
சங்கரன் + நாராயணன் = ? இப்படி ஒரு கேள்வியை ஆன்மீக ரீதியாக எழுப்பினால் அனைவரின் கவனமும் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை நோக்கி திரும்பும்.
சங்கடங்கள் தீர்ப்பார் சங்கரநாராயணர்
சங்கரன் + நாராயணன் = ?
இப்படி ஒரு கேள்வியை ஆன்மீக ரீதியாக எழுப்பினால் அனைவரின்
கவனமும் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை நோக்கி திரும்பும். அங்கு
சங்கரநாராயணராக தரும் சிவபெருமானின் திருக்கோலத்தை நினைத்து மனம் லயித்துப்போகும். பரவசம்
அடையும்.
திருவாலங்காடு. சிதம்பரம், மதுரை, நெல்லை மற்றும் திருக்குற்றாலம் ஆகிய ஊர்கள். இறைவன்
விரும்பிக் கூத்தாடிய 5 தலங்கள் ஆகும். இதில் 2 தலங்கள் (நெல்லை, குற்றாலம் ) நெல்லை மாவட்டத்தில் அமைந்து இருப்பது
சிறப்பு. இதே
போன்று நெல்லை மாவட்டத்துக்கு இன்னும் பல பெருமைகளை பெற்றுத்தரும் கோவிலாக சங்கரன்கோவில்
திருத்தலம் அமைந்துள்ளது.
சிவபெருமானை சிறப்பித்துக் கூறும் பஞ்சபூத தலங்களை போன்று, தென்தமிழகத்தில் அதுவும் சங்கரன்கோவில் சுற்றுப்புறத்தில்
பஞ்சபூத சிவ தலங்கள் உள்ளன.
அவை:
சங்கரன்கோவில் - மண்தலம்
தாருகாபுரம் - நீர்தலம்
தென்மலை - காற்று தலம்
கரிவலம் வந்த நல்லூர் - அக்னி தலம்
தேவதானம் - ஆகாய தலம்
மண்தலமாக விளங்கும் சங்கரன்கோவில் ஆலயத்தில்,
சங்கரலிங்கர் சன்னதி, கோமதி அம்மன் சன்னதி, சங்கரநாராயணர் சன்னதி என்று 3 முக்கிய சன்னதிகள் உள்ளன. கோவிலின் ராஜகோபுரத்தின் உயரம் 125 அடி, 9 நிலைகள் கொண்டது. ஊரில் இருந்து பல மைல் தூரத்தில்
வரும்போதே கோவிலின் ராஜகோபுரத்தை தரிசிக்க முடியும்.
கோவிலுக்கு வந்து மீண்டும் ஒருமுறை கோபுர தரிசனத்தை
முடித்துவிட்டு உள்ளே சென்றால் தலைவாசலுக்கு நேராக சங்கரலிங்கராக வீற்றிருக்கும் சிவபெருமானை
கண் குளிர தரிசிக்கலாம். இந்த சன்னதி ஆலயத்தின் தென்பகுதியில் உள்ளது. வடக்கு
பகுதியில் கோமதி அம்பாள் சன்னதி உள்ளது.
கல்மனதையும் கரைக்கும் பேரழகுடன் பார்வதிதேவி கோமதி
அம்பாளாக குடிகொண்டு இருப்பதாக இங்கு புராணங்களில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.
சுவாமி-அம்பாள் சன்னதிக்கு நடுவே தனிச்சிறப்பு வாய்ந்த சங்கர நாராயணர் சன்னதி
உள்ளது.
