நோயாளி யார்?

மருத்துவ குறிப்புகள்

[ மருத்துவ குறிப்புகள் ]

Who is the patient? - Medicine Tips in Tamil

நோயாளி யார்? | Who is the patient?

ஹோமியோபதி டாக்டர்கள் நோயாளி என்றால் ஒரு வியாதியஸ்தரின் காலையோ கையையோ சொல்ல வில்லை.

நோயாளி யார்?


ஹோமியோபதி டாக்டர்கள் நோயாளி என்றால் ஒரு வியாதியஸ்தரின் காலையோ கையையோ சொல்ல வில்லை. அந்த முழு மனிதனும் வியாதியாயிருக்கிறனென்று நினைக்கின்றனர். வயிற்றில் இரணமோ, காலில் குடைச்சலோ இருக்குமாயின் அதை வயிறு வியாதியுற்றிருக்கிறது. கால் வியாதியுற்றிருக்கிறது என்று மதித்து அந்த அவயவத்துக்கு மாத்திரம் வைத்தியம் செய்வது ஹோமியோபதி வைத்திய முறையில் ஒப்புக் கொள்ளப்படாத விஷயம். ஏனென்றால் அந்த வயிற்றிலோ காலிலோ இருக்கும் தசைகளில் மாறுதல் ஏற்படுவதற்கும் ஒரு முந்திய காரணம் இருக்க வேண்டும். ஆகவே நாம் நம்முடைய சரீரம் மாத்திரம் வியாதியினால் அவஸ்தைப் படுவதாக நினைக்க முடியாது. நம்முடைய சரீரத்தை ஒரு வீட்டுக்கு ஒப்பிடலாம். சரீரம் ஒரு வீடாகவும் அதனுள் 'நான்' என்னும் மனிதனும் அதாவது ஆத்மாவும் இருக்கிறது. அந்த 'நான்' என்னும் வஸ்து வியாதியுறுமானால் அவ்வியாதியின் விளைவு சரீரத்தில் காண்கிறது ஆகவே சரீர கோசங்களிலும், அவயவங்களிலும், தசைகளிலும் காணும் வியாதிக் கோளாறுகள் சரீரத்தில் குடியிருக்கும் ஆத்மாவில் ஏற்பட்ட வியாதியின் விளைவுகளே. வியாதியின் கோளாறுகள் அவயவங்களில் தோன்றுவதற்குப் பலகாலம் முன்னதாகவே அம்மனிதன் வியாதியுற்று இருக்கிறான் என்பது ஹோமியோபதியின் முக்கிய தத்துவங்களில் ஒன்றாகும். 


வியாதியின் பெயர்:

ஒரு சாதாரணமாக ஒரு வியாதியின் பெயர் இன்னதென்று கண்டுபிடித்தாலொழிய மற்ற வைத்திய முறைகளில் வைத்தியம் செய்வது இயலாத காரியம். ஒரு வியாதி இன்னதென்று நிர்ணயித்து அதன் பெயரைச் சொல்லுவதற்கு 'டயக்னோஸிஸ்' (diagnosis) என்று பெயர். தசைகளில் கோளாறுகள் ஏற்பட்ட பிறகே வியாதி இன்னதென்று அவர்களால் கண்டு பிடிக்கமுடியும். அந்தோ! பல வியாதிகளில் நாம் பார்ப்பது என்னவென்றால் தசைகளில் மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டால் அந்த வியாதிகளை அதற்குப்பிள் நிவர்த்திக்க வழிகளே கிடையாது.


இஷ்டமும், அறிவும்:

ஒரு மனிதன் இறந்துபோனால் அவன் சரீரம் இங்கேயே இருக்கிறதல்லவா? ஆனால், அவன் ஆத்மா எங்கேயோ போய்விடுகிறது. ஆத்மா போய் விட்டாலும் அந்த சரீரத்தின் எடையோ, மற்ற அங்கங்களோ யாதொன்றும் குறையவில்லை. ஆனால், அந்த உடலுக்கு 'இஷ்டமும், அறிவும்’ உயிருள்ள போது இருந்தது, இறந்த பிறகு இல்லை. எனவே 'இஷ்டமும், அறிவும்' எதுவோ அதை 'நான்' ஆகவும் சரீரத்தை வீடாகவும் நீங்கள் கருதவேண்டும். 

