தெரிந்த விநாயகர் - தெரியாத தகவல்கள்

குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள் ]

Known Ganesha - Unknown Information - Tips in Tamil

தெரிந்த விநாயகர் - தெரியாத தகவல்கள் | Known Ganesha - Unknown Information

பெயர் விளக்கம்: விநாயகர் பெயரில் வரும் வி என்றால் இதற்கு மேல் இல்லை என்று பொருள்.

தெரிந்த விநாயகர் - தெரியாத தகவல்கள்

 

1. பலரது இஷ்ட அறியாத தகவல்கள் தெய்வமான விநயாகர் பற்றி நீங்கள் அறியாத தகவலகள்

 

பெயர் விளக்கம்: விநாயகர் பெயரில் வரும் வி என்றால் இதற்கு மேல் இல்லை என்று பொருள். நாயகர் என்றால் தலைவர் என்று பொருள் இவருக்கு மேல் பெரியவர் யாருமில்லை என்பதே விநாயகர் பெயரின் அர்த்தம்

மேலும், விநாயகருக்கு அர்ச்சனை செய்யும்போது ஓம் அநீஸ்வராய நம என்பார்கள். இதில் அநீஸ்வராய என்றால் தனக்கு மேல் ஒரு ஈஸ்வரனே இல்லை என்று பொருள்.

 

கணபதி என்பது: விநாயகருக்கு கணபதி என்றும் பெயர் உண்டு. இந்த சொல்லில் என்பது ஞானத்தைக் குறிக்கிறது. என்பது ஜீவர்களின் மோட்சத்தைக் குறிக்கிறது. பதி என்பது தலைவன் எனப் பொருள்படுகிறது.

 

வடிவம் சொல்வது என்ன? விநாயகரின் உருவமே வித்தியாசமானது. மனித உருவமும் விலங்கு உருவமும் கலந்தது. யானைத் தலை, கழுத்துக்குக் கீழே மனித உடல், மிகப் பெரிய வயிறு, இடது பக்கம் நீண்ட தந்தம், வலது பக்கம் சிறிய தந்தம் ஆகியவை கொண்டவர் விநாயகர்.

அவரது நீண்ட தந்தம் ஆண் தன்மையையும், சிறிய தந்தம் பெண் தன்மையையும் குறிக்கும். அதாவது ஆண். பெண் ஜீவராசிகள் அவருக்குள் அடக்கம் என்பதை இது உணர்த்துகிறது. யானை அஃறிணை உயிரினம். மனிதன் உயர்திணையில் வருபவன். ஆக, அஃறிணை, உயர்திணை அனைத்தும் கலந்தவரும் அவரே. அதோடு, பெரும் வயிறைக் கொண்டதால் பூதர்களை உள்ளடக்கியவர். மொத்தத்தில் அவரே அனைத்தும் என்கிறது அவரது வடிவ தத்துவம்.

மேலும் விநாயகருக்கு தும்பிக்கையுடன் சேர்ந்து ஐந்து கரங்கள் இருக்கிறது. துதிக்கையில் புனித நீர்க்குடம் வைத்துள்ளார். பின் வலது கைகளில் அங்குசம், இடது கையில் பாசக்கயிறு, முன்பக்கத்து வலது கையில் ஒடிந்த தந்தம், இன்னொரு இடது கையில் அமிர்த கலசமான மோதகம் ஆகியவை இருக்கும். தன் கையில் உள்ள புனித நீர்க்குடத்தைக் கொண்டு உலக வாழ்வில் உழன்று தத்தளித்துக் களைத்துத் தன்னைச் சேரும் மக்களின் தாகம் தணித்து களைப்பைப் போக்கி பிறப்பற்ற நிலையை அளிக்கிறார் விநாயகர். அங்குசம் யானையை அடக்க உதவும் கருவி. அதனால்தான் இவரது முகம் யானை வடிவில் இருக்கிறது. பாசக்கயிறு கொண்டு தன் பக்தர்களின் எதிரிகளைக் கட்டிப்போடுகிறார். ஒடிந்த தந்தம் கொண்டு பாரதம் எழுதுகிறார். இது மனிதன் முழுமையான கல்வியைப் பெறவேண்டும் என்பதைக் குறிக்கிறது. இடது கையில் மோதகம் வைத்துள்ளார். சாதாரண மோதகம் அல்ல இது. உலகம் உருண்டை. மோதகமும் உருண்டை. உலகத்துக்குள் சகல உயிர்களுக்கும் அடக்கம் என்பது போல தனக்குள் சகல உயிர்களும் அடக்கம் என்பதையே இது காட்டுகிறது.

