
திருவாரூரில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் தஞ்சை செல்லும் சாலையில் விளமல் என்ற ஊரில் பதஞ்சலி மனோகரர் கோயில் உள்ளது.
முன்னோர் ஆசி கிடைக்க அருளும் கோவில்
திருவாரூரில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் தஞ்சை செல்லும் சாலையில் விளமல்
என்ற ஊரில் பதஞ்சலி மனோகரர் கோயில் உள்ளது. இந்த கோவிலில் இறைவனாக பதஞ்சலி மனோகரரும்.
மதுரபாஷினியும் இறைவியாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
அருணகிரி நாதரால் பாடல் பெற்ற இத்தலம் சக்தி பீடங்களில் வித்யா பீடமாக
விளங்குகிறது.
ஒரு சமயத்தில் மகாவிஷ்ணுவை எப்போதும் தாங்கிக் கொண்டிருந்த
ஆதிசேஷனுக்கு அவர் பாரமாக தெரிந்தார். இதுவரை நீங்கள் எனக்கு பாரமாக இருந்ததில்லை.
இப்போது மட்டும் நீங்கள் எனக்கு பாரமாக இருப்பதுபோல் தோன்றுகிறதே ஏன்?
என்று அதுபற்றி மகாவிஷ்ணுவிடமே கேட்டார் ஆதிசேஷன்.
அதற்கு மகாவிஷ்ணு, கலி பிறப்பதற்கு முன்னால் முனிவர்களும்,
ரிஷிகளும் என்னையே நினைத்து தவம் இருந்து
கொண்டிருந்தார்கள். சிவத்தின் மகிமையை முனிவர்களும், ரிஷிகளும் உணரவேண்டும். அவர்களால்தான் கலி காப்பாற்றப்பட
வேண்டும் என்பதற்காக சிவபெருமான் பிச்சாடனராகவும், மகாவிஷ்ணுவான நான் பெண்ணாகவும் வேடமிட்டு அவர்களை நான்
மயக்கினேன். அவர்கள் என் பினனால் வந்தபோது பிச்சாடனரான சிவபெருமான் ஆனந்த தாண்டவ
நடனம் ஆடினார். அதனைக் கண்டு நானும் முனிவர்களும், யோகிகளும், பிரம்மனும், தேவர்களும் மெய்மறந்து நின்றோம். அந்த காட்சியை நான்
நினைத்துக் கொண்டிருந்ததால் நான் உனக்கு பாரமாக தெரிகிறேன். என்றார்.
அதனை கேட்ட ஆதிசேஷன், நானும் அந்த சிவபெருமானின்
நடனத்தை காண அனுக்கிரகம் புரிய வேண்டும் என்று விஷ்ணுவிடம் வேண்டினார். அதற்கு
மகாவிஷ்ணு, நீ
இங்கிருந்து சென்று ஈசனை நோக்கி தவம் இரு. நீ விரும்பிய வண்ணமே நடக்கும். என்று
அருளாசி வழங்கினார்.
ஆதிசேஷனும் ஈசனை நோக்கி கடுமையாக தவம் இருந்தார். அவரது
தவத்தை மெச்சிய ஈசன், உனக்கு
என்ன வேண்டும்? கேள்
என்றார். உடனே ஆதிசேஷன், அய்யனே. முன்பு ஒரு முறை என் பிரபு விஷ்ணுவுக்கும்,
பிரம்மதேவனுக்கும். சிவனடியார்களுக்கும் ஆனந்த நாத்தன
தரிசனம் அளித்தீர்களாமே, அதை இந்த எளியேனும் காண அருளாசி புரிய வேண்டும். என்று
வேண்டினார்.
அதற்கு சிவன், ஆதிசேஷா... நீ பூமிக்கு போகும் நேரம் வந்துவிட்டது. கலிபூமி
படைக்கப்படும். அத்திரி முனிவரும், அனுசுயாதேவியும் என்னை நோக்கி தவம் இருந்து வருகிறார்கள்.
நீ அவர்களுக்கு பிள்ளையாக பிறக்க வேண்டும் என்று வரம் கேட்டுள்ளனர். நானும் வரம்
அளித்திருக்கிறேன். இந்த கங்கை வழியாக பாம்பாக சென்று அவர்களுக்கு பிள்ளையாக பதஞ்சலி
என்ற பெயருடன் வியாக்ரபுரத்தில் பிறப்பாய். அங்கே புலிக் கால்களுடனும்,
புலிக் கைகளுடனும், உன் வருகைக்காக வியாக்ரபாதர் காத்திருப்பார். அவருடன்
சேர்ந்து நீ என் ஆனந்த நடனத்தைக் காண்பாய் என்று ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார்.