ஒரு பாகம் சிவனாகவும், மறுபக்கம் நாராயணராகவும் ரூபம் கொண்டு,
சிவபெருமான் இந்த சன்னதியில் காட்சி கொடுப்பதை பக்தர்கள்
மெய் மறந்து தரிசிக்கின்றனர். சைவ - வைணவ ஒற்றுமைக்கு இதைவிட சிறந்த
எடுத்துக்காட்டு இருக்க முடியாது என்று சிலாகித்து கூறுகிறார்கள். சங்கர நாராயணர்
திருக்கோலம்தான் கோவில் தொடர்புடையது. தல் வரலாற்றுடனும்
சிவபெருமானுக்குள் அனைத்து சக்திகளும் அடக்கம் என்று
பார்வதி தேவிக்குத் தெரிந்தாலும், நாராயண மூர்த்தியுடன் இறைவன் பொருந்தி இருக்கும் ரூபத்தை
காணும் ஆசை இல்லாமல் இல்லை. அந்த அற்புதத்தை தரிசிக்க நீண்ட நாட்கள் தவம்
மேற்கொள்ள வேண்டும் என்பதும் பார்வதிக்கு தெரிந்ததுதான். நீண்ட நாளாக மனதில்
இருக்கும் இந்த எண்ணத்தை ஒருமுறை சிவபெருமானிடம் கேட்டுவிட்டார்.
அவரோ, பார்வதி தேவியிடம், நெல்லை மாவட்டத்தில் அகத்திய மாமுனிவர் தவப்பலன் பெற்ற
பொதிகை மலை அருகே உள்ள புன்னைவனத்தில் அமர்ந்து என்னை நினைத்து தவம் செய்.
ஒருநாளில் அந்த திருக்கோலத்தில் நான் காட்சி தருவேன் என்று கூறினார்.
பார்வதி தேவி அகம் மகிழ்ந்து, தவத்துக்கு புறப்பட்டார். ஆனால் கைலாயத்தில் இருந்த
தேவர்களுக்கும். தேவப்பெண்களுக்கும் அன்னை பார்வதியை பிரிய மனம் இல்லை. அவர்களும்
உடன் வருவதாக கூறினர்.
உடனே புன்னைவனத்தில் தான் தவம் செய்யும் இடத்தில் தேவர்கள்
எல்லாம் விருட்சமாக வளர்ந்து, பூவாகவும். கனியாகவும் மாறி என்னை சந்தோஷப்படுத்துங்கள்
என்று உத்தரவிட்டார். தேவப் பெண்கள் அனைவரும் பசுக்களாக மாறி,
சிவபூஜைக்கு பால் சுரக்கும்படி கேட்டுக்கொண்டார்.
பசுக் கூட்டங்களுக்கு நடுவே பார்வதி தேவி தவம் இருந்த
இடம்தான் இப்போதைய சங்கரன்கோவில். 'ஆ' என்றாலும், 'கோ' என்றாலும் பசுவை குறிப்பதாகும். எனவே 'ஆவுடைய நாயகி, 'கோமதி அம்மன் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார்.
கோமதி அம்மனின் நீண்டகால கடும் தவத்திற்கு பலனாக,
ஆடி மாதம் உத்திராட நட்சத்திரம் அன்று சங்கர நாராயணராக
இறைவன் காட்சி கொடுத்தார். இறைவனின் அற்புதத்தை கண்குளிர தரிசித்த கோமதி அம்பாள்,
மீண்டும் சிவபெருமான் ரூபத்தில் அவரை தரிசிக்க
விரும்பினார். அதை ஏற்று சுயரூபத்தில் மீண்டும் காட்சி கொடுத்தார். அதுவே ஆடித்
தபசு விழாவாக இங்கு கொண்டாடப்படுகிறது.
சர்ப்பதோஷம். ராகு தோஷங்களுக்கு பரிகார தலமாக சங்கரன்கோவில்
விளங்குகிறது. இந்த தோஷங்கள் விலகுவதற்காக இங்குள்ள சர்ப்ப விநாயகர் மற்றும்
பாம்பு புற்றுக்கு ஏராளமானவர்கள் பால் அபிஷேகம் செய்தும், பழம் வைத்தும் வழிபாடு செய்கிறார்கள்.
மூலவர் மீது ஆண்டுதோறும் மார்ச் 21ம் தேதி முதல் 3 நாட்களும்,
செப்டம்பர் 21ம் தேதி முதல் 3 நாட்களும் சூரிய ஒளி விழுகிறது. அப்போது சூரிய பகவான்
நேரடியாக இறைவனை தரிசிப்பதாக நம்பப் படுகிறது.