 

2. கேட்கும் வரம் தரும் கற்பக விநாயகர்

 

விநாயகப் பெருமானுக்கு ஊர்கள் தோறும் கோவில்கள் இருந்தாலும், பிள்ளையார்பட்டியில் உள்ள கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்குள்ள விநாயகர் கற்பக விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரை அடுத்து காரைக்குடிக்கு முன்னதாக பிள்ளையார்பட்டி அமைந்துள்ளது. கேட்டதை கொடுக்கும் கற்பக விருட்சமாக இத்தலத்தில் அமர்ந்துள்ளார் கற்பக விநாயகர். இவரை கற்பக விநாயகர் என்றே அழைத்தாலும் இவருக்கு தேசி விநாயகர் என்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பெயரும் உண்டு. தேசி விநாயகர் என்ற பெயருக்கு ஒளி மிக்க விநாயகர், அழகுள்ள விநாயகர் என்று பொருள். தேசிகன் என்ற சொல் வணிகர்களைக் குறிப்பிடும் சொல். அதனால் வணிகர் குலம் தழைக்க அருள் புரியும் விநாயகர் இவர் என்றும் இவர் போற்றப்படுகிறார்.

இக்கோவிலில் உள்ள கற்பக விநாயகரின் திருவருவம் காலத்தால் பழைமை வாய்ந்தது. வலது கையில் ஒரு சின்ன லிங்கமும், இடது கரத்தைத் தனது தொந்தியைச் சுற்றியுள்ள வயிற்றுக் கச்சையின் மீது வைத்துக் கொண்டும் அமர்ந்திருக்கிறார். தும்பிக்கை வலமாக சுழித்துக் கொண்டிருக்கிறது. வலம்புரியாக வளைந்த தும்பிக்கையும், தந்தங்களின் அமைப்பும் அழகாக அமைந்திருக்கிறது. மார்பில் முப்புரி நூல் இல்லாமல் வயிற்றை முப்பட்டையாலான உத்ரபந்தம் அலங்கரிக்க, தலையில் மகுடம் சூடி வடக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார் கற்பக விநாயகர்.

 

வரலாறு: கஜமுகாசுரனைக் கொன்ற பழி விலக சிவபெருமானை நோக்கி விநாயகப் பெருமான் தவம் இருந்த திருத்தலம் இது. இங்கு அவர், சிவபெருமானை வடக்கு நோக்கி அமர்ந்து பூஜித்ததாக சொல்கிறார்கள்.

மலைக்குன்றைக் குடைந்து அமைக்கப்பட்ட குடவரைக் கோவில் இது. சுமார் 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் பாண்டியர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகும். இதன் மூலம் பல்லவர்களுக்கு முன்பே குடவரைக் கோவில் அமைத்த பெருமை பாண்டியர்களுக்கு உண்டு என்பது புலனாகிறது. பெருபரணன் என்ற மன்னனின் பெயர் இக்கோவில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்த கல்வெட்டு தகவலின்படி மகேந்திரவர்ம பல்லவன் காலத்திற்கும் முன்பு இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தது இந்தக் குடவரைக்கோவில் என்பது தெரிய வருகிறது.