ஒரு உதாரணம் இவ்விடம் பொருத்தமாகப்படுகிறது. ஒரு மனிதன் ஒரு வீட்டில் சகல சம்பத்துகளுடனும் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அவன் ஏதோ காரணத்தால் ஏழையாகிவிட்டதாகவும் வைத்துக்கொள்ளுங்கள். அவன் சௌக்கியமாக இருந்த காலத்தில், தானும் சந்தோஷமாக இருந்ததுடன் தன் வீட்டையும் நல்ல நிலைமையில் வைத்துக் கொண்டிருப்பானல்லவா? ஆனால் அவன் தானே ஆகாரத்திற்குத் திண்டாடும்போது வீட்டை எப்படி பழுது பார்ப்பான்? ஆகவே வீட்டில் ஒவ்வொரு பாகமும் இடிந்து விழுகின்றது. ஒரு தர்மப்பிரபு அவனுக்கு உதவி செய்ய நினைத்தால் என்ன செய்யவேண்டும்? அவன் குடியிருக்கும் வீட்டின் இடிந்த பாகத்தை மாத்திரம் பழுது பார்த்தால், மறுபடியும் மற்ற பாகங்கள் இடிந்து விழத்தான் செய்யும். தவிர அந்த மனிதனே ஆகாரத்திற்கு வழியின்றி இருக்கும்போது வீட்டை மாத்திரம் வைத்துக்கொண்டு என்ன செய்வதென கவலைப்பட்டு வீட்டைவிட்டு வேறு இடத்திற்குச் சென்று பிழைக்க வழி தேடலாமென்று போய்விடலாம். ஆனால் அந்த தர்மவான் அம்மனிதனுக்குப் பொருளுதவி செய்து ஒரு தொழிலோ, வியாபாரமோ செய்யும்படிச் செய்தால் அவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்வது மாத்திரமின்றி தன் வீட்டையும் நன்றாக வைத்துக்கொள்வான்.

இந்த உதாரணத்தில் வீட்டை நம் சரீரமாகவும் மனிதனை ஆத்மாவாகவும் தர்மப் பிரபுவை வைத்தியராகவும் வைத்துக்கொண்டு வியாதி எங்கு ஆரம்பமாகிறதென்றும், எப்படி வைத்தியம் செய்யவேண்டுமென்றும், சிந்தனை செய்யுங்கள். ஹோமியோபதி வைத்திய முறையில் ஔஷதங்கள் ஆத்மாவில் இருந்து படிப்படியான சௌகரியம் செய்யும்படி வேலை செய்கின்றன.


பிணியகற்றல் :

ஹோமியோபதியின் ஆதிகர்த்தாவான டாக்டர் சாமுவேல் ஹானிமென் தாம் எழுதிய ‘ஆர்கனான் ஆப் மெடிஸின்' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளதாவது

‘நிரந்தரமாகவும் கூடிய விரைவிலும் மிருதுவாவும் ஒரு முழு வியாதியையும் நிவர்த்திக்கவேண்டும்.’ அப்படி நிவர்த்திப்பது நன்றாகத் தெரிந்த முறையிலும் அதாவது ஒரு சட்டத்தை அனுசரித்து வைத்தியக் கோட்பாடுகளிலும், சாப்பிடும் ஒளஷதத்தினால் வியாதியஸ்தருக்கு யாதொரு கெடுதல் நேரிடாமலும் இருக்கும்படிப் பார்த்துச் செய்யவேண்டும்.

தாம் ஒரு வியாதியை நிவர்த்திக்கும்போது வியாதியஸ்தருடைய சரீரத்திலும் அவயவங்களிலும் ஏற்பட்டிருக்கிற மாறுதலையே வியாதியென எண்ணுகிறோம். ஒருவருக்கு சருமத்தின் மேல் ஒரு படையோ அல்லது சொறி சிரங்கோ இருந்து அவை மறைந்து விட்டால் அவ்வியாதி நீங்கிவிட்டதாக மதிக்கிறோம். சுரத்தில் தேக உஷ்ணம் குறைந்துவிட்டால் சுரம் போய்விட்டதாகக் கருதுகிறோம். ஆனால் இவைகளெல்லாம் வியாதி போய்விட்டதற்கு அறிகுறிகளாகமாட்டா. வேண்டுமானால் இவைகளை வியாதிக்குறிகள் போய் விட்டன என்று சொல்லலாமே தவிர, வியாதியே போய்விட்டதாக நினைப்பது முற்றிலும் தவறுதான். ஏனென்றால் ஒருவருக்கு முழங்காலில் கீல்வாயுவினால் வலி ஏற்பட்டிருப்பதாக அதற்கு ஏதாவது மேற்பூச்சுகள் தடவி அவ்வலி போய் விடுமானால் என்ன ஏற்படுமென்று நினைக்கிறீர்கள்? அதே வியாதி முழங்காலை விட்டு, வேறு முக்கிய உறுப்பில் போய்விடுகிறது. அதாவது அவ்வியாதி இருதயத்தில் போய் உட்கார்ந்து கொண்டால் அங்கே மேல் பூச்சுப் போட முடியுமா?