அதன்படி வியாக்ரபுரத்தில் அத்திரி முனிவருக்கும்,
அனுசுயா தேவிக்கும், பதஞ்சலி என்ற பெயரில் மகனாக ஆதிசேஷன் பிறந்தார்.
வியாக்ரபாதருடன் சேர்ந்து தில்லையில் மகாசிவனின் ஆனந்த நடனத்தை கண்டு மெய்மறந்து
நின்றனர்.
அப்போது பதஞ்சலியும், வியாக்ரபாதரும் சிவனிடம் இந்த ஆனந்த அய்யனே,
உம் ஆனந்த நடனத்தை காணும் பேறு பெற்றதை எண்ணி பெருமகிழ்ச்சி
அடைகிறோம். நடனத்தை போல் மேலும் தங்கள் அஜபா நடனத்தையும், ருத் தாண்டவத்தையும் என்றென்றும் காண விரும்புகிறோம்.
தங்களின் திருவடி தரிசனத்தையும் எல்லோரும் காண வழி செய்ய வேண்டும்.என
கேட்டுக்கொண்டனர்.
அதற்கு சிவபெருமான், நீங்கள் இருவரும் ஸ்ரீபுரம் செல்லுங்கள் (ஸ்ரீபுரம் தற்போது
திருவாரூர் என்று அழைக்கப் படுகிறது) அங்கே எம் நடனங்களையும்,
எம் திருவடி தரிசனத்தையும் காண்பீர்கள் என்று கூறினார்.
சிவனின் ஆணையின்படி பதஞ்சலியும், வியாக்ரபாதரும் திருவாரூர் வந்தார்கள். திருவாரூரில்
எங்கெங்கும் சிவலிங்கமாகவே இருக்க, பதஞ்சலி தன் உடலை பாம்பாகவும், வியாக்ரபாதர் தன் உடலை புலிக்காலாகவும் மாற்றிக்கொண்டு
அன்னை கமலாம்பாளை வணங்கினர்.
அம்பாள். மண்ணால் லிங்கத்தைப் பிடிக்க உத்தரவிட்டாள்.
விமலாக்க வைரம் என்ற அந்த தேவலோக மண்ணில் விளமர் என்ற அந்த இடத்தல் பதஞ்சலி
லிங்கத்தைப் பிடித்தார். அப்போது சிவபெருமான் தோன்றினார். உடனே பாடினார் பதஞ்சலி.
தேவகாந்தாரி என்ற சமஸ்கிருதம் பிறந்தது.
தொடர்ந்து சிவபெருமான் அஜபா நடனம் ஆடியதோடு,
தியாக முகம் காட்டி தன் ருத்ர பாதத்தை காட்டினார்.
மகாவிஷ்ணு, பிரம்மதேவர்,
முசுகுந்த சக்கரவர்த்தி, தேவாதி தேவர்கள் எல்லாம் புடைசூழ நின்று கண்டுகளித்தார்கள்.
பதஞ்சலி தியாகராஜரோடு விளமலில் அமர்ந்து விட்டார்.
இதையொட்டி, இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று உத்திரபாத
தரிசனம் காட்டும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. மேலும்,
சிவபெருமான் காட்டிய ருத்ர பாதத்திற்கு தினமும் பூஜைகள்
நடைபெறுகின்றன. இத்தலத்தில் வடகிழக்கு முகமாக நந்தி வீற்றிருக்கிறது. இவ்வாறு
நந்தி வடகிழக்கு முகமாக உள்ளதை வேறு எந்த தலத்திலும் காணமுடியாது.
இக்கோவிலில் வந்து வழிபாடு செய்தால் நோய்கள்
நிவர்த்தியாகும். ஆயுள் விருத்தியாகும். திருமணமாகாதவர்களுக்கு திருமணமாகும்.
முக்தி கிடைக்கும். கல்வியில் சிறப்பு பெறலாம் என்கிறார்கள். மேலும் இங்கு ஒரு
பிடி அன்னதானம் செய்தால், பல அஸ்வமேத யாகம் செய்த பலனை பெறலாம் என்பதும் ஐதீகம்.
