் மணி காட்டும் முட்கள் ஒரே இடத்தில் இருப்பது போலத் தோன்றினாலும் அவை நகர்ந்து கொண்டே உள்ளன. அதேபோல மனம் இயக்கமற்றது போலப் பட்டாலும் அது ஓடிக்கொண்டே உள்ளது.

தியானம் வாழ்க்கையின் பலவிதமான தோற்றங்களின் மூலத்தைக் கண்டுபிடிப்பதற்கு வேண்டிய அறிவைக் காட்டுகின்றது. ஆன்மா தனது மேன்மையைப் பரப்புவதற்கு உண்டான வழியைத் தியானம் வகுக்கின்றது. மனிதனை உள்னதமான முன்னேற்றத்தை அடையச் செய்கின்றது. ஆகவே தியானத்தினால் ஆன்ம அறிவைப் பெற்றவனின் தெய்வீகத் தன்மையை அவனது செயல்கள் காண்பிக்கின்றன. பகவத் கீதையில் 12-ஆவது அத்தியாயத்தில் 12-ஆவது செய்யுளில் வருவதுபோல, கடமை, தியானம் ஆகியவற்றைப் பிரதிபலன் எதிர் நோக்காமல் பண்ணவேண்டும். இதைத்தியானத் தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகக் கொள்ளவேண்டும். பாசம், மற்ற நிலையைக் காட்டிலும் சமாதானமான நிலையே மேல் என்று உணரவேண்டும். ஒருவனுடைய ஆனந்தத்தை அவனே அலட்சியம் செய்யவேண்டும். அதற்காகத் தனது துன்பங்களைத் தான் போக்க முயற்சிக்கக் கூடாதென்பதில்லை. அனுபவ சாத்தியமாகப் பார்ப்போமாகில் நம்முடைய கடமையைப் பாசமற்ற நிலையில் செய்யும்போது ஏற்படுகிற துக்கங்களை நல்ல மனத்தோடும். மகிழ்ச்சியோடும் ஏற்றுப் பழகவேண்டும். மேல் உலகில் ஆனந்த வாழ்க்கை பெற என்று புண்ணிய காரியங்களை அனுசரிப்பது கூட அர்த்தமற்றது. ஏனெனில், ஒருவனுக்கு அது நிலையில்லை. மேலுலகம் புண்ணியச் செயல்களால் கிடைத்தாலும் அவை நல்லின்ப அனுபவங்களால் தீர்ந்தவுடன் மீண்டும் பூவுலகில் பிறவி பெற்றாக வேண்டும். மறு பிறவியில் மீண்டும் துன்பம் சூழ்கிறது. சுயநல நோக்கோடு புண்ணியத்தைச் சம்பாதிப்பதிலுண்டாகும் ஆவல் இறைவனிடம் மனதை அர்ப்பணிப்பதற்கு இடைஞ்சலாகி விடும். இது தியானத்தின் வெற்றியைத் தராது.

கடந்தகால பாவ வாழ்க்கையையே எண்ணிக் கொண்டிருக்காமல், தனது இறைவன் சேர்ந்த அம்சம் என்கிற தன்மையை எண்ணித்தியானத்தில் ஈடுபடவேண்டும். விவசாயி வயலை உழும்போது பின்னால் பார்த்துக்கொண்டே உழுவதில்லை. முன்னாலேயே பார்க்கிறான். தியானத்தில் ஈடுபடுதலா உடல் சக்தியும், மனோசக்தியும் கூடுகிறது. நல்ல முறையில் செயல்பட மனிதனால் முடிகின்றது.

இப்படித் தன்னைத் தியானத்தினால் கட்டுப்படுத்தி மாற்றியமைத்துக் கொள்ள முடியாதவனால் சுதந்திரமாக இயங்க இயலாது. ஒருவனின் ஆசைகளை அடக்கி அமைதிப்படுத்திட ஆசன, பிராணாயாமங்களும் அடிப்படையில் உதவுகின்றன.


தியானத்திற்கான இடமும் காலமும் 

தியானத்தில் வெற்றிகரமாக ஈடுபட விரும்புவோருக்கு இங்கே இடம் காலம் பற்றியக் குறிப்புத் தரப்படுகின்றது. பூமியிலுள்ள அனைத்தையும், இடமும் காலமுமே கட்டுப்படுத்துகின்றது. நல்ல இடத்தில் நல்ல நேரத்தில் செய்யப்படுகிறவை நல்ல முறையில் அமைகின்றன. இது ஆசனம், பிராணாயாமம், தியானம் ஆகிய பயிற்சிகளுக்கு நிச்சயம் கடைப்பிடிக்கப்படுகின்ற விதி. தியானம் போன்ற புனிதமான காரியங்களுக்கு ஏற்ற இடம் கட்டாயம் வேண்டும்.