முழு வியாதி:

ஆகையினால்தான் ஹானிமென் “முழு வியாதியையும்” என்று சொல்லி இருக்கிறார். அவர் நினைத்தது வியாதிகளின் தற்கால குறிகளை நிவர்த்திப்பதல்ல. ஆகவே குறிகள் மறைந்து போவதினால் மாத்திரம், வியாதியஸ்தரின் முழு வியாதியும் நிவாரணமாகா விட்டால் அதை ‘நோய் தீர்க்கப்பட்டது' என்று சொல்வதற்கு இடமில்லையல்லவா? முழங்காலின் கீல்வாயு இருதயத்துக்கு மாற்றப்பட்டால் வியாதியஸ்தரின் வியாதி போகவில்லை என்பதுடன் முழங்காலிலிருந்த சிறிய வியாதி இருதயத்தில் பெரிய வியாதியாக மாறி விட்டது. ஆனால் தற்காலத்தில் அவ்விதமான வியாதியஸ்தர்கள் நினைப்பதென்ன? அதே வைத்தியர்களிடம் வந்து அவர்கள் முழங்கால் வலியை நிறுத்தியதைப் புகழ்ந்து மார்பு வலிக்கு மருந்து கேட்கிறார்கள். அதே வைத்தியரின் தயவால்தான் முழங்காலில் இருந்த வியாதி மார்புக்குப் போய் இருக்கிறதென்பதை அந்நோயாளி எவ்விதம் அறியக் கூடும்?


மிருதுவான சிகிச்சை:

வியாதியை நிவர்த்திப்பது துரிதமாயிருப்பதுடன் மிருதுவாகவும், சாசுவதமாகவும் இருக்க வேண்டும். ஒரு வியாதிக்கு ஔஷதத்தைக் கொடுத்தவுடன் அது வியாதியஸ்தரின் சரீரத்தில் ஒரு எரிமலையை கிளப்பி வீடக்கூடாது. தவிர, தாம் கொடுக்கும் ஔஷதங்களின் கெட்ட அம்சங்கள் வியாதியஸ்தரின் சரீரத்தில் தங்கக்கூடாது. மலேரியா சுரத்துக்கு கொய்னாவைக் கொடுத்ததினால் ஆயுள் முழுவதும் சிலர் செவிடாய் இருப்பதைக் காண்கிறோம். ஆகவே வியாதிக்கு ஒளஷதம் கொடுத்தால் அது மிருதுவாக இயற்கையைப்போல் வேலை செய்யவேண்டும். அப்படி இல்லாமல் அது ஒரு பூனைக்குட்டியை அதன் வாலை பிடித்து கூரைமேல் ஏற்றுவதுபோல் இருக்கக் கூடாது. அப்படி மிருதுவாக வேலை செய்யும் ஒளஷதங்களே ஆரம்பத்திலிருந்து முடிவு வரை ஒழுங்காக வேலை செய்யும்.


வரையறுக்கப்பட்ட சட்டம்:

மூன்றாவது, ஹானிமென் சொல்லுவது வரையறுக்கப்பட்ட சட்டம். ஒரு வைத்திய முறைக்கு சட்டம் அவசியமென்று முன்னமேயே வற்புறுத்தி உள்ளோம். வைத்திய சாஸ்திரத்துக்கு உத்தேசங்களும், அனுமானங்களும் பிரயோசனமில்லை ஹோமியோபதி வைத்திய முறையின் தத்துவங்களும் சட்டமும் எவ்வளவு யுகங்களானாலும் மாற்ற முடியாதவை. ஆகவே ஹோமியோபதி படிப்பதென்றால் இவைகளை நன்றாய்க் கற்றுணர்ந்து ஔஷதங்களின் இயற்கைக் குணங்களையும் தெரிந்துகொண்டு வியாதியில் அவைகளைச் சரியாக உபயோகிக்கவும் தெரிந்துகொண்டால் தான் ஒரு நல்ல ஹோமியோபதி மருத்துவர்களாக உருவாக வாய்ப்புகள் அதிகம் உண்டு. இவைகளைக் கடைப்பிடிப்பது வியாதிகளை மிருதுவாகவும்,  துரிதமாகவும், சாஸ்வதமாகவும் சொஸ்தம் செய்வதாகும்.  