 

பிள்ளையார்பட்டி என்பது இன்றைய வழக்கில் இருக்கும் பெயர். இந்த ஊருக்கு, எருக்காட்டூர், மருதங்குடி, திருவீங்கைக்குடி, திருவீங்கைச்வரம், ராஜ நாராயணபுரம், மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேச மாநகரம், பிள்ளைநகர் என்ற பெயர்களும் உண்டு. இக்கோவில் கல்வெட்டுக்கள் மூலம் இத்தலத்தின் முற்காலப் பெயர்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

தற்போது நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் மேற்பார்வையில் மிகச் சிறப்பான முறையில் ஆகம முறை தவறாமல் இங்கு வழிபாடுகள் நடைபெறுகிறது.

 

3. செவ்வாய் தோஷம் போக்கும் தண்டபாணி

 

செவ்வாய் தோஷம் ஒருவரது ஜாதகத்தில் இந்த தோஷ அமைப்பு இருந்தால் அவரது திருமணம் காலதாமதம் ஆகும் என்பது எல்லோரும் அனுபவரீதியாக உணர்ந்த உண்மை. சிலரது வாழ்வில் இந்த தோஷம் அவர்களது கல்யாணக் கனவையே கானல் நீராக்கி இருக்கிறது.

வரம் தரும் தெய்வங்களை தேடிச் சென்று வழிபட்டால்தான் செவ்வாய் தோஷ நிவர்த்திக்கு பரிகாரம் கிடைக்கும் என்கிறார்கள் ஆன்மீகப் பெரியவர்கள். அந்த வகையில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் நாடிச் சென்று வழிபட வேண்டிய கோவில்தான் திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த ரெ.குன்னத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள தண்டபாணி சுவாமி மலைக்கோவில்.

 

சித்தூர்-கூடலூர் நெடுஞ்சாலையில் போளூரில் இருந்து 2 கி.மீ தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு தண்டபாணி சுவாமி கோவில் கட்டப்பட்டது. மலைக்கோவிலான இக்கோவிலின் மேற்கே ஜவ்வாது மலைத்தொடரும், வடக்கே புகழ்பெற்ற படவேடு ரேணுகாம்மாள் கோவிலும், தெற்கே பஞ்சபூத அக்னி ஸ்தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலும் உள்ளது. கார்த்திகை தீபத்தன்று இந்த மலையில் இருந்து திருவண்ணாமலை தீபத்தை தரிசனம் செய்யலாம்.

 

'திருநதிக்குன்றம்’ இந்த கோவிலுக்கு பல சிறப்புகள் உண்டு. ராஜகம்பீரநல்லூர் என்னும் ரெ.குன்னத்தூர் மலையை சுற்றி முன்னொரு காலத்தில் 3 நதிகள் ஓடியதாகவும், அதன் காரணமாக இந்த கோவிலுக்கு திருநதிக்குன்றம் என்ற சிறப்பு பெயர் ஏற்பட்டதாக சொல்கிறார்கள். கோவிலின் அடிவாரப் பகுதியில் விநாயகர் மற்றும் நவக்கிரக சந்நதிகள் உள்ளன. சுமார் 100 படிகளை கடந்து மேலே சென்றால் மூலவரது எழில் கொஞ்சும் திருமேனியைக் காணலாம்.

 

நாள் எல்லாம் பார்க்கும் வண்ணம் அகிலத்தின் அழகை எல்லாம் தன்னுள் அடங்கி அருள்பாலிக்கும் மூலவர் தண்டபாணி சுவாமி சிரித்த முகத்துடன் நின்ற கோலத்தில், கையில் தண்டம் ஏந்தி கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். பீடம் ஓம் வடிவத்தில் உள்ளது. குன்றின் மேல் படிக்கட்டில் ஏறிவரும்போதே நமது பிரார்த்தனைகளை சொல்லியபடி வந்தால் அவை நிறைவேறிவிடுவதாக ஐதீகம்.