தூய காற்றுள்ள, இயற்கையோடியந்த அமைதியான இடம் வேண்டும். தனிமை முக்கியம். புண்ணிய இடம், புனித மக்களுடன் தொடர்புள்ள இடம், வாழ வசதி உள்ள இடம் தேவை. இந்தியாவில் அநேக புண்ணிய க்ஷேத்திரங்கள் உள்ளன. அவற்றினருகில் மிகவும் மேன்மையான அநேக இடங்களுள்ளன.

புத்தத் துறவிகளுள் அஜந்தா குகைகள் இயற்கை அழகுள்ள இடத்தில் அமைந்துள்ளன. பற்பல குன்றுகளின் மேல் சிறுசிறு கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் பல, யோகியர் பயிற்சி செய்த இடங்களாகும். பல துறவிகள் வாழ்ந்த இடங்களாகும். ஐரோப்பாவிலும் மத்திய கிழக்குப் பிரதேசத்திலும் சந்நியாசிகள் தங்கள் பயிற்சிக்காகத் தனி இடங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

காற்று பலமாக வீசாதபோது குளம், ஆறு, கடல் ஆகியவற்றின் கரை இதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். வனத்தில் ஒரு தனியிடம் முன்சொன்ன அனைத்தையும் விட அதிகப் பொருத்தமாக இருக்கும்.

யோகிகளால், அவர்களுடைய பயிற்சிகளினால் புனிதமாக்கப்பட்ட இடங்கள் ஆத்ம ஞானத்தை அதிகமாக்குவதற்கு உரிய சூழ்நிலையை உடையது. ஒரு மலையையொட்டிய குளம் அருகில் தான் அடைந்த அனுபவங்களை ஒருவர், ஒருமுறை என்னிடம் கூறினார். அவர், தான் தியான நிலையை அடைவதற்கு முன்னால், ஆன்ம ஞான திருப்தியை எதிர்பாராமல் அனுபவித்ததாகச் சொன்னார்.

தியானம் செய்யும் முன்னால் அவர் முன்பாக மூன்று முதிய ஞானிகள் தோன்றினார்களாம். அவர்களது சரீரம் அழியாத நிலை அடைந்திருந்ததாம். அது அவர்களின் தவத்தினால் அப்படி அமைந்திருந்ததாம். அந்த மூவரும் நீரின் மேல் நடந்து வந்தனராம். அவர்கள் இவள் தியானம் செய்கிறவரை ஆசீர்வதித்தனராம். அதனால் இவர் ஆள்ம தரிசனமும், விவரிக்க இயலாத தெய்வீக உணர்ச்சியும் அடைந்தாராம்.

ஆனால் நகர்புறத்தில் வசிக்கிற ஒரு பயிற்சியாளருக்கு இம்மாதிரி அனுபவம் வாய்க்கும் இடம் கிடைப்பது அரிது. தியானம் செய்கிறவர் அருகில் உள்ள ஏதாவது தோட்டத்திற்கோ, வசதிப்பட்ட இடத்திற்கோ செல்லலாம்.

ஓர் அறையிலும் இருந்து தியானம் செய்யலாம். அங்கே தட்டுமுட்டுச் சாமான்கள் போன்ற குப்பைக் கூளங்களின் அடைசல் இருக்கக்கூடாது. ஆரம்ப நிலையில் தியானம் செய்பவரை அவை கவனம் சிதறச் செய்து கெடுக்கும். எவரும் பயிற்சியின் இடையில் வந்து தொந்தரவு செய்யாதவாறு தனிமை வேண்டும். தியானம் செய்வது ஓர் அறைக்குள் என்றால், சுற்றுச் சுவர்கள் இலோசன பச்சை நிறமாகவோ, நீல நிறமாகவோ இருப்பது உதவி. இவை மனதிற்கு அமைதியை உண்டாக்குபவை.

தற்காலத்தில் மனோதத்துவ நிபுணர்கள் நிறங்கள் எப்படி மனத்தைப் பாதிக்கின்றன என்பதைப் பற்றி ஆராய்ந்திருக்கின்றார்கள். பச்சை நிறமோ, பச்சை நிறப் பயிரோ மனத்திலிருந்து கோபம், வலி, அதிர்ச்சி ஆகியவற்றைக் களைகிறதென்று சொல்லியிருக்கின்றார்கள். இரத்தம் குறைவாக உள்ளவருக்கும், பலம் குறைவாக இருப்பவர்களுக்கும் ஊதா நிறம் நல்லது. இருதயத்திற்கும், நுரையீரல்களுக்கும் மஞ்சள் நிறம் நன்மையாகும். நோயாளிகளின் மனத்திலும் நம்பிக்கை வளர்ப்பது ஆரஞ்சு நிறமாகும். போர்க்குணத்தைச் சிவப்புத் தருகிறது. ஆத்ம ஞானப் பயிற்சிகளுக்கு ஊதா நிறம் நலம் பயக்கும் என்பது பண்டைய நூல்களின் கருத்து. ஆரஞ்சு, ரோஸ், இலேசான ஊதா ஆகிய நிறங்கள் நமக்கு ஓர் உணர்வைத் தந்து மனதை நிதானப்படுத்துகின்றதாம். கருப்பு வண்ணம் பகலில் மனதை ஒருவிதமாகப் பாதிக்கிறது. ஆனால் இரவில் இருட்டு ஆத்ம ஞானப் பயிற்சிகளுக்கு அதிக உபயோகமாகின்றது. ஏனென்றால் இரவில் நட்சத்திரங்கள் தங்களது அறிந்துகொள்ள முடியாத சக்தியை மனிதருக்குக் கொடுக்கிறது. ஐயத்திற்கு இடமின்றி வெள்ளை நிறம், மிகவும் நல்லது. ஆனால் அதன் வெளிச்சம் பிரதிபலிப்பு ஆத்ம ஞானப் பயிற்சிக்கு இடைஞ்சலாக இருக்கின்றது.