முன் பக்கங்களில் சொல்லியபடி மனிதனின் உள்ளே இருக்கும் 'நான்' என்னும் வஸ்துவில்தான் முதலில் வியாதி ஆரம்பித்து அதிலிருந்து சரீரத்திற்கும், தசைகளுக்கும் உறுப்புக்களுக்கும் பரவுகிறது. ஆகவே வியாதி நீங்குவதும் அவ்வரிசையிலேயே இருக்கவேண்டும். இதையே வேறு விதமாகவும் சொல்லலாம். மனிதனின் முதலாவது பாகம் இஷ்டம், இரண்டாவது பாகம் அறிவு. அவனுடைய உறுப்புக்களும் சரீரமும் மூன்றவது பாகங்களாகும். எவ்வியாதியில் குறிகள் இந்த வரிசையில் நீங்குகின்றனவோ அவ்வியாதி முழுவதும் நீங்கிக் கொண்டதென்று நிச்சயமாய்ச் சொல்லலாம். ஆனால் இதற்கு எதிர்முகமாகக் குறிகள் செல்லுமானால் அதாவது வெளி அவயவங்களில் இருந்து உள் அவயவங்களுக்கும், அவைகளிலிருந்து அறிவுக்கும், இஷ்டத்திற்கும் செல்லுமானால் நாம் கொடுத்த ஒளஷதத்திற்கும், அவ்வியாதிக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லையென்று வைத்துக்கொள்ளலாம்.


நீடித்த வியாதிகளுக்குச் சிகிச்சை:


க்ரானிக் டிஸீஸஸ் (Chronic Diseases) என்று சொல்லப்படும் நீடித்த வியாதிகளில் நடப்பது இது தான். உதாரணமாக மேகவெட்டை (Gonorrhoea) வியாதியை எடுத்துக்கொள்வோம். இவ்வியாதி முதலில் தோன்றும்போது நீர்த்துவாரத்திலிருந்து வெட்டை நீர் வெளியாகிறது. அப்படி வெளிப்படும் வெட்டைநீர் அவ்வியாதியால் சரீரத்தில் உற்பத்தியாகும். துர்நீரைக் கூடுமான வரையில் வெளியேற்றுவதற்கு இயற்கையாய் ஏற்பட்ட ஒரு சாதனமாகும். ஆனால் வியாதியஸ்தர் கோருவதென்ன? அந்த வெட்டைநீர் வெளியாவதை நிறுத்திவிட வேண்டுமென்பதே. தற்கால நவீன இஞ்சக்ஷன்களாலோ அல்லது வியாதியைப் போக்காத மற்ற வழிகளாலோ அதை நிறுத்தினால் நாம் காண்பதுதான் என்ன? கீல்களில் முடக்குவாதம் எனப்படும் ருமாடிசம் (Rheumatism) ஏற்படுகின்றது. இதற்கும் வியாதியை நீக்கும் சக்தியற்ற வைத்தியம் செய்யப்படுமாயின் சரீரத்தின் முக்கிய உறுப்பாகிய இருதயமே பாதிக்கப்படுகிறது. இம்மாதிரியாக சாதாரண உறுப்புகளிலிருந்து முக்கியமான உறுப்புகளுக்கும், முடிவில் இஷ்டத்துக்கும், அறிவுக்கும் படிப்படியாய் முன்னேறிச் சென்று கொண்டே இருக்கிறது. இம்மாதிரியான ஒரு வியாதியஸ்தர் அவருடைய இருதய உபாதிக்காக நம்மிடம் வந்து நாம் அதற்கு சரியான ஔஷதமும் கொடுப்போமானால் முதன் முதலில் நாம் காண்பது அவருடைய இருதய உபாதி குணமாகி கீல்வாயு தோன்றுகிறது. நாளடைவில் இதுவும் குணமடைகிறது. ஆனால் அம்மனிதன் முதன் முதலில் கஷ்டப் பட்ட வெட்டை நீர் வெளிவர ஆரம்பிக்கும். இதுவும் சில நாட்களில் சௌகரியமாகி அம்மனிதர் முழுவதும் சொஸ்தம் செய்யப்படுகிறார்.

இம்மாதிரி ஹோமியோபதி வைத்தியத்தில் 20, 30 வருடங்களுக்கு முன் அமுக்கப்பட்ட வியாதிக் குறிகள் கூட தோன்றி அந்த முழு வியாதியும் குணமடைவது அதி அற்புதமாகும்.


மனிதனும் சரீரமும்:

வியாதியை உள்ளிருந்து வெளியே போகும்படி அதாவது மையத்திலிருந்து வெளிப்பக்கம் போகும்படியாகச் சொஸ்தம் செய்யவேண்டுமென்று சென்ற பத்தங்களிலிருந்து தெரிந்து கொண்டோம், ஆகவே மனிதனையும் அவன் சரீரத்தின் அரசாட்சியையும் பற்றி இன்னும் சற்று ஆராய்தல் அவசியமாகிறது. சரீரத்தில் இயற்கையாக நடக்கும் ஒவ்வொரு காரியத்தையும் நாம் கவனிக்கும்போது எவ்வளவு ஒழுங்காகவும் சட்ட வரம்புக்கு உட்பட்டும் அக்காரியங்கள் நடைபெற்று வருகின்றன என்பது தெரியலாகும்.