இந்த கோவிலில் மாதந்தோறும் திருவாதிரை நட்சத்திரம் மற்றும்
மகாளய அமாவாசை அன்று நோய் நொடி இல்லாமல் நலமுடன் வாழ மிருத்ஸ்ங்க மகாஹோமமும்,
அதனைத் தொடர்ந்து மகா அபிஷேகமும் நடைபெறுகிறது. மேலும்,
ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்று மாலை 6 மணிக்கு லலிதா சகஸ்ரநாம ஹோமமும், பவுர்ணமி பூஜையும் நடக்கிறது. இதேபோல தேய்பிறை அஷ்டமி அன்று
மாலை 7 மணிக்கு
பைரவருக்கு, பச்சை
கற்பூரம், ஏலக்காய்,
முந்திரி ஆகியவற்றால் அபிஷேகமும் நடத்தப்படுகிறது.
அமைவிடம்:
திருவாரூரில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.
திருவாரூரில் இருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளது.
சிவதொண்டில் இருந்து தவற விரும்பாத ஒரு அடியார். இறைவன்
வேண்டுகோளுக்கு இணங்க தனது ஒரே மகனையே கறி சமைத்து பரிமாறினார்.
நாகை மாவட்டம் திருமருகலுக்கு மேற்கே ஒரு கிலோமீட்டர்
தூரத்தில் உள்ள திருச்செட்டாங்குடியில் இந்த சம்பவம் நடந்தது. பிள்ளைக்கறி கேட்ட
இறைவன் இங்கு உத்திராபதீஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இறைவன் எப்படி
தனக்கு பிள்ளைக்கறி வேண்டும் என்று கேட்பான்? அதையும் மீறி கேட்டால் அதில் நிச்சயம் ஒரு காரணம் இருக்கும்
தானே? அந்த
வரலாற்றை பார்ப்போம்.
நரசிம்ம பல்லவ மன்னனிடம் படைத்தளபதியாக இருந்தவர்
பரஞ்சோதியார். இவர் மன்னரின் ஆணைப்படி வாதாபி மீது போர் தொடுத்து வெற்றி பெற்றார்.
பின்னர் சிவதொண்டில் ஈடுபட விரும்பி சிறுதொண்டர் என்னும்
பெயருடன் தனது சொந்த ஊரான திருச்செங்காட்டன்குடி வந்து சேர்ந்தார். அங்கே அவரது
மனைவியான திருவெண்காட்டு நங்கையுடன் சிவதொண்டில் ஈடுபட்டு வந்தார்.
நாள்தோறும் ஒரு சிவனடியாருக்காவது அன்னமிட்ட பின்னர் உண்பது
அந்த தம்பதியருக்கு வழக்கம். ஒருநாள் சிவனடியார் யாரும் வரவில்லை. அடியாரைத் தேடி சிறுதொண்டர்
வெளியில் புறப்பட்டார். சிறுதொண்டரின் அன்பை சோதிக்கும் பொருட்டு இறைவன்
சிவனடியார் வேடம் தாங்கி சிறுதொண்டரின் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்த
திருவெண்காட்டு நங்கையிடம் அடியாராக வந்த சிவபெருமான், நான் பெண்கள் இருக்கும் வீட்டில் புகுவதில்லை.
கணபதீச்சரத்து (திருச்செங்காட்டங்குடி கோவில்) அருகே உள்ள ஆத்தி மரத்தடியில்
இருக்கிறேன் என்று கூறிவிட்டுச் சென்றார்.
அடியார் கிடைக்காமல் மனம் வருந்திய நிலையில் வீடு திரும்பிய
சிறுதொண்டநாயனார் நடந்ததை அறிந்தார். உடனே ஆத்தி மரத்தடிக்கு ஓடினார். அங்கு
சிவனடியார் உருவில் இருந்த சிவபெருமானை வணங்கி விருந்துண்ண வீட்டுக்கு வருமாறு
அழைத்தார். அதற்கு சிவபெருமான், எனக்கு பெற்றோர் விருப்பத்தின் பேரில் ஊனமில்லாத தலைமகனின்
கறி சமைத்து தந்தால்தான் சாப்பிட வருவேன் என்று கூறினார்.
அடியாரின் இந்த பதிலை சற்றும் எதிர்பார்க்காத சிறுதொண்டர்
மிகவும் அதிர்ச்சியில் உறைந்து போனார். அந்த அடியார் கேட்டதை கொடுக்காவிட்டால்
சிவதொண்டாற்றுவதில் குறை ஏற்பட்டு விடுமே என்று மிகவும் அஞ்சினார்.