இதிலெல்லாம் ஆத்ம ஞானம் தேடுபவர், பயிற்சியை மேற்கொள்பவர், தான் இருக்கும் சூழ்நிலைக்கேற்ப சுவர் வண்ணத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். முக்கியமாகத் தொழிற்சாலை அருகாமையில் இருப்பதைத் தவிர்க்கவேண்டும்.


இனி தியானத்திற்கான நேரத்தைப் பார்க்கலாம்.

வேதங்களில் கூறப்பட்டிருப்பதன் படி தியானம் செய்வதற்கு ஏற்ற காலம் அதிகாலையாகும். இல்லையேல் அந்தி நேரம் வேண்டும். சூரியன் உதிக்கும் அரை மணிக்கு முன்பாகவோ அஸ்தமித்ததற்கு அரை மணி பின்பாகவோ மிகவும் நல்ல நேரமாகும்.

மேற்கண்ட நேரங்களின் சூழ்நிலையில் தான் அமைதி உள்ளது. அல்ட்ரா வய்லட் கதிர்கள் உள்ள சூழ்நிலை இருக்கும். எவ்வளவு நேரம் தியானப் பயிற்சி செய்யவேண்டும் என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள். எல்லாருக்கும் ஒரே கால அளவைக் கூற முடியாது. அவரவருடைய தன்மை, வயது, அவர்களின் வேலை முதலியவற்றைப் பொறுத்தே இந்தக் காலம் இருக்கும். ஐந்து நிமிட, பத்து நிமிட காலப் பயிற்சி தொடக்கத்தில் போதும். துவக்க காலத்தில் மிகக் குறைந்த நேரமே இருந்தாலும் நாள் செல்லச் செல்ல பயிற்சி செய்யும் காலத்தைக் கூட்டிக் கொள்ளலாம். அநேகருக்கு அதிக நாட்களுக்குப் பின்பே நல்ல பயன்கள் ஏற்படுகின்றன. தொடர்ந்து குறிப்பிட்ட பயன் உண்டாகும் வரை பயிற்சி செய்ய பொறுமையும் நம்பிக்கையும் வேண்டும்.

சுவாமி பிரும்மானந்தரின் வார்த்தைகளை நினைவில் கொள்வோம்:

"ஆத்ம வாழ்வில் வெற்றிக்கு முயற்சி மிகவும் முக்கியம். ஏதாவது ஒழுங்குமுறை நான்கு வருடங்களுக்குத் தொடர்ந்து இருக்க வேண்டும். அப்பொழுதும் உனக்கு ஒரு முன்னேற்றமும் இல்லையானால் என் முன் வந்து என் முகத்தில் அறைவது போலக் கேள். அக்கறையோடு மூன்று வருடங்களுக்கு ஒழுங்காகப் பயிற்சி செய்தால் உனக்குக் கடவுள் மேல் பக்தியும் அன்பும் ஏற்படும் என்று நான் நிச்சயமாகச் சொல்வேன்."

ஆசனத்தில் அமர்ந்தே தியானம் செய்ய வேண்டும். அது, வெப்பத்தை உண்டாக்குவதாக இருக்கக்கூடாது. உடலின் மின்காந்த சக்தியை இழுப்பதாகவும் இருக்கக்கூடாது. இருக்கை மிகவும் பெரியதாகவோ சிறியதாகவோ இல்லாமல் அளவோடு இருக்கவேண்டும். அதில் அமர்ந்து தியானம் செய்தபின் அதைச் சுற்றி வைத்து தூய்மையாகப் பாதுகாக்கவேண்டும். பிறர் அதைப் பயன்படுத்தக்கூடாது.

ஆரோக்கிய குறிப்புகள் : தியானம் என்றால் என்ன? - ஆரோக்கிய குறிப்புகள் [ ஆரோக்கியம் ] | Health Tips : What is meditation? - Health Tips in Tamil [ Health ]