சாதாரணமாக ஒரு அரசாங்கத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். இவைகளுக்கு ஒரு தலைமை ஸ்தானமும், அங்கிருந்தே நாட்டின் எல்லா பாகங்களும் ஆளப்படுகின்றன என்பதும் தெரிய வரும் தலைமைஸ்தான நிர்வாகம் சரியில்லாவிட்டால் அதனுடைய எதிரொலி நாட்டின் பல பாகங்களிலும் தென்படும். தலைமை ஸ்தானத்தில் ஒழுங்கீனங்கள் இருந்தால் ஒவ்வொரு பாகத்திலும் ஒழுங்கீனங்கள் சம்பவித்தே தீரும். ஆனால் தலைமை ஸ்தானத்தில் அமைதியும் அதிகாரமும் ஒழுங்காக இருக்குமேயானால் ராஜ்யத்தில் எல்லா பாகங்களும் ஒழுங்காகவும், அமைதியாகவும் இருக்கும். இம்மாதிரியான அரசாங்கத்தில் ஏதோ ஒரு பட்டணத்திலோ ஜில்லாவிலோ குழப்பம் ஏற்படுவதாக வைத்து கொண்டால் தலைமை ஸ்தான நிர்வாகிகள் என்ன செய்வார்கள்? உடனே ஒரு பட்டாளத்தை அங்கு அனுப்பி அமைதியையும் ஒழுங்கையும் நிலைநிறுத்துவார்கள். இதேபோல் நமது கையிலோ காலிலோ ஒரு காயம் ஏற்பட்டாலும் அல்லது தாற்காலீகமாக அசீரணம் உண்டானாலும் இம்மாதிரியே நமது சரீர அரசாங்கமும் நடந்து கொள்கிறது. சரீரத்தில் தலைமைக் காரியாலயம் ஒரு உத்திரவைப் பிறப்பித்து காயங்களில் நல்ல இரத்தத்தை அதிகமாகப் பரவச் செய்து அதை, நாம் யாதொரு வைத்தியமும் செய்யா விட்டால் கூட, சொஸ்தம் செய்கிறது அல்லது அசீரணமாயின் வாயாலெடுக்கும்படி செய்கிறது. இதனால் அசீரண பதார்த்தங்கள் வெளியேற்றப்படுகின்றனவல்லவா?


குறிகள்: அசீரணத்துடன் வாயாலெடுப்பு ஏற்படுவதில் அசீரணமே வியாதி, வாயாலெடுப்பு அதை நீக்கத் தலைமைக் காரியாலயத்தால் அனுப்பப்பட்ட சிகிச்சை என்று கொள்க.


ஆனால் தலைமைக் காரியாலயத்திலே குழப்பம் ஏற்பட்டுவிடுமானால் அது நாடு முழுவதும் குழப்பத்தை ஏற்படுத்துவது போல் சரீரத்தின் பற்பல பாகங்களிலும் குறிகளை உண்டாக்குகின்றன. இம்மாதிரி ஏற்படுபவைகளே உண்மையான வியாதிகள். இவைகளுக்கு வைத்தியம் செய்வதாயின் முதலில் தலைமை ஸ்தானத்திலிருந்து ஆரம்பித்து அங்கிருந்தே ஒழுங்கை ஸ்தாபிக்கவேண்டும். ஒரு குழப்பம் ஏற்பட்ட அரசாங்கத்தில் முதலில் தலைமை ஸ்தானத்தில் உள்ள விஷயங்களைச் சரிவர வைத்துக்கொண்டு அதன் பிறகு நாட்டின் பல பாகங்களையும் ஆட்சிக்கு அடக்கிக் கொண்டு வருவது போலவே இதுவும் நடை பெறுகிறது.