உடலில் கட்டி, நோய்கள் வந்து அவதிப்படுபவர்கள், நெய் மாவிளக்கு ஏற்றி அம்பாள் சன்னதியில் வழிபடுகிறார்கள்.
அங்குள்ள புற்று மண்ணை எடுத்து உடலில் பூசினால் நோய் குணமாகும் என்றும்
நம்பப்படுகிறது. மனநோய், பில்லி சூனியக் கோளாறுகள் நீங்க அம்பாள் சன்னதி எதிரே உள்ள
ஸ்ரீசக்கரத்தில் அமர்ந்து மனம் உருகி வேண்டுகிறார்கள்.
புத்திர பாக்கியம் தாமதமாகும் தம்பதியர் அந்த பாக்கியம்
வேண்டி தொட்டில் கட்டுகிறார்கள். தோல் நோய் உள்ளவர்கள் உப்பு,
மிளகு, காணிக்கையாக செலுத்துகிறார்கள். தேள்,
பூரான், விஷப் பூச்சிகள்
தொல்லை நீங்குவதற்காக அவற்றின் உருவங்களை. தங்கம், வெள்ளியில் செய்து காணிக்கையாக
செலுத்துகிறார்கள். உடல் உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகள் விலக வேண்டி அந்த
உறுப்புகளின் உருவங்களை காணிக்கையாக உண்டியலில் செலுத்தி வழிபடுகிறார்கள்.
அமைவிடம்:
நெல்லை, தென்காசியில் இருந்து 55 கிலோ மீட்டர் தூரத்திலும், கோவில்பட்டியில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும் ராஜபாளையத்தில் இருந்து 31 கிலோமீட்டர் தூரத்திலும் சங்கரன்கோவில் உள்ளது. இந்த 4 ஊர்களில் இருந்தும் சங்கரன்கோவிலுக்கு அடிக்கடி பஸ் வசதி
உள்ளது. தென்காசி மதுரை ரெயில் வழித்தடத்தில் சங்கரன்கோவில் - உள்ளதால் ரெயிலிலும்
செல்லலாம்.
பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் ஒன்று ஸ்ரீவில்லிபுத்தூர். இங்குள்ள
ஆண்டாள் கோவில் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இக்கோவில்
சிறந்த கட்டிடக்கலைக்கு சான்றாகவும், ஆன்மீக கலைக்கு உதாரணமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. சங்கு,
சக்கரம், திருமண் துலங்க காட்சி தரும் விமானம்,
கூப்பிய கரங்களுடன் திகழும் கருடன் சிலையும் ஆலயத்துக்கு
அழகு சேர்க்கின்றன. பந்தல் மண்டபத்தின் கட்டுமானம் வியக்க வைக்கிறது.
தலவரலாறு:
முன்பொரு காலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் வனப் பகுதியாக
இருந்தது. இந்த வனப்பகுதியை மல்லி என்ற பெண் ஆட்சி செய்து வந்தார். அதனால் இது
மல்லி நாடு என்று அழைக்கப்பட்டது. இந்த மல்லி அரசிக்கு வில்லி,
கண்டன் என்று இரு மகன்கள் இருந்தனர். இவர்கள் அடிக்கடி
காட்டுக்கு வேட்டையாட செல்வார்கள்.
ஒருநாள் அவர்கள் வேட்டையாட செல்லும்போது புலி ஒன்றை
பார்த்து துரத்திக்கொண்டு போனான் கண்டன். ஆனால் அந்த புலி திடீரென அவனை தாக்கி
கொன்று விட்டது.
இதை அறியாத வில்லி தன் தம்பி கண்டனை தேடினான். ஆனால்
கண்டுபிடிக்க முடியாமல் ஒரு மரத்தடியில் சோகத்துடன் படுத்தவன் அப்படியே
தூங்கிவிட்டான்.