அதனால் அடியாராக வந்த சிவபெருமானுக்கு தலைமகன் கறி
சமைத்துக் கொடுக்க சம்மதித்தார். குருவின் பாடசாலைக்கு கல்வி கற்கச் சென்றிருந்த
தனது ஒரே மகன் பாசத்திற்கு உரிய தனது செல்ல மகன் சீராளனை அழைத்து வந்தார்.
நடக்கப்போகும் விபரீதம் தெரியாமல் வந்தான் அந்த சிறுவன். பத்து மாதம் சுமந்து
பெற்றெடுத்த பிள்ளையை சிறுதொண்டர் தம்பதியினர் அறுத்து கறி சமைத்தனர்.
அமுது கேட்டு அடியாராக வந்த இறைவனை அழைத்து அமுது
படைத்தனர். சாப்பிட அமர்ந்த இறைவன் உன் மகனையும் அழைத்து என் பக்கத்தில் அமர வைத்தால்
தான் சாப்பிடுவேன் என்று பிடிவாதம் செய்தார். மகன் தான் கறியாகி விட்டானே,
எப்படி வருவான் என்று எண்ணிய சிறுதொண்டர்,
அவன் வரமாட்டான் என்றார். அதற்கு இறைவன்,
வெளியே சென்று அவனை கூப்பிடும்.. முதலில் வெளியே சென்று
கூப்பிட்டு வாரும் என்று சொன்னார். அவன் வருவான் என்றார். அதன்படியே வீட்டிற்கு
வெளியே வந்த சிறுதொண்டர், மனைவியுடன், தன்னை அறியாமல் வந்த கண்ணீரையும் துடைத்துக் கொண்டு,
மகனே... என்று அழைத்தார். அப்போது அந்த அதிசயம் நிகழ்ந்தது.
அவனுடைய திருவிளையாட்டு நிகழ்ந்தது.
குருகுலத்தில் இருந்து வருவதைப் போல சீராளன் ஓடி வர அவனை
அப்படியே வாரியெடுத்து அணைத்துக் கொண்டனர் சிறுதொண்டர் தம்பதியினர். அவர்களது கண்களில்
அதுவரை வழிந்த கவலை கண்ணீர் மறைந்து, ஆனந்தக் கண்ணீர் பெருக்கோடியது. மகனை மகிழ்ச்சியுடன்
அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் வந்தனர். அப்போது அங்கே அடியாரைக் காணவில்லை.
அதன் பின்னர் தான் அவர்களுக்கு தெரிந்தது. தங்கள்
இல்லத்திற்கு அமுதுண்ண வந்தது சாட்சாத் அந்த இறைவனே என்று. எல்லாம் வல்ல இறைவனின்
திருவிளையாடல் தெரிந்தது. அப்போது சிவபெருமான் அன்னை பார்வதியுடன் சோமஸ்கந்தராகக்
காட்சியளித்து அருளாசி வழங்கினார். இந்தச் சம்பவம் நிகழ்ந்த நாள் சித்திரை மாதம்
பரணி நட்சத்திர நாளாகும். இன்னும் இந்த ஐதீகம் அமுது படையல் திருநாளாக ஆண்டுதோறும்
இங்கு நடைபெற்று வருகிறது.
இக்கோவிலில் சுமார் 93 அடி உயரமுள்ள ஐந்து நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கி
அமைந்துள்ளது. உள்ளே தெற்கு நோக்கிய சன்னதியில் வாய்த்த திருகு குழலி என்ற
பெயருடன் அன்னை காட்சி தருகிறாள்.
உட்பிரகாரத்தில், சிறுத்தொண்டர், திருவெண்காட்டு நங்கை, சீராளன் ஆகியோரது சிலைகள் உள்ளன. இங்குள்ள சத்ய புஷ்கரணி,
சூரிய தீர்த்தம், இந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், யம தீர்த்தம், வாயு தீர்த்தம்,
சந்திர புஷ்கரணி, சீராளன் தீர்த்தம் ஆகியவை பாவங்களை போக்கி நன்மைகளை
அளிக்கும் புண்ணிய தீர்த்தங்களாக உள்ளன.
திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், காளமேகப் புலவர், அருணகிரிநாதர் போன்ற ஆன்மீக சான்றோர்களால் பாடல் பெற்ற
இத்திருத்தலம் வேளாக்குறிச்சி ஆதீனத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
ஆன்மீக குறிப்புகள் : முன்னோர் ஆசி கிடைக்க அருளும் கோவில் - குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : An auspicious temple to get the blessings of the ancestors - Tips in Tamil [ spirituality ]