மனித சரீரத்தின் அரசாட்சிக்கு மூலஸ்தானம் பெருமூளையாகும். இவ்விடத்திலிருந்தே சரீரத்தின் பல பாகங்களும் நரம்புகள் மூலமாய் ஆளப்படுகின்றன. இங்கிருந்து தான் நல்லதற்கும் கெட்டதற்கும் உத்திரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. ஆகவே இங்கிருந்து தான் வியாதிகளும் ஆரம்பிக்கின்றன. இங்கிருந்து ஆரப்பிக்கும் வியாதி சரீரத்தின் பல பாகங்களில் தோன்றும் குறிகள் மூலமாக நமக்கு அவைகளின் தன்மையைத் தெரிந்து கொள்ள இடம் அளிக்கின்றன. ஆகவே வியாதிகளின் தன்மையை அறிய அது சரீரத்தின் பல பாகங்களிலும் தோற்றுவிக்கும் குறிகளே ஆதாரமாகும். ஒன்றிரண்டு குறிகள் மாத்திரம் போதாது. ஒரு வியாதியின் எல்லாக் குறிகளும் தெரியவேண்டும். ஒரு வியாதியின் 'எல்லாக் குறிகளும்' ஒரு வைத்தியனுக்கு உள்ளேயிருக்கும் வியாதியைப் பிரதிபலிக்கும் கண்ணாடி போலாகும். மேலும் உள்ளிருக்கும் மூலகாரணத்தைக் காட்டும் தோற்றங்களும் இவைகளே. இவைகளையே திறவு கோலாகக் கொண்டு வியாதிகளை நிவர்த்திக்க வேண்டும். 


வியாதியை நோக்குதல்:

பிணி அகற்றலில் ஒவ்வொரு வியாதியஸ்தரிடமும் வியாதியின் அறிகுறிகள் என்ன இருக்கின்றன என்று நோக்கவேண்டும். 'நோக்குதல்' என்று நாம் சொல்லும்போது நம் ஊனக்கண்களின் பார்வையைச் சொல்லவில்லை. மனக்கண்ணால் ஆராய்வதையே சொல்லுகிறோம். இது மிகவும் அர்த்தபுஷ்டி உள்ளது. இப்பொழுது வியாதி நீங்குவதற்கான அறிகுறிகள் என்னவென்று ஆராய்வோம். இவைகள் ஒரு வியாதியின் மொத்தக் குறிகளே. ஹோமியோபதி வைத்திய முறையில் ஒளஷதம் கொடுப்பதற்கு ஒன்றிரண்டு முக்கிய குறிகள் மாத்திரம் போதாது. ஒரு பிணியாளரின் எல்லாக் குறிகளுமே வேண்டும். இந்த எல்லாக் குறிகள் மாத்திரம் வியாதியல்ல. ஆனால் இவை உள்ளே இருக்கும் வியாதியைக் காட்டும் சாதனங்களே. உள்ளே இருக்கும் வியாதியின் நிலைமையை இக்குறிகளின் மூலம் இயற்கை நமக்கு வெளியிடுகின்றது. எப்படி எலக்ட்ரிக் செல்லும் மின்சாரம் 'மீட்டர்' என்னும் கருவியினால் நமக்குத் தெரிகிறதோ அப்படியே உள்ளே இருக்கும் வியாதியின் தன்மையை இக்குறிகளால் ஒரு விஷயமறிந்த ஹோமியோபதி டாக்டர் தெரிந்துகொள்ள முடியும். ஆகவே இந்த மொத்தக் குறிகளிலிருந்து ஒரு வியாதியின் தன்மையையும் அதை நீக்குவதற்கு உள்ள வழிகளையும் தெரிந்து கொள்கிறோம்.


கொள்ளை நோயில் ஔஷத நிர்ணயம்:

ஒரு ஊரில் ஒரே தடவையில் பலருக்கு இன்புளூயன்ஸா என்னும் சுரம் வருவதாக வைத்துக் கொள்வோம். அவ்விடமிருக்கும் ஒரு ஹோமியோபதி டாக்டர் வியாதியஸ்தர்களுக்கு எவ்வாறு ஒளஷதம் கொடுக்கவேண்டுமென்று ஆராய்வோம்.