அப்போது அவன் கனவில் தோன்றிய பெருமாள்,
நான் அருகில் உள்ள ஆலமரத்தின் அடியில் வடபத்ரசாயி என்ற
திருநாமத்துடன் உள்ளேன். உனது தம்பி உயிர்பெற்று எழுவான். இந்த காட்டை அழித்து
நாடாக்கி கோவில் எழுப்பி ஆராதனை செய் என கூறி மறைந்தார்.
கண் விழித்து எழுந்த வில்லி தன் தம்பி உயிர் பெற்று வந்ததை
கண்டு மகிழ்ச்சி அடைந்தான். தான் கண்ட கனவை அரண்மனைக்கு சென்று எல்லோரிடமும்
கூறினான். அதன் பின்னர் பெருமாள் கூறிய ஆலமரத்தை தேடி கண்டுபிடித்து அதன் அடியில்
தோண்டினார்கள். அங்கு பாம்பின்மேல் படுத்த நிலையில் பெருமாள் சிலையும்.
பொற்காசுகளும் கிடைத்தன. அந்த இடத்தில் கோவில் எழுப்பப்பட்டது. மேலும் இந்த கோவிலை
சுற்றி ஒரு ஊரையும் அமைத்து அதற்கு புத்தூர் என பெயரிட்டனர். வில்லி அமைத்த ஊர்
என்பதால் பின்னர் வில்லிபுத்தூர் என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிவிட்டது.
பெரியாழ்வார் வரலாறு:
இந்த ஊரில் வாழ்ந்த முகுந்த பட்டர் - பத்மவள்ளி
தம்பதியருக்கு பிறந்தவர் பெரியாழ்வார். இவர் வடபத்ரசாயி பெருமாளிடம் ஆழ்ந்த பக்தி
கொண்டு அவருக்கு தேவையான பூஜைகளை செய்து வந்தார். மேலும் கோவில் அருகிலேயே
நந்தவனம் அமைத்து அங்கிருந்து தினமும் மலர்களை பறித்து மாலையாக கட்டி
வடபத்ரசாயிக்கு சாற்றி வந்தார்.
ஒருமுறை நந்தவனத்தில் பூக்களை பறித்துக் கொண்டிருக்கும் போது
குழந்தையின் அழுகுரல் கேட்டு அருகில் சென்று பார்த்தார். துளசிமாடம் அருகே பெண் குழந்தை
ஒன்று இருப்பதைக் கண்டார். இது யாருடைய குழந்தை? என்ற குழப்பத்துடன் பெரியாழ்வார் வடபத்ரசாயி பெருமாள் கோவிலுக்கு
சென்று நடந்ததை கூறி வேண்டினார்.
அப்போது பெருமாள் அங்கே தோன்றி, ஆழ்வாரே! இது உம்முடைய மகள்தான். இவளை அன்போடு வளர்த்து வா.
இவளால் சர்வ மங்களமும் உண்டாகும். என அருளினார். இதன்படி பெரியாழ்வார் குழந்தைக்கு
கோதை என பெயர் சூட்டி வளர்த்து வந்தார். பின்னர் அந்த பெயர் ஆண்டாள் ஆனது.
கண்ணனிடம் காதல்:
ஆண்டாள் இவ்வாறு வளர்ந்து வரும் நாளில் அவள் கண்ணனிடம்
மிகுந்த பக்தி கொண்டவளாக திகழ்ந்தாள். கண்ணனையே திருமணம் செய்ய வேண்டும் என எண்ணினாள்.
ஒருநாள் பெரியாழ்வார் பெருமாளுக்கு அணிவிப்பதற்காக
வைத்திருந்த மாலையை தான்சூடி கண்ணாடியின் முன்பு அழகு பார்த்துக் கொண்டிருந்தாள்.
பின்பு தந்தை திட்டுவாரோ என பயந்து அவசர அவசரமாக சூடிய மாலையை கழற்றி வைத்து
விட்டாள். இவ்வாறு தினமும் தொடுக்கப்படும் மாலையை ஆண்டாள் அணிந்து அழகு பார்த்து
கழற்றி வைத்து வந்தாள்.