 

திருச்செந்தூர் முருகன் போல இங்குள்ள மூலவர் கிழக்கு நோக்கியும், உற்சவர் தெற்கு நோக்கியும் அமைந்துள்ளது தனிச்சிறப்பாகும். இதில் வள்ளி, தேவசேனாவும், சுப்பிரமணியரும் உள்ளனர். குன்றின்மீது தல விருட்சமாக அத்திமரம் உள்ளது. ஒரு மரம் பட்டுபோனாலும் அதே இடத்தில் வேறு அத்திமரம் உருவாகிறது. இது தெய்வ செயல் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

 

வைணவ சம்பிரதாயம்: இங்கு வரும் பக்தர்களுக்கு அர்ச்சகர்கள் விபூதி கொடுத்து 'சடாரி' சாற்றுகிறார்கள். அதற்கு காரணம் இக்கோவில் ஏற்கனவே வைணவ திருக்கோவிலாக இருந்ததுதான். முன்பிருந்த பெருமாள்கோவில் காலப்போக்கில் சிதிலமடைந்ததால் ஊரில் உள்ளோர் சுற்றுப்புறத்தில் முருகப்பெருமான் கோவில் ஏதும் இல்லாத நிலையில் அந்த கோவிலை உருவாக்கி இருக்கிறார்கள். ஆரம்பத்தில் அவர்கள் முருகப்பெருமானுக்குரிய அடையாளமாக வேல் மட்டுமே நிறுவினர். அதன்பிறகே இன்றைய கோவில் எழுப்பப்பட்டது.

 

திருமாலின் மருமகனான திருமுருகன் இங்கு குடிகொண்டுள்ளதால் பழைய ஐதீகம் மாறாமல் இருக்க பக்தர்களுக்கு சடாரி சாற்றி, பின் விபூதி கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. மூலஸ்தானத்தில் விபூதி மட்டும் கொடுக்கப்படுகிறது. உற்சவர் சன்னிதானத்தில் வள்ளி, தேவசேனா சமேதராய் சுப்ரமணியர் எழுந்தருளியுள்ளார். தேவியர்களுடன் சுவாமி இருப்பதால் இங்கு குங்குமம் கொடுக்கும் வழக்கமும் உள்ளது.

 

செவ்வாய் தோஷம் நீங்குகிறது: இந்த கோவிலில் இன்னொரு சிறப்பும் உள்ளது. அங்காரகனின் அதிதேவதை தண்டபாணி சுவாமி என்பதால், 7 செவ்வாய்க்கிழமைகளில் வீட்டிலேயே விரதம் அனுஷ்டித்து எட்டாவது செவ்வாய் அன்று இங்கு வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்தால் செவ்வாய் தோஷம் நீங்குவது உறுதி என்கிறார்கள்.

மேலும் இங்கு வந்து வழிபடுவதால் கைகூடும், புத்திர பாக்கியம் கிட்டும். வியாபாரத் தடை நீங்கும். திருமணம் குடும்பத்தில் நிம்மதி சந்தோஷம் ஏற்படும் என்கிறார்கள். செவ்வாய் தோஷ பரிகார திருத்தலம் என்பதால் அந்த தோஷம் உள்ளவர்கள் இங்கு அதிக அளவில் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

 

இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட இந்த கோவிலில் ஆடிக்கிருத்திகை, கந்தசஷ்டி, பங்குனி உத்திரம். ஆங்கில புத்தாண்டு, மாத கிருத்திகை, தைப்பூசம், வைகாசி விசாகம், மாசிமகம், திருவோணம் ஆகிய விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. கோவிலுக்கு செல்ல போளூரில் இருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளது.

 

4. பலன் தரும் பரிகாரங்கள்

 

கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி: தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதங்களுக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. சூரியன் கடகத்தில் சஞ்சரிக்கும் மாதமான ஆடி மாதம், இறைவியை நாடிச் சென்றவர்களுக்கு எல்லாம் கோடி கோடியாய் நற்பலன்கள் கொடுக்கும் மாதமாகும்.