முதன் முதலில் ஒரே மாதிரி வியாதியில் அவஸ்தைப்படும் சில வியாதியஸ்தர்களின் மொத்தக் குறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இவைகளை நன்றாய் அலசிப் பார்க்கும்போது அவைகளின் பல குறிகள் ஒவ்வொரு வியாதியஸ்தருக்கும் இருந்தே தீரும். இவைகளைத் தவிர ஒவ்வொரு நோயாளிக்கும் சில குறிகள் தனித்தனியாகத் தென்படும். பலருக்கும் ஒரேமாதிரியாக இருக்கும் குறிகளைச் சாதாரணக்குறிகள் (Common Symptoms) என்றும், ஒவ்வொரு வியாதியஸ்தருக்கு தனியாக இருக்கும் குறிகளை விசேஷ குறிகள் (Particular Symptoms) என்றும் வைத்துக் கொள்ளலாம். அந்த விசேஷக் குறிகளுக்குக் காரணம் அவரவர்களின் சரீரவாகு தான். முதன் முதலில் சாதாரணக் குறிகளை மாத்திரம் எடுத்துக்கொண்டு மெட்டீரியா மெடிக்காவில் பார்க்கும்போது அதற்கு வேண்டிய ஔஷதங்கள் 5 அல்லது 6 இருக்கும். மறுபடியும் விசேஷக் குறிகளைக் கவனித்தால் இவ்வைந்து ஆறு ஔஷதங்களுள் ஒன்று அல்லது இரண்டிற்குள் நிர்ணயம் செய்துவிடலாம். இம் மாதிரியாகவே சாதாரண குறிகளைக்கொண்டு ஒரு மாதிரியான வியாதிகளுக்கு வேண்டிய ஒளஷதங்களையும், விசேஷ குறிகளைக் கொண்டு ஒவ்வொரு நோயாளியின் வியாதிக்கும் வேண்டிய ஒளஷதங் களையும் நிர்ணயிக்க வேண்டும். ஹோமியோபதி வைத்திய முறையில் வியாதியின் பெயரை நிர்ணயம் செய்யத் தேவையில்லையென்பதை முன்னமேயே எழுதியுள்ளோம். ஒரு வியாதியஸ்தருக்கு என்ன ஒளஷதம் தேவையென்று நிர்ணயம் செய்வதை ஆங்கிலத்தில் 'ஹோமியோபதி' டயக்னோஸிஸ் (Homocopathic Diagnosis) என்று சொல்லலாம்.)

சாதாரண வியாதிகளுக்கு ஒவ்வொரு தடவையும் ஒளஷதங்களை நிர்ணயித்தல் சாத்தியமில்லை. இதனால் காலதாமதம் ஏற்படும். ஆனால் இது அவசியமும் இல்லை. சாதாரண வியாதிகளுக்கு வேண்டியவைகள் எல்லாம் நமக்கு முன் ஹோமியோபதியில் ஈடுபட்டவர்கள் நிர்ணயித்து எழுதி வைத்துள்ளார்கள். அவைகளைப் பின்பற்றினாலே போதுமானது.


வியாதிக்கு ஔஷத நிர்ணயம்:

ஒரு ஹோமியோபதி டாக்டர் ஒரு வியாதியஸ்தரைக் காணப்போகும்போது அன்னாரிடம் தென்படும் எல்லாக் குறிகளையும் பார்த்துக் கொண்டும், அவ்வியாதியஸ்தர் சொல்லும் எல்லாக் குறிகளையும் கேட்டுக்கொண்டும், வியாதியஸ்தரின் பக்கத்திலுள்ளவர்கள், சொல்லக்கூடிய எல்லாக் குறிகளையும் கேட்டுக் கொண்டும் இவைகளை வரிசையாக வைத்துக்கொண்டு இந்த மொத்த குறிகளுக்குச் சரியாக மெட்டீரியா மெடிகாவில் எந்த ஔஷதத்தின் குறிகள் ஒத்திருக்கின்றனவோ, அதே அந்தப் பிணியாளருக்கு ஏற்பட்ட ஒளஷதமென்று நிர்ணயிக்கவேண்டும். இவைகளைக் காகிதத்தில் எழுதிக்கொண்டு சரிபார்க்காவிட்டாலும் மனதிலாவது சரிபார்க்கவேண்டும். இம்மாதிரி சரி பார்த்துவிட்டால் ஹோமியோபதி ஔஷதம் கொடுக்கப் போதுமான அளவு நாம் சரியான வழியில் பிரயாசைப்பட்டு விட்டோமென்று சொல்லலாம்.

ஆனால் ஜனங்களின் மனதைத் திருப்தி செய்ய வியாதியஸ்தருடைய வியாதியைக் கண்டுபிடித்துச் சொல்வது என்பது சாதாரணமாக வழங்கி வருகிற ஒரு வழக்கம். அதாவது ஒரு வைத்தியர் ஒரு வியாதியஸ்தர் என்ன வியாதியால் அவஸ்தைப்படுகிறார் என்று ஒருவருக்கும் புரியாத ஒரு பாஷையில் சொன்னால்தான் ஔஷதம் புசிப்போர் அந்த வைத்தியருக்கு வைத்தியம் செய்யத் தெரியுமென்ற மூட நம்பிக்கையில் இருக்கின்றனர். அதற்காகவே நமது பாடங்களில் ‘வியாதியின் குணங்களும் அவற்றிற்கு வைத்தியமும்' என்னும் பாடங்களையும் எழுதுவதாக நிச்சயித்திருக்கிறோம். சாஸ்திரீயமாய் ஹோமியோபதி வைத்தியம் செய்வதற்கு வியாதிகளின் பெயர்களைக் கண்டுபிடிப்பது அனாவசியமே.