ஒருநாள் இப்படி மாலையை கழற்றி வைக்கும்போது அதில் ஆண்டாளின்
தலைமுடி சிக்கிக்கொண்டது. இதை பார்த்த பெரியாழ்வார் அந்த மாலையை பெருமாளுக்கு
சாற்றாமல் வேறு ஒரு மாலையை அணிவித்தார்.
ஆனால் அன்றிரவே பெருமாள் அவரது கனவில் தோன்றி முடி இருந்த
மாலை உனது மகள் ஆண்டாள் சூடிய மாலை. அவள் சூடி களைந்த மாலையை அணிவதே எனக்கு
மிகவும் விருப்பமாக இருக்கிறது. ஆகையால் இனி அவள் அணிந்த மாலைகளையே எனக்கு
சாற்றவேண்டும் என கூறினார்
அதன்படியே பெரியாழ்வார் பெருமாளுக்கு மாலை சூடினார். இதனால்
ஆண்டாளுக்கு சூடிகொடுத்த சுடர்கொடியாள் என சிறப்பு பெயர் ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர்
ஆண்டாள் கோவிலில் முதல் பிரகாரத்தில் லட்சுமி ஹயக்ரீவர் ஓவிய வடிவில்
அருள்பாலிக்கிறார். கல்வியில் சிறந்து திகழ இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.
மார்கழி நோன்பு இருந்த ஆண்டாள். தனது தோழியர்களை எழுப்புவது
போன்ற பொருளில் 30
பாசுரங்கள் பாடினாள். தோழியரை ஆண்டாள் எழுப்பும் சிற்பங்கள் ஆண்டாள் சன்னதி
விமானத்தில் உள்ளன. இதற்கு திருப்பாவை விமானம் என்று பெயர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டின் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறுகிறது. சித்திரை மாதம் 10 நாட்கள் திருவிழா நடக்கிறது. இதில் 10ம் நாளான சித்ரா பௌர்ணமி அன்று மதுரையில் அழகர் ஆற்றில்
இறங்குவது போல் ஆண்டாள் ரங்கமன்னார் குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஆற்றில்
இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
வைகாசி மாதம் வசந்த கால உற்சவ திருவிழா நடக்கிறது. இந்த
கோவிலின் சிறப்பு மிக்க திருவிழாவான தேரோட்ட விழா ஆடி மாதம் நடக்கிறது. 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 5ம் நாள் பெரியாழ்வார் மங்களாசாசனம் நடக்கிறது. அப்போது
பெரியபெருமாள், காட்டழகர்
கோவில், சுந்தரராஜன்,
திருவண்ணாமலை சீனிவாசன், திருத்தங்கல் நின்ற நாராயணர், ஆண்டாள்-ரங்கமன்னார் ஆகியோர் ஒவ்வொருவராக பந்தலுக்கு எழுந்தருளுகின்றனர்.
இவர்களுக்கு பெரியாழ்வார் மங்களாசாசனம் செய்கிறார். 9ம் நாளில் உச்சகட்ட திருவிழாவான தேரோட்டம் நடக்கிறது.
இதேபோல் ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களிலும் திருவிழா நடக்கிறது. இதில மார்கழி
மாதத்தில பகல்பத்து, ராபத்து
என 20 நாட்கள் திருவிழா
நடக்கிறது. மேலும் ஆண்டாளுக்கு நீராட்ட உற்சவம் சிறப்பாக நடைபெறும். பங்குனி
மாதத்தில் ஆண்டாள் - ரங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது.
அமைவிடம்:
மதுரையில் இருந்து 74 கிலோமீட்டர் தொலைவில் ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளது.
மதுரையில் இருந்து அடிக்கடி பஸ்வசதி உள்ளது. நெல்லை, தூத்துக்குடி பகுதியில் இருந்து வருபவர்கள் சிவகாசி வழியாக
ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லலாம்.
நடைதிறப்பு நேரம்: காலை 6.30 மணி முதல் மதியம 1 மணி வரை. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.
ஆன்மீக குறிப்புகள் : சங்கடங்கள் தீர்ப்பார் சங்கரநாராயணர் - குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Sankaranarayanar is the arbiter of dilemmas - Tips in Tamil [ spirituality ]