கிழமைகளில் சுக்ரவாரம் என்றழைக்கப்படுவது வெள்ளிக்கிழமையாகும். அள்ளிக் கொடுக்கும் சுக்ரனுக்குரிய வெள்ளிக்கிழமையன்று, துள்ளித்திரியும் சிங்கத்தின் மேல் ஏறி பவனிவரும் தூயவளாம் அம்பிகையை வழிபட்டால், நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும்.

ஆடிச் செவ்வாய் தேடிப்பிடி! ஆடிப்பட்டம் தேடி விதை! ஆடிப்பெருக்கு கோடியாய் பெருகும்!. என்பதெல்லாம் முன்னோர் வாக்கு. தமிழ் வருடத்தில் நான்காவது மாதமான ஆடி. தட்சிணாயன புண்ணிய காலமாகும்.

ஆடிமாதச் செவ்வாய் அன்று செட்டிநாட்டுப் பகுதிகளில் பெண்கள் மட்டும் ஒரு சந்தி கொழுக்கட்டை பிடித்து வழிபாடு செய்வர். இதன் மூலம் குடும்ப முன்னேற்றமும், மாங்கல்ய பாக்கியம், கணவருக்கு தொழில் மேன்மையும் ஏற்படும்.

ஆடி வெள்ளியன்று குத்துவிளக்கு பூஜை செய்து. சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கைத்துணி, தேங்காய் பழம். மஞ்ச குங்குமம், போன்ற பொருள்கள் கொடுத்தால் செல்வ பலன் பெருகும். ஆடி அமாவாசையன்று கடல் அல்லது நதியில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் அவர்களது ஆசி கிடைக்கும். அதன் மூலம் இல்லத்திலுள்ள தடைகள் அகன்று பகாரியங்கள் முடிவடையும்.

ஆடி வெள்ளியன்று இலக்குமியை வழிபட்டால் நாம் பணமழையில் நனையலாம். ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு தேவையான பொருள் வளம் கொடுப்பவளை இலக்குமி என்றும், திருமகள் என்றும் வர்ணிக்கிறோம். அங்ஙனம் வரம் கொடுக்கும் இலட்சுமியை "வரலட்சுமி" என்றழைத்து விரதம் இருந்து வழிபட ஏற்ற நாள் ஆடி மாதம் கடைசி வெள்ளக்கிழமையாகும்.

அன்றைய தினம் அதிகாலையில் வீட்டை மெழுகி, கோலமிட்டு, மாவிலைத் தோரணம் கட்டி, இலக்குமிக்கு வரவேற்பு கொடுக்க வேண்டும். மாவிலைத் தோரணம் கட்டி இலக்குமிக்குரிய தாமரை கோலமிட்டு திருமகளே வருக என்று கோலமாவினால் எழுதலாம்.

பூஜை அறையில் வரலட்சுமி படத்தை பலகையின் மேல் நடுவில் வைக்க வேண்டும். அதன் அருகில் ஐந்து முக விளக்கில் பஞ்ச எண்ணை ஊற்றி பஞ்சமுக தீபம் ஏற்ற வேண்டும். சந்தனம், குங்கும பொட்டு குடத்திற்கு வைத்து, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, இனிப்பு பொருள் நைவேத்தியத்தோடு லட்சுமி கவசம், லட்சுமி வருகைப் பதிகம் பாடி வழிபாடு செய்தால் பணத்தேவைகள் பூர்த்தியாகும். அன்றாட வாழ்க்கையில் அனுபவிக்கும் துன்பமெல்லாம் இன்றோடு விலகவேண்டும் என்று சொன்னால் இலக்குமியின் அருள் உங்களுக்குக் கிடைக்கும். அவளது அருளிருந்தால் வறுமை விலகும். வளங்கள் குவியும்! மறுமலர்ச்சியால் வாழ்க்கை மலரும்!

ஆன்மீக குறிப்புகள் : தெரிந்த விநாயகர் - தெரியாத தகவல்கள் - குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Known Ganesha - Unknown Information - Tips in Tamil [ spirituality ]