இவ்விஷயமாகப் காலமாக ஹோமியோபதி டாக்டர்களிடையே வழங்கி வரும் பழங்கதை ஒன்று உண்டு. அது பின்வருமாறு :-

'ஒரு ஊரில் ஒரு பிரபல ஹோமியோபதி டாக்டர் இருந்தார். அவர் பெரும் புகழ் பெற்றிருந்ததோடு சாஸ்திரீயமாய் ஹோமியோபதியை அனுஷ்டித்தும் வருபவர். ஒரு வியாதியஸ்தர் அந்த டாக்டரால் பரிசோதனை செய்யப்பட்டவுடன், தான் என்ன வியாதியினால் அவஸ்தைப்படுகிறோமென்று தெரிந்துகொள்ள விரும்பினார். டாக்டர் அவருக்கு “ரச்டாக்ஷி கோடண்டரன்" என்னும் வியாதி இருப்பதாகத் தெரிவித்தார். உடனே அவ்வியாதியஸ்தர் "ஆமாம் டாக்டர், நான் கூட இது ஒரு புது வீயாதியாகத் தான் இருக்கவேண்டுமென்று நினைத்தேன். அது போலவே நீங்களும் சொல்லி விட்டீர்கள்" என்றாராம்.

இங்கே "ரஸ்டாக்ஸி கோடண்ட்சன்" என்பது ஒரு வியாதியல்ல. அது வியாதியஸ்தர் உட்கொள்ள வேண்டிய ஹோமியோபதி ஔஷதம். தற்காலத்தில் மக்கள் தங்களுக்குப் பழைய வியாதிகள் வருவதை விரும்புவது இலலை. ஏதாவது ஒரு புது மாதிரியான நவீன வியாதி தங்களுக்கு வத்திருப்பதாகச் சொல்லிக் கொள்வதில் பெருமைகூட அடைகின்றனர். இம் மாதிரியாகப் புது வியாதிகளைச் சிருஷ்டிக்கும் டாக்டர்களை விரும்புவதுடன் அவர்களை மெச்சவும் செய்கின்றனர். இதுவே 'காலத்தின் கோலம்' போலும்.


மெட்டீரியா மெடிகாவின் அவசியம்:

ஒரு வியாதி என்று சொல்லும்போது அவ்வியாதியின் முழு விபரங்களையும் தெரிந்துகொள்ளவேண்டும். அந்த வியாதியின் எல்லா குறிகளையும் எடுத்துக் கொண்டு அவைகளை ஒரு படத்தைப்போல் மனதில் படியும்படியாக தெரிந்து கொள்ளவேண்டும். இம் மாதிரியாக ஒரு வியாதியின் தன்மையையும் குறிகளையும் நன்றாகத் தெரிந்துகொண்டு இம்மாதிரியான குறிகளையெல்லாம் சேர்ந்தாற்போல் நீக்கக்கூடிய ஒளஷதம் எது என்று 'ஔஷதக் குணங்கள்' என்று வழங்கும் மெட்டீரியா மெடிகாவின் உதவியால் கண்டு பிடிக்கவேண்டும். உலகில் மக்களிடையே தோன்ற கூடிய எல்லா வியாதிகளையும் நிவர்த்திக்கக்கூடிய ஹோமியோபதி ஔஷதங்கள் இருக்கின்றன. தாவர வர்க்கத்திலும், தாது வர்க்கத்திலும், இன்னும் பிராணி வர்க்கத்திலிருந்தும், உற்பத்தி செய்யப்படும். ஒளஷதங்கள் மானிடர்களிடம் தோன்றும் எல்லா வியாதிகளையும் நிவர்த்திக்கவல்லவை. ஒருவர் மெட்டீரியா மெடிகாவில் நல்ல தேர்ச்சியுடையவராக இருந்தால் உலகத்தில் தோன்றும் எல்லா வியாதிகளையும் நிவர்த்திக்க முடியும்.


வியாதி ஆரம்பிக்கும் இடம்:

முன் பக்கங்களில் நாம் தெரிந்துகொண்டது என்னவென்றால் ஒவ்வொரு வியாதியும் சரீரத்தினுள்ளே அதாவது அந்தராத்மாவில் தோன்றி அதன் பிறகே வெளியில் வருகின்றது என்பது. ஆகவே நிஜமான ஒரு வியாதியை உண்டுபண்ணுவதற்கும் முரட்டுப் பதார்த்தங்கள் உபயோகப்பட மாட்டா. மிகவும் நுண்ணிய பதார்த்தங்களாலேயே வியாதிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.


மருத்துவ குறிப்புகள் : நோயாளி யார்? - மருத்துவ குறிப்புகள் [ மருத்துவம் ] | Medicine Tips : Who is the patient? - Medicine Tips in Tamil [ Medicine ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்